27 April 2009

தீராக் கேள்வி - தெளிவான பதில் 2

எழுத்துச் சித்தர் பாலகுமாரன் பதில்கள்
கோபமில்லாத நிலையே சக்தி என்று சொல்கிறார் மகாகவி.அப்படியொரு நிலை உண்டா?
நிச்சயமாக உண்டு. கோபம் உள்ளுக்குள் எழும் போதே உற்று கவனிக்கிற பொழுது கோபம் மெல்ல கிழிந்து உள்ளேயே சுருண்டு விடுகிறது. அது நம்முடைய கைக்கு அகப்பட்டு மிகச் சரியான அளவில் ,எந்த வித பழி வாங்கும் உணர்ச்சியும் கொந்தளிப்பும் இல்லாமல் ,எதிராளிக்கு புரிய வேண்டுமே என்ற அளவிற்கு கோபம் காட்டப்படுகிறது. அந்த மாதிரி கோபத்தில் காதலும் இருக்கிறது.

எதற்காக மலை மீது கோவில்கள் வைக்கிறார்கள்?
அப்பொழுதுதான் நீங்கள் மலையேறி அதன் உச்சிக்குப் போவீர்கள். மலையின் உச்சிக்குப் போனால்தான் பூமியின் பெரும்பரப்பும், அதில் நீங்கள் சாதாரண ஒரு புள்ளி என்பதும் உங்களுக்குத் தெரிய வரும். உங்கள் வீட்டுத் திண்ணையில் வெறும் லுங்கி கட்டிக் கொண்டு உட்கார்ந்திருந்தால் உங்களை மிகப் பெரிய மனிதர் என்று நினைத்துக் கொள்வீர்கள். உங்கள் உடல் பருமனையே உங்கள் வீரம் என்று கருதுவீர்கள். நீங்களே பிரம்மாண்டமானவர் என்ற எண்ணம் ஏற்பட வாய்ப்பு இருக்கிறது.இந்திய சனாதன தர்மத்தில் ஒவ்வொரு விசயமும் உங்களை உங்களுக்கு உணர்த்தத்தான் முயற்சி செய்கிறது. அப்படி உணர்த்தியும் மனிதர்கள் கர்வத்தில் குதிப்பது ஆச்சர்யமான விஷயம்.

வாழ்க்கை எப்படி இருந்தால் நன்றாக இருக்கும் என்று நீங்கள் கருதுகிறீர்கள்?
அடுத்தடுத்து அதிகம் வேலைகள் இருக்க வேண்டும். ஒரு வேலை செய்து முடித்த பிறகு அடுத்த வேலைக்கு பறந்து பறந்து ஓட வேண்டும். ஓய்வு நேரத்தை ஓய்வுக்காக மட்டுமே செலவு செய்ய வேண்டும். ஓய்வு எடுத்தால் தான் அடுத்த வேலையை செய்ய முடியும் என்ற நிர்ப்பந்தம் ஏற்ப்பட வேண்டும். வேலை செய்து முடித்த பிறகு உடனே ஆழ்ந்து தூங்கும் படியாய் அசதி வேண்டும். இது இல்லாமல் , அடுத்தபடி என்னால் செய்ய வேண்டும் என்று தெரியாமல் , இந்த நாள் பொழுதை எப்படிக் கழிப்பது என்று புரியாமல் வெறும் விட்டத்தைப் பார்த்துக் கொண்டிருப்பதும் , எதிர் வீட்டுக்காரரோடு வம்படித்துக் கொண்டிருப்பதும், வெறும் கற்பனையில் ஈடுபட்டு காலை ஆட்டிக் கொண்டு உட்கார்ந்திருப்பதும் மிகக் கேவலமான விஷயங்கள். என் வாழ்க்கை இப்படி அமைந்து விடலாகாது என்பதில் நான் கவனமாக இருக்கிறேன்.இடைவிடாது வேலை செய்வதைத்தான் வாழ்க்கையின் அற்புதமான விஷயமென்று நான் கருதுகிறேன்

எதையும் முயற்சிக்கும் முன்பு , இது நம்மால் முடியுமா என்கிற தயக்கம் என்னை தடை செய்கிறது. என்ன செய்வது?
வெற்றி பெற வேண்டும் என்ற எதிபார்ப்பு இருந்தால் , இந்தக் குழப்பம் வரும். இறங்கி முழு மூச்சை முயற்சிப்போம். தோல்வியானாலும் பரவாயில்லை என்று இறங்கி விடவேண்டும். தோல்வி ஒரு அனுபவமென்று கொள்ள வேண்டும். தோல்வியை நன்று ஆராய வேண்டும்.மறுபடியும் ஜெயிக்க வெறியோடு உழைக்க வேண்டும்.ஒரு தோல்வியை வெற்றியாக மாற்றிய பிறகு இந்த பயம் அறவே போய்விடும்.


`

மௌனமே மொழியாக...


                                                  விழிக் கோடியில் ஒரு துளி நீரும்
                                                  அடிமனதில் படபடப்பும்
                                                  சொல்லவொணா உணர்வுகளும்
                                                  சொல்லியே ஆக வேண்டிய வார்த்தைகளும்
                                                  ஒன்றோடொன்று போட்டி போட
                                                  நாம் பிரிந்த அன்று
                                                  ஒன்றுமே பேசவில்லை.
                                                  ஒன்றுமே பேசாததால்
                                                  ஒன்று விடாமல் பேசினோம்.

-2000 ஆம் ஆண்டு டைரியிலிருந்து .

பகுத்தறிவு



ஏன் தத்துவவாதிகள் கடவுளை நம்புவதில்லை?

தத்துவத்துக்கு கடவுள் தேவையில்லை. விஞ்ஞானம் முடிவடையும் புள்ளியில் தத்துவம் துவங்குகிறது.

ஒரு முறை கடவுள் ஒரு தத்துவ அறிஞரின் எதிரே வந்து நின்றார்.
" நான் தான் கடவுள். நல்லது ,கேட்டது எல்லாவற்றிற்கும் அடிப்படையானவன் ".

" அப்படியா...சரி..எனக்கு ஒரு சந்தேகம். நீங்கள் சொல்வதால் ஒரு விஷயம் நல்லது ஆகிறதா? அல்லது , அது நல்லது என்பதால் நீங்கள் அப்படி சொல்கிறீர்களா?"

"நான்தான் எல்லாவற்றிற்கும் அடிப்படை என்றேனே! நான் சொல்வதால் தான் ஒன்று நல்லதாகிறது!"

"அப்படியென்றால் ஒரு குழந்தையைச் சித்ரவதை செய்வது என்பது ' நல்லதுதான்' என்று நீங்கள் சொல்வதால் நல்லதாகிவிட முடியுமா?"

கடவுளுக்கு கோபம் வந்தது. தத்துவவாதி தொடர்ந்தார்.

"அது நல்லது இல்லை. ஆகவே தான் நீங்களும் அது நல்லது இல்லை என்கிறீர்கள்! இது எனக்கே தெரியுமே. நீங்கள் எதற்கு?"

கடவுள் மறைந்து விடுகிறார்.

- மதன் கேள்வி- பதில்

20 April 2009

டோராவும் , புஜ்ஜியும்



சென்ற சனிக்கிழமை இரவு ஆயத்த ஆடை வாங்கும் நிமித்தம் நானும், என் மூன்றரை வயது மகன் புவனும் இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தோம். காளவாசல் சந்திப்பு அருகே , ஓடும் பேருந்தில் ஏற முயற்சித்துக் கொண்டிருந்த இளைஞனைக் கண்டதும் எனக்கு தூக்கி வாரிப் போட்டது.பேருந்தின் வேகமும் அவனுடைய வேகமும் ஒத்துப் போகாமல் , ஏறுவதற்கு போராடிக் கொண்டிருந்தான். நானும் , அவனைக் கவனித்த சிலரும் சேர்ந்து கூச்சலிட்டோம். அதைக் காதில் வாங்கிக் கொள்ளாது தொடர்ந்து பேருந்தில் ஏறத் தலைப்பட்டான்.இறுதியில் பேருந்து அவனைக் 'கை'விட , பேருந்தை அவன் கை விட , தரையில் விழுந்து உருண்டு புரண்டு சுதாரித்து எழுந்தான். எல்லாம் வினாடிகளில் நடந்து முடிந்தது. தான் கீழே விழுந்ததை விட , அதை மற்றவர்கள் பார்க்கிறார்களே என்ற வெட்கத்துடனும் , சுய கழிவிரக்கத்துடனும் , எழுந்த வேகத்தில் சாலையைக் கடந்து நடை பாதையை அடைய எத்தனித்தான். இது அந்த வயதினர்க்கே உரிய குணம். எப்போதும் எல்லோரும் தன்னைக் கவனிக்கிறார்கள் என்று பேதமையாக நினைக்கும் வாலிபக் குணம்.நடந்து முடிந்த நிகழ்வின் முடிவை ஆராயாமல் , அது நடந்த விதத்தைப் பற்றியே கவலை கொள்ளும் பிள்ளைக் குணம்.

அவன் எங்களை நெருங்குகையில் , எனக்குள்ளிருந்த பதற்றம் ஆத்திரமாய் வெளிப்பட்டது. அவன் காது கேட்கும் படி கடுமையான வார்த்தைகளால் திட்டிக் கொண்டே வந்தேன்.என்னை மாதிரிப் பலரும்.

நாங்கள் துணிக் கடையை அடைந்த நேரம் இந்த சம்பவத்தைக் கிட்டத்தட்ட மறந்து போயிருந்தேன். வாகனத்தை நிறுத்தி விட்டு கடைக்குள் சென்று , குழந்தைகளுக்கான ஆடைப்பிரிவுக்கு சென்றோம்.பலவித ஆடைகளைத் தேர்வு செய்தும் புவனின் முகத்தில் மகிழ்ச்சியேயில்லை .மாறாக, கலக்கமாயிருந்தான்.

"புவன் ...ஏன்டா ஒரு மாதிரியிருக்கே...டிரஸ் ஏதும் பிடிக்கலையா...?"

நான் கேட்டதுதான் தாமதம். பொலபொலவென கண்ணீர் சிந்த தேம்பித் தேம்பி அழ ஆரம்பித்தான்.

அழுகையும் ஆவேசமும் ஒரு சேர வார்த்தைகளைப் பிரசவித்தான்.

"ஏம்ப்பா... அவனைத் திட்டினீங்க...?"

"யாரை?"

"பஸ்ல இருந்து விழுந்தான் ல...அவனை..."

"பின்ன என்ன செய்யனுங்கிற...?"

"உதவி செய்யணும் ப்பா..."

"என்னது ..?"

அவனிடமிருந்து அதை எதிர்பார்க்காத நான் அதிர்ந்தேன். காரணம் , 'உதவி' என்ற தமிழ் வார்த்தையையோ அல்லது அதன் அர்த்தத்தையோ நான் அவனுக்கு அறிமுகப்படுத்தியதேயில்லை.

" கீழ விழுந்துட்டான் ல...அவனைப் போயி நாம தூக்கிவிடனும் ப்பா...நீங்க அவனைத் திட்றீங்க ..."

நான் ஆச்சர்யத்துடன் கேட்டேன். " உதவி செய்யனும்னு உனக்கு யார் சொல்லிக் கொடுத்தாங்க..? உங்க மிஸ் தான...?"

"இல்லப்பா...டோரா..."

___________________________________________

தங்கள் பிள்ளைகளின் சந்தோசத்திற்காக , டிவி ரிமோட்டைத் துறந்து , அவர்களுடன் சுட்டி டிவியில் டோரா -புஜ்ஜி பார்க்கும் அனைத்துப் பெற்றோர்களுக்கும் நான் பகர விழையும் பொருளின் வீச்சு புரியும். அவர்கள் அனைவருக்கும் இந்தப் பதிவு சமர்ப்பணம்.


15 April 2009

முப்பது வயதுக்காரன்

அன்னையின் முலைப் பாலுண்டு
ஆழ்நிலைத் தியானத்தில்
சூழ்நிலை மறந்து
அமிழ்ந்திருந்தது மழலைப் பருவம்.

வயதொத்த சிறார்களுடன்
வஞ்சனையின்றி விளையாடி
வெஞ்சினம் ஏதுமின்றி
மகிழ்ந்திருந்தது பால்யம்.

பள்ளிப் பாடங்களோடு
சிறுகதை, புதினங்களுடன்
இரவும் பகலும் உறவாடித்
துள்ளி ஓடியது முன்-பதின்பருவம்.

இலட்சியக் கனவுகளுடன்,
தன்னுள் தான் தேடலும்
கைகோர்த்துப் பயணித்து
இனிதாகக் கழிந்தது பின்-பதின்பருவம்.

நல்லதொரு பணி பெற்று
சகோதரக் கடமைகள் முடித்து
நட்பு, காதல்,மனைவி, பிள்ளையென
பூரிப்புடன் நிறைந்தது இளமைப் பருவம்.

பொய்யான இலக்குகளோடு,
தன் பலம் தானறியாது ,
சுயம் மறந்து, சுழலும் எந்திரமாய்
உழலும் இப்பருவத்தை எவ்வாறு வகைப்படுத்த ?

13 April 2009

ஆள் - அரவம்

அழகென
நான் வியந்த
படமெடுத்த பாம்பு
மறு நொடி அதன்
உரு காட்ட
இப்பொழுதெல்லாம்
நான் நம்புவதில்லை...
பாம்பையும்
சில மனிதர்களையும் .

-2002 ஆம் ஆண்டு டைரியிலிருந்து

நட்பின் முதல் புள்ளி...

நாடக மேடையில்
பரிதவிக்கும் பாத்திரங்கள்
பத்திரமாய்த் தரையிறங்கி
வேஷம் கலைக்கும் வேளையில்
தன் முகமாய்
சிலர் முகம் காண
அனிச்சையாய் நிகழும்
அன்புப் பரிமாற்றம்.

-2002 ஆம் ஆண்டு டைரியிலிருந்து.

தோழியின் பிரிவில்...

அது ஒரு கனாக் காலம்.
காரிகையைக் கண்டிருந்தேன்...
அவளை நினைவில் கொண்டிருந்தேன்.
என் நிலை என்னென்று அறியாது
தன்னிலை மறந்திருந்தேன்.

என் கருத்து பொய்யென்று
காலம் எடுத்துரைக்க
கரைந்து போயிருந்தேன்...
கரைந்து உறைந்தே போயிருந்தேன்.
நான் சுத்தமானேன்.

உறைந்த நிலையில்
தெளிந்தது மனது.
தெளிந்த நிலையில்
தெரிந்தது அறிவு.
ஒளிந்திருந்தேன் தனித் தீவில்
உறவுகள் தவிர்த்து.

கல்லூரிக் கனவுலகு
கை காட்டும் தருவாயில்
நிதர்சனக் கள உலகு
கை நீட்டும் தருவாயில்
கை கோர்த்தனர் நண்பர்கள்.
நட்பென்னும் நல்லதொன்றை
நான் எடுத்து அணைப்பதற்குள்
நாள் முடிந்தது - எனினும்
நட்பு தொடர்ந்தது .
நான் இன்னும் சுத்தமானேன்.

அச்சத்துடன் அடி வைத்தேன்
எதிர் நோக்கும் நிஜ வாழ்வில்...
எதிர்ப்பட்ட மனிதரெல்லாம்
எனை ஏய்க்க முற்பட
ஏங்கியது என் மனம்
நல்லதோர் உறவுக்காய்...

நல்லதோர் உறவாய் தோழி நீ வந்தாய்.
நட்பென்று பெயரிட்டேன் நான்.
ஆண்பால் பெண்பால் கடந்து
நட்பால் ஒரு பாலமமைத்தோம்.
அதில் நித்தம் பயணம் செய்தோம்.

கல்லூரியில் தவறிய நட்பை
நங்கை உன்
நல்லெண்ணத்தில் கண்டேன்...
நீ செய்த உதவிக்கு
நன்றி ஏதும் கூறவில்லை.
பிணக்கம் ஏற்பட்டாலும்
இம்மியளவும் பிரியவில்லை.

ரத்த பந்தங்கள் ஒரு நாள்
அர்த்தமற்றுப் போகலாம்.
சுத்தமான நட்பு என்றும்
சுருதி மாறுவதில்லை.

அமாவாசைக்கு முன்தினமே
மனதைத் தேற்றிக் கொள்பவன் நான்...
எதிர்பாரா உன் ஒருநாள்விடுப்பை
எப்படி தாங்கிக் கொள்வேன்?
தாங்கிக் கொண்டேன்...
தாங்கிக் கொள்வேன்
உன் ஒரேயடி விடுப்பையும்...!

என் உணர்வின்
சரியான பரிமாணத்தை
நீ உணர்ந்த நம்பிக்கையில் நான்.

உண்மையைச் சொல்லவா...
நீ என்னை விலகுவதை
நான் இன்னும் நம்பவேயில்லை.

ஒன்று மட்டும் நிச்சயம்...
என் நினைவிருக்கும் வரை
நான் நினைவிழக்கும் வரை
என் நினைவில் நீயிருப்பாய்.
நினைத்தலில் உள்ள சுகம்
நினைக்கப்படுதலிலும் உண்டு.
ஆகவே
சுய நலக்கரனாய் சொல்கிறேன்...
எனக்காக என்னை நினைத்திரு.

சில மாறுதல்கள்
சில நிறைகளைத் தரலாம்.
சில நிறைகள்
பல குறைகளைத் தரலாம்.
அந்தக் குறைகள்
குரலெடுத்து அழும் சத்தம்
யாருக்கும் கேட்பதில்லை.

யாதொரு துகளும் நம் நட்பிடை வராதிருக்க
அனுதினமும் ஆண்டவனை வேண்டும்

-உன் அன்பு சிநேதிதம்.

-2000 ஆம் ஆண்டு டைரியிலிருந்து
(பணியிடம் விட்டு நீங்கிய உயிர்த் தோழியின் நினைவாக )

அகம்-புறம்


திரை நாயகனின் உருகுதலில்
கதை நாயகியின் மருகுதலில்
புடம் போடப்படுகிறேன்...
நல்லதே நானாகிறேன்.
தாங்கும் வீடு,
தன்னலமற்ற நண்பர்கள்,
எனக்காய்
தன்னுயிர் தரும்
என்னுயிர்த் தோழி.
நினைத்துப் பார்க்கையில்
நீள் நிம்மதி.
ஆனாலும்
நிஜ வாழ்வின்
நிதர்சன நிமிடங்களில்
நிம்மதியின் நீளம் குறையத்தான் செய்கிறது -
காற்றின் எதிர்த்திசையில்
களியாட்டமிடும்
குதிரையின் வேகத்தைக்
கட்டுப்படுத்தாத
இயலாமையை எண்ணி.

-2000 ஆம் ஆண்டு டைரியிலிருந்து

11 April 2009

காதலின் சின்னம்?!!


சென்ற வாரம் முழுவதும் கான்பூர் ஐ.ஐ.டியில் ஒரு பயிற்சி வகுப்பை முன்னிட்டுத் தங்கியிருந்தேன். அங்கு இளநிலை பொறியியல் படிக்கும் மாணவர்களைப் பார்க்கும் போது மனதுள் லேசான பொறாமை தலை தூக்கியது. அத்தனை வசதிகள்....! படிக்கும் போது படிப்பு ,ஆட்டத்தின் போது ஆட்டம் என சுயக் கட்டுப்பாட்டுடன் தங்கள் இளமையின் உச்சத்தை அவர்கள் அனுபவிக்கும் விதம் என்னை பெருமூச்சு விட வைத்தது. படிப்பு வாசனையே அறியாத கான்பூர் தெருக்களின் பழமையும், படிப்பின் உச்சத்தை முகர்ந்து கொண்டிருக்கும் ஐ.ஐ.டியின் புதுமையும் என்னை ஒரு சேர வசீகரித்தன. ஐந்து நாள் பொழுதும் இனிமையாகக் கழிந்தது.

நிற்க. நான் சொல்ல விழைந்தது ,அந்த ஐந்து நாட்கள் பற்றியல்ல. ஆறாவது நாள் ஊருக்குத் திரும்பும் போது , உடன் வந்தவர்களின் வற்புறுத்தலின் பேரில் (ஏற்கனவே போட்ட திட்டத்தின் படி தான்) ஆக்ரா செல்ல நேர்ந்தது. வேறெதற்கு...? உலகப் புகழ் பெற்ற தாஜ் மகாலைப் பார்வையிடத்தான். கான்பூரிலிருந்து மதுரை வந்து சேரும் நீண்ட பயணத்தின் இடைச் செருகளான எங்களின் ஆக்ரா தருணங்கள் ஒரு விதப் பதற்றத்துடனேயே இருந்தன.வட இந்திய ரயில்வேயின் நிர்வாகத் திறமையால் ஆக்ராவில் கழிப்பதற்கு எங்களுக்கு இரண்டு மணி நேரமே இருந்தது.

ஆட்டோ பிடித்து, மடிக் கணினியை cloak room ல் போட்டு விட்டு, வழி காட்டிகளின் உதவல் கோரிக்கைகளை பண்புடன் நிராகரித்து, சிறு வியாபாரிகளின் மனம் கோணாமல் புறந்தள்ளி, நுழைவுச் சீட்டு எடுத்து, சோதனைச் சாவடியின் ' சோதனைகளைக் ' கடந்து ஒரு வழியாக அந்தப் பிரம்மாண்டக் கட்டிடத்தின் (?) முன் சென்று நின்றவுடன் வெறுமைதான் தட்டியது. என்னுடைய பதின் பருவங்களில் நான் கனவுப் பிரதேசமாக நினைத்திருந்த , என் மென்மையான உணர்வுகளின் இருப்புக்கு கட்டியம் பகர்ந்த ஆதர்ஷ விசயமாக நான் கொண்டிருந்த ஒரு இடத்தின் முன் நிற்கிறேன், எனினும் எத்தனை முயற்சித்தும் என்னுள் ஒரு சிறு நெகிழ்தலும் நிகழவே இல்லை. ஒருவேளை கல்லூரி கால கட்டத்திலேயே இவ்விடம் வந்திருக்க வேண்டுமோ? நான் வளர்ந்து , வாழ்வின் அடுத்த பரிமாணத்தில் நுழைந்து விட்டேனோ ? உடன் வந்தவர்கள் அந்த நிமிடங்களைத் தங்கள் புகைப்படக் கருவியில் கல்லறைப் படுத்திக் கொண்டிருந்தனர்.எனக்கோ, அந்த நிமிடங்களில் உயிர்ப்பே இல்லை. சரியென, அவர்களின் தற்காலிக போட்டோகிராபராக மாறியிருந்தேன்.

இந்த காதலர்கள் எல்லாம் தங்கள் காதல் சின்னமாக ஏன் தாஜ் மகாலைக் கொண்டிருக்கிறார்கள் என்று புரியவில்லை. ஷா ஜகானின் மூன்றாவது மனைவியான மும்தாஜ் தனது பதினான்காவது பிள்ளைப் பிரசவத்தின் போது இறந்து போனதின் நினைவாக , சுமார் இருபத்தியிரண்டாயிரம் பேரை வைத்து இருபது வருடங்களில் கட்டப்பட்ட கல்லறைதான் தாஜ் மஹால் என்கிறது வரலாறு. 'என் மனைவியின் சமாதியின் மீது மிகப் பெரிய கட்டிடம் எழுப்புங்கள் ' என்று ஆணவத்தோடும் ,அதிகாரத்தோடும் கட்டளையிட்ட ஷா ஜகான் என்கிற சர்வாதிகாரியும் , உயிருக்கு அஞ்சி தங்கள் வாழ்நாளை இதன் உருவாக்கத்திற்கு அர்ப்பணித்த மக்களும் தான் அங்கே பிம்பமாகப் பதிந்திருக்கிறார்கள். இந்தியாவின் பெருமைகளுள் இதுவும் ஒன்று என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை.ஆனால்பளிங்குக் கற்களின் குளிர்ச்சிக்கடியில் அவர்கள் உழைப்பின் வெம்மையும் ,சுற்றுச் சுவர்களின் மினுமினுப்பில் அவர்களின் வியர்வை பூத்த மேனியும் , பக்கத்துக் கோட்டைகளின் சிவப்பு வண்ணத்தில் அவர்கள் சிந்திய ரத்தமும் தான் தெரிகிறது.

பெண்ணாம்...அவன் மனைவியாம்...அவள் மீது தீராக் காதலாம்....பிரசவத்தின்போது மனைவி படும் அவஸ்தையைக் காணும் எந்தக் கணவனும் 'இவள் அடுத்த பிள்ளையை சுமக்கத்தான் வேண்டுமா ' என்ற கேள்வியுடன் தான் பின் வரும் போகங்களை அனுபவிப்பான்.மனைவி உயிரோடிருக்கும் போதே அவளை சுகித்திருக்க விடாமல், அவளின் கல்லறைக்கு உலகம் மெச்சும் படி மாளிகை அமைப்பதென்பது உலக வரலாற்றில் தனது பெயர் நிலைப்பதற்கு ஒரு குறுக்கு வழியே. நாட்டின் செல்வத்தையும் , நாட்டு மக்களின் உழைப்பையும் தன் கனவை நினைவாக்க ஈடுபடுத்தியவன் ஒரு நல்ல அரசனாக முடியுமா? பதின்மூன்று முறை ஒரு பெண்ணை பிரசவிக்க நிர்ப்பந்திப்பவன் ஒரு நல்ல கணவனாக முடியுமா ? மும்தாஜின் மறைவுக்கு முன்னரும் பின்னரும் ஷா ஜகான் வேறு பெண்களைக் கொண்டதேயில்லையா?

ஒரு நல்ல கணவன்தான் நல்ல காதலனாக இருக்க முடியும் என்பது என் தாழ்மையான கருத்து. (அதாவது, காதல் செய்த பெண்ணைக் கைபிடித்த பின்பும், சூழ்நிலைகளின் கைதி ஆகாமல் , திருமணத்திற்கு முன் அந்தப் பெண்ணிடமிருந்த அவன் மீதான பிம்பம் அழியாதவாறு நடப்பவனே உண்மையான காதலன். யதார்த்தத்தில் இது மிகவும் கடினம். )

யோசித்துக் கொண்டே , உடன் வந்தவர்களின் ஆசை தீர புகைப்படம் எடுத்துத் தள்ளினேன். திரும்புகையில் , கண்கள் சொருகி கை கோர்த்து அமர்ந்திருந்த ஒரு இளம் ஜோடியைக் காண நேரிட்டது.அந்தப் பெண்ணை உற்றுக் கவனித்தேன்.ஏனோ தெரியவில்லை , மனம் கனத்தது.ஒருவேளை அவள் அவனை ஷா ஜகானாக வரித்திருக்கக் கூடும். என் மனம் வேண்டியது , "கடவுளே, அவன் ஷா ஜகானாக இருக்க வேண்டாம் .நல்ல கணவனாக இருந்தால் போதும் "

10 April 2009

தீராக் கேள்வி - தெளிவான பதில் 1

எழுத்துச் சித்தர் பாலகுமாரன் பதில்கள்
கடவுள் உண்டா ?
உண்டு . நிச்சயம் உண்டு. இந்த பிரபஞ்சத்தின் எல்லா அசைவுகளையும் பார்க்கும் போது அதை இயக்குகின்ற சக்தியை கவனிக்க நேரிடுகிறது. அறிய வேண்டியது அதிகமிருக்கிறது என்பதை உணர்ந்தால் கடவுள் தோன்றுகிறார். எனக்கு எல்லாம் தெரியும் என்கிற மமதை கடவுளை மறைக்கும்.
அழகு என்பது என்ன ?
கண்களிலிருந்து வரும் ஒளி தான் அழகு .அறிவும் , அன்பும் கலந்தது தான் அழகு. உடையோ, உயரமோ, பருவமோ, பதவியோ அழகல்ல.மனதில் அமைதி இருப்பின் முகத்தில் அழகு சுடர் விடும்.
காதல் என்பது மனிதனுக்கு அவசியமா ?
மிக மிக அவசியம். வேறு செய்வதற்கு இங்கு என்ன இருக்கிறது. ஆண்-பெண் நேசிப்பில் தான் உலகம் இயங்குகிறது. நேசிப்பை கொஞ்சம் கவித்துவமாக்கினால் ஏற்படுவது காதல். உடல் இச்சையை நெறிப்படுத்தி உள்ளத்தை அறிய முற்படுவது தான் காதல். நேர்மையாக இருப்பின் காதல் மிகுந்த பலம் தரும்.
பணம் முக்கியமா ?
முக்கியம். ஆனால் எதற்கு முக்கியம் என்கிற தெளிவு இருந்து விட்டால் சம்பாதிப்பதும், செலவு செய்வதும் அர்த்தமாகும். வெறுமே அடுக்கி வைத்து பார்க்க ஆசைப்பட்டால் பகைவர்களை உருவாக்கும். நிறைய பணம் உள்ளவர்களிடம் யாரும் உண்மையாய் இருப்பதில்லை. இல்லாதவர்களிடம் மரியாதை செலுத்துவதில்லை. சம்பாதித்து சரியாக செலவழிக்கிறவர்களை உலகம் கொண்டாடத் தவறுவதில்லை.
வயதானப்பிறகு தான் ஆன்மீகம் என்று பலரும் நினைக்கிறார்களே? இது சரியா?
சரியா, தவறா என்பதல்ல பிரச்சனை. இது சௌகரியம். ஆடுகிற வரை ஆடிவிட்டு, ஆட முடியாமல் கைகால்கள் நடுங்குகிற போது ஆன்மீகம் போய் கொள்ளலாமே என்று மனதில் ஏற்படுகின்ற சௌகரியம். கைகால் நடுங்குவது வயதானால் தான் வரும் என்றில்லை. வாலிபத்திலும் கைகால் நடுங்க, மனம் நடுங்க, வாழ்க்கை நடுங்க நிறைய பேர் பார்த்திருக்கிறேன். துன்பம் வரும் பொழுது ஆன்மீகம். துன்பம் இல்லாத போது ஆன்மீகம் இல்லை என்பதுதான் பலருக்கும் நிலையாக இருக்கிறது. தன்னுடைய துன்பத்தைப் பற்றி அக்கறை உள்ளவருக்கு ஆன்மீகம் வயது பார்த்து வருவதில்லை. தன் துன்பம், மற்றவர் துன்பம் எதுவும் தெரியாதவர்தான் ஆன்மீகம் அப்பால் பார்த்துக் கொள்ளலாம் என்று சொல்கிறார்கள். ஆன்மீகம் என்பது வயதோடு சம்பந்தப்பட்டது அல்ல. அனுபவத்தோடு சம்பந்தப்பட்டது. ஆன்மீகம் என்பது மோசமான அனுபவங்களிலிருந்து மீண்டு எவர் வெளியே வருகிறாரோ அவரிடம் பலமாகவும், தெளிவாகவும் இருக்கும்.
6)பிரார்த்தனை என்பது என்ன ?
கடவுள் என்ற விஷயத்தை வேத விவகாரமாக எடுத்துக்கொண்டு தனக்குள் மூழ்கி, மற்ற எண்ணச்சலனங்களை நிறுத்தி, தான் எது என்பதை அறிந்து கொண்டு தெளிவது மிகுந்த சிறப்புடையது। ஆனால். அது எளிதில்லை. எல்லோராலும் கைகொள்ளும் விஷயமில்லை.
அதற்கு பதிலாய் உலக வாழ்க்கையின் சந்தோஷங்களைத் தேடி அது நிறைவேறுவதற்காக, எங்கும் பரந்து எல்லாமுமாய் இருக்கின்ற இறைவனை நோக்கி கைகூப்பி எனக்கு இதைக் கொடு என்று இறைஞ்சுவது மனிதர்கள் இயல்பு. எது எல்லாமுமாய் எங்குமாய் இருக்கின்ற இறைவன் என்று யோசித்து உள்ளுக்குள்ளே அதைத் தேட முற்படும்போது, தன்னுடைய மனதின் மீது மனம் பலமாகப்படுகிறது ஒரு புள்ளியில் மனம் ஆழ்ந்து நிற்கிறது. அதனால் பதட்டங்கள் நீங்கி அமைதி ஏற்படுகிறது. தனக்குள்ளே தானே, தன்னைப்பற்றி யோசித்து, தன்மீது அதிகப்படியான நம்பிக்கை கொள்ள வைக்கிறது.
விநாயகா.. வெங்கடாஜலபதி.. மூகாம்பிகைத்தாயே.. என்று கை கூப்புகிற போதே நான் என்னை நோக்கி கைகூப்பி, என்னைப்பற்றி எனக்கே சொல்கிறேன். எனக்கு இது வேண்டும். இதிலிருந்து என்னைக் காப்பாற்று என்று சொல்கிறபோது அந்த விஷயம் நோக்கி நான் அதிகம் மும்முரமாகிறேன். அதற்காகக் கடுமையாக உழைக்கிறேன்.பிரார்த்தனை என்பது நெஞ்சோடு புலத்தல். தனக்குத்தானே பேசிக்கொள்ளுதல். தனக்குத்தானே பேசி தன்னம்பிக்கையை அதிகப்படுத்திக் கொள்ளுதல். தனக்குத்தானே பேசிக்கொண்டு தன்னை பலப்படுத்திக் கொள்ளுவதற்கு கடவுள் என்கிற உருவமற்ற, எங்கும் நிறைந்த ஒரு சக்தி மனித குலத்திற்கு அவசியம். இதன் பொருட்டுதான் இந்தக் கடவுளைப்பற்றி பிரசாரம் செய்திருப்பார்களோ, தனக்குத்தானே பேசிக்கொள்ள வேண்டுமென்பதற்காகத்தான் கடவுளுக்கு ஒரு உருவம் கொடுத்திருப்பார்களோ, ஆலயம் என்ற ஒரு இடம் கொடுத்திருப்பார்களோ. ஹோமம், யக்ஞ்ம் என்ற நியதியை ஏற்படுத்தியிருப்பார்களோ என்றும் தோன்றுகிறது.பிரார்த்தனைதான் உண்மையான ஹோமம்। உடம்புதான் ஆலயம். உள்ளே “தான்” என்று கொள்கின்ற அந்த நினைப்புதான் கடவுள். தன்னை நோக்கி தான் பேசுதலே மிகப்பெரிய மந்திரஜபம்.
தன்னுள் மூழ்கி தான் யாரென்று தேடமுடியாதவரை ஞானிகளும், ஞானிகள் ஏற்படுத்திய மதங்களும் இப்படித்தான் வழிப்படுத்துகின்றன। பிரார்த்தனை செய் என்று தூண்டுகின்றன. செய்வன திருந்தச்செய் என்பது மகா வாக்கியம்.
பிறருக்கான வேலையில் கூட ஏமாற்றுதல் இருக்கலாம். தனக்குத்தானே பேசிக்கொள்வதில் ஏமாற்றுதல் இருந்தால், அதைவிட முட்டாள்தனம் உண்டா? தான் செய்கின்ற பிரார்த்தனையில் கூட அக்கறையின்மையும் ஒருமுகப்படுத்தலும், கவனமும் இல்லாமலிருப்பின் வாழ்வதில் அர்த்தமுண்டா.என்ன வேண்டும் என்பதைகூட சரியாகக் கேட்கத் தெரியாவிட்டால், உண்மையாகக் கேட்கத்தெரியாவிட்டால் வாழ்க்கை மிகப்பெரிய அபத்தமாகப் போய்விடும்.பிரார்த்தனை செய்ய யார் கற்றுக் கொடுகிறார்கள்? யார் தூண்டுகிறார்கள்?.தாயோ.. தந்தையோ.. நண்பரோ இதற்கு உதவி செய்ய முன்வரினும் உங்களுடைய துக்கம்தான், உங்கள் துக்கத்திலிருந்து எழுகின்ற உங்கள் ஆசைதான் உங்களை பிரார்த்தனை செய்ய மும்முரப்படுத்தும். பிரார்த்தனைகள் மேம்போக்காக இல்லாமல் ஆழமாய் இருக்க நம்முடைய வேதனைகள் உதவி செய்யும்