27 July 2009

முற்பகல் செய்யாவிடினும்......

'வீட்டைக் கட்டிப் பார் , கல்யாணம் பண்ணிப் பார் ' என்று முன்னோர்கள் சொல்லி வைத்ததில் இரண்டாவது விஷயத்தை முதலில் செய்து இன்பம் துய்த்து , தற்போது முதலாவது விஷயத்தையும் வெற்றிகரமாக முடித்தாகி விட்டது. அதன் காரணமாகத்தான் இணையத்தில் இந்த இரண்டு மாத இடைவெளி.

சென்ற வாரம் ஒரு வேலை நிமித்தமாக திருச்சி அண்ணா பல்கலைக்கழகம் செல்ல வேண்டியிருந்தது. வங்கி ஒன்றில் சிறு வேலை முடித்து , முற்பகல் பதினோரு மணிக்கு மாட்டுத்தாவணி பேருந்து நிலையம் சென்று வண்டியேறினேன். அதிகாலையில் உட்கொண்ட சிற்றுண்டி செரிமானமாகி , குடல் மதிய உணவை எதிர் நோக்கியிருந்தது. சற்று பசித்தாலும் , பேருந்தில் இருந்த தொலைக்காட்சிப் பெட்டியைப் பார்த்ததும் , சமாளித்து விடலாம் என்ற நம்பிக்கையில் அமர்ந்தேன். ரயில் பயணமாக இருந்தால் புத்தகம் தான் என் உற்ற நண்பன். யாருடனும் பேசாமல் நாட்கணக்கில் பயணம் செய்வேன். ஆனால் பேருந்தில் அந்த சுகம் கைகூடுவதில்லை. கால் மணி நேரம் படித்தாலே தலை கிறுகிறுக்கிறது, மேலும் அது கண்ணுக்கு உகந்ததல்ல.இது போன்ற தருணங்களில் நான் பெரிதும் சார்ந்திருப்பது தொலைக் காட்சிப் பெட்டியைத் தான். ஆனால் அதிலும் எனக்கொரு சிக்கல் உண்டு. பயணத்தின் பொழுது , சிறந்ததென நான் கருதும் படத்தை திரையிடும் பட்சத்தில் ( அதை எத்தனை முறை பார்த்திருந்தாலும்) வெறுமை ஏதும் தட்டாது பயணம் சுகப்படும். மாறானால் , அது வரை நான் அறிந்து செய்த தவறுகளுக்கான தண்டனையாய் அந்தப் பயணம் நிகழ்ந்து தொலையும். ஆகவே, திரைப்படக் குறுந்தகட்டை நடத்துனர் எடுக்கும் போதே என் மனம் அனிச்சையாக அவரை நோக்கி கை கூப்பும்.

அன்றும் அப்படித்தான், என் வாழ்வின் மூன்று மணி நேரத்தை அவரிடம் ஒப்படைத்திருந்தேன். ஆனால் விதி வலியது. அவர் திரையிட்டது திரு.விஜய் நடித்த 'போக்கிரி'. என் ரசனைக்கு ஒவ்வாத, ஆனால் புவனின் விருப்பமான அந்தப் படம் இருபது முறைக்கும் மேலாக ஓடியிருக்கிறது என் வீட்டில். அனிச்சை செயலாகவே எனக்கு அதன் காட்சிகள் அனைத்தும் அத்துப்படி. யோசிக்கும் போதே என் வயிற்றுக்குள் சிறு பிரளயம் ஏற்பட்டது. அது பசியினாலா , அல்லது எதிர் கொள்ளப் போகும் மூன்று மணி நேரத் தண்டனையாலா என அனுமானிக்க முடியவில்லை. பிறகென்ன , ருசியில்லாத உணவை ,தாயின் நிர்ப்பந்தம் காரணமாக உண்ணும் குழந்தை போல் , அந்தப் படத்தைத் தின்று செரித்தேன்.

ஒரு வழியாக , மதியம் இரண்டு மணியளவில் திருச்சி சென்று , பல்கலையில் வேலை முடித்து, மீண்டும் மதுரைக்கு வண்டியேறிய பொழுது மணி ஐந்து. என்னைப் பொறுத்த வரை, முற்பகல் மற்றும் மாலை நேரங்கள் பேருந்து பிரயாணத்திற்கு ஏற்றவை அல்ல. நிறையாத வயிறு ,பயணம் முழுதும் அதன் இருப்பை உணர்த்தி கொண்டேயிருக்கும். அதிகாலையோ , உணவுக்குப் பிறகான மதிய நேரமோ அல்லது இரவு நேரமோ தான் நிம்மதியான உறக்கத்துக்கு உத்தரவாதம் தரக் கூடியவை. அன்று இரண்டு நேரமுமே அகால நேரமாக அமைந்து போயிற்று.

ஏறியவுடன், மதுரை மீனாட்சி அம்மனை மனது வேண்டிற்று...நல்ல படமாக இருக்க வேண்டுமே! நடத்துனர் வந்தார், எடுத்தார், போட்டார். விதி மீண்டும் விளையாடியது. என் நிலையை என்னென்று சொல்வது ?!...திரையிடப்பட்ட படம் திரு.விஜய் அவர்கள் நடித்த 'வில்லு'. இதுவும் அப்படியே... புவனேஷ் மட்டுமல்ல, சந்தோஷும் இந்தப் படத்தின் தீவிர ரசிகனானதால் என் வீட்டில் வெள்ளி விழா கொண்டாடிய படமிது. 'முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்' என்றுதானே சொல்வார்கள். நான் முற்பகலில் , பாவம் ஏதும் செய்யாமல் தண்டனைதானே அனுபவித்தேன்...பின் ஏன் இப் பிற்பகலிலும் ? அக்கணம் , போர்க்களத்தின் நடுவே நிராயுதபாணியாய் நிற்கும் அரசனைப் போல் உணர்ந்தேன். என் ஆராய்ச்சி பற்றி சிந்தனை செய்யலாமென்றால் திரு.விஜய் அவர்கள் அதற்கும் என்னை அனுமதிக்க வில்லை . அரைத்தூக்கமோ , மயக்கமோ ஏதோவொன்றை போட்டு விட்டு இரண்டரை மணி துளிகள் சென்று கண் திறந்தேன். படம் முடிந்திருந்தது.

நெட்டி முறித்து, அடுத்த முப்பது நிமிடங்களை நிசப்தத்துடன் அனுபவிக்கத் தயாரானேன். அந்த நேரம், மீண்டும் ஒரு விளையாட்டு அறிவிப்பு...விளையாடப் போவது யார் ? விதிதான்!. வில்லுவின் தொடர்ச்சியாக வந்த படம் 'போக்கிரி'. ஐயோ....நான் வாய் விட்டு அழாத குறை ...இப்படி தெளிய வைத்து தெளிய வைத்து அடிக்கிறார்களே...பசி வயிற்றைக் கிள்ள, கை கால் துவள, நான் மறுபடியும் கண் மூட முயன்றேன்.அப்போது என் அருகே இருந்தவர் தன் திருவாய் மலர்ந்தவுடன் , எனக்கு ஏற்பட்ட உணர்வுக் கொந்தளிப்புதான் இந்தப் பதிவை நான் எழுதக் காரணம்.

அவர் என்னிடம் சொன்னது இதுதான் , " இந்தப் படத்தை முதல்லேய போட்டிருக்கலாம் , சார்". யார் கண்டது , அவர் முற்பகலில் ஏதேனும் ஒரு பேருந்தில் வில்லு பார்த்திருக்கக் கூடும்.
_____________________________________________________
இத்தனைக்கும் நடுவே ,பொதுவாக, யாருக்கும் நடத்துனர் மேல் வரக் கூடிய எரிச்சல் எனக்கு வரவே இல்லை. மாறாக , பரிதாப உணர்வே எழுந்தது. காரணம் உங்களுக்கே தெரியும்!