24 December 2009

மனைவி அமைவதெல்லாம்......


கடந்த வெள்ளியன்று இரவு ஒரு துயரச் செய்தி.என் மனைவியின் தூரத்து உறவினரான திருமதி.சிவபாக்கியம் இறந்துவிட்டார். செய்தியை நம்பவும் முடியாமல், புறந்தள்ளவும் முடியாமல் நானும் என் மனைவியும் சிறிது நேரம் விக்கித்து நின்று ,பின் சுதாரித்து அவரின் வீடு விரைந்தோம்.

திருமதி.சிவபாக்கியத்திற்கும் எங்களுக்குமிடையேயான உறவு இன்னதென்று வரையறுக்க முடியாதது. மிஞ்சிப் போனால் அவர் வயது நாற்பத்தைந்திற்கு மேலிராது.அன்பான, அமைதியான கணவர், கல்லூரிப் படிப்பை முடித்துள்ள இரண்டு ஆண் பிள்ளைகள் என அளவான, மகிழ்ச்சியான குடும்பம். சைவப் பிள்ளைமார் வகுப்பைச் சேர்ந்தவர். அவரின் தோற்றம் , நடை, உடை, பேச்சு அத்தனையும் ஆகச் சிறந்த குடும்பத் தலைவிக்கானது. மூன்று அல்லது நான்கு பரஸ்பர சந்திப்பிற்குள்ளாக எங்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர். கலகலவென்ற பேச்சும் , கணீரென்ற சிரிப்புமாய் வரும் சிவபாக்கியம் பழகிய சிறிது நேரத்திலேயே எதிராளியைத் தன் வசப்படுத்தி விடுவார். எப்போதும் நேர்மறை சிந்தனை , பாசாங்கில்லாத பேச்சு, பேச்சை ஒட்டிய செயல், ஆழ்ந்த தெய்வ நம்பிக்கை, பிறருக்கு உதவும் பாங்கு என நல்ல மனிதருக்குண்டான அத்தனை குணங்களுக்கும் ஒட்டு மொத்த குத்தகைதாரர்.இவை அனைத்திற்கும் மேலாக, எத்தனை துன்பத்திற்கிடையிலும் மாறாத புன்னகையோடு ,'உங்களுக்கு நான் என்ன செய்யட்டும்' என்ற பாவனையோடு வலம் வருவார்.

சிவபாக்கியம் இறந்து போனதை விட , அவரை இழந்து நிற்கும் அவர் கணவரின் நிலைதான் என் துயரை அதிகப்படுத்தியது.எந்த வம்பு தும்புக்கும் போகாமல், தானுண்டு தன் வேலையுண்டு என்றிருப்பவர்.என் பார்வையில், அவர் தனது மனைவியை முழுமையாகச் சார்ந்திருந்தார் என்றே பட்டது.தன் மனைவியின் மனதையும் , புத்தியையும் புரிந்து கொண்டு , வேண்டிய இடத்தில் இடித்துரைத்து , வேண்டாத இடத்தில் மௌனம் காத்து இல்லறத் தேரின் சாரதிப் பொறுப்பை மனைவியிடம் ஒப்படைத்திருந்தார்.இன்று அத்தேரின் அச்சு முறிந்து விட்டது.

அங்கு சென்றவுடன் நான் முதலில் தேடியது சிவபாக்கியத்தின் கணவரைத்தான். மனிதர் நிலை குலைந்து உட்கார்ந்திருந்தார். தேம்பித் தேம்பி அழுது, இனி அழுது ஆகப் போவது ஒன்றுமில்லை எனத் தெளிவிற்கு வந்தவராய் இருந்தார்.ஆறு மாதத்திற்கு முன் மஞ்சள் காமாலை நோய் , பித்தப் பையில் கற்கள் என வியாதிகளால் பீடிக்கப்பட்டுப் பின் மேற்கொண்ட தொடர் சிகிச்சைகளின் பலனின்று இறந்து போனதாய்த் தெரிவித்தார்.வாழ்வின் அநித்யம் எனக்கு அந்த வினாடியில் உறைத்தது.

எனக்கும் இரண்டு ஆண் பிள்ளைகள்.என் மனைவியும் சிவபாக்கியம் போலவே ஆளுமை மிக்கவள்.அவளின் ஆளுமை எங்கள் அனைவரின் நலம் சார்ந்தது.என் அம்மாவிற்குப் பிறகு, என் மனைவியின் மூத்த பிள்ளையாகத்தான் நான் அவளால் பராமரிக்கப்பட்டு வருகிறேன்.
எதையும் , யாரையும் , எந்நேரமும் புரட்டிப் போட்டு விடும் சக்தி வாழ்க்கைக்கிருக்கிறது. நான் மட்டும் விதி விலக்கா என்ன? பின்னாளில் எனக்கும் இந்நிலை நேருமோ ? நேர்ந்தால், நானும் இவரைப் போல் நிலை குலைவேனோ? க்ஷண நேரத்தில் எல்லாம் புரிந்து போலிருந்தது.ஒரு வேளை எனக்கோ அல்லது என் மனைவிக்கோ இந்நிலை நேருமானால் , அந்நேரம் நினைத்துப் பார்க்க, மறைந்து போனவருடனான இனிய தருணங்கள் மட்டும் தான் உயிரோடு இருப்பவருக்குப் பிரதானமாக இருக்க வேண்டும். அத்தகைய சந்தோஷமயமான நிமிடங்களே இருவரின் வாழ்க்கையையும் அதுவரை நிரப்பியிருக்க வேண்டும்.அந்த சுகமான நினைவுகளே அடுத்த கட்ட வாழ்க்கைக்கு அடித்தளமாகவும் அமையும்.மாறாக, கசப்பான தருணங்களே நினைவடுக்கில் ததும்பி நின்றால் அதுவரை வாழ்ந்த வாழ்க்கையே அர்த்தமற்றுப் போய்விடும்.அதன் பின்னான காலமும் அத்தனை சுலபமாக இராது.

இப்போது நடத்திக் கொண்டிருக்கிற வாழ்க்கை எவ்விதம் இருக்கிறது என்ற கேள்வி சுரீரென மனதில் அறைந்தது.இந்தக் கேள்வி திருமணமான அத்தனை பேருக்கும் பொதுவானது என்றே நினைக்கிறேன். ஆழ்ந்து யோசித்தால் , பொருளாதாரம் சார்ந்த மனக்கஷ்டங்கள் , சுற்றத்தாரின் செய்கைகளால் இருவருக்கிடையிலான கருத்து மோதல்கள், குழந்தைகளைப் பேணுவதில் வாத பேதங்கள் என, சூழ்நிலைகளின் அழுத்தத்தால் உருவாகும் உரசல்கள் தவிர்க்க முடியாதது மட்டுமன்றி , தினசரி வாழ்க்கை சுவாரஸ்யப்பட அவை தேவையானவையும் கூட. ஆனால் அவை காரணமாக ஏற்படும் சிறு ஊடல்கள் கூட , அடுத்தவரைக் காயப்படுத்தியே ஆக வேண்டும் என்ற முனைப்பினால் வெளிப்படும் வார்த்தைப் பிரயோகங்களால், யுத்தம் போன்றதான அடுத்த தளத்திற்கு எடுத்துச் செல்லப்படுவதுதான் வேதனை.இது எங்களுக்குள்ளும் நடந்திருக்கிறது, உங்களுக்குள்ளும் நடந்து கொண்டிருக்கிறது. இதைத் தவிர்க்க வழி சொல்லும் நூல்களும் சரி , சொல்பவர்களின் ஆலோசனைகளும் சரி , அவற்றைப் படிக்கும் போதும், கேட்கும் போதும் வருகின்ற உற்சாகமும் தெளிவும் சொற்ப நேரத்திலேயே நீர்த்துப் போகின்றன.அல்லது ,யதார்த்த வாழ்வின் ஆழிச் சூழலில் அவை அமிழ்ந்து விடுகின்றன. நம் மனதும் நாக்கும், எதிர்ப்படும் யுத்தத்திற்காக எப்போதும் தயாராகக் காத்திருக்கின்றன.ஆனால் இது போன்ற எதிர்பாரா மரணங்களும் , மறைந்தவரோடு தொடர்புடையவர்களின் நிலையும் இந்த யுத்தம் பற்றிய நினைப்பை , அதை அறவே அகற்ற வேண்டியதின் அவசியத்தை நமக்கு சற்று அழுத்தமாகவே போதிக்கின்றன.

சிவபாக்கியத்தின் கணவர் நிலையில் என்னைப் பொருத்திப் பார்த்த அந்த நொடியில் , நான் என் மனைவியை சொற்களால் காயப்படுத்திய அத்தனை சம்பவங்களும் எனக்குள் சுழன்றடித்தன. அவை கொடுத்த குற்ற உணர்வும், சிவபாக்கியம் என்ற நல்ல பெண்மணியின் இழப்பும் சேர்ந்து என் கண்களை ஈரமாக்கின.அவருக்கு ஆறுதல் சொல்லும் நோக்கில் அவரின் கையைப் பிடித்தபடியே சிறிது நேரம் அமர்ந்திருந்தேன்.
அந்தப் பக்கம் வந்த என் மனைவியிடம் , " என்னப்பா...போலாமா ?" ,என்று கேட்டேன்.
"அதற்குள்ளாகவா?" , என்று ஆச்சர்யம் காட்டினாள்.

"ஆமா...இதுவே ரொம்ப லேட்..." - தெளிந்த மனதுடன் சொன்னேன்.
போகும் போது மறுபடியும் சிவபாக்கியத்தின் முகத்தைப் பார்த்தேன் .ஆழ்ந்த அமைதியுடனிருந்த அந்த முகம் எனக்கு ஏதோ சேதி சொல்வதாகவே பட்டது.
 

13 December 2009

நிசப்தம்


வீட்டுக்குள்
நுழையும் போதே
வெறுப்பேற்றும்
குழந்தையின் அழுகைக் குரல்
அவசர மின்னஞ்சலோ
ஆசைப்பட்ட பாடலோ
அலுவலக அலைபேசியோ
எதுவும் செய்ய
அனுமதிப்பதில்லை
பிள்ளை என்ற தொல்லை
என்றாலும்...
இந்த மழையின்
நீட்சியில்
மாலையிலேயே
உறங்கிப்போய்
அவன்
எழுப்பும்
நிசப்தம்
அதிர வைக்கிறது
மனதை!

-நரசிம்