25 January 2012

ஏன்..எதற்கு..எப்படி 3

# மறுவீட்டு மருமகளாம் தனது மகள்
மகளாகப் பாவிக்கப் படவேண்டும் எனும் தாய்
தன் வீட்டு மருமகளாய் வந்தவளை
தன் மகளாய்ப் பாவிக்க மறுப்பது ஏன் ?

# விரும்புவது கிட்டும் வரை
போராடும் நமது மனம்
விரும்பியது கிட்டிய பின்
விரும்பக் கூட மறுப்பது ஏன் ?

23 January 2012

பெற்றதால் பிறந்தோம்

பெற்றதால் பிறந்தோம்.

இட்டதால் வளர்ந்தோம்.

பால்யத்தில் மகிழ்ந்தோம்.

பருவத்தில் பிறழ்ந்தோம்.

காதலில் தொலைந்தோம்.

கலவியில் தேடினோம்.

பிள்ளைகள் பெற்றோம்.

பெற்றதால் பிறந்தோம்.

15 January 2012

தவளையின் பிரார்த்தனை

தற்போது வாசித்துக் கொண்டிருக்கும் புத்தகம் கண்ணதாசன் பதிப்பகம் வெளியிட்டுள்ள அந்தோணி டி மெல்லோ எழுதிய 'தவளையின் பிரார்த்தனை' - பாகம் இரண்டு.


கல்வி, உறவு முறைகள், பணி புரிதல், மனித இயல்பு போன்ற பல்வேறு தலைப்புகளில் வாழ்வியல் தத்துவங்களையும் , அவற்றை விளக்கும் வகையில் ஜென் மற்றும் சூபி கதைகளை ஒத்த தகவமைப்புடன் சிறு சிறு கதைகளையும் உள்ளடக்கிய புத்தகம். இரண்டு வருடங்களுக்கு முன்பே வாசித்திருந்தாலும் , தற்போதைய மீள் வாசிப்பில் புதுப் புது அனுபவங்களைத் தருகின்றது. ஞானம் என்பது ஒரு சுகானுபவத்தின் படிமங்களில் கைகூடுகிற விஷயமெனில், நீங்கள் இந்தப் புத்தகத்தை வாசிக்கிற ஏதேனும் ஒரு கணத்தில் உங்களுக்குள் அது நிகழக்கூடும்.

நூலிலிருந்து........

கல்வி என்னும் தலைப்பின் கீழ் ....

உலகத்திலேயே மிகவும் அழகான தீவுகளில் ஒன்று எனக் கருதப்பட்ட தீவில் , ஒரு வயதான மனிதர் தமது பெரும்பான்மையான நாட்களைக் கழித்து விட்டிருந்தார். தமது ஓய்வுக் காலத்தைக் கழிக்க , ஒரு பெரிய நகரத்திற்கு வந்து வசிக்கலானார். அப்போது ஒருவர் வந்து சொன்னார் ," உலகத்தின் அதிசயங்களில் ஒன்றான தீவில் பல வருடங்கள் வசித்தது உங்களுக்கு மிகவும் மகிழ்ச்சியைத் தந்திருக்கும்".

அதைப் பற்றிச் சிறிது யோசித்த அந்த வயதானவர் சொன்னார் , " அப்படியா ! அந்தத் தீவு அவ்வளவு பிரசித்தியானது என்பதை முன்னமே அறிந்திருந்தால் நான் சற்றுக் கவனித்துப் பார்த்திருந்திருப்பேனே ! "

எவ்வாறு பார்க்க வேண்டும் என்பதைப் பற்றிக் கற்றுக் கொள்ள வேண்டிய அவசியம் மக்களுக்கு இல்லை. அவர்களைக் குருடர்களாக ஆக்குகிற பள்ளிகளிலிருந்து காப்பாற்ற வேண்டிய அவசியம் மட்டுமே இருக்கிறது .

*********************************************************************************

மருத்துவரின் ஆலோசனையின் பேரில் ஒருவர் தனது நாய்க்கு தினமும் 'காட்லிவர்' எண்ணெய் கொடுத்து வந்தார். திமிறும் அதன் கால்களையும் , தலையையும் கெட்டியாகப் பிடித்துக் கொண்டு வாயை வலுக்கட்டாயமாகத் திறந்து புகட்டி விடுவார்.அவ்வாறு கொடுக்கும் போது, ஒரு நாள் எண்ணெய் கீழே கொட்டிவிட, அவர் கையிலிருந்து விடுபட்ட நாய் தானாகவே சென்று மிக நிதானமாக அதை நக்கி ருசிக்க ஆரம்பித்தது.அப்போதுதான் புரிந்தது , அத்தனை நாள் எண்ணெய் பிடிக்காமல் நாய் திமிற வில்லை, புகட்டப்படும் முறை ஒவ்வாமல் திமிறியுள்ளது.

பிள்ளைகள் கல்வியை வெறுப்பதில்லை.கற்பிக்கப்படும் முறையை வெறுக்கிறார்கள்.*********************************************************************************

ஆன்மீகம் என்னும் தலைப்பில் ....
அரண்மனைக்குள் நுழைந்த ஒரு ஞானியிடம் அரசர் கேட்டார்.

"உங்களுக்கு என்ன வேண்டும் ?"

" இந்தச் சத்திரத்தில் உறங்க ஒரு இடம்."

"இது சத்திரம் இல்லை; என் அரண்மனை."

"இந்த இடம் தங்களுக்கு முன்பாக யாரிடம் இருந்ததென்று தெரியுமா?"

" இறந்து போன என் தந்தையிடம் இருந்தது."

"அதற்கு முன்பாக யாரிடம் இருந்தது?"

"எனது தாத்தாவிற்கு சொந்தமாக இருந்தது. அவரும் இறந்து விட்டார்."

" மக்கள் சிறிது காலமே தங்கிச் செல்லும் இந்த இடம் சத்திரம் இல்லாமல் வேறென்ன?"

எல்லோரும் வெளியே செல்லவே ,காத்திருக்கும் அறையில் தங்கியிருக்கிறார்கள்.

*********************************************************************************

கடிகார வல்லுநர் ஒருவர் கடிகாரம் ஒன்றில் பெண்டுலத்தைப் பொருத்தும் போது , அந்தப் பெண்டுலம் அவரிடம் சொன்னது.

"தயவு செய்து என்னை இதில் மாட்டாதீர்கள். ஒரு நிமிடத்திற்கு அறுபது நொடிகள் வீதம், ஒரு மணியின் அறுபது நிமிடங்களுக்கும் , ஒரு நாளின் 24 மணி நேரமும், ஒரு வருடத்தின் 365 நாட்களும் நான் அசைய வேண்டியுள்ளது. ஒவ்வொரு வருடமும் கோடிக்கணக்கான அசைவுகள். என்னால் அதை ஒரு போதும் செய்ய முடியாது."

அதற்கு அவர் பதிலளித்தார் .

" எதிர்காலத்தைப் பற்றி கவலைப்படாமல் ஒரு தடவையில் ஒரு முறை அசை; உனது வாழ்க்கையின் எஞ்சிய நாட்கள் முழுவதும் ஒவ்விரு அசைவையும் நீ ரசித்து மகிழ்வாய்."

இந்த வினாடியில் வாழுங்கள் .
********************************************************************************