17 April 2012

காயகல்பம்


1.உங்களுக்கு நீண்ட நாள் நோய் நொடியில்லாமல் வாழ ஆசையிருக்கிறதா?
2.தற்போது பீடித்திருக்கும் நோயிலிருந்து முற்றிலும் விடுதலையாக விருப்பமிருக்கிறதா?
3.உங்கள் பிள்ளைகளுக்கு ஆரோக்கியமான வாழ்வை அளிக்க விழைவிருக்கிறதா?
மேற்கண்ட கேள்விகளுக்கு 'இல்லை' என்பது உங்கள் பதிலாக இருப்பின், அவ்வாறு ஆசையிருக்கிற உங்களின் நண்பர்களுக்கு , கீழ் கொடுக்கப்பட்டுள்ள ஒலிக் கோர்வை இணைப்பை தயவு செய்து அனுப்பி வையுங்கள்.
'ஆம்' என்பது உங்கள் பதிலெனில் , நீங்களும் அந்த ஒலிக் கோர்வைக்கு அதன் வரிசைக் கிரமத்தில் சற்று காது கொடுங்கள்.

http://www.box.com/s/a4ce322fd493058e1cca


பழத்தை உரித்துக் கையில் கொடுத்தாயிற்று; தின்று செரிக்க வேண்டியது உங்கள் பாடு.

13 April 2012

இணையமும் , காதலும்



ஆனந்த விகடனில் இந்த வாரம் வெளியாகியுள்ள மனுஷ்யபுத்திரன் அவர்களின் பேட்டியிலிருந்து.....
e-mail, facebook, twitter என இன்றைய சமூகம் ஒரு மெய்நிகர் உலகத்தில் வாழ ஆரம்பித்து விட்டதா?
இணையத்தின் வழியாக திறந்து விடப்பட்டு இருக்கும் உலகம் ஆச்சர்யங்களும் அதிசயங்களும் நிறைந்தது. மனித குல வரலாற்றில் இத்தனை கட்டற்ற சுதந்திரம் முன்னொரு போதும் இருந்ததில்லை.தன் அடையாளத்தை முழுவதும் மறைத்துக் கொண்டு , அடையாளமே இல்லாத இன்னொருவருடன் உரையாடலாம்.இது மனிதனுக்குப் பெரிய மன விடுதலையைக் கொடுத்திருக்கிறது. ஏனெனில், நமது சமூகம் எப்போதும் நமது ஆசாபாசங்களைக் கட்டுப்படுத்திக் கொண்டே இருக்கிறது. இடைவிடாமல் கண்காணிக்கிறது. நவீன தொழில் நுட்பம் மேலும் மேலும் தனிமைப்படுத்துகிறது. இணைய உலகில் இந்த தனிமைப்படுத்தலும், கண்காணிப்பும் இல்லை என்பது மனித மனதுக்குப் பெரிய ஆசுவாசம். ஆகவே,நான் இதை எதிர்மறையாகப் பார்க்க வில்லை.யதார்த்த வாழ்க்கையில் வாழ முடியாத வாழ்க்கையைக் கற்பனையில் வாழ்வதற்கான வாசலை விஞ்ஞானம் திறந்து விட்டுள்ளது. இதை அனுபவிப்பதற்கான உரிமை எல்லோருக்கும் உள்ளது. குறிப்பாக, பெண்களுக்கு இந்த cyber space மிக முக்கியமானது. இதுவரை நம்மைக் கண்காணித்து, கட்டுப்படுத்தி அதன் மூலம் அதிகாரத்தைச் சுவைத்தவர்கள் தான் இப்போது பதற்றத்துடன் எதிர்க்கின்றனர்.
காதல் இப்போதும் புனிதமானதுதானா?
காதல் எப்போதும் காதலாக மட்டும்தான் இருந்திருக்கிறது. அது புனிதமானதாகவோ, புனிதமற்றதாகவோ ஒருபோதும் இருந்ததில்லை. எல்லா அடிப்படைத் தேவைகளையும் போல காதலும் ஓர் ஆதாரமான தேவை. குழந்தைகளுக்கான உணவுப்பொருட்களில் கூடக் கலப்படம் வந்து விட்ட உலகில் , காதல் மட்டும் எப்படித் தூய்மையானதாக இருக்க முடியும்? ஆனால், நடைமுறையில் சாத்தியப்படாத அப்படி ஒரு தூய்மைவாதக் காதலுக்கு மனித மனம் ஏங்குகிறது. கற்பனையின் வழியே காதலின் முழுமையை அடையத் துடிக்கிறது. நமது இலக்கியங்கள் அதற்குத் துணை செய்கின்றன. யதார்த்தம் அப்படி இருக்க முடியாது என்பதால் , காதல் புனிதமானதாக இருப்பது இல்லை.

31 March 2012

கனவு நிஜம்

என்னால் 'இல்லை' யென்று
மறுக்கப்பட்ட ஓர் உணர்வு
என்னுள் தான் உள்ளதென
தன்னிருப்பை உணர்த்தியது
நேற்று முன் தினம் என் கனவில்.

'இல்லை'யென்று அதுவரை
மறுதலித்த நினைவு மனம்
ஒருக்கால் இருக்குமோ வென
ஓர்மைப்படத்  துவங்கிற்று.

முந்தைய கனவின் நகலாய்
நேற்றைய கனவும் அமைந்திட
ஓர்மைப்பட்ட நினைவு மனம்
உறுதிப்பட்டது இப்போது.

நேற்றைய கனவே
முந்தைய கனவும்.
நேற்றைய மனமல்ல
இன்றைய மனம்.
எனில்,
கனவு நிஜம்.
நினைவு கனவு.

25 March 2012

ராஜாவின் ராஜபாட்டை


அவதாரம் படத்தின் 'தென்றல் வந்து தீண்டும்போது ' பாடல் பிறந்த கதையை
'தோனி' திரைப்படத்தின் ஒலிப்பேழை வெளியீட்டு விழாவில் நடிகர் நாசர்

விவரித்தார். அவர் உரையில் இருந்து...
1994ல் நான் இசைஞானியிடம் சென்று, ‘சார்..! ஒரு படம் பண்ணலாம் என்று இருக்கிறேன்..!’ என்றேன்.
‘எதுக்குய்யா.. ? பிஸியா நடிச்சிகிட்டு இருக்க..! எதுக்கு இப்போ Produce பண்ணிகிட்டு?
‘இல்ல சார்..! நான் டைரக்ட் பண்ணலாம்னு இருக்கேன்’
‘இப்போதான் பிஸியா இருக்கியே..! இப்போ எதுக்குய்யா?’
‘இல்ல சார்..! சில விஷயங்கள் தோணும்போது பண்ணனும்’..!
‘ஓ! தெளிவா பேசுறதா நெனப்போ ஒனக்கு? சரி என்ன படம்..?’
“சார்..! ஒரு சின்ன கிராமத்துக்கதை.. தெருக்கூத்தை வைத்து… …”
“தெருக்கூத்தா..? என்னய்யா? நான் வேற Journey-ல இருக்கேன்..! ம்ம்ம்..?? சரி..! பார்க்கலாம்’ என்றார்.
நான் ஏமாற்றம் அடையவில்லை. படப்பிடிப்பிற்குச் சென்றேன். படம் எடுத்தேன். தொகுத்தேன். பின்னணிக்குரல் சேர்த்தேன். பின்னணி ஒலிகள் சேர்த்தேன். ஒரு நாள்..

“சார் நான் படத்தை முடிச்சுட்டேன்..”
“என்ன அதுக்குள்ளேயா?”
‘ஆமா சார்..! நீங்க படம் பார்க்கணும்”
“சரி” என்றவர் படம் பார்த்தார்.
அந்தப் படம் ‘அவதாரம்’ . படம் முடித்துக் காரில் ஏறி, ‘வீட்டுக்கு வா’ என்றார். எனக்கு ஒரே பயம். பல நூறு படங்களைக் கண்ட ஒரு மாபெரும் கலைஞன் என் படத்தைப் பார்க்கிறான். ஒரு விமர்சனம், ஒரு பாராட்டுதல் இல்லாமல் ‘வீட்டுக்கு வா’ என்றால் என்ன அர்த்தம்? ஒரு வேளைத் திட்டப் போகிறாரோ என்று பயந்துகொண்டே சென்றேன்.

அவருடைய வீடு சாத்வீகமாக, ஒரு கோயில் போல இருந்தது.
‘எப்படிய்யா இப்படி ஒரு படம் பண்ணியிருக்க..? நல்லாயிருக்கே..! சரி நாளைக்கு ரெக்கார்டிங் வச்சுக்கலாம்’
‘சார்…! நாளைக்கு…. … வச்சா … … .. ப்ரொடியூசர் ஊரில் இல்ல சார்..’
‘ப்ரொடியூசர் எதுக்குய்யா? டைரக்டர் நீ இருக்க..! மியூசிக் டைரக்டர் நான் இருக்கேன்..! வா.. பாத்துக்கலாம்..!’
‘சார்..! அதில்ல சார்..!’
‘புரியுதுய்யா..! போய்யா அதெல்லாம் ஒண்ணும் வேணாம்..! ப்ரொடியூசர் எங்க இருக்காரு?’
‘சார்… வந்து... அமெரிக்காவில்’
‘சரி..! வரட்டும் ..! அப்பறம் பாத்துக்கலாம்..! ரெக்கார்டிங் நாளைக்கு…”

உங்கள் எல்லோருக்கும் தெரியும். சினிமாவில் அட்வான்ஸ் என்ற ஒன்று இல்லாமல் ஒரு காரியமும் நடக்காது. பலவிதமான Excitement-க்கு நடுவே இதனால் எனக்குத் தலைகால் புரியவில்லை. அடுத்த நாள் ஆறு மணிக்கு வரச்சொன்னார். பதைபதைப்புடன் போனேன்.
வெள்ளை வெளேர் என்ற ஒரு அறை. கருப்பு வெள்ளையில் ரமண மகரிஷியின் ஒரு புகைப்படம். அதனருகில் அம்மா என்கிற ஒரு ஆத்மாவின் புகைப்படம். அதே கருப்பு வெள்ளை 3D Animation போல அருகில் இளையராஜா, அவர் பக்கத்தில் ஒரு கோப்பையில் இறக்குமதி செய்யப்பட்ட சாக்லேட்டுகள்..! இவைகளைத் தவிர அந்த அறையில் இருந்த மற்றொரு முக்கியமான விஷயம் ”அமைதி”. நான் சென்றபோது ஏதோ எழுதிக்கொண்டிருந்தார். நான் நின்றுகொண்டிருந்தேன். உட்காரச் சொன்னார். உட்கார்ந்தேன். ஒரு சாக்லேட்டை எடுத்து என்னிடம் போட்டார். நான் அதைப் பிடித்தேன். அந்த சாக்லேட் பேப்பரின் ஒலிதான் அந்த அறையில் நான் நுழைந்து ஐந்து நிமிடங்களில் நான் கேட்ட முதல் ஒலி. ”இதைப்பிரித்தால் சாக்லேட் பேப்பரின் ஒலி இவரை Disturb செய்துவிடுமே..? இதைப் பிரிக்கலாமா வேண்டாமா? சாப்பிடுவதா இல்லையா?” என்று எனக்கு யோசனை.

அவர் எழுதிக்கொண்டே இருக்கிறார். எழுதிக்கொண்டே இருக்கிறார். வேகமாக எழுதுகிறார். கோபத்துடன் எழுதுகிறாரா, பாசத்துடன் எழுதுகிறாரா, யாருக்கு எழுதுகிறார், என்ன எழுதுகிறார், எதுவும் தெரியவில்லை. நான் உட்கார்ந்துகொண்டே இருக்கிறேன். மெதுவாக எனக்குக் கோபம் வரத்துவங்குகிறது.
”என்ன இது? நான் ஒரு டைரக்டர்..! என்னை வரச்சொல்லிவிட்டு இவர் எழுதிக்கொண்டிருக்கிறார்..! அவர் சொந்த விஷயத்தை எழுதுவதற்கு என்னை எதற்கு வரச்சொன்னார்?
பக்கம் பக்கமாக வேகமாக எழுதியவர், நிமிர்ந்து ‘புரு...’ என்றார். அவர் கூறியது ஒரு நான்கு அடி தள்ளி அமர்ந்திருந்த என் வரைக்கும்தான் கேட்டிருக்கும். ஆனால் வெளியில் இருந்து ‘புரு’ என்கிற ஆறடி உயர ‘புருஷோத்தமன்’ வந்தார். அவர்கள் இருவருக்குள்ளும் அப்படி ஒரு Intimate communication..! Sheets எல்லாம் அவரிடம் கொடுத்துவிடுகிறார். ‘இதை Distribute பண்ணிடு’ என்கிறார்.
”சரி..! அவர் வேலை முடிந்தது..! இனி நம் வேலைக்கு வருவார்” என்று நினைத்தேன்.
‘என்ன சார்..?”
‘அது போய்டுச்சுய்யா’
'சார்.. ..'
‘அதுதான்.. அந்த first பாட்டு..! போய்டுச்சுய்யா..’
‘சார் .. எந்த Scene?’
‘யோவ்..! அதான் உன் படம் சொல்லிடுச்சேய்யா..! எந்தெந்தப் பாட்டு எங்கெங்க வரணும்னு’
‘அப்டியா சார்?’
‘ரொம்ப நல்லா வந்திருக்குதுய்யா.. கேளு..’ என்றவர், பாடத் துவங்குகிறார்.. ‘தன்னனன தான தான தான நான நா…. (தென்றல் வந்து தீண்டும்போது)’. அவர் போட்டிருந்த டியூன் எனக்குப் பிடிக்கவில்லை.
‘என்னய்யா? என்னய்யா யோசிக்கிற? கேளு..!’ என்றவர் மறுபடி ‘தன்னனன’ பாடத் துவங்கினார்.
அப்போதான் தெரிகிறது. நான் எவ்வளவு பெரிய ஞானசூன்யம் என்பது. ’நல்லாயிருக்குது என்று சொன்னால் எது நல்லாயிருக்குது என்று கேட்பார். நல்லாயில்லை என்று சொன்னால் என்னய்யா நல்லாயில்ல என்பாரே’ என்ற யோசனையுடன்..
‘இல்ல சார்..! இதற்கு முன்னால் வரும் பாடலில் காட்சிகள் கொஞ்சம் வேகம் குறைந்ததாக இருக்கும். இது கொஞ்சம் வேகமான பாட்டா இருந்தா நல்லா இருக்கும்.’
‘அதுதான்யா இது..! நல்லா வரும்யா..!’
’சார்..! கொஞ்சம் Tempo-வாவது ஏத்த முடியுமா?’
என் மேல் உள்ள அன்பா அல்லது ரீரெக்கார்டிங்கின்போது என்னுடைய நடிப்பைப் பார்த்துவிட்டு என் மேல் ஏற்பட்ட நல்ல ஒரு உணர்வா எதுவென்று தெரியவில்லை. வேறு எந்த மியூசிக் டைரக்டரிடம் நான் இதைச் சொல்லியிருந்தாலும் என்னை அடித்து ‘போடா வெளியே’ என்று துரத்தியிருப்பார்கள். ஒரு ஞானியிடம் சென்று ஒரு ஞானசூன்யம் சொல்கிறது ‘கொஞ்சம் Tempo ஏத்துங்க’..!
அவர் சிரித்தார். எனக்கு வேலை இருக்கிறதா என்று கேட்டு பின்னர் நாலு மணிக்கு வரச்சொன்னார்.

நான் சென்றவுடன் என்னுடைய Assistant Directors எல்லாம் டியூன் எப்படி இருந்தது என்று கேட்டார்கள். 'ஏதோ இருந்தது' என்று சொன்னேன். அதற்கு அவர்கள் ‘அவர் அப்படித்தான் சார் போடுவார். நாமதான் சார் நாலஞ்சு டியூன் போடச் சொல்லிக் கேட்டு வாங்கணும்’ என்றார்கள். நான் அதற்கு, ‘விடுங்கய்யா.. நாலு மணிக்கு வரச்சொல்லியிருக்கிறார். நான் Tempoவை கூட்டச்சொல்லியிருக்கிறேன்” என்றேன்.

நாலு மணிக்குச் சென்றேன். ரெக்கார்டிங் ஸ்டுடியோ ஒரு கல்யாண மண்டபம் போன்று இருந்தது. பலவிதமான வாத்தியக்கருவிகளின் பலவிதமான சப்தங்கள்..! பரவாயில்லை. நம் பாட்டுக்கு இவ்வளவு பேர் வேலை செய்கிறார்கள் என்று ஒரு சந்தோஷம். சரியாய் நாலரை மணிக்கு சொல்கிறார்…
' சரி ஒரு மானிட்டர் பார்க்கலாம்’
எங்கும் அமைதி…!
1…..! 1..2..3..4..
‘தானத் தம்தம் தானத் தம்தம் தானத் தம்தம் தானத் தன்னானா..’ பாடலின் கோரஸ் துவங்குகிறது.
'....... ...... ....'
'....... ...... ....'
I cried..... நான் அழுதேன்.
பக்கத்தில் அவர் முழங்கால்கள் இருந்தன. அவற்றைப் பற்றிக்கொண்டு, ‘சார்..! தயவுசெய்து என்னை மன்னிச்சுடுங்க சார். நான் தெரியாம எதோ சொல்லிட்டேன்’ என்றேன்.

02 March 2012

கடவுளின் வேண்டுதல்

நான் எப்பவும் குழந்தையாவே இருக்கணும் , மாதாவே....!

15 February 2012

கல்யாண்ஜி கவிதைகள்

கல்யாண்ஜியின் கவிதைகளை வாசித்துக் கொண்டிருக்கிறேன். புறம் ஏற்படுத்தும் தாக்கங்களும் , அகம் உணரும் உணர்வுகளும் அனாயாசமான வார்த்தைகளில் வந்து விழுகின்றன கல்யாண்ஜி அவர்களுக்கு. மிக எளிமையான ஒப்பீடுகளின் வாயிலாக வாழ்க்கையின் பின்னே மறைந்து கிடக்கும் பேருண்மைகளை வெளிக்கொணர்வது அவருக்கு எளிதாகக் கைகூடுகிறது. மனம் சஞ்சரிக்க விரும்பும் உலகத்திற்கும் , நாம் தினம் எதிர்கொள்ள நேரிடும் எதார்த்த வாழ்வின் சிக்கல்களுக்கும் இடைப்பட்ட தொலைவை இவரது கவிதைகள் பிரயத்தனம் ஏதுமின்றிக் கடக்கின்றன.



நூலிலிருந்து ...
********************************************************
தலைப் பிரட்டைகள்
நீயும் பிஸ்கட் தின்னென்று
பேபி சொல்லும்
ஆயாவோ
மீதித் துட்டைச் சரி பார்த்து
வாங்க நிற்பாள்.
பேக்கரியின் அடியில் பழம்பேப்பர்க்
கிழிசலோடு விளையாடி
பூனைக்குட்டி தரையெலாம்
புரண்டு கொஞ்சும்
எலி வேட்டை
இன்னும் தெரியாது
என்பதனால்.
******************************************
சூரியனை -
ஆற்றங்கரை மணலை -
பாசஞ்சர் ரயிலின்
அற்புத இரைச்சலை -
பட்டாம் பூச்சியைத்
தொலைத்து விட்டு
நாற்காலிக் கால்களில்
நசுங்கிக் கிடக்கிறது
சோற்றுக்கலையும் வாழ்க்கை .
*********************************************
நறுக்கென்று
ஒரு சிறு கவிதை
எழுத முயல்கிறேன்.
கொப்பரைத் தண்ணீரைக்
கவிழ்ப்பதை விட
எப்போதும் சிரமமாகத்தான்
இருக்கிறது
பேனாவுக்கு மை அடைப்பது.
********************************************
சிறுவனாகப்
பென்சில் சீவும் போது
கசிந்த ரத்தம்
உண்மையாக இருந்தது.
இப்போது ஜாக்கிரதை உணர்வு
வந்து விட்டது வயதுடன் .
எஞ்சியது என்ன ?
காயம் படாத கைவிரல்.
நிஜம் கசியாத கவிதை.
***************************************

14 February 2012

காதல் எனப்படுவது ...

பால்யம் :
இதுதானெனத் தெரியாது
அதுவாவெனப் புரியாது
எதுவாயிருப்பினும் மனதுக்கு
ஏதுவாயிருக்கும் அதுதானது !

பதின்மம் :
இதுவானதாகவும் தெரியும்
அதுவானதாகவும் தெரியும்
எதுதானதுவெனப் பருவம்
அறியாது அதுதானது !

மத்திமம் :
இதுதானெனத் தெளியும்
அதுதானெனவும் புரியும்
எதுதானதுவெனத் தேடும்
தேடிக் காணும் அதுதானது !

அந்திமம் :
இதுவுமல்ல அதுவுமல்ல
எதுவுமல்ல அதுவென
உயிர் அடையும் உணர்வு
உண்மையில் அதுதானது !

25 January 2012

ஏன்..எதற்கு..எப்படி 3

# மறுவீட்டு மருமகளாம் தனது மகள்
மகளாகப் பாவிக்கப் படவேண்டும் எனும் தாய்
தன் வீட்டு மருமகளாய் வந்தவளை
தன் மகளாய்ப் பாவிக்க மறுப்பது ஏன் ?

# விரும்புவது கிட்டும் வரை
போராடும் நமது மனம்
விரும்பியது கிட்டிய பின்
விரும்பக் கூட மறுப்பது ஏன் ?

23 January 2012

பெற்றதால் பிறந்தோம்

பெற்றதால் பிறந்தோம்.

இட்டதால் வளர்ந்தோம்.

பால்யத்தில் மகிழ்ந்தோம்.

பருவத்தில் பிறழ்ந்தோம்.

காதலில் தொலைந்தோம்.

கலவியில் தேடினோம்.

பிள்ளைகள் பெற்றோம்.

பெற்றதால் பிறந்தோம்.

15 January 2012

தவளையின் பிரார்த்தனை

தற்போது வாசித்துக் கொண்டிருக்கும் புத்தகம் கண்ணதாசன் பதிப்பகம் வெளியிட்டுள்ள அந்தோணி டி மெல்லோ எழுதிய 'தவளையின் பிரார்த்தனை' - பாகம் இரண்டு.


கல்வி, உறவு முறைகள், பணி புரிதல், மனித இயல்பு போன்ற பல்வேறு தலைப்புகளில் வாழ்வியல் தத்துவங்களையும் , அவற்றை விளக்கும் வகையில் ஜென் மற்றும் சூபி கதைகளை ஒத்த தகவமைப்புடன் சிறு சிறு கதைகளையும் உள்ளடக்கிய புத்தகம். இரண்டு வருடங்களுக்கு முன்பே வாசித்திருந்தாலும் , தற்போதைய மீள் வாசிப்பில் புதுப் புது அனுபவங்களைத் தருகின்றது. ஞானம் என்பது ஒரு சுகானுபவத்தின் படிமங்களில் கைகூடுகிற விஷயமெனில், நீங்கள் இந்தப் புத்தகத்தை வாசிக்கிற ஏதேனும் ஒரு கணத்தில் உங்களுக்குள் அது நிகழக்கூடும்.

நூலிலிருந்து........

கல்வி என்னும் தலைப்பின் கீழ் ....

உலகத்திலேயே மிகவும் அழகான தீவுகளில் ஒன்று எனக் கருதப்பட்ட தீவில் , ஒரு வயதான மனிதர் தமது பெரும்பான்மையான நாட்களைக் கழித்து விட்டிருந்தார். தமது ஓய்வுக் காலத்தைக் கழிக்க , ஒரு பெரிய நகரத்திற்கு வந்து வசிக்கலானார். அப்போது ஒருவர் வந்து சொன்னார் ," உலகத்தின் அதிசயங்களில் ஒன்றான தீவில் பல வருடங்கள் வசித்தது உங்களுக்கு மிகவும் மகிழ்ச்சியைத் தந்திருக்கும்".

அதைப் பற்றிச் சிறிது யோசித்த அந்த வயதானவர் சொன்னார் , " அப்படியா ! அந்தத் தீவு அவ்வளவு பிரசித்தியானது என்பதை முன்னமே அறிந்திருந்தால் நான் சற்றுக் கவனித்துப் பார்த்திருந்திருப்பேனே ! "

எவ்வாறு பார்க்க வேண்டும் என்பதைப் பற்றிக் கற்றுக் கொள்ள வேண்டிய அவசியம் மக்களுக்கு இல்லை. அவர்களைக் குருடர்களாக ஆக்குகிற பள்ளிகளிலிருந்து காப்பாற்ற வேண்டிய அவசியம் மட்டுமே இருக்கிறது .

*********************************************************************************

மருத்துவரின் ஆலோசனையின் பேரில் ஒருவர் தனது நாய்க்கு தினமும் 'காட்லிவர்' எண்ணெய் கொடுத்து வந்தார். திமிறும் அதன் கால்களையும் , தலையையும் கெட்டியாகப் பிடித்துக் கொண்டு வாயை வலுக்கட்டாயமாகத் திறந்து புகட்டி விடுவார்.அவ்வாறு கொடுக்கும் போது, ஒரு நாள் எண்ணெய் கீழே கொட்டிவிட, அவர் கையிலிருந்து விடுபட்ட நாய் தானாகவே சென்று மிக நிதானமாக அதை நக்கி ருசிக்க ஆரம்பித்தது.அப்போதுதான் புரிந்தது , அத்தனை நாள் எண்ணெய் பிடிக்காமல் நாய் திமிற வில்லை, புகட்டப்படும் முறை ஒவ்வாமல் திமிறியுள்ளது.

பிள்ளைகள் கல்வியை வெறுப்பதில்லை.கற்பிக்கப்படும் முறையை வெறுக்கிறார்கள்.*********************************************************************************

ஆன்மீகம் என்னும் தலைப்பில் ....
அரண்மனைக்குள் நுழைந்த ஒரு ஞானியிடம் அரசர் கேட்டார்.

"உங்களுக்கு என்ன வேண்டும் ?"

" இந்தச் சத்திரத்தில் உறங்க ஒரு இடம்."

"இது சத்திரம் இல்லை; என் அரண்மனை."

"இந்த இடம் தங்களுக்கு முன்பாக யாரிடம் இருந்ததென்று தெரியுமா?"

" இறந்து போன என் தந்தையிடம் இருந்தது."

"அதற்கு முன்பாக யாரிடம் இருந்தது?"

"எனது தாத்தாவிற்கு சொந்தமாக இருந்தது. அவரும் இறந்து விட்டார்."

" மக்கள் சிறிது காலமே தங்கிச் செல்லும் இந்த இடம் சத்திரம் இல்லாமல் வேறென்ன?"

எல்லோரும் வெளியே செல்லவே ,காத்திருக்கும் அறையில் தங்கியிருக்கிறார்கள்.

*********************************************************************************

கடிகார வல்லுநர் ஒருவர் கடிகாரம் ஒன்றில் பெண்டுலத்தைப் பொருத்தும் போது , அந்தப் பெண்டுலம் அவரிடம் சொன்னது.

"தயவு செய்து என்னை இதில் மாட்டாதீர்கள். ஒரு நிமிடத்திற்கு அறுபது நொடிகள் வீதம், ஒரு மணியின் அறுபது நிமிடங்களுக்கும் , ஒரு நாளின் 24 மணி நேரமும், ஒரு வருடத்தின் 365 நாட்களும் நான் அசைய வேண்டியுள்ளது. ஒவ்வொரு வருடமும் கோடிக்கணக்கான அசைவுகள். என்னால் அதை ஒரு போதும் செய்ய முடியாது."

அதற்கு அவர் பதிலளித்தார் .

" எதிர்காலத்தைப் பற்றி கவலைப்படாமல் ஒரு தடவையில் ஒரு முறை அசை; உனது வாழ்க்கையின் எஞ்சிய நாட்கள் முழுவதும் ஒவ்விரு அசைவையும் நீ ரசித்து மகிழ்வாய்."

இந்த வினாடியில் வாழுங்கள் .
******************************************************************************** 

30 December 2011

சரிகமபதநி


"புவன்...நீ பெரிய்ய்ய்ய ஆளா வருவடா..." - இன்று அதிகாலை என்னிடமிருந்து உதிர்ந்த இந்த வார்த்தைகளுக்குக் காரணம் இல்லாமலில்லை.

பள்ளி அரையிறுதி விடுமுறை , கல்லூரி பருவ விடுமுறை, மார்கழிப் பனி , மாக்கோலம் , கிறிஸ்துமஸ் பண்டிகை.................

டிசம்பர் மாதம் என்றதும் சட்டென்று உங்கள் நினைவிற்கு வருவதின் பட்டியல் பெரும்பாலும் இப்படித்தானிருக்கும். இதில் விடுபட்டுப் போன 'மார்கழி மகா உற்சவம்' பற்றிய என்னுடைய ஏக்கம் எழுத்தில் வடிக்க முடியாதது. சென்னையின் தெருக்களில் இசைப் பேராறு கரைபுரண்டோடும் இந்த ' december season' நிகழ்வுகள் பற்றி ஊடகங்கள் வாயிலாக அறியும் பொழுது இந்த ஏக்கம் பன்மடங்காகிறது.


படிப்பு, வேலை , குடும்பம் ,குழந்தைகள் , வீடு , இன்ன பிற வசதிகள் என சமூகத்தில் மதிப்புடன் வாழத் தேவையானவற்றை அடைந்திருந்தாலும் மனம் அடைய விரும்பும் உச்ச பட்ச சந்தோஷத்தின் எல்லை வரையறுக்க இயலாததாகவும் , இன்னும் வேண்டும் இன்னும் வேண்டும் என்ற தவிப்பு தவிர்க்க இயலாததாகவும் இருக்கிறது. ருசியான உணவு, அமைதி தரும் ஆன்மிகம் , அருமையான புத்தகம் , இனிமையான இசை , ஆகச் சிறந்த திரைப்படம், ஆழமான நட்பு என மகிழ்ச்சி தரும் தளங்களை மனம் தொடர்ந்து பரீட்சித்துக் கொண்டேதானிருக்கிறது. இதில் நான் தவற விட்டதும் , இனிமேல் கைக்கொள்ள முடியாததுமான இசை ஞானத்தைப் பற்றி நினைக்கும் போதெல்லாம் என்னுள் சொல்லவொண்ணா துயறேருகிறது.

கேட்கும் நல்ல திரைப்பாடல்களைச் சிலாகிப்பதும் , உற்சாகமான மனநிலையில் அவற்றை அசை போடுவதும் தான் என்னுடைய இசை அறிவின் எல்லை. இசை பற்றிய நுணுக்கமான கட்டுரைகளை எவ்வளவு முயற்சித்தாலும் புரிந்து கொள்ள இயலாத பொழுது எனக்கு நேரிட்டிருக்கிற உன்னத உலகத்தின் இழப்பை என்னால் உணர முடிகிறது. கல்யாணியும் , காம்போதியும் , பைரவியும் , பந்துவராளியும் இந்த ஜன்மத்தில் வெறும் வார்த்தைகளாக மட்டுமே என்னுடன் உறவாடும் பாக்கியம் பெற்றிருக்கிறேன். நித்யஸ்ரீயும் , டி.எம்.கிருஷ்ணாவும் , சௌம்யாவும், சுதா ரகுநாதனும் செய்யும் ஆலாபனைகள் என்னுள் வெறும் சப்தங்களாகவே வந்து விழும் பாமர நிலையிலிருக்கிறேன். வர்ணம், கிருதி, கீர்த்தனை , தில்லானா, தரு, தரங்கம், ராகம், தானம், பல்லவி போன்ற பதங்களுக்கு பொருள் தெரிந்து செரிப்பதே பெரும் அறிவு என்றாகிட்டது.


இன்று சின்ன சின்ன வாண்டுகள் எல்லாம் 'சரிகமபதநி' போடுவதைப் பார்க்கும் போது சற்றுப் பொறாமையாகவே இருக்கிறது. அவ்வப்போது நினைத்துக் கொள்வேன், நாம் தவற விட்டதை, நமக்குத் தவறி விட்டதை , நம் பிள்ளைகளுக்காவது கொடுக்க வேண்டும் என்று. புற ஆதாயத்திற்காக இல்லாவிட்டாலும் அக மலர்ச்சிக்காகவாவது பிள்ளைகளுக்கு முறையான இசையை பழக்கப்படுத்த வேண்டும். நேரம் ஒதுக்கி இசை வகுப்புகளுக்கு அனுப்ப வேண்டும். இன்று அதிகாலை இவ்வாறெல்லாம் எண்ணம் பீறிட , அருகில் விளையாடிக் கொண்டிருந்த புவனிடம் கேட்டேன்.

" செல்லம் ... உனக்குப் பிடிச்ச பாட்டை அப்பாக்கிட்ட பாடிக் காட்டு , பார்ப்போம்."

" கொலவெறி...கொலவெறி...கொலவெறி... கொலவெறிடி..."

"புவன்...நீ பெரிய்ய்ய்ய ஆளா வருவடா..."

28 December 2011

இதை விட பெரிதாக

'வாழ்க்கை எப்படி போகிறது'
என்று கேட்டான்
ரொம்ப நாள் கழித்து
சாட்டில் வந்த நண்பன்.
முன் தினம் சரவணபவனில்
பெரிய தோசை வேண்டுமென
அடம் பிடித்து வாங்கிச்
சாப்பிட முடியாமல்
முழித்துக் கொண்டிருந்த
சிறுமியைப் பற்றிச் சொன்னேன்.
'அப்புறம் பார்க்கலாம்' என்று
மறைந்து போனான்.
என்னிடம் பெரிதாக
எதையேனும்
எதிர்பார்க்கிறார்களோ.

-முகுந்த் நாகராஜன்

சொர்க்கம்

          சற்றே சாய்வான நாற்காலியும்
          நகுலனும்
          சுசீலாவும்
          மழையும்
          மரமும்
          வேறென்ன வேண்டும் எனக்கு .

           -முத்துசாமி பழனியப்பன்

நான் அறிந்த ஓஷோ


தற்போது வாசித்துக் கொண்டிருக்கும் நூல்களைப் பற்றி 'சொர்க்கத்தின் வாசலில்' என்ற தலைப்பின் கீழ் பகிரலாம் என்று எண்ணம். தலைப்புக்கு வலு சேர்க்கும் விதமாக,ஏற்கெனவே நான் எழுதிய 'வாழும் அனுபவ'த்தை இங்கு எடுத்தாள்கிறேன்.


மழை ஓய்ந்த பின்னிரவில்

அலை ஓய்ந்த மனதோடு

இதமான குளிர் அறையில்

மிதமான உண்டி முடித்து

உடலுறுத்தா தலையணையில்

வாகாய்த் தலை சாய்த்து

அதிராத பாடலின்

சுகராகப் பின்னணியில்

அவிழாத புதிரவிழ்க்கும்

புதிதாய் ஒரு புதினத்தை

வாசிக்கும் அனுபவமே

வாழும் அனுபவமாம்.


'புத்தக வாசிப்பு வாழ்க்கைக்கு உதவுமா , ஆம் எனில்.. எப்படி? ' - வாசிப்பனுபவம் இல்லாத அபாக்கியசாலிகளின் மண்டையைக் குடையும் இந்தக் கேள்விக்கு பதில் , இரு வாரங்களுக்கு முந்தைய ஆனந்தவிகடனில் உள்ளது. அவர்கள் குறைந்த பட்சம் அதையாவது தேடிப் பிடித்து வாசித்துக் கொள்வார்களாக.


நிற்க. இப்பொழுது வாசிப்பிலிருக்கும் புத்தகம் சுவாமி ஆனந்த பரமேஷ்வரர் 'நான் அறிந்த ஓஷோ' என்னும் தலைப்பில் தொகுத்திருக்கும் ஓஷோவின் 200 கேள்வி பதில்கள்-இரண்டாம் பாகம்(charupraba publications). ஓஷோவின் பெரும்பாலான புத்தகங்கள் கேள்வி பதில் வடிவிலானவைதான் என்றாலும் அவையனைத்தும் ஒரே தத்துவத்தை ஆழச் சென்று விளக்குபவையாக இருக்கும். இந்நூலின் சிறப்பென்னவெனில், அடிப்படையில் ஆரம்பித்து ஆழமானது வரை சாமான்யரின் மனதில் தோன்றும் ஐயங்களனைத்திற்கும் படிப்படியாக பதில்கள் (in a flow) தொகுக்கப்பட்டுள்ளன.நான் இது வரை படித்ததில் இது தான் உச்சம். ஓஷோவை அறிந்திராதவர்களுக்கு , ஒரே மூச்சில் அவரின் கருத்துக்களை முழுமையாக உணரும் வகையில், இந்நூல் ஒரு வரப்பிரசாதம். தன்னுள் 'தான்' தேட முனைவோர் அனைவருக்கும் இதை பரிந்துரைக்கிறேன்.



கடலின் சில துளிகள் :
- தியானம் என்றால் 'விழிப்புடன் கவனித்தல்' . நீங்கள் விழிப்புடன் எதைச் செய்தாலும் அது தியானமாகும்.நீங்கள் ஒவ்வொரு அடியையும் விழிப்போடும் உணர்வோடும் கவனித்தால் நடப்பது கூட தியானமாகும்.

- மகிழ்ச்சியாக இருக்க ஒரே வழிதான் உண்டு. அது, துக்கம் வரும் பொழுது அதைப் பூரணமாக அனுபவியுங்கள். அத்துடன் இணைந்து செல்லுங்கள்.

- உடலில் உள்ள ரத்த ஓட்டம், உயிரோட்டம், சுவாச ஓட்டம் அனைத்திற்கும் நிகழ்காலம் மட்டுமே உண்டு.அதைப் போல வாழ்வுக்கும் நிகழ்காலம் மட்டுமே உண்டு. ஆனால் மனதிற்கு நிகழ்காலம் கிடையாது. இதுதான் பிரச்சினையே ! வாழ்வு என்பது 'இப்பொழுது ,இங்கே' தான் இருக்கிறது. ஆகவே, கூடிய மட்டும், 'இங்கே, இப்பொழுது ' வாழ முயற்சி செய்யுங்கள். மற்றவை எல்லாம் இயல்பாகத் தானே உங்களைத் தேடி வரும்.


-இந்தக் கணத்தில் வாழ்வது என்றால் என்ன? செயல்படும் போது செயலில் மனம் முழுமையாகக் கரைய வேண்டும். செயலற்று இருக்கும் போது எண்ண ஓட்டங்களை, உணர்வுகளை வெறுமனே பார்க்க வேண்டும். அவ்வளவுதான்!


-உண்மை என்பது ஒரு உயிர்த்தன்மை (Existence) அல்லது ஒரு இருப்பு (Being) அல்லது ஒரு சக்தி ஓட்டம் (Energy process) அல்லது கடவுள்தன்மை(Godliness). ஆனால் அது பொருள்(object) அல்ல. கடவுள் அல்ல! இந்த உண்மை எல்லை இல்லாதது , முடிவு இல்லாதது, எதிலும் எங்கும் இருப்பது. அதனுடைய மொழி மௌனம்தான்.

-எண்ணமற்ற தியானம் ஒன்றே உங்களை உண்மையாக அறிந்து கொள்ள உதவும். நீங்கள் மனதை சாட்சியாக நின்று பார்க்கும் பொழுது ,உங்கள் சக்தி அதன் மூலாதாரத்தை நோக்கிச் செல்கிறது. நீங்கள் உங்கள் மனதை ஒன்றில் வைக்கும் பொழுது ,உங்கள் சக்தி மனதை வலுப்படுத்த செலவாகிறது.முன்னது சக்தி சேமிப்பு; பின்னது சக்தி இழப்பு.


19 December 2011

பால(ர்) பாடம்


ஏழு மலை ஏறுதல் எளிதாம்
      ஏழு கடல் தாண்டுதல் எளிதாம்
        ஏழு ஜென்மம் வாழ்தல் எளிதாம்
  ஏழு முறை சாதலும் எளிதாம்
             அய்யோ...எளிதில்லை எளிதில்லை
                             பிள்ளைக்குப் பாடம் சொல்லிக் கொடுத்தல்.

04 December 2011

அசையும் அணு




நூறாவது இதழாக மலர்ந்திருக்கும் இந்த மாத 'உயிர்மை' யில் சிறப்புப் பகுதியாக கூடங்குளம் அணு உலை பற்றிய விரிவான அலசல் இடம் பெற்றுள்ளது. விவாதப் பொருளின் அனைத்துப் பரிமாணங்களும் ஆதி முதல் அந்தம் வரை மிக நேர்மையாக ஆராயப்பட்டு பல தரப்பட்ட விவாதங்கள் முன் வைக்கப்பட்டிருக்கின்றன. அனைவரும் அதை வாசிக்க வலியுறுத்துகிறேன்.

அதில் ஒரு பகுதியில் , தற்போது நடுநிலையாளர்களும் , மத்திய வர்க்கத்தினரும் எழுப்பும் பொதுவான ஒரு கேள்விக்கு கூடங்குளம் மக்களின் எதிர் கேள்வி பதிலாகத் தரப்பட்டுள்ளது.

கேள்வி: இத்தனை கோடி செலவு செய்து கட்டிய பிறகு உலையை மூடச் சொல்வது நியாயமா? பணம் வீணாகிறதே?

மக்களின் பதில்: உங்க மகளுக்குத் திருமணம் நிச்சயம் செய்து எல்லா செலவும் பண்ணி நாளைக் காலை கல்யாணம். பையனுக்கு எய்ட்ஸ் இருக்குன்னு முந்தின ராத்திரி தெரிய வந்தா , அடுத்த நாள் காலையில கல்யாணம் செய்வீங்களா? இத்தனை செலவு பண்ணிட்டோம், கல்யாணம் நடக்கட்டும்னு விடுவீங்களா?


நியாயமான பதில் நம்மிடம் இருக்கிறதா?









11 November 2011

ஏன்..எதற்கு..எப்படி 2

#அத்தகைய தோற்றம் கொண்டதால் அவர்கள் அரசாங்க அலுவலகத்தில் குமாஸ்தாவாக உள்ளனரா அல்லது இத்தனை வருடம் அரசாங்கத்தில் வேலை பார்த்தால் அத்தகைய தோற்றம் வந்து விடுமா?

#தமிழ் மற்றும் மொழிபெயர்ப்பு ஆங்கிலத்தில் நடைபெறும் சுவிஷேசப் பிரசங்கங்களில் பேசப்படும் விவிலியத் தமிழை விட ஆங்கிலம் தான் எனக்குப் புரிந்து கொள்ள ஏதுவாக இருக்கிறது.உங்களுக்கும் அப்படித்தானா?

#நமக்கு பாடம் சொல்லிக் கொடுத்த பள்ளி ஆசிரியர்களை தற்போது எங்கேனும் காண நேரிட்டால் மிகுந்த மரியாதையும் அதை விட மிகுதியாக அனுதாபமும் ஏற்படுகிறது.ஏன்?

08 November 2011

குழந்தைகளின் உலகம்


நேற்றிரவு வெள்ளத்தில் சேதமடைந்த வீடுகளைத் தொலைக்காட்சியில் காண்பித்துக் கொண்டிருந்தனர்.பாதுகாப்பான தற்போதைய நமது நிலை கடவுளின் பரிசு என்பதை புவனுக்கு உணர்த்த விரும்பிய நான் பின்வருமாறு பேச்சை ஆரம்பித்தேன்.

"புவன்...அப்பா உன்னை மாதிரி குட்டிப்  பையனா இருந்தப்போ இது மாதிரி சின்ன  வீட்டுல தான் இருந்தேன். பெரிய மழை பெய்ஞ்சுதுன்னா வீட்டுக்குள்ள இப்படித்தான் எல்லா தண்ணியும் வந்துரும்.ஆனா இப்ப...."

புவன் இடைமறித்து குதூகலமானான். " நீங்கல்லாம் அப்ப ரொம்ப ஜாலியா இருந்திருப்பீங்க இல்ல , வீட்டுக்குள்ளேயே நீச்சல் எல்லாம் அடிச்சுக்கிட்டு ...."

நான் அதற்கு மேல் பேசவில்லை.

மெய் நிகர் உலகம்


தொலைபேசியில் உன்
ஒற்றை சொல்லுக்காய்
காத்திருந்த சுகம்
மணிக்கணக்காய் நீளும்
காணொளி அரட்டையில்
கிடைப்பதேயில்லை.

வழி மேல் விழி வைத்து
பின் கிடைக்கப் பெற்ற
மடல் வாசிப்பின் ஆன்ம ஸ்பரிசம்
உன்னால் அனுப்பப்பட்ட
எண்ணிலா மின்னஞ்சலில்
கிடைப்பதேயில்லை.

பண்டிகை நாட்களின்
கையெழுத்திட்ட வாழ்த்தட்டைகள்
என்னில் பரப்பும் பரவசம்
123greetings.com ல்
நீ அனுப்பும் மின்னட்டைகளில்
கிடைப்பதேயில்லை.

*******************************************

நாள் முழுவதும்
கால் பந்து விளையாடி
கை வலிக்கிறது
என் பிள்ளைக்கு...
அவன் விளையாடியது
கணினியில் என்பதால்!

******************************************

ஆடாமல் அசையாமல்
ஆள்காட்டி விரல் சொடுக்கில்
online ல் பொருள் வாங்கும் நான்
அப்பாவிடம் கேட்டேன்-
'ரேஷன் கடை நமக்கு
இன்னமும் அவசியமா?'
அப்பா சொன்னார்-
"இங்கிட்டு வாங்கினால்
இருபத்தி சொச்சம்
ரேஷனில் வாங்கினால்
ரெண்டு ரூபா மிச்சம் !"

******************************************

தொலைந்து போன என்
அலை பேசியைத் தேடி
அலைந்து களைத்த வேளையில்
ஆலோசனை சொன்னான் பிள்ளை-
' Google ல்ல தேடுங்கப்பா! '

*******************************************

02 November 2011

ஏன்..எதற்கு..எப்படி..1

தலைப்பைப் பார்த்து விட்டு இது சுஜாதா பாணியிலான அறிவியல் விளக்கக் கட்டுரையோ என நுழைந்தீர்கள் என்றால் அதற்கு நான் பொறுப்பல்ல. அவ்வப்போது தோன்றும் விடை தெரியாத ( தெரியா விட்டாலும் பரவாயில்லை போன்ற)வினாக்களை இங்கு பதிவதாக உத்தேசம். பதில் தெரிந்தவர்கள் பின்னூட்டமிடவும்.

# பால் விலை லிட்டருக்கு இரண்டு ரூபாய் உயர்ந்தால் , தேநீர் விலை குவளைக்கு ஒரு ரூபாய் உயர்வதை just like that சகித்துக் கொள்கிறோம் . எப்படி?

# 1 ரூபாய்க்கு பேரம் பேசுகிறவர்கள் 30 ரூபாய் அனுமதிச் சீட்டை 300 ரூபாய்க்கு வாங்கி திரைப்படம் பார்க்கின்றனர். எப்படி?

# பெரும்பாலான two wheeler mechanics செல்வம், குமார், பாண்டி , சேகர் போன்ற பெயர்களைக் கொண்டிருக்கிறார்கள். ஏன்?

# கி.பி.1800 ல் 100 கோடியாக இருந்த உலக மக்கள் தொகை படிப்படியாக அதிகரித்து , கருத்தடையின் முக்கியத்துவம் உணரப்பட்ட கடந்த 20 ஆண்டுகளில் மட்டும் 200கோடி அதிகரித்துள்ளது. எப்படி?

# scooty ஓட்டும் பெண்களை ஒரு போதும் overtake செய்ய முடிவதேயில்லை.ஏன்?

# மன நிம்மதி வேண்டி நாம் கோவிலுக்கு செல்வது போல் , அங்கிருக்கும் குருக்கள் மனக்கிலேசமென்றால் எங்கு செல்வார்?

# பேசும் போது நாக்கு வெளியே தெரிவதில்லை என்றாலும் , பெரும்பாலான நிகழ்ச்சித் தொகுப்பாளர்கள் ' இப்ப பாத்தீங்க நாக்க , இப்ப பாத்தீங்க நாக்க' என்று சொல்கிறார்கள். ஏன்?

# தவறு என்று தெரிந்தும் அதை அடிக்கடி செய்யவும், சரி என்று தோன்றுவதை முற்றிலுமாக தவிர்க்கவும் விரும்பும் மனதின் உளவியல் பின்னணி என்ன?