22 October 2012

விடாது நெருப்பு




'தான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்என்பதாக நடக்கிறவர்களை விட , 'தான் பெற்ற துன்பம் பெறக்கூடாது இவ்வையகம்என்று  நினைப்பவர்கள் அதிகம் போற்றப்பட வேண்டியவர்கள் என்பது என் எண்ணம். தான் ரசித்து மகிழ்ந்த  திரைப்படத்தை பிறருக்கு பரிந்துரைப்பது நல்ல குணம் என்றாலும்தான் கீழே விழக் காரணமாயிருந்த பள்ளத்தில்  பிறர் விழுந்து விடாத வண்ணம் குச்சியை ஊன்றிவிட்டுச் செல்வது அதை விட மேலான குணம்.

எழுத்துச் சித்தர் பாலகுமாரன் அவர்கள் எத்தனையோ நல்ல விசயங்களை , அவற்றைக் கடைபிடிக்கும் வழிமுறைகளோடு, சுவாரசியமான கதைப் போக்கினூடாக நமக்குக் கற்றுக் கொடுத்தது போலவேவாழ்வின் முற்பகுதியில் தான் இழைத்த ஒரு தவறு, எவ்வாறு தன் வாழ்வின் பிற்பகுதியைச் சின்னாபின்னமாகச் சிதைத்தது என்பதைத் தெள்ளத் தெளிவாக  நம் முன் வைக்கிறார். தயவு செய்து கீழ்க்கண்ட சுட்டியில் உள்ள கட்டுரையைப் படியுங்கள்இந்தக் கட்டுரைப் பொருளுக்கும்உங்களுக்கு சம்பந்தம் இருக்கும் பட்சத்தில்யார் கண்டது...இந்த நாள் உங்கள் அந்திம காலத்தின் தினசரி வாழ்க்கைப் போக்கை செம்மைப்படுத்தக்கூடிய நாளாக அமையக்கூடிய வாய்ப்பிருக்கிறது


19 October 2012

இறுதிச் சுற்று


கற்பகம்
கதைப் புத்தகம் படிக்கும்போது  சொல்வாள்
நான்  எழுத்தாளராகி விடுவேன் என்று
அழகான ஓவியங்களைப் பார்க்கையில்
அற்புதமான ஓவியராகப் போகிறேன் என்பாள்
இனிமையான பாடல்களைக்  கேட்கும்போது
இனி நான் பாடகிதான் என்பாள்
ஒரு நேரம் நிருபர் என்பாள்
பிறகு புகைப்படக் கலைஞி என்பாள்
இறுதியில்
சுப்ரமணியனின் மனைவியாகிவிட்டாள் .


- சூ .ஜூலியட் மரியலில்லி 

16 October 2012

சுக போஜனம்



கலியுகத்தின் எந்த நோய் நொடியும் நம்மை அண்டாது வாழ , நாம் சாப்பிடும் பொருட்களை மட்டுமல்ல , (நாம் மறந்து போன) சாப்பிடும் முறையையும் புனரமைக்க வேண்டிய அவசியத்தில் இருக்கிறோம். சாப்பிடும் போது குறைந்த பட்சம் கீழ்கண்ட வழிமுறைகளை கடைபிடித்து வந்தால்நோய் எதுவும் நம்மைப் பீடிக்காது என்பது திண்ணம். 'இதெல்லாம் சும்மாஎன்று சொல்லி அலட்சியப்படுத்துவீர்களேயானால் , சனி பகவான் உங்கள் ராசியில் சஞ்சாரம் செய்கிறார் என்று அர்த்தம்.

உணவு உண்ணும் முறை
1)குளித்தவுடன் தவிர்த்தல்
2)கை,கால்,முகம் கழுவுதல்
3)காலை மடக்கி அமருதல்
4)உணவில் அறுசுவை
5)முதலில் இனிப்பு
6)சாப்பாட்டில் கவனம்
7)வாய் மூடி மெல்லுதல்
8)எச்சில் கலத்தல்
9)பற்களால் அரைத்தல்
10)ரசித்து ருசித்தல்
11)சுவை திகட்ட உண்ணுதல்
12)சுவை அற்று விழுங்கல்
13)பேச்சைத் தவிர்த்தல்
14)தண்ணீரைத் தவிர்த்தல்
15)தொலைக்காட்சி தவிர்த்தல்
16)புத்தகம் தவிர்த்தல்

12 October 2012

மின்சார கனவு



தமிழக மின்சாரப் பிரச்சினைக்கான உண்மையான காரணங்களையும் ,  தீர்வு முறைகளையும் தமிழ்நாடு மின்துறைப் பொறியாளர்கள் அமைப்பைச்  சேர்ந்த  திரு.கோவை. சா.காந்தி அவர்கள் முன்வைக்கிறார். 


தமிழகத்தின் மின் பற்றாக்குறை என்பது இன்றைய தேதியில் சுமார் 4000 - 4500 மெகாவாட்டாக இருக்கிறது. 2013 ஆம் ஆண்டில் இந்தப் பற்றாக்குறை 5000 - 5500 மெகாவாட்டாகவும், 2014 இல் இது 6200 மெகாவாட்டாகவும், 2015 இல் இது 7300 மெகாவாட்டாகவும் கூடியிருக்கும் என்பது மின் நிபுணர்களின் கணிப்பு.  இந்த சூழ்நிலையில், தமிழகத்தில் அரசுக்கு சொந்தமான மூன்ற
ு மின் உற்பத்தி நிலையங்கள் பழுதடைந்த நிலையில் கேட்பாரற்றுக் கிடக்கின்றன. 
மின் உற்பத்தியைத் தொடங்கும் நிலையில் உள்ள மூன்று புதிய மின் உற்பத்தி நிலையங்களை (என்ன காரணத்திற்கோ) இன்றைய நெருக்கடியான காலகட்டத்திலும் மின்சாரத்தை உற்பத்தி செய்ய விடாமல் தமிழ்நாடு அரசு நிறுத்தி வைத்திருக்கிறது. 

தமிழ்நாடு மின்வாரியத்துக்கு சொந்தமான குத்தாலம் (தஞ்சைமாவட்டம்), வழுதூர் 1 மற்றும் 2 (ராமநாதபுரம் மாவட்டம்) ஆகிய எரிவாயு மின் நிலையங்களில் அடிக்கடி எந்திரங்கள் பழுதடைவதும், பல மாதங்களுக்குப் பழுது நீக்கப்படாமல் இருப்பதும் வாடிக்கையாக இருக்கிறது. குத்தாலம் மின் நிலையம் 101 மெகாவாட் திறனையும், வழுதூர் 1 மற்றும் 2 மின் நிலையங்கள் 95 மற்றும் 92 மெகாவாட் திறனைக் கொண்டிருகின்றன. இந்த மூன்று மின் நிலையங்களுமே முழுமையாக செயல் பட்டால் 288 மெகாவாட் மின்சாரத்தை உற்பத்தி செய்ய முடியும். இன்றைய தேதியில் இந்த மின் நிலையங்கள் பழுதடைந்துள்ளன. அவற்றின் பழுது நீக்கப்படாமல் அவற்றின் மின் உற்பத்தி முடங்கிக் கிடக்கிறது. அவற்றில் உள்ள பழுதை நீக்க பல மாதங்களாகத் தமிழக அரசு முயற்சி எடுக்க மறுத்து வருகிறது. இதனால் கிட்டத்தட்ட 288 மெகாவாட் மின்சாரத்தை நாம் இழந்து கொண்டிருக்கிறோம். இந்த மின்நிலையங்கள் அன்றாடம் உபயோகிக்க வேண்டிய இயற்கை எரிவாயுவிற்காக, மின் உற்பத்தி செய்யப்படாமல் இருக்கும் இந்தக் காலகட்டத்திலும் ஒவ்வொரு நாளும் 71 லட்ச ரூபாயை தமிழ்நாடு மின் வாரியம் GAIL நிறுவனத்திற்குக் கட்டிக்கொண்டிருக்கிறது. 

2007 இல் வட சென்னை மற்றும் மேட்டூர் மின் நிலையங்களில் 2X600 மற்றும் 1X600 என்ற 1800 மெகாவாட் திறனுள்ள அனல் மின் உற்பத்தி அலகுகளை அமைக்க REC நிறுவனத்தின் உதவியுடன் தமிழ்நாடு அரசு திட்டமிட்டது. வடசென்னை முதல் அலகிற்கான பணி 2008 பிப்ரவரியில் துவங்கியது. அதன் கட்டுமானப் பணி 2011 மே மாதத்தில் நிறைவு பெற வேண்டும். அதுபோலவே வடசென்னை இரண்டாவது அலகின் பணி 2008 ஆகஸ்டில் தொடங்கியது. 2011 நவம்பர் மாதம் அது முடிவடைய வேண்டும். 

வடசென்னை திட்டத்தைப் போலவே, மேட்டூர் மின் நிலையத்தில் திட்டமிடப்பட்ட 600 மெகாவாட்டிற்கான பணி 2008 ஜூன் மாதம் தொடங்கியது. 2011 செப்டம்பரில் அது நிறைவு பெற வேண்டும். இவை அனைத்தும் ஏற்கனவே உள்ள மின் நிலையங்களில் மேற்கொள்ளப்படும் விரிவாக்கத் திட்டங்கள்தாம் (expansion plans) என்பதால் இவற்றை அமைத்து, இயக்க குறைந்த காலமே போதுமானது.

சென்னையின் அருகே உள்ள வள்ளூரில் 3X500 மெகாவாட் மின் உற்பத்தி நிலையத்தினை மத்திய அரசு நிறுவனமான NTPC-யின் துணையுடன் நிறுவ 2002 ஆம் ஆண்டில் தமிழக அரசு ஒப்பந்தம் செய்துகொண்டது. இதன் உற்பத்தித் திறனான 1500 மெகாவாட்டில் 1041 மெகாவாட் மின்சாரம் தமிழகத்திற்குக் கிடைக்கும் என்பது உடன்படிக்கை. ஆனால் இந்தத் திட்டம் 2007 ஆம் ஆண்டு வரை கிடப்பில் போடப்பட்டது. கடைசியில், 2007 ஆகஸ்டு மாதம் அதன் கட்டுமானப் பணிகள் தொடங்கின. 2010 அக்டோபரில் முதல் அலகும், 2011 மார்ச்சில் இரண்டாவது அலகும், 2012 செப்டம்பரில் மூன்றாவது அலகும் உற்பத்தியைத் தொடங்க வேண்டும். 

இன்றைய தேதியில், மேட்டூரில் உள்ள 600 மெகாவாட் அலகும், வடசென்னையின் இரண்டாவது அலகான 600 மெகாவாட்டும், வள்ளூரில் உள்ள முதலாவது அலகான 500 மெகாவாட்டும் முடிவடைந்துள்ளன. 2012 மார்ச் – மே மாதங்களில் அவை முழுமையாக பரிசோதனை செய்யப்பட்டு மின்சாரக் கட்டமைப்பில் இணைக்கப்பட்டுள்ளன (synchronised). எனினும் என்ன காரணத்தினாலோ தமிழக அரசு அவற்றில் இருந்து மின்சாரத்தை உற்பத்தி செய்வதை நிறுத்தி வைத்திருக்கிறது. இதன் காரணமாக, நாம் 1547 மெகாவாட் மின்சாரத்தை இழந்து நிற்கிறோம். 

ஆக, தமிழக அரசு நினைத்தால் இன்றே 1835 மெகாவாட் மின்சாரத்தை (1547 + 288) உடனடியாக உற்பத்தி செய்ய முடியும். இந்த மின்சாரம் அரசுக்கு சொந்தமான மின் நிலையங்களில் உற்பத்தி செய்யப்படும் மின்சாரமாதலால், தனியாரிடம் இருந்து வாங்கும் கொள்ளை விலை மின்சாரத்தைப் போலல்லாமல் குறைந்த விலையில் கிடைக்கும் மின்சாரமாகும். எனினும், தமிழக அரசு இந்த மின்சாரத்தை உற்பத்தி செய்வதைத் தட்டிக் கழித்து வருகிறது. 

நெய்வேலி லிக்னைட் கார்ப்பரேஷனும், தமிழ்நாடு மின்சார வாரியமும் இணைந்து தூத்துக்குடியில் 2 X 500 மெகாவாட் மின் உற்பத்தி அலகுகளை நிறுவும் பணியினை 2008 மே மாதத்தில் துவக்கின. முதலாவது அலகு ஜூன் 2013 இலும், இரண்டாவது அலகு மார்ச் 2012 இலும் உற்பத்தியைத் தொடங்கியிருக்க வேண்டும். இந்தத் திட்டத்திலிருந்து தமிழகத்திற்கு சுமார் 387 மெகாவாட் மின்சாரம் கிடைக்கும். ஆனால், இந்தப் பணியும் நிறைவேற்றப்படாமல் காலம் கடத்தப்பட்டு வருகிறது. 

நெய்வேலியில் உள்ள முதலாவது மின் நிலையத்தின் விரிவாக்கமான 2 X 250 மெகாவாட் மின் உற்பத்தி அலகுகளில் இருந்து தமிழ்நாட்டிற்கு 225 மெகாவாட் கிடைக்க வேண்டும். மத்திய அரசின் கட்டுப்பாட்டில் முடிக்கப்படாமல் இருக்கும் இந்த மின் உற்பத்தி அலகுகளை துரிதமாக முடிக்க வேண்டும் என்ற கோரிக்கையை இன்றுவரை தமிழக அரசு வைக்காமல் இருக்கிறது. 
ஆந்திர மாநிலம் சிம்மத்ரி அனல் மின் நிலையத்தின் 1000 மெகாவாட் திறனுள்ள முதல் இரண்டு அலகுகளில் இருந்து தமிழகத்துக்குக் கிடைக்க வேண்டிய 190 மெகாவாட் மின்சாரத்தை (காட்கில் ஃபார்முலா) சட்டத்திற்குப் புறம்பாக மத்திய அரசானது ஆந்திர மாநிலத்திற்கே தாரை வார்த்திருக்கிறது. எனினும் இந்த 190 மெகாவாட் மின்சாரத்திற்கான தனது உரிமையை தமிழக அரசானது மத்திய அரசிடமிருந்து கேட்டுப் பெற இன்றளவும் முயற்சி செய்யவில்லை. 

ஆக, தமிழக அரசின் எதிர்மறை நடைமுறை காரணமாக, இன்று நாம் கிட்டத்தட்ட 2025 மெகாவாட் (1835 + 190) மின்சாரத்தை இழந்து நிற்கிறோம். இந்தத் திட்டங்களை சரியாக கையாண்டாலேயே இன்றைய பற்றாக்குறையான 4000 மெகாவாட்டில் பாதியை சரிசெய்துவிட முடியும். என்றாலும்கூட , இதற்கான நடவடிக்கைகளை எடுக்காமல் பிரச்சினையை முற்றவிட்டு, தமிழக மக்களைக் கடும் துயரில் ஆழ்த்தி அரசு வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறது. 

தனக்கு சொந்தமான மின் நிலையங்களில் இருந்து குறைந்த விலையில் உற்பத்தி செய்ய முடிகின்ற மின்சாரத்தை உற்பத்தி செய்யாமல், கூடுதல் விலையில் தனியாரால் விற்கப்படும் மின்சாரத்தை வாங்கினால் ஒழிய தமிழகத்தின் மின்சாரப் பற்றாக்குறையைத் தீர்க்க இயலாது என்ற வாதத்தை அது முன்வைத்து வருகிறது. இதோடு சேர்த்து, கூடங்குளம் அணு மின் நிலையம் நிறைவேற்றப்படாமல் இருப்பதுதான் தமிழகத்தின் மின்சாரப் பற்றாக்குறையைத் தீர்க்க முடியாமல் இருப்பதற்கான காரணம் என்றும் கூறி வருகிறது. 

தமிழக அரசின் இந்த வாதம் தவறானது. 

கூடங்குளத்தில் உள்ள வி.வி.இ.ஆர் 1000 வகை அணு உலையின் அதிகபட்ச இயங்கு திறன் 80% ஆகும். அதாவது பிரச்சினைகளின்றி அது இயங்கினால் 800 மெகாவாட் மின்சாரத்தையே அதனால் உற்பத்தி செய்ய முடியும். இவ்வாறு உற்பத்தி செய்த மின்சாரத்தில் அதன் கடல் நீர் உப்பகற்றி ஆலைகளை இயக்குவதற்கே சுமார் 100 மெகாவாட் மின்சாரம் தேவைப்படும். அணு உலையின் இயக்கத்திற்கும், அது தொடர்பான மின் இயந்திரங்களின் இயக்கத்திற்கும் (auxillary consumption) மேலும் ஒரு 100 மெகாவாட் தேவைப்படும். எனவே, அணு உலையில் இருந்து கிடைக்கப்போவது என்னவோ 600 மெகாவாட் மின்சாரம்தான். இதில் தமிழகத்திற்குக் கிடைக்கவேண்டிய பங்கு 46.25% என்பதால் இதில் இருந்து இறுதியில் கிடைக்கப்போவது 277.5 மெகாவாட்தான். மின்சாரம் கடத்தப்படும்போது ஏற்படும் கம்பி இழப்பான 22% போக, கடைசியில் வெறும் 216 மெகாவாட் மின்சாரத்தைத்தான் இந்த அணு உலையில் இருந்து தமிழகம் பெற முடியும். 

இந்த 80% உற்பத்தித் திறனை அணு உலையினால் அது இயங்கத் தொடங்கிய முதல் நாளிலேயே அடைந்துவிட முடியாது. அந்த நிலையை எட்ட இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக ஆகும் என்பதுதான் உலகின் பிற பகுதிகளில் இயங்கிக் கொண்டிருக்கும் அணு உலைகளின் அனுபவம். எனவே. கூடங்குளம் அணு மின் நிலையமானது முதல் இரண்டு ஆண்டுகளில், அதாவது 2015 ஆம் ஆண்டுவரை, அதன் 30-40% உற்பத்தித் திறனிலேயே இயங்க முடியும். இதன்படி, தமிழகத்தின் பங்கான 46.25% என்பதை வைத்துக் கணக்கிட்டால், ஒவ்வொரு அணு உலையில் இருந்தும் சுமார் 138 இல் இருந்து 185 மெகாவாட் மின்சாரத்தைத்தான் 2015 ஆம் ஆண்டு வரையிலுமே தமிழகத்தால் பெறமுடியும். இதில், கம்பி இழப்பான 22% ஐ கழித்து விட்டால் கிடைக்கப்போவதென்னவோ 108 இல் இருந்து 145 மெகாவாட்தான். இரண்டு அணு உலைகளும் இணைந்தே மின்சாரத்தை அளித்தாலும் கூட, தமிழகத்திற்கு வெறும் 216 இல் இருந்து 290 மெகாவாட்தான் கூடங்குளம் அணு மின் நிலையத்திலிருந்து கிடைக்கப் போகிறது. 
எனவே, உற்பத்தி தொடங்கப்படாமல் தமிழக அரசால் (ஏதோ காரணத்தால்) நிறுத்தி வைக்கப்படப்பட்டுள்ள 2025 மெகாவாட் திறனுள்ள மின் நிலையங்களில் மின்சாரத்தை உற்பத்தி செய்வதற்கான நடவடிக்கையைத் தமிழ்நாடு அரசு போர்க்கால ரீதியில் உடனடியாக எடுக்க வேண்டும். 

கடுமையான மின்சாரப் பற்றாக்குறைக்கான மற்றொரு காரணமாக இருப்பது, மின்சாரத்தினை சமுதாயத்தின் அனைத்துத் தரப்பினருக்கும் சமமாகப் பங்கிட்டுக் கொடுக்காமல் இருக்கும் (equitable distribution) மாநில மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தின் நடவடிக்கையாகும். 
பாரபட்சமான மின்வழங்குதல் என்பதைக் கீழ்க்கண்ட காரணங்களைக் கொண்டு புரிந்து கொள்ள முடியும்:
• சென்னை மாநகரம் மட்டுமே தமிழகத்தின் மொத்த மின்சாரத்தில் 25%-க்கும் மேலாக எடுத்துக் கொள்கிறது. தமிழகத்தின் பிற பகுதிகள் 14-16 மணி நேரம் மின்சாரம் இல்லாமல் தவிக்கும் பொழுது சென்னை மாநகரத்தில் மட்டும் 23 மணி நேரம் மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது.
• மிக உயர் மின் அழுத்த இணைப்புக்களைப் பெற்றுள்ள (110 மற்றும் 230 கே.வி.) மின் இணைப்புகள் 800 மெகாவாட் வரை மின்சாரத்தை எடுத்துக் கொள்கின்றன. இவற்றிற்கு 24 மணி நேரமும் மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது. 
• 31 பன்னாட்டு நிறுவனங்களுக்கு 24 மணி நேரமும் மின்சாரம் அளிக்கப்பட்டு வருகிறது. இதற்காக பகிர்ந்தளிக்கப்படுவது 218 மெகாவாட் மின்சாரமாகும். 
• பெரிய வணிக நிறுவனங்கள் விளம்பரத்திற்காகவும், அலங்காரத்திற்காகவும் அதிக அளவு மின்சாரத்தினை எவ்விதக் கட்டுப்படும் இன்றி பயன்படுத்தி வருகின்றன. அதுபோன்றே குளிர்சாதன வசதியையும் அவசியத்திற்கும் மேலாகப் பயன்படுத்தி வருகின்றன. 
• உயர்மின் அழுத்த மின் இணைப்புகளுக்கு 40% மின் வெட்டு உள்ளது. மேலும், மாலை 6 மணியில் இருந்து 10 மணி வரை உள்ள காலத்தில் 10% க்கும் மேல் மின் பளுவை எடுக்கக் கூடாது என்பதற்கான தடையும் உள்ளது. இதன்மூலம் 2200 மெகாவாட் அளவிற்கு மாலை நேரத்தில் மின்பளு குறைந்திருக்க வேண்டும். அப்படியானால், மாலை 6 மணியில் இருந்து 10 மணி வரை தமிழகத்தில் மின்வெட்டு (load shedding) இருக்கக் கூடாது.
• திரைப்பட அரங்குகள், ஐஸ் ஃபேக்டரிகள் மற்றும் டீ எஸ்டேட்டுகளுக்கு மின்வெட்டில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. 
• புதிதாக வரும் மிகப்பெரிய வணிக நிறுவனங்கள் ஒவ்வொன்றும் முழுமையான குளிர் சாதன வசதிக்காக 5 மெகாவாட் அளவிற்கான மின்சாரத்திற்கான மின் இணைப்பைக் கேட்கின்றன. இது தடையின்றி வழங்கப்பட்டும் வருகிறது.

சென்னையைத் தவிர்த்த தமிழகத்தின் பிற பகுதிகளில் உள்ள சிறு-குறு தொழில்கள் 16 மணி நேர மின்வெட்டால் முடங்கிப் போய்விட்டன. வழங்கப்படும் 8 மணி நேர மின்சாரமும் மனம்போன போக்கில் அரை மணி நேரத்திற்கும், ஒரு மணி நேர நேரத்திற்கும் வழங்கப்பட்டு வருவதால் இந்த 8 மணி நேர மின்சாரத்தையும் சிறு-குறு தொழில்களாலும், விவசாயத்தாலும் பயன்படுத்த முடியாத சூழ்நிலை உள்ளது.இந்த நிலை, அடித்தட்டு மக்களின் வாழ்க்கையைப் பெருமளவு சீரழித்து விட்டது. இதன் பிரதிபலிப்புதான் இன்று பல்வேறு இடங்களில் மக்கள் போராட்டங்களாக வெடித்திருக்கின்றது. அரசும், ஆணையமும் இது எதையும் இன்றுவரை பொருட்படுத்தவில்லை.

இப்பிரச்சினையைத் தீர்க்க, பாதிக்கப்பட்டுள்ள மக்கள் கீழ்க்கண்ட கோரிக்க்கைகளை முன்வைக்க வேண்டுகிறோம்:
• பழுதடைந்த மூன்று எரிவாயு மின் உற்பத்தி நிலையங்களையும், உற்பத்தி தொடங்கத் தயாராயுள்ள மூன்று அனல் மின் நிலையங்களையும் எந்த வித சாக்குப் போக்கும் கூறாமல் உற்பத்தி தொடங்க தமிழக அரசையும், மின்வாரியத்தையும் வலியுறுத்த வேண்டும்.
• இருக்கும் மின்சாரத்தைத் தமிழக மக்களிடையே நியாயமான அடிப்படையில் பிரித்தளிக்க இனி மேலாவது ஒழுங்குமுறை ஆணையம் செயல்பட்டு தன் கடமையை நிறைவேற்ற வலியுறுத்த வேண்டும்.
தமிழ்நாடு மின்துறைப் பொறியாளர்கள் அமைப்பு இப்பிரச்சினையில் தமிழக மக்களுடன் இணைந்து பணியாற்றத் தயாராயிருக்கிறது.

அன்புடன்
கோவை. சா.காந்தி, 
தமிழ்நாடு மின்துறைப் பொறியாளர்கள் அமைப்பு
9 அக்டோபர் 2012

03 October 2012

நிலாப் பேச்சு



அப்போது, இரண்டு மணி நேர மின்வெட்டு அமலுக்கு வந்த சமயம். தெருவே இருளில் தொலைந்திருக்க, எங்கள் வீடு மட்டும் வெளிச்சமாயிருக்கும்.(உபயம்:மின்கலம்) .கூடவே பெருந்தன்மையாய் முற்றத்து விளக்கும் எரியும். படிப்படியாய் அனைத்தும் மின்கல வீடுகளாகி விட, எங்கள் பகுதியே மின் தடையின் சுவடு தெரியாமல் இருந்து வந்தது. ஆனால் சேமிக்கக் கூட இயலாத வகையில் மின்வரத்து அருகிப் போயிருக்கும் இந்த சூழ்நிலையில் நிலைமை தலைகீழ். தண்டச்சோறு பட்டம் வாங்கும் விடலைப் பையன் போல், வீட்டில் மின்கலம் இருந்தும் இல்லாத நிலை. இரவானால் 'தெருவே' தெருவுக்கு வந்து விடுகிறது.

ஆனாலும்,'சூரியன்' திரைப்படத்தில் அண்ணன் கவுண்டமணி சொல்வது போல் துன்பத்திலும் ஒரு இன்பமாக , மின்வாரிய அட்டகாசங்களின் பக்க-நல்விளைவாய் எங்களுக்குக் கிடைத்தது மொட்டை மாடி வாசம். சமீப காலமாக , நிலவு எங்களுக்கு இரவு விளக்காகியிருக்கிறது. நட்சத்திரங்கள் மினுமினுத்து எங்களுடன் பேசுகின்றன.( 'அவை நம்மிடம் என்ன பேசுகின்றன' என்பது புவன் அடிக்கடி கேட்கும் கேள்வி!). காகங்களும் புறாக்களும் எங்களுக்கு காலை வணக்கம் சொல்கின்றன. இரவு முன்பை விட அழகாயிருக்கிறது. ஆம்..கடந்த சில நாட்களாக எங்களது படுக்கை மொட்டை மாடியின் திறந்த வெளியில்தான்.

முன்பெல்லாம் இரவு 9 மணிக்கு சாப்பட்டுக் கடை முடித்து 10 மணிக்கு உறங்கச் செல்வதென்பது அன்றைய சலித்த பகல் பொழுதின் முடிவாக இருந்தது; தற்போதுஇனிய இரவின் துவக்கமாக இருக்கிறது. மாலை ஆறு மணிக்கு மேல் இரண்டு முறை தண்ணீர் தெளிப்பது , படுக்கை, தலையணை, கொசுவலை போன்ற ,மாடியில் படுப்பதற்கான தினசரி ஆயத்தங்களை செய்யும் பொறுப்பு என்னுடையது.இவற்றை செய்து முடித்தமரும் போது உடலில் பூக்கும் வியர்வைத் துளிகள்  குளிர் தென்றலின் விசிறலில் மறையும் சுகம் ,குளிரூட்டப்பட்ட அறையில் இதுவரை வாய்த்ததில்லை.நாள் முழுவதும் பிள்ளைகளிடம் பேசிக் கொண்டிருந்தாலும் இந்தத் தருணங்களில் கிடைக்கும் அவர்களின் அருகாமை மிகத் தனித்துவமாக இருக்கிறது. என் பிள்ளைகள் இத்தனை அழகா ! பேச்சில் இத்தனை மழலையா! அவர்கள் பேசும் ஒவ்வொரு வார்த்தையிலும் கவித்துவம் தெறிக்கிறது. அல்லது இப்போதுதான் நான் கவனிக்கிறேன். 

முன்பெல்லாம் அறையில் தூங்கும் போது, நான் சொல்லும் கதையை அசுவாரஸ்யமாகக்  கேட்பவர்கள், தற்போது  அவர்களே உற்சாகமாகக் கதை சொல்கிறார்கள். இதுவரை எதிர் கொண்ட சம்பவங்களும், எதிர்ப்பட்ட  மனிதர்களும் அவர்களின்   உலகில் ஏற்படுத்தியுள்ள  தாக்கத்தை , அவர்கள் சொல்லும்  கதைகள் பிரதிபலிக்கின்றன. நாம் எப்படி குழந்தைகளிடம் நடந்து கொள்ள வேண்டும் என்ற அவர்களின் எதிர்பார்ப்பை  நமக்குக் கற்றுக்கொடுக்கும் பாடமாகவே  அந்தக் கதைகளை நான் கேட்கிறேன்.  கடவுளே , எத்தனை  நாள் இவர்களைத் தவற விட்டிருக்கிறேன் !!! 

பேச்சலை  முடிந்து  , பிள்ளைகள்  கண்ணயர்ந்தவுடன்  நிலவும் நிசப்தம் மனதில் விவரிக்க இயலாத மகிழ்ச்சியைத் ததும்பி வழியச் செய்யும். அந்த மனநிலையோடு  அலைபேசியில் பண்பலையைத்  திருகினால் ' நீங்க-நான்-ராஜா சார் ' என்றொரு  நிகழ்ச்சி ! இனிக்க இனிக்க இசைஞானியின் பாடல்களை ஒலிபரப்புகிறார்கள். ஜக்கியிலிருந்து ஓஷோ வரை, சூஃபியிலிருந்து ஜென் வரை போதிக்கும் 'இந்தக் கணத்தில் வாழ்' என்பது அந்தக் கணத்தில் சாத்தியமாகும். ரம்மியமான இரவும், பசியாறிய வயிறும், நுரையீரல் ததும்ப இதமான காற்றும், ஒளி காயும் நிலவும்,  மினுமினுக்கும் விண்மீன்களும், அனைத்திற்கும் மேலாக உயிர் தொடும் ராஜாவின் இசையும் கடவுளின் அருகாமையில் என்னைக் கொண்டு நிறுத்தும். சமயங்களில் என் உடல் அந்தரத்தில் மிதப்பதாய் உணர்ந்திருக்கிறேன். இதற்கு மேல் இந்த சுகத்தை வார்த்தைப்படுத்த முடியவில்லை.

மாடியில் படுப்பதால் விளையும் மற்றொரு நன்மை , அதிகாலை விழிப்பு . மெலிதாகப் பொழியும் காலைப் பனியும், இரை தேடும் பறவைகளின் சுப்ரபாதமும், வெளிச்சம் வருவதற்கு  முன்னமே  நமக்கு விழிப்பைத் தரும். மெதுவாகக் கண் விழிக்கும் போது , புலரும் அன்றைய பொழுது  நமக்கு அளிக்கப்பட்ட பரிசாகவே தோன்றும். சூரியக் கிரணங்கள் நம் மீது படரத் தொடங்க, முந்தைய இரவு எங்களோடு கதைத்துக் கொண்டிருந்த நிலவும், நட்சத்திரங்களும் கையசைத்து விடை பெறும்.

இன்று காலை படுக்கையை சுருட்டிக் கொண்டிருந்த போது மீண்டும் புவன் கேட்டான். " அதுங்க எல்லாம் நம்ம கூட என்னப்பா பேசியிருக்கும்?"
 நான் பதில் சொல்ல வில்லை. ஆனால் அவை பேசியிருந்தால் இதைத் தான் சொல்லியிருக்கக் கூடும்.

 " உங்களைப் பார்த்தால் எங்களுக்குப் பொறாமையாக இருக்கிறது !"

20 September 2012

கடவுளின் தரிசனம்



வாரம் ஒரு முறையாவது  இது போன்று சிரிக்க உங்களுக்கு வாய்ப்பு இல்லையெனில் , நீங்கள் வாழும் வாழ்க்கை Overhaul செய்யப்பட வேண்டிய நிலையில் உள்ளதெனக்  கொள்ளலாம்.


17 September 2012

சிலுவை சுமக்கும் குழந்தைகள்



நீங்கள் தெருவில் செல்லும் போது ,  நாய் ஒன்றை  ஒருவர் .......யால் குத்திக் கொண்டிருப்பதைப் பார்க்கிறீர்கள்.பதைபதைத்துப் போய் அவரிடம் அதற்கான காரணம் கேட்கிறீர்கள். 'நான் செய்வதெல்லாம் அதன் நன்மைக்கே.  அது இனிமையாகக் குரைக்க .......யால் குத்திப்  பயிற்சி அளித்துக் கொண்டிருக்கிறேன்' என்று அவர் சொல்கிறார். மேலும் 'அது தன்னுடைய நாய் ,  தான் அதற்கு தினமும் உணவிடுவதால் , அதை  என்ன வேண்டுமானாலும்  செய்யும் உரிமை தனக்குள்ளது  ' என்ற பதிலும்   அவரின் உடல் மொழியில் வெளிப்படுகிறது.

இந்தப் பதிலுக்கான உங்களுடைய மனநிலை அல்லது எதிர்வினை எப்படி இருக்கும் ?

சமீபத்தில், பிரபல தொலைக்காட்சியில் வரும் நிகழ்ச்சி ஒன்றைக் கண்ட பின் நானும் அது போன்ற மனநிலையில் தான் இருந்தேன். அந்த நிகழ்ச்சியின் வழமையான  பார்வையாளராக நீங்களும் அதைப் பார்த்திருப்பீர்கள். பெற்றோரால் பெயரிடப்பட்டு, பெற்றோரால் உணவிடப்பட்டு,பெற்றோரால் பாதுகாக்கப்பட்டு வரும்  ஒரு  சிறுவன், பெற்றோரின் ஆசையை நிறைவேற்றும் பொருட்டு ,  தனக்கு அளிக்கப்பட்ட கடும் பயிற்சியை மேற்கொண்டு , ஒரு திரைப் பாடலை  மனமுருகப் பாடிக் காண்பித்து  அனைவரின் பாராட்டையும் பெற்றுவிட்டான். அவனைப் பெற்ற இன்பத்தை அவனைப் பெற்றவர்களும் பெற்று விட்டார்கள். சொல்லவொண்ணா இன்பத்தில் திளைத்த அந்தப் பையனின் தந்தை, அவனுக்குப் பயிற்சி கொடுத்த விதத்தைப் பற்றிப் பெருமிதத்தில் பகிர்ந்து கொண்ட வார்த்தைகள்   , அந்த நாய்  உரிமையாளரின்  பதிலை ஒத்தே இருந்தன.

'அதெப்படி , ஒரு நாயுடன் ஒரு சிறுவனை ஒப்பிடலாம்' என்று நீங்கள் கேட்பதும் காதில் விழுகிறது. நாய் நன்றாகச் சாப்பிடும், உற்சாகமாக  விளையாடும்  , ஏகாந்தமாய்த் தூங்கும், தன்  மகிழ்ச்சியையும், தேவையையும் தெரிவிக்கக் குரைக்கும். நாய்க்கு கவலை கிடையாது, மன அழுத்தம் கிடையாது.  'அனாவசியமாய் யாரையும் கடிக்கக் கூடாது ' என்ற  , சமூகத்தில் வாழத்  தேவைப்படும் அடிப்படை அறிவைக்  கற்றுக் கொண்டால் போதும். கிடைப்பதற்கரிய மனிதர்களின் பால்ய காலமும் இப்படித்தானே இருக்க வேண்டும். சமூகத்தில் பண்புடன் வாழத் தேவையான அடிப்படைகளைக் கற்றுத் தரும் கல்வியின் பரிமாணத்தையே பல்வேறு காரணங்களைக் காட்டி மாற்றி அமைத்து விட்டோம். அதுவே நாம் நம்  குழந்தைகளுக்கு இழைக்கும் பெரும் அநீதி. தற்போது, இந்தத் தலைமுறையினர் அதிபுத்திசாலிகள் என்று காரணம் சொல்லி , பாட்டு பாடு , ஆட்டம் போடு என்றெல்லாம் விரட்டிக் கொண்டிருக்கிறோம். விரட்டு என்றால் சாதாரண விரட்டு  கிடையாது. மஞ்சு விரட்டு , மாடு  விரட்டெல்லாம் தோற்று விடும்.

பிற கலைகளைக் கற்றல் என்பது , குழந்தைகளின் விருப்பத்தின் பேரில், அவர்களின் மகிழ்ச்சியை  மேம்படுத்தும்  வரையில் தான் சரி. இது போன்ற கடும் போட்டிகள் எல்லாம் ஊடகங்களின் மாய வலைகளாகவும், பிள்ளைகள் தங்கள் பெற்றோரின் பேராசையால் அதில்  சிக்கும் விட்டில் பூச்சிகளாகவுமே எனக்குத் தெரிகிறார்கள்.

அந்தச் சிறுவன் பாடி முடித்ததும் , ' பாருங்க...அந்தக் குழந்தையே அழுகிறான்...அனுபவிச்சுப் பாடியிருக்கான்...' என்று ஒருவர் சொல்கிறார். நான் அவன் முகத்தை உற்றுப் பார்த்தேன். ' அப்பாடா...தப்பிச்சேன்...' என்பது தான் அவன் கண்களில் கசிந்த கண்ணீராக இருந்தது. இவன் தந்தை வெகுளித்தனமாக வெளியே சொல்லி விட்டார். ஆனால் ஜெயித்தே ஆக வேண்டும் என்ற நோக்கில் இதில் போட்டியிடும் மற்றவர்களும், இனி வரும் போட்டிகளில் கலந்து கொள்ளும் வேட்கையோடு ஆயிரக்கணக்கான குழந்தைகளும் தங்கள் பெற்றோர்களால் வேட்டையாடப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள் என்பதே நெஞ்சம் சுடும் உண்மை.

வாரம் இரண்டு மணி நேரம் புவனேஷ் கூட keyboard வகுப்பிற்கு செல்கிறான். 10000 ரூபாய் செலவழித்து வீட்டிலும் keyboard வாங்கி வைத்திருக்கிறேன். ஆனால், இவை எல்லாம் பிள்ளையின் விருப்பத்தின் பேரில் , அவனது அக மலர்ச்சிக்காகவே ! ஒரு போதும் அவனைக் கட்டாயப்படுத்துவதில்லை.

இதெல்லாம்  negative mindset என்று ஒற்றை சொல்லில் புறந்தள்ளாமல் எனது ஆதங்கத்தைச் சற்றே சிந்தியுங்கள்.

சமீபத்திய புத்தகத் திருவிழாவின் மாலை நிகழ்வில் , விகடனில் 'வட்டியும் முதலும்' எழுதும் எழுத்தாளர் , நண்பர்  திரு. ராஜூ முருகன் ' ஊடகங்களும் வாழ்க்கையும்' என்ற தலைப்பில் பேச ஆரம்பித்தவுடன் , இந்நிகழ்ச்சியில் நடந்த இந்த சம்பவம் பற்றிய ஆதங்கத்தைத் தான் முதலில் பகிர்ந்து  கொண்டார்.

நான் மட்டும் சடாரென்று எழுந்து நின்று கை தட்டினேன்.


07 September 2012

உங்களுக்குத் தெரியுமா டீச்சர் ?


                                           
எனக்குப்
பட்டம் விட ஆசை
நாய்க்குட்டி பிடிக்கும்
பூனைக்குட்டி கொஞ்சுவேன்
ரசம்  சாதம் விருப்பம்
நடனமாடத் துடிப்பேன்
பாட்டுப் பாடித் திரிவேன்
சூரியனை ரசிப்பேன்
மழை வந்தால் நனைவேன்
கொஞ்சினால் சிரிப்பேன்
மிரட்டினால் நடிப்பேன்
புரிந்தால் படிப்பேன் என்று
உங்களுக்குத் தெரியுமா டீச்சர் ?

-வீரா 


06 August 2012

தீராக் கேள்வி-தெளிவான பதில் 5


பனியனும் பேண்ட்டும் போட்டு வருகின்ற பெண்கள் உங்களைத் தொந்தரவு செய்வதில்லையா?
உடை தொந்தரவல்ல. அப்படிப் பார்த்தால் புடவையைக் கூட உங்கள் கண்களைப் பிடுங்கும் வண்ணம் உடுத்திக் கொள்ள முடியும். உடை உடுத்திக் கொள்பவர்கள் தான் பிரச்சினை. அவர்கள் நோக்கத்தைப் பொறுத்துதான் எதிராளியின் அவஸ்தை இருக்கிறது.
ஆடை மூலம் பிறரைக் கவர நினைக்கின்ற பெண்களைப் பார்க்கும் போது மெல்லிய அருவறுப்பு ஏற்படுகிறது. இது விரைவில் தீர்ந்து போய்விடும் சரக்கு. இதை வைத்து வியாபாரம் செய்ய முடியாது. பெண்களின் குணங்களாய் ஏகப்பட்ட நல்ல விஷயங்கள்  இருக்கின்றன. அவை வெளிப்படுகின்ற போது பெண்கள் இன்னும் அழகாக இருக்கிறார்கள்.
உதாரணத்திற்கு, சிறிய கொண்டையும், காட்டன் புடவையும், தோளில் லெதர் பேக்குமாய் வேலைக்கு விரைவாகப் போகிற பெண் , நெளிந்து நெளிந்து அடுகிற பெண்ணை விட, அழகாக இருக்கிறாள் என்பது என் அபிப்பிராயம்.

நெற்றியில் விபூதி இடுவதன் அர்த்தமென்ன?
நம் அறிவு, ஞானம், செல்வம்,ஜாதி, மதம், கடவுள் நம்பிக்கை, காதல், காமம், ஆண்மை, வீரம் போன்ற எல்லா குணங்களும், கடைசியில் பிடிசாம்பல் தான். இவை எதற்கும் அர்த்தமில்லை. இவைகளை நம்முடைய புத்திதான் வெளியிடுகிறது. பிடிசாம்பலை, நம்முடைய எல்லா விஷயங்களும் சாம்பலாய் போனதை, நம் புத்திக்கு அருகே எப்போதும் வைத்துக் கொள்வதாய் நெற்றியிலே சாம்பலைத் தரித்துக் கொள்கிறோம்.

சில கட்டுரைகளில் வரும் நல்ல விஷயங்களை நடைமுறைப்படுத்த முடிவதில்லையே ?
செயல்படுத்தித் தான் ஆக வேண்டும்.இல்லையென்றால் வெற்றி கிடைக்காது. உழைப்பு இல்லாமல் பலன் எதிர்பார்க்காதீர்கள். வைராக்கியம் இல்லாமல் மேன்மை எதிர்பார்க்காதீர்கள்.
இவற்றை செய்ய முடியவில்லையே, அவைகளை நடத்த முடியவில்லையே என்று சொல்லிக் கொண்டிருந்தால் கடைசி வரை எதற்கும் புண்ணியமில்லாத , பிரயோஜனமற்ற நபராக மாறி விடுவீர்கள். ஏதேனும் ஒரு வைராக்கியம் நீங்கள் மேற்கொள்ள வேண்டும். குறிப்பாய் அதிகாலை ஐந்து மணிக்கு எழுந்திருப்பது என்பதைக் கைக் கொள்ள முடியுமா என்று பாருங்கள்.ஏதேனும் ஒரு இடத்தில் வைராக்கியத்தை ஆரம்பியுங்கள். மெல்ல மெல்ல வைராக்கியம் வாழ்க்கை முழுதும் பரவி விடும்.

காலை எழுந்ததும் கனவுகள் மறந்து விடுகிறதே?
கனவை ஞாபகம் வைத்துக் கொள்ள வேண்டுமென்றால் எழுந்ததும் எதைப் பற்றியும் சிந்திக்காமல் அமைதியாக இருக்க வேண்டும். கனவைத் தேட ஆரம்பித்தால் அது காணாமல் போகும். கனவை மறந்து விட்டால் சட்டென்று ஒரு இழை பின்பற்றி அந்த இழையைப் பிடித்து இழுக்க மொத்தக் கனவும் மனதுக்குள் நினைவு வந்து விடும். நினைவுக்கு வந்த கனவை ஞாபகம் வைத்துக் கொள்ளுங்கள். 
அது என்ன சொல்கிறது என்பதை எந்தப் பக்கமும் சார்பின்றி எவருக்கோ வந்த கனவாக உற்றுப் பாருங்கள். வேறு எவரோ கண்டிருக்கிறார் என்றபடி யோசிக்க ஆரம்பித்தால் , அந்தக் கனவு பற்றித் தெளிவாகப் புரிந்து விடும். கனவு மறந்து விட்டால் அதற்குப் பலன் தெரிந்து கொள்ள வேண்டிய அவசியமில்லை. மறக்காத கனவு உங்களுக்கு ஏதோ சொல்ல நினைக்கிறது.

04 August 2012

மனுஷ்யபுத்திரன் கவிதைகள்


அங்கே 
என்னை
யாருக்கும் தெரியாது

எனக்கு
அங்கே 
யாரையும்  தெரியாது

நிழல்கள்
விழாமல்
சென்றோம்
அவரவர் பாதையில்.

*********************************************************************
கொஞ்சப் பேருக்கு
என்னைப் பிடிக்கும்

கொஞ்சப் பேருக்கு
என்னைப் பிடிக்காது

நிறையப் பேருக்கு
என்னைப் பற்றி 
அபிப்ராயமே இல்லை

நான் 
என் வாழ்க்கையைப்
பணயம் வைக்கிறேன்
அவர்களை
என்னைப்
பிடித்தவர்களாகவோ
பிடிக்காதவர்களாகவோ
ஆக்குவதற்கு.

********************************************************************

உபயோகிக்கப்பட்டவை
அனைத்திற்கும்
ஒரு இடம் இருக்கிறது
உபயோகமற்றுப் போனவை
அனைத்திற்கும் 
ஒரு இடம் இருக்கிறது

நீங்கள்
அதனதற்கும்
அதனதன் இடத்தைக் காட்டும் போது
அவை உங்கள் முகத்தையே பார்க்கின்றன

உங்களிடம் ஒரு மாற்று வழி இருக்கலாம்
என்று அவை
இந்தக் கணத்தில் கூட
நம்புகின்றன.

*********************************************************************

26 July 2012

ஆசிர்வதிக்கப்பட்டவர்களாகிய நாம்....


குறைந்த பட்சம் ஒரு வேளை உணவைத் தவிர்த்து, பசித்த வயிற்றுடன் இந்தப் படத்தைப் பாருங்கள்...பசி வயிற்றைப் பிசைவது போல், இந்தக் கதறல் உங்கள் இதயத்தைப் பிசையும்! 
மற்ற உணர்வுகள் அனைத்தும் நம் அகங்காரத்தை நிரப்பும் பொருட்டான வெளிப்பூச்சுகள் எனவும், பசியும், வலியும் மட்டுமே உக்கிரமான , உண்மையான உணர்வுகள் என்ற பேருண்மையும் புரியும். 

22 July 2012

ஆடும் வரை...


வேஷங்கள் எத்தனை இடினும்
அலுக்காத ஆட்டமிது.
துவேஷங்கள் எத்தனை படினும்
துவளாத ஆட்டமிது.

ரோகங்கள் எத்தனை வரினும்
ருசி குறையா ஆட்டமிது.
துரோகங்கள் எத்தனை சுடினும்
சுருதி குறையா ஆட்டமிது.

மோகங்கள் எத்தனை தீரினும்
துடிப்படங்கா ஆட்டமிது.
சோகங்கள் எத்தனை சூழினும்
சோர்வடையா ஆட்டமிது.

துன்பங்கள் எத்தனை தொடினும்
தளராத ஆட்டமிது.
இன்பங்கள் எத்தனை தரினும்
திகட்டாத ஆட்டமிது.

மனிதர்கள் சில நேரம்
விரும்பாத ஆட்டமிது.
விரும்பாது போனாலும்
விலகாத ஆட்டமிது.

வெற்றியோ தோல்வியோ
ஆடித்தான் ஆகணும்.
வெள்ளென  எந்திருச்சு
ஓடித்தான் தீரணும்!

03 June 2012

வாழ்க்கைப் பந்தயம்


ஆப்பிரிக்கக்  காட்டில் சூரியன் எழும்போது மான் எழும்பும். அன்று, வேகமாக ஓடும் ஒரு சிங்கத்தைவிட அதிவேகமாக அது ஓட வேண்டும்,  அல்லது உயிர் பிழைக்காது.

ஆப்பிரிக்கக் காட்டில் சூரியன் எழும்போது சிங்கம் எழும்பும். அன்று, ஆக வேகம் குறைந்த ஒரு மானை விட அது வேகமாக ஓட வேண்டும், அல்லது உயிர் பிழைக்காது.

நீ சிங்கமோ மானோ சூரியன் எழும்போது எழு.
ஓடத்தொடங்கு.
-செல்வேந்திரன் (http://selventhiran.com)

28 May 2012

தீராக் கேள்வி- தெளிவான பதில் 4

1)நல்லவர்கள் யார் என்று எப்படித் தெரிந்து கொள்வது?
அதெல்லாம் தெரிந்து கொள்ள முடியாது. இதுதான் இந்த வாழ்க்கையின் சுவாரஸ்யம். அதுதான் இந்த வாழ்க்கையை வேகமாக்குகின்ற விஷயம். மரணம் எப்படி தெரிந்து கொள்ள முடியாத விஷயமோ,அதே போல் தான் யார் நல்லவர், எது வரையில் நல்லவர் என்பதும் தெரிந்து கொள்ள முடியாத ரகசிய விஷயம். நானும் நல்லவனாக இருப்பதற்கே முயற்சி செய்து வருகிறேன். இன்னொருவர் முதுகில் குத்தாமல், இன்னொருவரைப் பற்றி இழிவாகப் பேசாமல், எனக்குத் தான் எல்லாம் தெரியும் என்று கர்வப்படாமல் , இனிமையாக இருக்கக் கடுமையாக முயற்சிக்கிறேன். இது எளிதான் விஷயம் அல்ல என்பதும் எனக்குப் புரிகிறது. எல்லாத் தெளிவுகளையும் மீறி கர்வம் வர வாய்ப்பிருக்கிறது. அந்தக் கர்வம் கெட்டதாகத்தான் வெளிப்படும். கெட்ட விஷயமாகத்தான் மற்றவரைப் பாதிக்கும்.
2)எனக்கு பொழுதே போகவில்லை. நல்ல பொழுது போக்குக்கு ஒரு விஷயம் சொல்லுங்களேன்.
வீடு சுத்தம் செய்யுங்கள். தினந்தோறும் தரை துடையுங்கள். வாரந்தோறும் அலமாரியைத் துடைத்து , ஒட்டடை அடித்து , மின்விசிறி துடைத்து , விளக்குகள் சுத்தம் செய்து பளிச்சென்று வீட்டை வைத்திருங்கள்.தொட்டியில் சிறிய செடிகள் வளருங்கள். இடமிருப்பின், ஒரு தொட்டியில் மீன்களும் வளர்க்கலாம். சிறியதாய் , தியான ஸ்லோகங்கள் கொண்ட புத்தகங்கள் வாங்கி , ஒரு நாளைக்கு பலமுறை படியுங்கள். உங்களுக்குப் படிக்க விருப்பமில்லை என்று நினைக்கிறேன். எனவே தான், பொழுது போகவில்லை என்று எனக்குக் கடிதம் எழுதுகிறீர்கள்.
3)இத்தனை வயது வாழ்ந்து மற்றவர்களுக்கும் வாழக் கற்றுக் கொடுத்திருக்கிறீர்கள். ஒருவன் வாழ்க்கையில் என்ன செய்யக் கூடாது என்று நினைக்கிறீர்கள்?
புலம்பக் கூடாது.  வீடு வாசல் பற்றி , மனைவி மக்கள் பற்றி ,சாப்பிடும் உணவு பற்றி,ஆரோக்கியம் பற்றி மற்றவரிடம் சொல்லி புலம்பக் கூடாது. எப்படியிருக்கிறாய் என்று கேட்டால் நலமாக இருக்கிறேன் என்றுதான் சொல்ல வேண்டுமே தவிர, எதோ இருக்கிறேன் என்று சொல்வதும் புலம்பல்தான். என்ன கிடைத்திருக்கிறதோ , அதை வைத்துத் திருப்தியடைய தெரிந்து கொள்ள வேண்டும். வாழ்க்கையை ரொம்ப ருசியாக அனுபவித்தவர்கள் ஒரு காலகட்டத்தில் குறை சொல்ல ஆரம்பித்து விடுவார்கள்.சற்று விலகல் ஏற்பட்டால் இந்தக் குறை சொல்லும் புத்தி வராது. புலம்பல் இருக்காது. அனுபவிக்க உலகில் நல்ல விஷயங்கள்   நிறைய  இருக்கின்றன. வேதனைகளையும்  கூட இறைவன் கருணை என்று புரிந்து கொண்டு விட்டால் வாழ்க்கை சந்தோஷமானதாகவும் , அர்த்தமுள்ளதாகவும் இருக்கும்.

18 May 2012

பறவைகளின் காவலாளி


முற்றத்தில் காயும்
தானியங்களைப் பார்த்துக்கொள்ளுமாறு
நிஷாக் குட்டியைக்
காவலுக்கு வைத்துவிட்டு
அம்மா கடைக்குச் சென்றாள்
பொறுக்க வரும் காக்கைகளை
விரட்டாமல்
'சீக்கிரம்...சீக்கிரம்...
அம்மா வர்றதுக்குள்ளே
தின்னுக்கோ'
எனச் சொல்லும் நிஷாக் குட்டியின்
அன்பின் பெருவெளியைச்
சமன்படுத்த
வார்த்தை எதுவும் சிக்கவில்லை எனக்கு.

-.சிவநேசன்

கதைப் பொருள்


பாலமுருகனும் கணேசனும்
பல்பொருள் அங்காடியில்
தற்செயலாய்ச் சந்தித்த போது
பரஸ்பரம் நலம் விசாரித்தனர் -
பின்பு
அலுவலகத்தில்
ஆனந்தன் அகம்பாவமாக
நடந்து கொள்வதை
அரை மணி நேரம் விவாதித்தனர்

அடுத்த நாள் அலுவலகத்தில்
கணேசனும் ஆனந்தனும்
பதிவேட்டில் கையெழுத்திடுகையில்
பார்த்துக் கொள்ள நேரிட்டது - அங்கே
பாலமுருகனின் பண்புகள்
பத்து நிமிடம் பாடுபொருளாயின

அதே நாளின் இறுதியில்
தேநீர்க் கடையில்
எதேச்சையாகச் சந்தித்த
ஆனந்தனும் பாலமுருகனும்
ஆரத் தழுவிக் கொண்டனர் - பின்னர்
கணேசனின் செயல்களைக்
கருணையின்றி விமர்சித்தனர்.

பிறிதொரு நாளில் மூவரும்
ஒன்று சேர்ந்தனர் இப்போது
அதிகமாக அலட்டிக் கொள்ளும் அம்பிகா
கதைப் பொருள் ஆனாள்.

- நா. ராஜேந்திர பிரசாத்

15 May 2012

'ணங்'


'ணங்' என்ற சத்தம் கேட்டு திடுக்கிட்டு விழித்தேன்.என்னுடன் தங்கியிருந்த நண்பர் தட்டுத் தடுமாறி படுக்கைக்கு செல்வது, இரவு விளக்கின் வெளிச்சத்தில் மங்கலாகத் தெரிந்தது. சத்தம் வரக் காரணமாயிருந்த குவளை  கீழே உருண்டு கொண்டிருந்தது. நண்பரின் கை தவறி விழுந்திருக்கக் கூடும்.

ஒரு பயிற்சிப் பட்டறையில் கலந்து கொள்ளும் பொருட்டு  , உடன் பணி புரியும் நண்பர் சகிதம் நான்கு நாட்கள் வெளியூரில் தங்க நேரிட்டிருக்கிறது. நேற்றிரவு இங்கு வந்து சேர்ந்த போதே மணி பத்தைத் தொட்டிருந்தது. இரவு உணவுக்குப் பின் நீண்ட நேரம் கதைத்து விட்டுப் படுக்கும் போது, மணி பன்னிரண்டைத் தாண்டி விட்டது. எப்போது உறங்கினோம் என்றே தெரியவில்லை. ஆழ்ந்த தூக்கம்! கீழே விழுந்த குவளை தூக்கத்தைக் கெடுத்து விட்டது.

அலைபேசியில் மணி பார்த்தேன்2.40 . புரண்டு படுத்தேன். சமீப காலமாக நடு இரவில் விழிப்பு ஏற்பட்டால் சாமான்யத்தில் தூக்கம் வருவதில்லை.ஏதேதோ எண்ணங்கள் சுழல அரை மணி நேரமாவது தூக்கம் வராமல் படுக்கையில் புரள்வது வழக்கமாகி வருகிறது. நாளைய பயிற்சி வகுப்பு எப்படியிருக்கும் என்று யோசித்துக் கொண்டே கண்களை மூடினேன். நினைவு இழை அறுந்து உறக்கம் தழுவத் தொடங்கும் நொடியில் , பசித்த புலியின் உறுமலாய் மிக அருகில் சத்தம் கேட்டது. தலை தூக்கிப் பார்த்தேன்.நண்பர் குறட்டை விட ஆரம்பித்திருந்தார். எந்நிலையிலும் புறச்சூழ்நிலைகளால் பாதிக்கப்படாத வண்ணம் மனதைப் பழக்கியிருந்ததால், அவரின் குறட்டையைக் குறையாய் நினைக்காமல் உறங்க முயன்றேன். சிறிது நேரத்தில் புலியின் உறுமல் சிங்கத்தின் கர்ஜனையாய் மாறியது. ஒரு காதை தலையணையில் அழுத்தி , மறு காதை கையால் பொத்தியபடி படுத்தேன்.
'எந்தவொரு ஓசையுடனும் மனம் இயைந்து சென்றால் அந்த ஓசை இசையாகி விடும்' என்ற ஓஷோவின் கூற்றுப்படி மனதை குறட்டை ஒலியுடன் ஒத்திசைத்தேன். ம்ஹூம்...பலனில்லை. சிங்கத்தின் கர்ஜனை யானையின் பிளிறலாய் மாறியதும் தான் எனக்கு விபரீதம் புரிந்தது. இன்றைய தூக்கம் இவ்வளவுதான்! தூக்கம் கூட பிரச்சினையில்லை...தூக்கமின்றி யோசிப்பதால் வரும் மன அயற்சி கூட விஷயமில்லை...ஆனால் கடும் ஏற்ற இறக்கத்துடன் என்னைச் சூழ்ந்துள்ள இந்த ஒலி மாசுபாட்டிலிருந்து எப்படித் தப்பிப்பது என சிந்தித்தபடி சிறிது நேரம் வெளியில் சென்று உலவினேன். கண்கள் கெஞ்ச , இஷ்ட தெய்வத்தை வேண்டிக் கொண்டு , மீண்டும் அறைக்குள் வந்தேன். தற்போது யானை மெலிந்து பூனையாகி இருந்தது. சற்று தெம்புடன் படுக்கையில் தலை சாய்த்தேன். இரண்டே நிமிடத்தில் நண்பர் விஸ்வரூபமெடுத்து விண்ணைத் தொட , எனக்கு வாழ்க்கையே வெறுத்து விட்டது. இதிலிருந்து மீள உண்டான அனைத்து வழிவகைகளையும் என்னாலான வரையில் brain storming செய்ய, பளிச்சென்று ஒரு யோசனை உதயமாயிற்று. குறட்டை விடுபவரை ஏதேனும் ஒரு வகையில் disturb செய்தால் ஒலி தடைபடும் அல்லது மட்டுப்படும் என்பது அனுபவப் பாடம். வேறு வழியேயின்றி, யோசனையை செயல்படுத்தும் விதமாக , அருகிலிருந்த குவளையைத் தட்டி விட்டேன்.

'ணங்' என்ற சத்தம் கேட்டது.


அறியப்படும் நீதி : நாம் விடும் குறட்டை நமக்குக் கேட்பதில்லை.