09 September 2009

வாழ்க்கையை 'நடத்துபவர்கள்'


கடந்த பத்து நாட்களாக மதுரையில் நடைபெற்ற புத்தகத் திருவிழா நல்லி குப்புசாமி செட்டியார் எழுதிய 'தமிழ் பதிப்புலகம்- ஓர் அறிமுகம்' புத்தக வெளியீட்டுடன் நேற்று இனிதே நிறைவுற்றது. தொலைக்காட்சி, இணையம், கைபேசி என எத்தனை ஊடகங்கள் இருப்பினும் புத்தக வாசிப்பு தரும் அலாதி சுகத்தை மக்கள் இன்னும் சிலாகிக்கிறார்கள் என்பதையே 'ஆறு கோடி ரூபாய் மதிப்புள்ள புத்தகங்கள் விற்பனை' என்ற தகவல் நிரூபிக்கிறது. வாழ்க விழா அமைப்பாளர்கள் , தொடர்க அவர் தம் திருப்பணி !
புவனின் தொடர் வற்புறுத்தலின் பேரில் , தொடங்கிய முதல் நாள் அன்றே நானும் அவனும் கண்காட்சிக்கு சென்றோம். L.K.G படிக்கும் பிள்ளைக்கு புத்தகத்தின் மீது இத்தனை காதலா என்று வியக்காதீர்கள். "அடுத்த வாரம் ' book exhibition ' இருக்கு, நாம ரெண்டு பேரும் போவோமா" என்று நான் சொல்லி வைக்க , மான் ராட்டினம், முயல் ராட்டினம், நிறைய பலூன்கள் , இன்ன பிறவெல்லாம் வண்ணங்களாய் அவனுள் விரிந்ததன் விளைவு தான் அது. கண்காட்சித் திடலுள் நுழைந்ததும் பிள்ளை அதைத்தான் முதலில் தேடினான். தேடி சலிப்புற்றவனைத் தேற்றும் விதமாக , அவனுக்கு ஒவ்வாது எனத் தெரிந்தும் அவன் விரும்பிய குளிர் பானத்தை வாங்கிக் கொடுத்தேன்.
பின் ஒவ்வொரு புத்தக அரங்காக ஏறி இறங்கினோம். இரவு தூங்குவதற்கு முன்பான கதை நேரத்தை முன்னிட்டு , மரியாதை ராமன் கதைகள் , தெனாலி ராமன் கதைகள் என சில புத்தகங்கள் , வண்ணம் தீட்டல், புள்ளிகளை இணைத்தல் போன்ற செயல்பாட்டு புத்தகங்கள், என் மனைவியின் விருப்பமான ரமணி சந்திரன் புத்தகங்கள் , அதன் பின் என் விருப்பப் பட்டியலில் இருந்த சில புத்தகங்களையும் வாங்கினேன் . உயிர்மை அரங்கில் கவிஞர் மனுஷ்ய புத்திரனுடன் சிறிது நேரம் அளவளாவினேன் . இறுதியாக திறந்த வெளி அரங்கில் நாட்டுப்புறப் பாடல் கேட்டு விட்டு, ஒரு கையில் புவனும் மறு கையில் புத்தகப் பைகளுமாக சுகமான சுமைகளுடன் வீடு திரும்பினேன்.
மறு நாள் நண்பர் ஒருவரிடம் பேசிக் கொண்டிருந்த பொழுது புத்தகத் திருவிழா பக்கம் பேச்சு திரும்பியது. எவ்வளவுக்கு புத்தகம் வாங்கினீர்கள் என்றவரிடம் , நான் தொகையைச் சொல்லவும் , அவ்வளவுக்கா என ஆச்சர்யம் காட்டினார்.
"சரி... என்னென்ன புத்தகங்கள் வாங்கினீங்க " என்ற அவரின் த்வனியில் நம்பிக்கையின்மை வெளிப்பட்டது.
"சு.ரா வின் 'ஒரு புளிய மரத்தின் கதை' , ' ஜே.ஜே. சில குறிப்புகள்' , ராமகிருஷ்ணனின் 'உப பாண்டவம்' , 'நெடுங்குருதி' , ஜெயமோகனின் 'சு.ரா- நினைவின் நதியில் ' , 'விக்ரமாதித்யன் கவிதைகள்' ...."என்று நான் சொல்லிக் கொண்டு போக , அது வரை அசிரத்தையாக கேட்டுக் கொண்டு வந்தவர் திடீரென பிரகாசமாகி , " அதை நான் படித்திருக்கிறேன் ...ரொம்ப சுவாரஸ்யமாக இருக்கும்..." என்றார்.
எனக்கு ஒரு பக்கம் ஆச்சர்யம் , மறுபக்கம் 'என் ரசனைத் தளத்துடன் ஒத்துப் போகிற ஒருவரை இத்தனை நாள் இழந்து விட்டோமே' என்ற ஆதங்கம். நான் உற்சாகமாகி , வாங்கிய புத்தகப் பட்டியலைத் தொடர்ந்தேன். சிறிது நேரம் சென்று கையைத் தூக்கிக் காண்பித்து ,
" போதும் ...நீங்கள் சொன்ன விலை சரிதான் . இத்தனை புத்தகங்களும் சேர்ந்து அத்தனை விலை இருக்கத்தான் செய்யும் . இருந்தாலும் நீங்கள் அவ்வளவு ரூபாய்க்கு புத்தகங்கள் வாங்கியிருக்கக் கூடாது. நாட்டுல நிறைய பேர் சாப்பாடில்லாம இருக்க , நாம இப்படி கண்டபடி செலவழிக்கக் கூடாது", என்று ஆரம்பித்து நிறைய அறிவுரைகளை அள்ளித் தெளித்தார். ஒரு கணம் , இவர் மீது சற்று முன் தோன்றிய என் அனுமானம் தவறோ என்று தோன்றியது. அன்றிலிருந்து அந்த வகையறாக்களிடம் சற்று கவனமாக இருக்க வேண்டும் என்று நான் முடிவு செய்ததற்கு மேற்கூறிய அறிவுரைகள் மட்டும் காரணமல்ல...அதைத் தொடர்ந்து அவர் சொல்லி சிலாகித்த கீழ்க் கண்ட விஷயமும்தான்.
" என்ன ....நான் சொன்னது கரெக்டா சார் ? நீங்க இவ்வளவு செலவு பண்ணினது எனக்குத் தப்போன்னு தோணிச்சு . அதான் சொல்லிட்டேன்...ஆனா நீங்க விக்ரமாதித்யன் புத்தகம் பத்தி சொன்னீங்க இல்ல . அதை வாங்குனதுக்கு நான் உங்களை பாராட்டறேன் . விடாமுயற்சிக்கு நல்ல உதாரணம் சார் அந்த புக்கு. எவ்வளவு தடவை முருங்கை மரத்துல ஏறினாலும் , விடாம அந்த வேதாளத்தை பிடிப்பான் பாருங்க விக்ரமாதித்தன்......"
-----------------------------------------------------------------------------------------
அடுத்த நாள் மற்றொரு நண்பருக்கும் எனக்கும் நடந்த உரையாடல் :
நண்பர் : என்ன சார்...உங்களுக்குத்தான் புத்தகம் படிக்கிறது பிடிக்குமே...புத்தகத் திருவிழாவுக்குப் போனீங்களா?
நான் : அப்படியா...எங்க சார் அதுக்கெல்லாம் நேரம் இருக்கு...

1 comment:

  1. "thagavalai vida thalaippu ennai vekuvaga kavargirathu"
    Vijayalakshmi

    ReplyDelete