இதோ அதோ என்று கடைசியில் பெயர்ந்தே விட்டார் சனி பகவான். கன்னி ராசிக்கு ஏற்கனவே தொடங்கி விட்ட ஏழரைச் சனியில் இது ஜென்மச் சனியாம்.
" உங்களுக்கும் சந்தோஷுக்கும் (ஒரு வயது) நேரம் சரியில்ல...பரிகாரம் பண்ணனும் ...சீக்கிரம் கோவிலுக்கு போயிட்டு வந்திடுங்க ..." என்ற மனைவியின் குரல் காலையிலிருந்து ஒலித்துக் கொண்டிருக்கிறது.
என் மனம் வெறுமையாய் இருக்கிறது . என் பள்ளிக்கூட நாட்களின் இறை நம்பிக்கை , கடவுள்தன்மை பற்றி எந்தவொரு மனக் கிலேசமுமின்றி அதன் தொடர்பான எனது செயல்கள் என அனைத்தும் மனக் கண்முன் வந்து செல்கின்றன . பள்ளி செல்லும் முன் , வீட்டின் எதிரில் இருந்த 'தங்க மாரியம்மன் ' கோவிலுக்கு சென்று மானசீகமாக அம்பாளுக்கு வணக்கம் சொல்லி , போகும் வழியிலுள்ள தெருவோர சிவன் கோவிலின் திருநீறு பூசி , திருவிழாக் காலங்களில் ' அம்மன் கூழ்' பருகியதால் 'சக்தி' வந்ததெனப் பூரித்து , தெருவில் பவனி வரும் அம்மன் சிலையிலிருந்து விழுந்த பூவை எனக்கான பிரத்யேக ஆசிர்வாதமாய் நினைத்து பத்திரப்படுத்தி .... இன்னும் எத்தனையோ பால்ய நினைவுகள் ....
அறியாமைதான் எத்தனை சுகம் ! உண்மையிலேயே கடவுளுக்கு மிக அருகாமையில் இருந்த நாட்கள் அவை.
அதைத் தொடர்ந்த ,பருவம் எய்திய நாட்களில் ஏற்பட்ட மனச் சிதறல் சிறிது காலம் கடவுள் வழிபாட்டை மறக்க வைத்தது. அதன் பின்னான நாட்களில் , புத்தக வாசிப்பும் , அதற்கு இணையான வெளியுலக அனுபவமும் என் கடவுள் நம்பிக்கையை கேலிக்கும் , கேள்விக்கும் உள்ளாக்கின. கேள்விகள் , கேள்விகள் ,கேள்விகள் மட்டுமே....விடை தேடிய பயணம் ஒரு கட்டத்தில் , உருவமான பொம்மை அல்ல , அருவமான கடவுள்தன்மையே பிரபஞ்சத்தில் சாத்தியம் என்னும் நிலைப்பாட்டை எனக்குள் விதைத்தது. மீண்டும் அந்த நேர்கோட்டில் நீண்ட நாள் பயணம். புத்தகங்களைத் தேடித் தேடி வாசித்து , அவை சொன்ன விஷயங்களின் சாரத்தை என்னுள் தக்க வைத்துக் கொண்டேன். கோவிலுக்கு செல்லும் பழக்கம் அறவே நின்று போயிற்று. கோவிலுக்கு செல்பவர்களை புன்சிரிப்போடு நோக்கும் ஒரு வித மேதாவித்தனம் வந்து ஒட்டிக் கொண்டது. எல்லாம் தெரிந்ததாக ஒரு அலட்டல் வந்து குடியமர்ந்தது. இவை அனைத்தையும் தள்ளி நின்று அவதானித்த படி இருந்தாலும் உள்ளுக்குள் ஒரு கர்வம் மழை மேகம் போல் என் சிந்தனையை மூடியிருந்தது.
ஆனால் தற்போது ஒரு பெண்ணுக்குக் கணவனாக, இரு குழந்தைகளின் தகப்பனாக ஆசிர்வதிக்கப்பட்டிருக்கும் நிலையில் கடவுள் பற்றிய எனது நிலைப்பாடு மறு ஆய்வுக்கு உள்ளானதாகிறது.
ஒரு நிமிஷம் பொறுங்கள்....எதிரே எங்கள் தெரு பால்காரர் வந்து கொண்டிருக்கிறார்.
"என்ன சார்...குழந்தையோட....அதுவும் இத்தனை அவசரமா...."
" இன்னிக்கு சனிப் பெயர்ச்சி...அதான் குடும்பத்தில எல்லாருக்கும் ஒரு அர்ச்சனை பண்ணிட்டு வந்திடலாம்னு..... நேரமாச்சு, பூஜையை ஆரம்பிச்சுட போறாங்க ...நான் உங்களை அப்புறமா பார்க்கிறேன்..."
எதிர்ப்பட்ட பால்காரரின் விசாரிப்புக்கு பதில் சொல்லி விட்டு உங்களிடம் கூட பேச நேரமின்றி கோவிலுக்கு விரைந்து கொண்டிருக்கிறேன்.
No comments:
Post a Comment