08 March 2010

நாலு அணாவும் நானும்

இணையம் வழி, அலைபேசி வழி என பரிணாம வளர்ச்சி கண்டிருக்கும் இன்றைய பணப் பரிமாற்றம் , பத்து ஆண்டுகளுக்கு முன்பு வரை ஒரு பாமரனின் கற்பனைக்கெட்டாத அளவிலேயே இருந்தது.சம்பாதித்த பணத்தைக் கையில் வாங்கித் தொட்டுத் தடவி , பாதுகாத்து செலவழித்த காலத்தில் இருந்த பணத்தின் மதிப்பும் , பணத்தின் மீதான மக்களின் மதிப்பும், இன்றைய கண நேரப் பரிமாற்றத்தில் குறைந்து வருவதாகவே தோன்றுகிறது.இன்று ,பத்தாயிரம் ரூபாயை, கையில் எடுத்துச் சென்று பொருட்கள் வாங்குவதிலும் , வங்கி அட்டையை எடுத்துச் சென்று வாங்குவதிலும் சிறிது வித்தியாசம் இருக்கத்தான் செய்கிறது .

சரி , விஷயத்திற்கு வருவோம்.ஒரு சிறு குவளை தேநீரின் குறைந்த பட்ச விலை ஐநூறு காசுகளாக உள்ள இன்றைய நிலையில் ,வெறும் இருபத்தைந்து காசுகளுக்கு ஏதாவது ஒன்று விற்கப்படுகிறதா? இல்லையென்பது உங்கள் பதிலாக இருப்பின் ,சமீப காலத்தில் நீங்கள் தபால் அலுவலகம் சென்று யாருக்கும் பணம் அனுப்பவில்லை என்று அர்த்தம்.


திருநெல்வேலியில் என் மனைவியின் தூரத்து உறவினர் பொறுப்பேற்று நடத்தும் கோவில் திருவிழாவிற்கு நன்கொடை அனுப்பும் பொருட்டு , நவீன வசதிகள் தவிர்த்து , பணவிடை(மணி ஆர்டர்) அனுப்ப வேண்டிய நிர்ப்பந்தம். அவசர வேலைகளுக்கு மத்தியில் தபால் அலுவலகம் செல்ல மதியம் இரண்டு மணியாயிற்று. இதற்கு மேல் பணம் அனுப்ப முடியாது என்ற அவ நம்பிக்கையுடன் உள்ளே நுழைந்தேன்.அவசர கதியில் இயங்கிக் கொண்டிருந்த அலுவலகப் பெண் 'என்ன வேண்டும்' என்று சைகையில் கேட்டார்.நான் சொன்னவுடன், ஏதோ பரம விரோதியைப் போல் ஒரு பார்வையை வீசிவிட்டு , 'சீக்கிரம் ஃபார்ம் வாங்கி ஃபில்லப் பண்ணிக் கொடுங்க , நேரமாச்சு ...ஒரு ஃபார்ம் 25 பைசா...சீக்கிரம் கொடுங்க.. ' என்றார்.நான் 'ஙே ' என்று விழித்தேன். 25 பைசாவிற்கு எங்கே போவது...வகுப்பிற்கு வேறு நேரமாகிவிட்டது...பரபரப்பாக பையைத் துழாவி, ஒரு ரூபாய் நாணயத்தை எடுத்துக் கொடுத்தேன்.

"சில்லறை இல்லையே , சார் " என்றவர் அவர் காரியத்தில் மும்முரமானார். சுற்றி முற்றிப் பார்த்தேன் . கர்ணனே என் எதிரில் வந்தாலும் இந்த நிலையில் அவரால் எனக்கு உதவ முடியாதென்பது புரிந்தவுடன், " சரி ..நாலு ஃபார்ம் கொடுங்க..." என்றேன். கடினமான சூழ்நிலையை என் சமயோசிதத்தால் வென்று விட்ட பூரிப்பு என் இதழில் புன்னகையானது. அந்தப் பெண்ணோ சிறிதும் சலனமின்றி நான்கு படிவங்களைக் கொடுத்தார். நான்கில் ஒன்றை பூர்த்தி செய்து கொடுத்து , இதர நியமனங்கள் முடிந்த பின் கிளம்பத் தயாரானேன். அப்படியே வந்திருக்க வேண்டும். கிளம்பும் முன் மீதமிருந்த மூன்று படிவங்களைப் பார்த்ததும் 'நம்மிடமிருந்தால் வீணாகிவிடுமே' என்ற எண்ணம் தோன்ற , உடனே அவற்றை எடுத்து நீட்டினேன்.'மறுபடியும் என்னய்யா' என்பது போல் பார்வையை வீசினார். "இது எனக்குத் தேவையிருக்காது... உங்ககிட்ட இருந்தா உபயோகப்படும்... " நான் மிகப் பொறுப்பானவன் என்ற த்வனி என் குரலில் இருந்தது. அதை அந்தப் பெண் ரசிக்கவில்லை.

"இல்ல ...இத நாங்க வாங்க கூடாது...வாங்கினா கணக்கு டேலி (?!) ஆகாது.'
இந்தப் பதிலை எதிர்பாராத நான் மீண்டும் 'ஙே'....

பின் என்ன நினைத்தாரோ, 'அப்ப ஒரு நிமிஷம் இருங்க ...அந்தக் ஃபார்மைக் கொடுங்க ' என்று வாங்கிக் கொண்டவர் கிட்டத்தட்ட மூன்று முழு நிமிடங்கள் தேடி ,மீதி சில்லறையான எழுபத்தைந்து பைசாவைக் கொடுத்தார்.

அதைப் பெற்றுக் கொண்ட நான் ஓட்டமும் நடையுமாக வகுப்பிற்கு வந்து சேர்ந்தேன்.வரும் போது எனக்குள் பல கேள்விகள். படிவத்தை இவ்வளவு குறைவான மதிப்பிற்கு தருவதை விட அதை இலவசமாகவே கொடுத்துவிடலாம் அல்லது புழக்கத்தில் இல்லாத 25 பைசாவிற்குப் பதிலாக ஒரு படிவத்தின் விலையை ஒரு ரூபாய் ஆக்கினால் மக்களுக்கும் சுலபம், நஷ்டத்தில் மக்கள் சேவையாற்றும் அஞ்சல் துறைக்கும் வருமானம் . ஒரு வேளை எனக்குத்தான் 25 பைசாவின் உண்மையான மதிப்பு தெரியவில்லையா? அல்லது அந்தப் படிவங்களை அவர் திரும்பப் பெற மறுக்கும் அளவிற்கு அவ்வளவு துல்லியமாக கணக்கு வழக்குகள் பராமரிக்கப்படுகின்றனவா?அல்லது அந்தப் பெண் அலுவலர் மட்டும் கடமையை அவ்வளவு கடமையாய் ஆற்றுகிறாரா? எது எப்படியோ ,அன்று எனக்குத் தேவையில்லாத டென்ஷனும் (மன அழுத்தம்?) , சில பல நிமிடங்களின் வீணடிப்பும் செய்த அந்த 25 பைசா இன்னும் என் பணப்பையிலேயே உள்ளது. அந்த மதிப்பிற்கான பொருள் எங்காவது கிடைத்தால் அதை வாங்கியே ஆவது என்ற தீர்மானத்தில் இருக்கிறேன்.உங்களுக்குத் தெரிந்தால் 50 பைசா செலவு செய்து எனக்கு அஞ்சலட்டை அனுப்புங்கள்.

 

1 comment:

  1. சுமார் 47 ஆண்டுகள் முன்னர் காசு வாங்காமல்தான் அஞ்சலகத்தில் இந்தப்படிவத்தை கொடுத்துக்கொண்டிருந்தனர். மக்கள் அதனை வீணடிக்கவே அதன் விலையை 3 காசுகள் என்றும் அதனை பணவிடை அனுப்பும்போது கழித்துக்கொண்டனர். பின்னர் அதன் விலையை கழிக்கும் வழக்கை மாற்றிவிட்டனர். பின்னர் காலப்போக்கில் விலையை ஏற்றி 25 காசுகள் என்று வைத்துள்ளனர். நீங்கள் குறிப்பிட்டதுபோல் ஒரு ரூபாய் என்று நிர்ணயிக்கலாம். அஞ்சலகத்தில் இதற்குச் சரியான கணக்கு வைத்திருப்பர்.
    அஞ்சல்துறையில் பணியில் சேர்ந்து பின்னர் தொலைத்தொடர்புத்துறையிலிருந்து ஓய்வு பெற்றவன் என்பதினால் இவ்வளவு விபரம் என்னால் தர முடிந்தது.

    ReplyDelete