09 June 2010

ஐந்து நிமிடமும் ஆறாம் பக்கமும்...



கடந்த வாரம் வெள்ளி மற்றும் சனிக் கிழமைகளில் மட்டும் மதுரை - தேனி சாலையில் நிகழ்ந்த விபத்துகளில் இருபது பேர் இறந்து போனார்கள். இந்தச் செய்தி எனக்கு நெருக்கமானதற்கு காரணம் , அந்த நாட்களில் அதே சாலையில் நானும் பயணம் செய்து தேனி போய் வந்ததுதான். சென்ற வேலை முடிந்து ,சனியன்று இரவு குற்றுயிரும் குலையுயிருமாய் வீடு வந்து சேர்ந்தேன். இதற்கான காரணம் பதிவின் இறுதியில்......

முன்பெல்லாம் விபத்து பற்றிய செய்திகள் குடி தண்ணீர் லாரியின் வருகை போல் எப்போதாவதுதான் தென்படும். அவைகளில் பெரும்பாலானவற்றிற்கு குடி தண்ணீர் லாரிகள் தான் காரணகர்த்தாவாகவும் இருக்கும். ஆனால் தற்போது செய்தித்தாளின் ஆறாவது பக்கத்தை விபத்துச் செய்திகளுக்காகவே அர்ப்பணிக்கிறார்கள்.மேலும் அனைத்து ரக வாகனங்களும் விபத்துக்கு உள்ளாகின்றன. விதம் விதமான விபத்துகளில் , கொத்துக் கொத்தாய் மனிதர்கள் மரித்துப் போகும் அவலத்தை தினசரி பத்திரிகையில் காணும் போது , வாகனங்களில் வெளியே சென்று வீடு திரும்பும் ஒவ்வொருவரும் அதிர்ஷ்டசாலிகள் என்றே தோன்றுகிறது.

நான் தினமும் கல்லூரிக்குச் செல்லும் மதுரை புறவழிச்சாலையில் (?!) போக்குவரத்து விதிகளை யாரும் துளியும் மதிப்பதில்லை. எந்நேரமும் வாகனங்கள் ஒன்றையொன்று முத்தமிடக் கூடிய சாத்தியம் அதிகம். கிட்டத்தட்ட இருநூறு சதவீதம் விழிப்போடு செல்ல வேண்டிய நிலை.முதல் நூறு , நாம் மற்றவர்களை இடித்து விடாமல் இருக்க. இரண்டாவது நூறு , மற்றவர்கள் நம் மீது.

கண்ணெதிரே நடந்தேறும் விபத்துக்களை கண்டாலும் , நாமெல்லாம் விபத்துக்கு விதி விலக்கு என்பதான மனநிலையும், அதீத வேகமும் , தேவையற்ற கவனச் சிதறல்களுமே , அதுவரை பார்வையாளராக இருந்தவரை பாதிப்புக்குள்ளானவராக்குகிறது.

தேவைகளும் , வாங்கும் சக்தியும் அதிகரித்துள்ள இன்றைய காலத்தில் , ஓரளவே வாகனம் ஓட்டக் கற்றுத் தெளிந்த நடுத்தரக் குடும்பத்தைச் சார்ந்தவர் கூட நான்கு சக்கர வாகனங்களை உபயோகிக்கும் நிலையில், விபத்துக்கான சாத்தியக் கூறுகள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது என்பது தான் நிதர்சனம்.ஆகவே, எனக்கெல்லாம் ஒன்றும் நடக்காது என்ற மனோபாவம் மாறி , காலனின் கண் பார்வையில் தான் நித்தமும் பயணம் செய்கிறோம் என்ற தன் பயம் இருக்க வேண்டியது காலத்தின் கட்டாயம்.

அடுத்ததாக , அதீத வேகம். ஒவ்வொரு மணித்துளியும் money துளிகளாய் கருதப்படும் இன்று, எதிலும் வேகம் என்பதும் தவிர்க்க முடியாதது.இருந்தாலும், சரியான திட்டமிடல்களால் இதனை சமன் செய்ய முடியும்.என் வீட்டிலிருந்து 8.30 க்கு கிளம்பினால் மிக நிதானமாக கல்லூரிக்கு வர முடியும் என்பது உறுதி செய்யப்பட்ட உண்மை. ஆனால், எவ்வளவோ முயற்சி செய்தும் 8.40 க்கு முன்பாக என்னால் புறப்பட முடிய வில்லை.முதலில் கூறிய 'எனக்கெல்லாம்....' என்ற எண்ணமே இதற்கு காரணம்.எனவே, இப்போதெல்லாம் என்னுடைய கைக் கடிகாரம் பத்து நிமிடங்கள் முன்னதாகவே காட்டும் படி வைத்திருக்கிறேன்.இது சற்று சிறுபிள்ளைத்தனமாக இருப்பினும், எனக்கு இது ஒத்து வருகிறது.

மூன்றாவது, கவனச் சிதறல். 'வாகனம் ஓட்டும் போது அலை பேசி அழைத்தால் எடுக்காதீர்கள்; அழைப்பது எமனாகக் கூட இருக்கலாம்' என்று கூவிக் கூவி விளம்பரம் செய்தாலும் யாரும் செவி மடுப்பதில்லை. பேசிக் கொண்டே ஓட்டினால் அபராதம் என மிரட்டினாலும் யாரும் அஞ்சுவதாயில்லை.அபராதத்தைச் செலுத்தி விட்டு உரையாடலைத் தொடர்கிறார்கள்.நான் போக்குவரத்தின் போது வரும் எந்த ஒரு அழைப்பையும் தவிர்த்து விடுவேன்.(ம்...மனைவியின் அழைப்பு விதி விலக்கு!).

ஆக, நாம் பார்வையாளரா அல்லது பாதிப்படைந்தவரா ? நமக்கு அமைதியான வாழ்க்கையா அல்லது அகால மரணமா?வந்த பின் நொந்து போவதா அல்லது வரும் முன் காத்துக் கொள்வதா?....இந்த கேள்விகளுக்கான பதில் பெரும்பாலான ஆட்டோக்களின் பின்புறத்தில் காணக் கிடைக்கும் அந்த வாசகம் தான். " உன் வாழ்க்கை உன் கையில்".

நிற்க. அன்று நான் குற்றுயிரும் குலையுயிருமாய் வீடு வந்து சேர்ந்ததற்குக் காரணம்,எந்த விபத்துமில்லை, நான் பயணம் செய்த பேருந்தில் ஒளிபரப்பப்பட்ட தொடர்ச்சியான பாடல்கள்தான். குருவி - 5, வேட்டைக்காரன் - 5, சுறா - 5 , கச்சேரி ஆரம்பம் - 5 .

08 June 2010

பத்து பாத்திரம்

நான் ரசிக்கும் பத்து கதாபாத்திரங்கள்


ஜானி - ஸ்ரீதேவி
கடலோரக் கவிதைகள் - ரேகா
சிந்து பைரவி - சுஹாசினி
அழகன் - பானுப்ரியா
எங்க ஊரு பாட்டுக்காரன் - நிஷாந்தி
கையளவு மனசு - கீதா
இவன் - சௌந்தர்யா
பூ - பார்வதி
அங்காடித் தெரு - அஞ்சலி

மகதீரா - காஜல்

கதாபாத்திரங்கள் என்று பொதுவில் தலைப்பிட்டு விட்டு வெறும் நாயகிகளை மட்டும் பட்டியலிட்டது நெருடுகிறது என்று நீங்கள் கேட்பதிலும் நியாயம் இருக்கிறது. இதே போல் எனக்குப் பிடித்த பத்து கதாநாயகர்களின் பட்டியலும் இடலாம் தான். ஆனால் , உங்களுக்குப் படிக்க அத்தனை சுவாரஸ்யமாக இராது.

04 June 2010

மழை



ஒன்றுமில்லா வெறுமையும் , எல்லாமுமான பூரணமும் ஒரு சேர மனதை ஆக்கிரமிக்கும் ஒரு பெரு மழைப் பொழுது எனக்குக் கிட்டியிருக்கிறது. சிங்கத்தின் பலத்த கர்ஜனையும் துள்ளலுமாய் என் எதிரே மழை ஆர்ப்பரித்துக் கொண்டிருக்கிறது. ஒரு கையில் தேநீர் கோப்பையும் , மறு கையில் எனக்குப் பிடித்த தமிழ்ப் புதினமுமாய் என் வீட்டு முற்றத்தின் நாற்காலியில் நான். எத்தனை நாளாயிற்று....என்னைப் பொறுத்த வரை நான் இக்கணம் சொர்க்கத்தில் இருக்கிறேன் அல்லது என்னைச் சுற்றி சொர்க்கம் இருக்கிறது.

துரதிர்ஷ்டவசமாக , பல நேரங்களில் , ஏதேனும் பேருந்து நிலையத்திலோ அல்லது நெடுஞ்சாலையின் ஓரத்திலோ ஒரு வித பாதுகாப்பின்மையுடன் தான் மழையை எதிர் கொள்ள நேர்கிறது. அப்பொழுதெல்லாம் , மழை பற்றிய சக மனிதர்களின் அங்கலாய்ப்புகளுடன் , என் நிலை பற்றிக் கவலையோடிருக்கும் வீட்டினரின் நினைவும் சேர்ந்து ,மழைக்கும் எனக்குமான தொலைவை அதிகப்படுத்தி விடுகின்றன.கடந்த மழை நாட்களில் நடந்த நிகழ்வுகளும் , அவை தொடர்பான உணர்வுகளும் எந்நேரமும் அசை போடத் தக்கவை.

அத்தகைய நினைவு தரும் போதத்தில் இருக்கும் இந்நிலையில் , மழை தொடர்பான 'ஆதவன் தீட்சண்யா'வின் எதிர்மறைக் கவிதை மனதை அறுத்துச் செல்கிறது.
--------------------------------------------------
மிஞ்சிப்போனா என்ன
சொல்லிற முடியும் உன்னால
இந்த மழையைப் பத்தி

ஓதமேறுன கொட்டாய்ல
கோணில மொடங்கியும்
குளுர்ல நடுங்கியிருக்கியா

உங்கூட்டுப் பொண்டுக
நமுத்த சுள்ளியோட சேந்தெரிஞ்சு
கஞ்சிக் காய்ச்சியிருக்காங்களா
கண்ணுத்தண்ணி உப்பு கரிக்க

ஈரஞ்சேராம எளப்பு நோவெடுத்து
செத்த சொந்தத்த எடுக்க வக்கத்து
பொணத்தோட ராப்பகலா
பொழங்கித் தவிச்சதுண்டா

ஒழவுமாடொன்னு கோமாரியில நட்டுக்க
ஒத்தமாட்டைக் கட்டிக்கிட்டு
உயிர்ப் பதற அழுதிருக்கா உங்குடும்பம்

எதுக்கும் ஏலாம
உஞ்செல்லப்புள்ளையோட
சிறுவாட்டக் களவாண்டு
சீவனம் கழிஞ்சிருக்கா

தங்கறதுக்கு வூடும்
திங்கறதுக்கு சோறுமிருந்துட்டா
சவுரியத்துக்கு எழுதுவியாடா 'ம.......னே'
ஒண்ணு தெரிஞ்சுக்கோ
மழை ஜன்னலுக்கு வெளியதான்
எப்பவும் பெய்யுது உனக்கு
எங்களுக்கு எங்க பொழப்பு மேலயே.
-- ----------------------------------------------------







20 May 2010

இந்தி - யா ?!


ஒரு கருத்தரங்கு நிமித்தமான சென்ற வாரத்திய எனது தில்லி பயணம் சிறு ரகளையுடன் தான் ஆரம்பமானது. சென்னை விமான நிலைய வெளி வளாகத்தில் உள்ள மோசமான உணவகத்தில் மிக மோசமான காலை சிற்றுண்டி முடித்து , முதல் ஆளாய் இண்டிகோ நிறுவனத்தின் அனுமதிச் சீட்டு வாங்கி , இரண்டு மணி நேர புத்தக வாசிப்பிற்குப் பின் சோதனைச் சாவடி அடைந்தேன். வழக்கமான நியதிகள் முடிந்து எனது பயணப் பெட்டிக்காகக் காத்திருக்கையில் அந்த சோதனை அதிகாரி என்னை அழைத்தார். அழைப்பில் அதிகாரம் தொனித்தது. நான் என்னவென்று கேட்பதற்கு முன்னமே ' உங்கள் பெட்டியில் கத்திரி  இருக்கிறது. அதை வெளியே எடுங்கள்' என்றார்.நான் மிக அமைதியாக , ஆனால் அழுத்தமாக ' அதற்கு வாய்ப்பே இல்லை...பெட்டியில் உள்ள எனது 'belt buckle' தான் உங்கள் 'scanner' காண்பித்திருக்கும்' என்றேன். அவரின் வினவலுக்கு என்னிடம் அதிர்ச்சியையும் , பதற்றத்தையும் எதிர்பார்த்தவர் எனது பதிலைக் கேட்டு எரிச்சலுற்றவராய் மீண்டும் அதையே கூறினார் . நானும் பதிலுக்கு வாதாடினேன். விவாதம் தொடரவே , ஒரு கட்டத்தில் அவரே பெட்டியைத் திறந்து உள்ளிருந்த 'shaving kit' டிலிருந்து அதை எடுத்தார். கத்திரி! ! ஆசிரியரிடம் திட்டு வாங்கிய முதல் 'ரேங்க்' மாணவன் போல மெளனமாக பெட்டியை மூடி விட்டுத் தவறுக்கு மன்னிப்பு கோரினேன்.
பொதுவாக நான் வெளியூர் செல்லும் சமயங்களில் என் மனைவிதான் பயணப் பெட்டியை தயார்செய்வது வழக்கம். முந்தைய இரவு கூட ' கத்திரியை  எடுத்து வைக்கட்டுமா ? ' என்றவளிடம் 'வேண்டாம்' என்றுதான் சொன்னேன். பின் ' shaving kit ல் கத்திரி எப்படி வந்தது? விமானப் பணிப்பெண்களின் வழமையான உபசரிப்புகளில் மனம் லயிக்காமல் அந்தக் கேள்வியே எனக்குள் சுழன்றடித்தது.

தில்லி சென்று இறங்கியதும் செல்ல வேண்டிய இடம் நோக்கி 'ஆட்டோ' ஒன்றில் பயணம் செய்தேன். தேசிய நெடுஞ்சாலையில் அமைந்த அந்தப் பயணம் என் வாழ்வில் மறக்க முடியாதது. சற்று முன் வந்திறங்கிய விமானத்தின் வேகத்திற்குச் சற்றும் சளைக்காமல் வாகனம் பறந்து கொண்டிருந்தது. நீளமான கார்கள் இருபுறமும் எங்களை முந்திச் சென்று கொண்டேயிருந்தன. ஏதோ பந்தயத்தில் கலந்து கொண்ட பிரமை. எல்லோரும் எங்கே இவ்வளவு வேகமாகப் போகிறார்கள் என்ற எனது ஆச்சரியத்திற்கு வெகு சீக்கிரமே விடை கிடைத்தது. ஆம்..நெடுஞ்சாலை முடிவில் ஆரம்பித்த போக்குவரத்து நெரிசல் நகருக்குள் செல்லச் செல்ல உக்கிரமானது. அரை மணி நேரத்திற்கும் மேலாக ஊர்ந்து செல்ல வேண்டிய நிலை. அப்போதுதான் கவனித்தேன், தில்லியில் ஓடும் அனைத்து வாகனங்களும் ஏதாவது ஒரு பாகத்தில் சேதப்பட்டிருந்தன.

ஒரு வழியாய் தங்குமிடம் போய்ச் சேர்ந்து , சிறிது இளைப்பாறிய பின்னர் , காலாற நடந்து வரலாமென கிளம்பினேன். தெருக்களினூடே சிதறிக் கிடந்த தில்லியின் இயல்பு வாழ்க்கையை என் பார்வையால் சேகரித்த படி சென்றேன். தில்லி இளைஞர்கள் 'கான்'களை imitate செய்கிறார்கள். 'பான்'களை மென்று துப்புகிறார்கள். நிறைய சிகரெட் பிடிக்கிறார்கள்.தெரு முனைகளில் கூட்டமாய் நின்று அரட்டை அடிக்கிறார்கள். யுவதிகள் துப்பட்டாஅணிய மறுக்கிறார்கள். அணிந்தாலும் , அணிந்த காரணத்தை மறக்கிறார்கள். வண்டியில் பழம் விற்கும் கிழவர்கள் 'மால்குடி டேஸ்' ஐ ஞாபகப்படுத்துகிறார்கள். உடல் பருத்த பெண்மணிகள் இனிப்பு வகையறாக்களை சுவைத்துக் கொண்டேயிருக்கிறார்கள். கட்டட வேலை செய்யும் தொழிலாளிகள் கூட முழுக்கை சட்டை அணிகிறார்கள். உணவில் பெரும்பாலும் தவறாது பால் , தயிர் சேர்த்துக் கொள்கிறார்கள். தெருக்களில் நடை பாதைக் கடைகளும் , நெடுஞ்சாலைகளில் உயர் தர விடுதிகளும் நிறைந்திருக்கின்றன. அரிதாகக் காணப்படும் நடுவாந்திர உணவகங்கள் எப்போதும் காலியாகவே இருக்கின்றன. நம் ஊரில் தெருவுக்கு இரண்டு தேநீர்க் கடைகள் இருப்பது போல , தில்லியில் தெருவுக்கு இரண்டு பழ ரசக் கடைகள். அங்கொன்றும் இங்கொன்றுமாகத் தென்படும் தேநீர்க் கடைகளில் மிகத் தரமான தேநீர் தயாரிக்க மெனக்கிடுகிறார்கள்.

அப்படித் தயாரிக்கப்பட்ட சுத்தமான தேநீர் அருந்திய படியே , எனக்கும் அந்த ஆட்டோக்கார சர்தார்ஜிக்கும் இடையில் இந்தியில் நடந்த உரையாடலை அசை போட்டேன்.செல்லுமிடம் , தூரம் , கட்டண விவரம், பேரம் இத்யாதிகள் முடிந்த பிறகு கேட்டார்.
"நீங்க எங்கிருந்து வர்றீங்க ?"
"தமிழ் நாட்டிலிருந்து...."
" தமிழ் நாட்டுல இப்ப எல்லோரும் இந்தி பேசுறாங்களா? "
அவர் குரலில் ஏகத்துக்கு கிண்டலும் கேலியும் குடி கொண்டிருந்தன. நான் சிறிது கோபத்துடன் கேட்டேன்.
"தில்லியில இப்ப எல்லோரும் தமிழ் பேசுறாங்களா? "
என் கோபத்தை அவர் உணர்ந்திருக்க வேண்டும். அதன் பின் மௌனியாகி விட்டார்.
அவர் கேலிக்காகக் கேட்டாலும் அதில் பொதிந்திருந்த உண்மை சுடவே செய்தது.
வடக்கத்தியர்கள் தமிழர்களை அவ்வளவாக மதியாததற்கு அல்லது வெறுப்பதற்கு முதன்மையான காரணம் , அவர்களின் வேலை வாய்ப்புகளை நாம் பறித்துக் கொள்கிறோம் என்ற எண்ணத்தை விட , நாட்டின் அனைத்து மாநிலங்களும் தங்கள் தாய் மொழிக்கு அடுத்தபடியாக இந்திக்கு முக்கியத்துவம் கொடுத்திருக்க, தமிழகம் மட்டும் அதை ஒதுக்கியதே ஆகும். இந்தி மொழி எதிர்ப்பிற்கு ஆயிரம் நியாயங்கள் கூறப்பட்டாலும் , வேற்றுமையில் ஒற்றுமை காணும் தேசத்தின் பெரும்பான்மையான மக்கள் ஏற்றுக் கொண்ட மொழியை , தமிழகம் புறக்கணிப்பு செய்ததின் விளைவை இன்றைய தலைமுறை அனுபவிக்கிறது. கொல்கொத்தா, மும்பை , கான்பூர் , தில்லி போன்ற வட மாநில நகரங்களில் , இந்தி தெரியாதவன் இந்தியனே இல்லை என்ற அம்மக்களின் நிலைப்பாட்டை நான் நேரில் உணர்ந்திருக்கிறேன்.

சென்ற முறை கான்பூர் ஐ.ஐ.டி யில் அனைத்து மாநில கல்லூரி ஆசிரியர்களும் பங்கேற்ற தொழில் நுட்ப பயிற்சி வகுப்பில் ஆங்கிலத்தில் கலந்துரையாடல் நடந்து கொண்டிருந்தது. சுவை கூடிக் கொண்டே போக , மெல்ல மெல்ல உரையாடல் மொழி ஆங்கிலத்தில் இருந்து இந்திக்கு மாறியது. என்னால் அவ்வளவு வேகமாக பேச முடியா விட்டாலும் , விவாதத்தின் முழுச் சாரத்தையும் என்னால் விழுங்க முடிந்தது.(பள்ளியில் படிக்கும் போது private tution மூலம் இந்தி படித்திருக்கிறேன்.) இம்மியளவும் இந்தி புரியாத தமிழகத்தைச் சேர்ந்த சில பேர் 'தயவு செய்து ஆங்கிலத்தில் பேசுங்கள் ' என கோரிக்கை விடுக்க , அதற்குப் பிறகு அந்த முழு வாரமும் அவர்களிடம் யாரும் எந்த மொழியிலும் பேச வில்லை. முற்றிலுமாகப் புறக்கணித்தார்கள். இவ்வளவு ஏன்...நம் அண்டை மாநிலங்களான கேரளா, ஆந்திரா மற்றும் கர்நாடகாவில் கூட இந்தி தெரிந்தால் ஓரளவு சமாளித்து விடலாம்.
தற்போது நிலைமை சற்று மாறி வருவதாகவே தோன்றுகிறது. மெட்ரிக் பள்ளிகள் எண்ணிக்கையில் பெருத்து விட்ட இன்றைய நிலையில் , பள்ளியில் ஆங்கிலத்திற்கு அடுத்தபடியாக இந்தி கற்றுக் கொடுக்கிறார்கள். ஆனால் தமிழுக்கு முழுக்கு போடுகிறார்கள் என்ற ஆதங்கம் தனிப் பதிவிற்கானது.
யோசித்தபடியே தேநீரைக் குடித்து விட்டு தங்குமிடம் விரைந்தேன்.

மறுநாள் கருத்தரங்கு முடிந்து மீண்டும் விமானமேறி சென்னை வந்து அங்கிருந்து பேருந்தில் மதுரை வந்து சேர்ந்தேன்.வீட்டிற்குள் நுழைந்தவுடன் என் வாயிலிருந்து உதிர்ந்த வார்த்தைகள் என்னவாக இருந்திருக்கும் என்று யூகிக்க முடிகிறதா? அதே தான்...சென்னை விமான நிலையத்தில் நடந்ததை என் மனைவியிடம் விளக்கியதும் அவள் மிக நிதானமாகச் சொன்னாள்.
"ஆமா...shaving kit ல் எல்லாத்தோட சேர்த்து கத்திரியும்  இருந்தது...வெளிய எடுத்து வைக்கட்டுமான்னு கேட்டேன்...நீங்கதான் வேணாம்னு சொன்னீங்க..."
முதலில் தமிழில் தெளிவாகப் பேசிப் பழக வேண்டும் என்று எனக்கு நானே சொல்லிக் கொண்டு பல் விளக்கப் போனேன்.

22 March 2010

தினைத்துணை செய்யும் உதவி ....



" ஏம்மா ....திராட்சை என்ன விலை?..."
" கிலோ அறுபது ரூபா..கால் கிலோ பதினைந்து ரூபா..."
" என்னது...அறுபது ரூபாயா ...போன வாரம் அம்பது ரூபாதானே..."
"விலைவாசி எல்லாம் கூடிப் போச்சும்மா..நான் என்னம்மா செய்யட்டும்..."
" கால் கிலோ பதிமூணு ரூபான்னு கொடு...இல்லைன்னா ஆளை விடு..."
"சரி..சரி..எடுத்துக்கோம்மா..."



சுட்டெரிக்கும் வெயிலில் வரிசையாய் அமர்ந்து கூவிக் கூவிப் பழம் விற்கும் (பெரும்பாலும் நடுத்தர வயதான) பெண்மணியிடம் மேற்கண்ட உரையாடலை நீங்கள் நிகழ்த்தியிருக்கக் கூடும். பல்பொருள் அங்காடிக்குச் சென்று அத்தியாவசியத் தேவைக்கு அடுத்தபடியான பொருட்களை , வில்லை சொன்ன விலையில் வாங்கி வரும் நாம் , உச்சி வெயிலில் உண்ணக் கூட நேரமின்றி (அல்லது உணவின்றி) தொண்டை நீர் வற்ற வியாபாரம் செய்பவர்களிடம் பேரம் பேசி நம் பராக்கிரமத்தை நிலை நாட்டுகிறோம்.

இது சார்ந்த எனது ஆற்றாமைகளில் சில.

1. அவளைக் கடந்து போகும் எல்லோரும் பழம் வாங்குவதில்லை.
2. business world, cut throat competition என்றெல்லாம் சொல்கிறோமே , அது நிஜத்தில் நடப்பது அங்கேதான். நூறு அடி தூரத்திற்குள் அவளுக்குப் போட்டியாகப் பத்து பேர். எனவே , அவளிடம் வாங்கும் எல்லோரும் அவள் சொல்லும் விலையில் வாங்குவதில்லை.
3. அப்படியே வாங்கினாலும் நாள் முடிவில் அனைத்துப் பழங்களும் விற்பதில்லை. வெம்பிப் போன பழத்தோடும் , மனதோடும் வீடு திரும்பும் நிலை.
4.அவள் ஒன்றும் திராட்சைத் தோட்டத்திற்கு சொந்தக்காரி இல்லையே ! அடுத்த நாள் வியாபாரம் தொடர , அதிகாலையில் பழங்களை அன்றைய நிலவரப்படி குறிப்பிட்ட விலையில் கொள்முதல் செய்ய வேண்டும்.

ஒரு சிறு உதாரணத்தை எடுத்துக் கொள்வோம்.
ஒரு வருடம் முன்பு.......
மொத்த வியாபாரியிடமிருந்து கொள்முதல் விலை - 9 ரூபாய். (கால் கிலோ)
அவள் விற்கும் விலை - 12 ரூபாய்.
லாபமான 3 ரூபாய் , வெம்பிய மற்றும் அழுகிய பழங்களின் நஷ்டம் போக 2 ரூபாயாகிறது.
வண்டிக் கட்டணம் /பேருந்துக் கட்டணம் போக நிகர லாபம் ஒன்றரை ரூபாயாகிறது.
சராசரியாக ஒரு நாளைக்கு எத்தனை கால் கிலோ விற்கும் என்று எண்ணி பார்த்து அன்றைய நிகர லாபத்தைக் கணக்கிட்டுக் கொள்ளுங்கள். இந்த நிகர லாபத்தில் தான் அவள் தானும் சாப்பிட்டு , குழந்தைகளையும் வளர்க்க வேண்டும். சாப்பாடு மட்டும் போதுமா...வீட்டு வாடகை , துணிமணி, பள்ளிக் கட்டணம் , மருத்துவ செலவு , இத்யாதி, இத்யாதிகள்.....கணவன் ஒழுங்காயிருந்தால் போயிற்று , அல்லாமல் குடிகாரனாக இருந்தால் ...அவனையும் சமாளிக்க வேண்டும். இத்தனை துயரத்திலும் அவள் தன்னிடம் இருக்கும் முதல் 9 ரூபாயைத் தொட முடியாது . அடுத்த நாள் கொள்முதல் செய்ய அதுதானே மூலதனம்.

கடந்த ஒரு வருட காலத்தில் , பல காரணங்களால் அனைத்து தரப்பிலும் விலையேற்றம் தவிர்க்க முடியாததாகி விட்டது.
தற்போதைய கொள்முதல் விலை - 12 ரூபாய்.
விற்கும் விலை - 15 ரூபாய்.
அழுகல் போக, ஒரு வருடத்திற்கு முந்தைய அதே லாபமான 2 ரூபாயில் , வண்டிக் கட்டணம் உட்பட, அரிசி, பருப்பு, வாடகை, மற்றும் மருத்துவ செலவு அனைத்தும் ஒன்று விடாமல் உயர்ந்து விட்ட நிலையில் , அவள் தனது ஒவ்வொரு நாளையும் கழிக்க வேண்டிய நிலை.

சற்றே எண்ணிப் பாருங்கள். வருடத்திற்கு ஒரு முறை ஊதிய உயர்வு பெரும் நம்மில் எத்தனை பேர் இது போன்ற வியாபாரிகளிடம் திருப்தியாகிறோம். விலை சரிதானா.. எடை சரிதானா ...நல்ல பழம் தானா....என ஏகப்பட்ட 'தானா'க்களுடன் தான் நகர்கிறோம். அவர்கள் கேட்பது இந்த வருடத்திற்கான பஞ்சப்படியல்ல நண்பர்களே , பஞ்சம் அவர்கள் வீட்டுப் படி ஏறாமல் இருப்பதைத்தான் . சமூகத்தின் அனைத்துத் தளங்களிலும் ஏற்படும் விலையேற்றத்தை சகித்துக் கொள்ளும் நாம் , மானத்தோடு உயிர் வாழும் ஒரே நோக்கில், தங்கள் சக்திக்கு மீறி உழைத்து , உடன் வாழும் பிரஜைகளின் உதவியை ஒவ்வொரு நாளும் மறைமுகமாக நாடும் இவர்களுக்கு செய்யும் உதவி வேறு என்னவாக இருக்க முடியும், பேரம் பேசாமல் வாங்குவதைத் தவிர ?!

13 March 2010

வாழ்வின் நீளம்


                     நூற்றியிருபது கேட்ட
                    கடைக்காரனிடம்
                    நூறு தருவதாகச் சொல்கிறான்
                    வாங்க வந்தவன்...
                    பேரம் படியாமையின் கணங்களில்
                    நீள்கிறது
                    கறிக்கோழி ஒன்றின் வாழ்க்கை!

                     -நாவிஷ் செந்தில்குமார்



09 March 2010

அகவைத் தகவல்



காதோரம் முளை விடும்
சிறு நரையை இள நரையென
எத்தனை நாள் தேற்றுவது?

முன்னந்தலை முடி உதிர்தலை
'மூன்று நாளாய்த்தான் இப்படி' என
எத்தனை நாள் ஏய்ப்பது?

தன் இருப்பை முன்னிறுத்தும்
வயிற்றுத் தொப்பை தனை
அழகுத் தொப்பை என
எத்தனை நாள் ஏமாற்றுவது?

அகவை முதிர்வால் வரும்
முகவாய்க் கதுப்பை
அக அழகின் புற அழகென
எத்தனை நாள் புளுகுவது?

'அண்ணா' என்றழைத்த
சிறு பிள்ளைகள்
'அங்கிள்' என்றழைப்பதை
எத்தனை நாள் மறப்பது?

இத்தனைக்கும் முத்தாய்ப்பாய்
'முதுமையின் தொடக்கம்' என்ற
உங்கள் கூற்றை
'இளமையின் உச்சம்' என்று
நான் மறுப்பதை
எப்போதுதான் நிறுத்துவது?

08 March 2010

நாலு அணாவும் நானும்

இணையம் வழி, அலைபேசி வழி என பரிணாம வளர்ச்சி கண்டிருக்கும் இன்றைய பணப் பரிமாற்றம் , பத்து ஆண்டுகளுக்கு முன்பு வரை ஒரு பாமரனின் கற்பனைக்கெட்டாத அளவிலேயே இருந்தது.சம்பாதித்த பணத்தைக் கையில் வாங்கித் தொட்டுத் தடவி , பாதுகாத்து செலவழித்த காலத்தில் இருந்த பணத்தின் மதிப்பும் , பணத்தின் மீதான மக்களின் மதிப்பும், இன்றைய கண நேரப் பரிமாற்றத்தில் குறைந்து வருவதாகவே தோன்றுகிறது.இன்று ,பத்தாயிரம் ரூபாயை, கையில் எடுத்துச் சென்று பொருட்கள் வாங்குவதிலும் , வங்கி அட்டையை எடுத்துச் சென்று வாங்குவதிலும் சிறிது வித்தியாசம் இருக்கத்தான் செய்கிறது .

சரி , விஷயத்திற்கு வருவோம்.ஒரு சிறு குவளை தேநீரின் குறைந்த பட்ச விலை ஐநூறு காசுகளாக உள்ள இன்றைய நிலையில் ,வெறும் இருபத்தைந்து காசுகளுக்கு ஏதாவது ஒன்று விற்கப்படுகிறதா? இல்லையென்பது உங்கள் பதிலாக இருப்பின் ,சமீப காலத்தில் நீங்கள் தபால் அலுவலகம் சென்று யாருக்கும் பணம் அனுப்பவில்லை என்று அர்த்தம்.


திருநெல்வேலியில் என் மனைவியின் தூரத்து உறவினர் பொறுப்பேற்று நடத்தும் கோவில் திருவிழாவிற்கு நன்கொடை அனுப்பும் பொருட்டு , நவீன வசதிகள் தவிர்த்து , பணவிடை(மணி ஆர்டர்) அனுப்ப வேண்டிய நிர்ப்பந்தம். அவசர வேலைகளுக்கு மத்தியில் தபால் அலுவலகம் செல்ல மதியம் இரண்டு மணியாயிற்று. இதற்கு மேல் பணம் அனுப்ப முடியாது என்ற அவ நம்பிக்கையுடன் உள்ளே நுழைந்தேன்.அவசர கதியில் இயங்கிக் கொண்டிருந்த அலுவலகப் பெண் 'என்ன வேண்டும்' என்று சைகையில் கேட்டார்.நான் சொன்னவுடன், ஏதோ பரம விரோதியைப் போல் ஒரு பார்வையை வீசிவிட்டு , 'சீக்கிரம் ஃபார்ம் வாங்கி ஃபில்லப் பண்ணிக் கொடுங்க , நேரமாச்சு ...ஒரு ஃபார்ம் 25 பைசா...சீக்கிரம் கொடுங்க.. ' என்றார்.நான் 'ஙே ' என்று விழித்தேன். 25 பைசாவிற்கு எங்கே போவது...வகுப்பிற்கு வேறு நேரமாகிவிட்டது...பரபரப்பாக பையைத் துழாவி, ஒரு ரூபாய் நாணயத்தை எடுத்துக் கொடுத்தேன்.

"சில்லறை இல்லையே , சார் " என்றவர் அவர் காரியத்தில் மும்முரமானார். சுற்றி முற்றிப் பார்த்தேன் . கர்ணனே என் எதிரில் வந்தாலும் இந்த நிலையில் அவரால் எனக்கு உதவ முடியாதென்பது புரிந்தவுடன், " சரி ..நாலு ஃபார்ம் கொடுங்க..." என்றேன். கடினமான சூழ்நிலையை என் சமயோசிதத்தால் வென்று விட்ட பூரிப்பு என் இதழில் புன்னகையானது. அந்தப் பெண்ணோ சிறிதும் சலனமின்றி நான்கு படிவங்களைக் கொடுத்தார். நான்கில் ஒன்றை பூர்த்தி செய்து கொடுத்து , இதர நியமனங்கள் முடிந்த பின் கிளம்பத் தயாரானேன். அப்படியே வந்திருக்க வேண்டும். கிளம்பும் முன் மீதமிருந்த மூன்று படிவங்களைப் பார்த்ததும் 'நம்மிடமிருந்தால் வீணாகிவிடுமே' என்ற எண்ணம் தோன்ற , உடனே அவற்றை எடுத்து நீட்டினேன்.'மறுபடியும் என்னய்யா' என்பது போல் பார்வையை வீசினார். "இது எனக்குத் தேவையிருக்காது... உங்ககிட்ட இருந்தா உபயோகப்படும்... " நான் மிகப் பொறுப்பானவன் என்ற த்வனி என் குரலில் இருந்தது. அதை அந்தப் பெண் ரசிக்கவில்லை.

"இல்ல ...இத நாங்க வாங்க கூடாது...வாங்கினா கணக்கு டேலி (?!) ஆகாது.'
இந்தப் பதிலை எதிர்பாராத நான் மீண்டும் 'ஙே'....

பின் என்ன நினைத்தாரோ, 'அப்ப ஒரு நிமிஷம் இருங்க ...அந்தக் ஃபார்மைக் கொடுங்க ' என்று வாங்கிக் கொண்டவர் கிட்டத்தட்ட மூன்று முழு நிமிடங்கள் தேடி ,மீதி சில்லறையான எழுபத்தைந்து பைசாவைக் கொடுத்தார்.

அதைப் பெற்றுக் கொண்ட நான் ஓட்டமும் நடையுமாக வகுப்பிற்கு வந்து சேர்ந்தேன்.வரும் போது எனக்குள் பல கேள்விகள். படிவத்தை இவ்வளவு குறைவான மதிப்பிற்கு தருவதை விட அதை இலவசமாகவே கொடுத்துவிடலாம் அல்லது புழக்கத்தில் இல்லாத 25 பைசாவிற்குப் பதிலாக ஒரு படிவத்தின் விலையை ஒரு ரூபாய் ஆக்கினால் மக்களுக்கும் சுலபம், நஷ்டத்தில் மக்கள் சேவையாற்றும் அஞ்சல் துறைக்கும் வருமானம் . ஒரு வேளை எனக்குத்தான் 25 பைசாவின் உண்மையான மதிப்பு தெரியவில்லையா? அல்லது அந்தப் படிவங்களை அவர் திரும்பப் பெற மறுக்கும் அளவிற்கு அவ்வளவு துல்லியமாக கணக்கு வழக்குகள் பராமரிக்கப்படுகின்றனவா?அல்லது அந்தப் பெண் அலுவலர் மட்டும் கடமையை அவ்வளவு கடமையாய் ஆற்றுகிறாரா? எது எப்படியோ ,அன்று எனக்குத் தேவையில்லாத டென்ஷனும் (மன அழுத்தம்?) , சில பல நிமிடங்களின் வீணடிப்பும் செய்த அந்த 25 பைசா இன்னும் என் பணப்பையிலேயே உள்ளது. அந்த மதிப்பிற்கான பொருள் எங்காவது கிடைத்தால் அதை வாங்கியே ஆவது என்ற தீர்மானத்தில் இருக்கிறேன்.உங்களுக்குத் தெரிந்தால் 50 பைசா செலவு செய்து எனக்கு அஞ்சலட்டை அனுப்புங்கள்.

 

24 December 2009

மனைவி அமைவதெல்லாம்......


கடந்த வெள்ளியன்று இரவு ஒரு துயரச் செய்தி.என் மனைவியின் தூரத்து உறவினரான திருமதி.சிவபாக்கியம் இறந்துவிட்டார். செய்தியை நம்பவும் முடியாமல், புறந்தள்ளவும் முடியாமல் நானும் என் மனைவியும் சிறிது நேரம் விக்கித்து நின்று ,பின் சுதாரித்து அவரின் வீடு விரைந்தோம்.

திருமதி.சிவபாக்கியத்திற்கும் எங்களுக்குமிடையேயான உறவு இன்னதென்று வரையறுக்க முடியாதது. மிஞ்சிப் போனால் அவர் வயது நாற்பத்தைந்திற்கு மேலிராது.அன்பான, அமைதியான கணவர், கல்லூரிப் படிப்பை முடித்துள்ள இரண்டு ஆண் பிள்ளைகள் என அளவான, மகிழ்ச்சியான குடும்பம். சைவப் பிள்ளைமார் வகுப்பைச் சேர்ந்தவர். அவரின் தோற்றம் , நடை, உடை, பேச்சு அத்தனையும் ஆகச் சிறந்த குடும்பத் தலைவிக்கானது. மூன்று அல்லது நான்கு பரஸ்பர சந்திப்பிற்குள்ளாக எங்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர். கலகலவென்ற பேச்சும் , கணீரென்ற சிரிப்புமாய் வரும் சிவபாக்கியம் பழகிய சிறிது நேரத்திலேயே எதிராளியைத் தன் வசப்படுத்தி விடுவார். எப்போதும் நேர்மறை சிந்தனை , பாசாங்கில்லாத பேச்சு, பேச்சை ஒட்டிய செயல், ஆழ்ந்த தெய்வ நம்பிக்கை, பிறருக்கு உதவும் பாங்கு என நல்ல மனிதருக்குண்டான அத்தனை குணங்களுக்கும் ஒட்டு மொத்த குத்தகைதாரர்.இவை அனைத்திற்கும் மேலாக, எத்தனை துன்பத்திற்கிடையிலும் மாறாத புன்னகையோடு ,'உங்களுக்கு நான் என்ன செய்யட்டும்' என்ற பாவனையோடு வலம் வருவார்.

சிவபாக்கியம் இறந்து போனதை விட , அவரை இழந்து நிற்கும் அவர் கணவரின் நிலைதான் என் துயரை அதிகப்படுத்தியது.எந்த வம்பு தும்புக்கும் போகாமல், தானுண்டு தன் வேலையுண்டு என்றிருப்பவர்.என் பார்வையில், அவர் தனது மனைவியை முழுமையாகச் சார்ந்திருந்தார் என்றே பட்டது.தன் மனைவியின் மனதையும் , புத்தியையும் புரிந்து கொண்டு , வேண்டிய இடத்தில் இடித்துரைத்து , வேண்டாத இடத்தில் மௌனம் காத்து இல்லறத் தேரின் சாரதிப் பொறுப்பை மனைவியிடம் ஒப்படைத்திருந்தார்.இன்று அத்தேரின் அச்சு முறிந்து விட்டது.

அங்கு சென்றவுடன் நான் முதலில் தேடியது சிவபாக்கியத்தின் கணவரைத்தான். மனிதர் நிலை குலைந்து உட்கார்ந்திருந்தார். தேம்பித் தேம்பி அழுது, இனி அழுது ஆகப் போவது ஒன்றுமில்லை எனத் தெளிவிற்கு வந்தவராய் இருந்தார்.ஆறு மாதத்திற்கு முன் மஞ்சள் காமாலை நோய் , பித்தப் பையில் கற்கள் என வியாதிகளால் பீடிக்கப்பட்டுப் பின் மேற்கொண்ட தொடர் சிகிச்சைகளின் பலனின்று இறந்து போனதாய்த் தெரிவித்தார்.வாழ்வின் அநித்யம் எனக்கு அந்த வினாடியில் உறைத்தது.

எனக்கும் இரண்டு ஆண் பிள்ளைகள்.என் மனைவியும் சிவபாக்கியம் போலவே ஆளுமை மிக்கவள்.அவளின் ஆளுமை எங்கள் அனைவரின் நலம் சார்ந்தது.என் அம்மாவிற்குப் பிறகு, என் மனைவியின் மூத்த பிள்ளையாகத்தான் நான் அவளால் பராமரிக்கப்பட்டு வருகிறேன்.
எதையும் , யாரையும் , எந்நேரமும் புரட்டிப் போட்டு விடும் சக்தி வாழ்க்கைக்கிருக்கிறது. நான் மட்டும் விதி விலக்கா என்ன? பின்னாளில் எனக்கும் இந்நிலை நேருமோ ? நேர்ந்தால், நானும் இவரைப் போல் நிலை குலைவேனோ? க்ஷண நேரத்தில் எல்லாம் புரிந்து போலிருந்தது.ஒரு வேளை எனக்கோ அல்லது என் மனைவிக்கோ இந்நிலை நேருமானால் , அந்நேரம் நினைத்துப் பார்க்க, மறைந்து போனவருடனான இனிய தருணங்கள் மட்டும் தான் உயிரோடு இருப்பவருக்குப் பிரதானமாக இருக்க வேண்டும். அத்தகைய சந்தோஷமயமான நிமிடங்களே இருவரின் வாழ்க்கையையும் அதுவரை நிரப்பியிருக்க வேண்டும்.அந்த சுகமான நினைவுகளே அடுத்த கட்ட வாழ்க்கைக்கு அடித்தளமாகவும் அமையும்.மாறாக, கசப்பான தருணங்களே நினைவடுக்கில் ததும்பி நின்றால் அதுவரை வாழ்ந்த வாழ்க்கையே அர்த்தமற்றுப் போய்விடும்.அதன் பின்னான காலமும் அத்தனை சுலபமாக இராது.

இப்போது நடத்திக் கொண்டிருக்கிற வாழ்க்கை எவ்விதம் இருக்கிறது என்ற கேள்வி சுரீரென மனதில் அறைந்தது.இந்தக் கேள்வி திருமணமான அத்தனை பேருக்கும் பொதுவானது என்றே நினைக்கிறேன். ஆழ்ந்து யோசித்தால் , பொருளாதாரம் சார்ந்த மனக்கஷ்டங்கள் , சுற்றத்தாரின் செய்கைகளால் இருவருக்கிடையிலான கருத்து மோதல்கள், குழந்தைகளைப் பேணுவதில் வாத பேதங்கள் என, சூழ்நிலைகளின் அழுத்தத்தால் உருவாகும் உரசல்கள் தவிர்க்க முடியாதது மட்டுமன்றி , தினசரி வாழ்க்கை சுவாரஸ்யப்பட அவை தேவையானவையும் கூட. ஆனால் அவை காரணமாக ஏற்படும் சிறு ஊடல்கள் கூட , அடுத்தவரைக் காயப்படுத்தியே ஆக வேண்டும் என்ற முனைப்பினால் வெளிப்படும் வார்த்தைப் பிரயோகங்களால், யுத்தம் போன்றதான அடுத்த தளத்திற்கு எடுத்துச் செல்லப்படுவதுதான் வேதனை.இது எங்களுக்குள்ளும் நடந்திருக்கிறது, உங்களுக்குள்ளும் நடந்து கொண்டிருக்கிறது. இதைத் தவிர்க்க வழி சொல்லும் நூல்களும் சரி , சொல்பவர்களின் ஆலோசனைகளும் சரி , அவற்றைப் படிக்கும் போதும், கேட்கும் போதும் வருகின்ற உற்சாகமும் தெளிவும் சொற்ப நேரத்திலேயே நீர்த்துப் போகின்றன.அல்லது ,யதார்த்த வாழ்வின் ஆழிச் சூழலில் அவை அமிழ்ந்து விடுகின்றன. நம் மனதும் நாக்கும், எதிர்ப்படும் யுத்தத்திற்காக எப்போதும் தயாராகக் காத்திருக்கின்றன.ஆனால் இது போன்ற எதிர்பாரா மரணங்களும் , மறைந்தவரோடு தொடர்புடையவர்களின் நிலையும் இந்த யுத்தம் பற்றிய நினைப்பை , அதை அறவே அகற்ற வேண்டியதின் அவசியத்தை நமக்கு சற்று அழுத்தமாகவே போதிக்கின்றன.

சிவபாக்கியத்தின் கணவர் நிலையில் என்னைப் பொருத்திப் பார்த்த அந்த நொடியில் , நான் என் மனைவியை சொற்களால் காயப்படுத்திய அத்தனை சம்பவங்களும் எனக்குள் சுழன்றடித்தன. அவை கொடுத்த குற்ற உணர்வும், சிவபாக்கியம் என்ற நல்ல பெண்மணியின் இழப்பும் சேர்ந்து என் கண்களை ஈரமாக்கின.அவருக்கு ஆறுதல் சொல்லும் நோக்கில் அவரின் கையைப் பிடித்தபடியே சிறிது நேரம் அமர்ந்திருந்தேன்.
அந்தப் பக்கம் வந்த என் மனைவியிடம் , " என்னப்பா...போலாமா ?" ,என்று கேட்டேன்.
"அதற்குள்ளாகவா?" , என்று ஆச்சர்யம் காட்டினாள்.

"ஆமா...இதுவே ரொம்ப லேட்..." - தெளிந்த மனதுடன் சொன்னேன்.
போகும் போது மறுபடியும் சிவபாக்கியத்தின் முகத்தைப் பார்த்தேன் .ஆழ்ந்த அமைதியுடனிருந்த அந்த முகம் எனக்கு ஏதோ சேதி சொல்வதாகவே பட்டது.
 

13 December 2009

நிசப்தம்


வீட்டுக்குள்
நுழையும் போதே
வெறுப்பேற்றும்
குழந்தையின் அழுகைக் குரல்
அவசர மின்னஞ்சலோ
ஆசைப்பட்ட பாடலோ
அலுவலக அலைபேசியோ
எதுவும் செய்ய
அனுமதிப்பதில்லை
பிள்ளை என்ற தொல்லை
என்றாலும்...
இந்த மழையின்
நீட்சியில்
மாலையிலேயே
உறங்கிப்போய்
அவன்
எழுப்பும்
நிசப்தம்
அதிர வைக்கிறது
மனதை!

-நரசிம்

29 November 2009

இன்னும் ....

கால் ஒடிந்த காக்கைக்கு
எப்படி நேர்ந்தது
இந்த விபத்து?
அடை மழை பெய்யும் போது
அணில்கள்
எங்கே உறையும்?
நடுநிசியிலும் குரைக்கும்
நாய்கள் எப்போதுதான்
உறங்கும்?
எல்லார் வீட்டிலும்
விரட்டப்படும் பூனைக்கு
யார்தான் சோறு இடுகிறார்கள்?
ஏழெட்டு எறும்புகள்
ஏலேசா பாடி
தூக்கிச் செல்லும் பருக்கை
கூட்டை சென்றடைகிறதா?
சின்ன வயதில்
தோன்றிய கேள்விகள்...
இன்னும்
விடை கிடைக்க வில்லை.
என்ன, இப்போது
இந்த மாதிரி
அசட்டுக் கேள்விகள்
தோன்றுவதில்லை!

-கே.பி.ஜனா

19 November 2009

நிலா கேட்கும் குழந்தை


இரண்டு குழந்தைகள்
விளையாடிக் கொண்டிருந்தார்கள்
ஒரு குழந்தையின் கையில்
நட்சத்திரங்கள்
இன்னொரு குழந்தையின் கையில்
வெண்ணிலாக்கள்
நட்சத்திரங்கள் வைத்திருந்த குழந்தை
நிலவை கேட்டது.
' ஒரு நிலவுக்கு
ஐந்து நட்சத்திரங்களைக் கொடு'
என்று கேட்டு
பரிமாற்றம் செய்து கொண்டார்கள்.
பார்த்துக் கொண்டிருந்த எனக்கும்
ஆசை வந்து கேட்டேன்
'சூரியனைக் கொடுத்தால்
நிலாவையும் நட்சத்திரத்தையும்
தருகிறோம் ' என்றார்கள்
என் கைகளைப் பாத்தேன்
அதில் சூரியன் இல்லை.
சிறு வயதில்
வைத்திருந்ததாக ஞாபகம்
பெரியவன் ஆனதும்
தொலைத்து விட்டேன்!

-தி. ஐயப்பன்

மிச்ச கருணை



                             
                           எறும்பை நசுக்கி விட்டாய்
                            வாயில் இருந்த சிறு தீனி
                            தன் குழந்தைகளுக்கு
                            எடுத்துப் போனதோ
                            என்னவோ?

 
                           -முத்து வேல்

22 October 2009

அமெரிக்கன் கல்லூரி



வாழ்வில் சில நிகழ்வுகள் குறுகிய காலத்தில் கடந்து போனாலும் அந்நினைவுகள் , சிறுமழை விட்டுச் சென்ற மண் வாசனையாய், நம்முடனேயே தங்கி விடுகின்றன. மதுரை அமெரிக்கன் கல்லூரியுடனான எனது உறவும் அப்படித்தான். பள்ளி முடித்து பொறியியல் கல்லூரி சேர்க்கைக்கு விண்ணப்பித்து விட்டு காத்திருக்கையில் (அப்போதெல்லாம் கவுன்சிலிங் கிடையாது ) , சும்மா இருக்க வேண்டாமே என அமெரிக்கன் கல்லூரியில் B.Sc.,( special Maths) பிரிவில் சேர்ந்தேன். பச்சை நிற மரங்களுக்கிடையில் சிவப்பு நிற கட்டிடங்களாய் ஆங்கிலேயர்களின் ரசனையைய் பறை சாற்றி கொண்டு ஏக்கர் கணக்கில் பரவியிருக்கும் கம்பீரமான கல்லூரி அது.
பள்ளியிலிருந்து கொண்டு சென்ற ஒரு தலைக் காதலும் ( யாராவது infatuation என்று சொன்னால் அப்போது கடுங்கோபம் வரும்) , ஓராயிரம் கனவுகளுமாய் கிட்டத்தட்ட இரண்டு மாத காலம் அந்த வளாகத்தில் வாழும் வாய்ப்பு கிடைத்தது. வாழ்வின் பொன்னான காலகட்டம். யாரும் எதுவும் கேட்க மாட்டர்கள். நினைத்தால் வகுப்பிற்குப் போகலாம், இல்லையென்றால் நினைத்த இடம் போகலாம். அத்தனை சுதந்திரம்! பள்ளி முடித்த சிறுவர்களை முழு இளைஞர்களாக்கி அனுப்பும் அற்புத வளாகமது. அனுபவம் வாய்ந்த பேராசியர்களின் நட்பான அணுகுமுறை , பருவ மாற்றத்தில் இருக்கும் மாணவர்களுக்கு அலாதியான அனுபவத்தைக் கொடுக்கும். திறமையாளர்களுக்கு முழு அங்கீகாரமளித்து , அவர்களை உலகுக்கு அறிமுகப்படுத்தும் உன்னத கூடம் அக்கல்லூரி. கலைத்துறை ஜாம்பவான்கள் பல பேர் அக்கல்லூரி அளித்த கொடை.
அமெரிக்கன் கல்லூரி மாணவரென்றால் 'Matured and Decent guy' என்ற மதிப்பீடு இருந்தது. கல்லூரிகளுக்கிடையேயான அனைத்து போட்டிகளையும் வென்று வாகை சூடுவார்கள்.
அங்குள்ள மரங்கள் ஒவ்வொன்றும் யாரேனும் ஒருவருக்கு போதி மரமாய் இருந்திருக்கின்றன. பேருந்து நிறுத்தத்திலிருந்து கல்லூரி வரையிலான நடைபாதை நிமிடங்கள் , மழை நேர மாலைப் பொழுதுகளில் ஆங்காங்கே பூத்திருக்கும் சிமென்ட் பெஞ்ச் அரட்டை, விளையாட்டு மைதான மரங்களின் நிழலில் நண்பர்களுடன் மதிய உணவு, சின்னஞ்சிறிய உணவகத்தின் சமோசா ருசி , மையமாக வீற்றிருக்கும் தேவாலயப் பிரார்த்தனைகள் என அனைத்தும் என் நினைவில் பசுமை.
ஆனால் பொறியியல் கல்லூரிகள் பல்கிப் பெருகி விட்ட தற்போதைய சூழ்நிலையில் , தரத்தில் பின் தங்கிய மாணவர்களே கல்லூரியில் சேர்வதாலும் , சமீப காலமாக ஏற்பட்ட நிர்வாகக் குளறுபடிகள் காரணமாகவும் கல்லூரியின் மதிப்பு சற்றே மங்கி வருவது வருத்தமளிக்கிறது.
இப்போதும் அந்தக் காலகட்டத்தில் வெளிவந்த ' மே மாதம் ' திரைப்படப் பாடலை கேட்கும் போதெல்லாம் அமெரிக்கன் கல்லூரி தொடர்பான அனைத்து சம்பவங்களும் நினைவில் வந்து போகும். இன்றளவும் கல்லூரியை கடந்து செல்லும் ஒவ்வொரு முறையும் என்னுள் இனம் புரியாத சிலிர்ப்பு வருவதுண்டு. முன்னாள் மாணவன் என்ற உணர்வா அல்லது அங்கு சுமந்து திரிந்த காதலின் நினைவா என அந்த சிலிர்ப்புக்கான காரணம் பகுத்தறிய முடியாதது.

11 October 2009

இழந்த தலைமுறை

இழந்த தலைமுறை
-------------------------
மூன்று வயது முடிந்த
என் யூ.கே.ஜி பேரனுக்கு
ஸ்கூல் ப்ராஜெக்ட்
கூட்டுக்குடும்பம் பற்றி.
என் மகன் சொன்ன
இணையதளம்
jointfamily.com
மருமகள் சொன்னது
unitedfamily.org
அவன் டீச்சர்
சொன்ன தளம்
wikipedia.
மூவரும் ஆளாளுக்கு
ஒரு கம்ப்யூட்டரில் தேட
அதே தள மூலையில்
ஐந்து சகோதரிகள்
ஐந்து சகோதரர்களுடன்
பிறந்து வளர்ந்து வாழ்ந்த
என்னிடம்
ஒரு வார்த்தை கூடக்
கேட்கவில்லை!

-நாராயண ஹரிகிருஷ்ணன்

நன்றி: ஆனந்த விகடன்

சுழல் விதி



முதல் நாள் சந்தித்த
நீ இல்லை நீ.
நீ முதல் நாள் சந்தித்த
நானுமில்லை நான்.
யாருமிங்கு இல்லை
முதல் நாள் சந்தித்த யாருமாய்.
வசந்தங்கள் வந்து போகும்
பருவம் உதிரும் பொழுதுகளில்
காத்திருப்போம் நாம்
இனி வரும்
முதல் நாளுக்காகவும்
எதிர்ப்படும்
முதல் நபருக்காகவும்!

-சில்வியா

29 September 2009

லௌகீகம் - ஆன்மீகம்



இதோ அதோ என்று கடைசியில் பெயர்ந்தே விட்டார் சனி பகவான். கன்னி ராசிக்கு ஏற்கனவே தொடங்கி விட்ட ஏழரைச் சனியில் இது ஜென்மச் சனியாம்.
" உங்களுக்கும் சந்தோஷுக்கும் (ஒரு வயது) நேரம் சரியில்ல...பரிகாரம் பண்ணனும் ...சீக்கிரம் கோவிலுக்கு போயிட்டு வந்திடுங்க ..." என்ற மனைவியின் குரல் காலையிலிருந்து ஒலித்துக் கொண்டிருக்கிறது.
என் மனம் வெறுமையாய் இருக்கிறது . என் பள்ளிக்கூட நாட்களின் இறை நம்பிக்கை , கடவுள்தன்மை பற்றி எந்தவொரு மனக் கிலேசமுமின்றி அதன் தொடர்பான எனது செயல்கள் என அனைத்தும் மனக் கண்முன் வந்து செல்கின்றன . பள்ளி செல்லும் முன் , வீட்டின் எதிரில் இருந்த 'தங்க மாரியம்மன் ' கோவிலுக்கு சென்று மானசீகமாக அம்பாளுக்கு வணக்கம் சொல்லி , போகும் வழியிலுள்ள தெருவோர சிவன் கோவிலின் திருநீறு பூசி , திருவிழாக் காலங்களில் ' அம்மன் கூழ்' பருகியதால் 'சக்தி' வந்ததெனப் பூரித்து , தெருவில் பவனி வரும் அம்மன் சிலையிலிருந்து விழுந்த பூவை எனக்கான பிரத்யேக ஆசிர்வாதமாய் நினைத்து பத்திரப்படுத்தி .... இன்னும் எத்தனையோ பால்ய நினைவுகள் ....
அறியாமைதான் எத்தனை சுகம் ! உண்மையிலேயே கடவுளுக்கு மிக அருகாமையில் இருந்த நாட்கள் அவை.
அதைத் தொடர்ந்த ,பருவம் எய்திய நாட்களில் ஏற்பட்ட மனச் சிதறல் சிறிது காலம் கடவுள் வழிபாட்டை மறக்க வைத்தது. அதன் பின்னான நாட்களில் , புத்தக வாசிப்பும் , அதற்கு இணையான வெளியுலக அனுபவமும் என் கடவுள் நம்பிக்கையை கேலிக்கும் , கேள்விக்கும் உள்ளாக்கின. கேள்விகள் , கேள்விகள் ,கேள்விகள் மட்டுமே....விடை தேடிய பயணம் ஒரு கட்டத்தில் , உருவமான பொம்மை அல்ல , அருவமான கடவுள்தன்மையே பிரபஞ்சத்தில் சாத்தியம் என்னும் நிலைப்பாட்டை எனக்குள் விதைத்தது. மீண்டும் அந்த நேர்கோட்டில் நீண்ட நாள் பயணம். புத்தகங்களைத் தேடித் தேடி வாசித்து , அவை சொன்ன விஷயங்களின் சாரத்தை என்னுள் தக்க வைத்துக் கொண்டேன். கோவிலுக்கு செல்லும் பழக்கம் அறவே நின்று போயிற்று. கோவிலுக்கு செல்பவர்களை புன்சிரிப்போடு நோக்கும் ஒரு வித மேதாவித்தனம் வந்து ஒட்டிக் கொண்டது. எல்லாம் தெரிந்ததாக ஒரு அலட்டல் வந்து குடியமர்ந்தது. இவை அனைத்தையும் தள்ளி நின்று அவதானித்த படி இருந்தாலும் உள்ளுக்குள் ஒரு கர்வம் மழை மேகம் போல் என் சிந்தனையை மூடியிருந்தது.
ஆனால் தற்போது ஒரு பெண்ணுக்குக் கணவனாக, இரு குழந்தைகளின் தகப்பனாக ஆசிர்வதிக்கப்பட்டிருக்கும் நிலையில் கடவுள் பற்றிய எனது நிலைப்பாடு மறு ஆய்வுக்கு உள்ளானதாகிறது.
ஒரு நிமிஷம் பொறுங்கள்....எதிரே எங்கள் தெரு பால்காரர் வந்து கொண்டிருக்கிறார்.
"என்ன சார்...குழந்தையோட....அதுவும் இத்தனை அவசரமா...."
" இன்னிக்கு சனிப் பெயர்ச்சி...அதான் குடும்பத்தில எல்லாருக்கும் ஒரு அர்ச்சனை பண்ணிட்டு வந்திடலாம்னு..... நேரமாச்சு, பூஜையை ஆரம்பிச்சுட போறாங்க ...நான் உங்களை அப்புறமா பார்க்கிறேன்..."
எதிர்ப்பட்ட பால்காரரின் விசாரிப்புக்கு பதில் சொல்லி விட்டு உங்களிடம் கூட பேச நேரமின்றி கோவிலுக்கு விரைந்து கொண்டிருக்கிறேன்.

09 September 2009

வாழ்க்கையை 'நடத்துபவர்கள்'


கடந்த பத்து நாட்களாக மதுரையில் நடைபெற்ற புத்தகத் திருவிழா நல்லி குப்புசாமி செட்டியார் எழுதிய 'தமிழ் பதிப்புலகம்- ஓர் அறிமுகம்' புத்தக வெளியீட்டுடன் நேற்று இனிதே நிறைவுற்றது. தொலைக்காட்சி, இணையம், கைபேசி என எத்தனை ஊடகங்கள் இருப்பினும் புத்தக வாசிப்பு தரும் அலாதி சுகத்தை மக்கள் இன்னும் சிலாகிக்கிறார்கள் என்பதையே 'ஆறு கோடி ரூபாய் மதிப்புள்ள புத்தகங்கள் விற்பனை' என்ற தகவல் நிரூபிக்கிறது. வாழ்க விழா அமைப்பாளர்கள் , தொடர்க அவர் தம் திருப்பணி !
புவனின் தொடர் வற்புறுத்தலின் பேரில் , தொடங்கிய முதல் நாள் அன்றே நானும் அவனும் கண்காட்சிக்கு சென்றோம். L.K.G படிக்கும் பிள்ளைக்கு புத்தகத்தின் மீது இத்தனை காதலா என்று வியக்காதீர்கள். "அடுத்த வாரம் ' book exhibition ' இருக்கு, நாம ரெண்டு பேரும் போவோமா" என்று நான் சொல்லி வைக்க , மான் ராட்டினம், முயல் ராட்டினம், நிறைய பலூன்கள் , இன்ன பிறவெல்லாம் வண்ணங்களாய் அவனுள் விரிந்ததன் விளைவு தான் அது. கண்காட்சித் திடலுள் நுழைந்ததும் பிள்ளை அதைத்தான் முதலில் தேடினான். தேடி சலிப்புற்றவனைத் தேற்றும் விதமாக , அவனுக்கு ஒவ்வாது எனத் தெரிந்தும் அவன் விரும்பிய குளிர் பானத்தை வாங்கிக் கொடுத்தேன்.
பின் ஒவ்வொரு புத்தக அரங்காக ஏறி இறங்கினோம். இரவு தூங்குவதற்கு முன்பான கதை நேரத்தை முன்னிட்டு , மரியாதை ராமன் கதைகள் , தெனாலி ராமன் கதைகள் என சில புத்தகங்கள் , வண்ணம் தீட்டல், புள்ளிகளை இணைத்தல் போன்ற செயல்பாட்டு புத்தகங்கள், என் மனைவியின் விருப்பமான ரமணி சந்திரன் புத்தகங்கள் , அதன் பின் என் விருப்பப் பட்டியலில் இருந்த சில புத்தகங்களையும் வாங்கினேன் . உயிர்மை அரங்கில் கவிஞர் மனுஷ்ய புத்திரனுடன் சிறிது நேரம் அளவளாவினேன் . இறுதியாக திறந்த வெளி அரங்கில் நாட்டுப்புறப் பாடல் கேட்டு விட்டு, ஒரு கையில் புவனும் மறு கையில் புத்தகப் பைகளுமாக சுகமான சுமைகளுடன் வீடு திரும்பினேன்.
மறு நாள் நண்பர் ஒருவரிடம் பேசிக் கொண்டிருந்த பொழுது புத்தகத் திருவிழா பக்கம் பேச்சு திரும்பியது. எவ்வளவுக்கு புத்தகம் வாங்கினீர்கள் என்றவரிடம் , நான் தொகையைச் சொல்லவும் , அவ்வளவுக்கா என ஆச்சர்யம் காட்டினார்.
"சரி... என்னென்ன புத்தகங்கள் வாங்கினீங்க " என்ற அவரின் த்வனியில் நம்பிக்கையின்மை வெளிப்பட்டது.
"சு.ரா வின் 'ஒரு புளிய மரத்தின் கதை' , ' ஜே.ஜே. சில குறிப்புகள்' , ராமகிருஷ்ணனின் 'உப பாண்டவம்' , 'நெடுங்குருதி' , ஜெயமோகனின் 'சு.ரா- நினைவின் நதியில் ' , 'விக்ரமாதித்யன் கவிதைகள்' ...."என்று நான் சொல்லிக் கொண்டு போக , அது வரை அசிரத்தையாக கேட்டுக் கொண்டு வந்தவர் திடீரென பிரகாசமாகி , " அதை நான் படித்திருக்கிறேன் ...ரொம்ப சுவாரஸ்யமாக இருக்கும்..." என்றார்.
எனக்கு ஒரு பக்கம் ஆச்சர்யம் , மறுபக்கம் 'என் ரசனைத் தளத்துடன் ஒத்துப் போகிற ஒருவரை இத்தனை நாள் இழந்து விட்டோமே' என்ற ஆதங்கம். நான் உற்சாகமாகி , வாங்கிய புத்தகப் பட்டியலைத் தொடர்ந்தேன். சிறிது நேரம் சென்று கையைத் தூக்கிக் காண்பித்து ,
" போதும் ...நீங்கள் சொன்ன விலை சரிதான் . இத்தனை புத்தகங்களும் சேர்ந்து அத்தனை விலை இருக்கத்தான் செய்யும் . இருந்தாலும் நீங்கள் அவ்வளவு ரூபாய்க்கு புத்தகங்கள் வாங்கியிருக்கக் கூடாது. நாட்டுல நிறைய பேர் சாப்பாடில்லாம இருக்க , நாம இப்படி கண்டபடி செலவழிக்கக் கூடாது", என்று ஆரம்பித்து நிறைய அறிவுரைகளை அள்ளித் தெளித்தார். ஒரு கணம் , இவர் மீது சற்று முன் தோன்றிய என் அனுமானம் தவறோ என்று தோன்றியது. அன்றிலிருந்து அந்த வகையறாக்களிடம் சற்று கவனமாக இருக்க வேண்டும் என்று நான் முடிவு செய்ததற்கு மேற்கூறிய அறிவுரைகள் மட்டும் காரணமல்ல...அதைத் தொடர்ந்து அவர் சொல்லி சிலாகித்த கீழ்க் கண்ட விஷயமும்தான்.
" என்ன ....நான் சொன்னது கரெக்டா சார் ? நீங்க இவ்வளவு செலவு பண்ணினது எனக்குத் தப்போன்னு தோணிச்சு . அதான் சொல்லிட்டேன்...ஆனா நீங்க விக்ரமாதித்யன் புத்தகம் பத்தி சொன்னீங்க இல்ல . அதை வாங்குனதுக்கு நான் உங்களை பாராட்டறேன் . விடாமுயற்சிக்கு நல்ல உதாரணம் சார் அந்த புக்கு. எவ்வளவு தடவை முருங்கை மரத்துல ஏறினாலும் , விடாம அந்த வேதாளத்தை பிடிப்பான் பாருங்க விக்ரமாதித்தன்......"
-----------------------------------------------------------------------------------------
அடுத்த நாள் மற்றொரு நண்பருக்கும் எனக்கும் நடந்த உரையாடல் :
நண்பர் : என்ன சார்...உங்களுக்குத்தான் புத்தகம் படிக்கிறது பிடிக்குமே...புத்தகத் திருவிழாவுக்குப் போனீங்களா?
நான் : அப்படியா...எங்க சார் அதுக்கெல்லாம் நேரம் இருக்கு...

23 August 2009

நானும் இரு தேவதைகளும்....




அவர்கள் ....
என் மீது கொண்ட பற்றால்
தங்கள்
சுயம் மறந்தவர்கள்.


என்னைப் பங்கிடும்
பாங்கு தெரியாது
தங்களுக்குள்
பின்னப்படுபவர்கள்.


என் ரணம் ஆற்றுவதிலும்
என்னுள் ரணம் ஏற்றுவதிலும்
வல்லவர்கள்.


நான் எரியும் விளக்கு...
ஒருத்தி என் அகல்.
மற்றவள் என் தழல்.


நான் ஒளிரும் நிலா..
ஒருத்தி என் வானம்.
மற்றவள் என் சூரியன் .


ஒருத்தி
என் உயிர் சுமந்தவள் .
மற்றவள்
என் 'உயிர்' சுமந்தவள்.

ஒருத்தி
என்னைப் பெற்றவள்.
மற்றவள்
என்னைப் 'பெற்றவள்'

-------------------------------------------
note : you can not be a good man to your good mother and your good wife.

07 August 2009

தீராக் கேள்வி- தெளிவான பதில் 3

ஒரு மனிதனின் மிக மோசமான குணம் எது?
கோள் சொல்லுதல். பிறரைப் பற்றி புறம் சொல்லுதல். நேரே இனிமையாகப் பேசிக் கொண்டு , மிக அன்பானவர் போல , நட்பானவர் போல நடித்துக் கொண்டு பின்னால் , வேறு விதமாகப் பேசுகிற குணம் தான் உலகத்திலேயே மிக மிக மோசமானது. பிறரைப் புறம் சொல்லுகிற புத்தி ஒரு சாபம். இந்த சாபம் இன்னும் பல சாபங்களை உருவாக்கும். நீங்கள் எதிரே இனிமையாகப் பேசி பின்னால் புறம் சொல்லுகிறீர்கள் என்பது சம்மந்தப்பட்ட நபருக்கு தெரிந்து விட்டால் அவர் வயிறு எரிந்து உங்களை நோகிற போது அது நிச்சயம் பலிக்கும். வாழ்க்கையில் ஒரு போதும் புறம் பேசாதீர்கள். பேச வேண்டியவற்றை முகத்திற்கு நேரே பேசி முறித்துக் கொள்ளுங்கள். இது பல நூறு முறை நல்லது.
ஆன்மீகவாதி ஆத்திகனாக இருக்க வேண்டுமா? ஆன்மீகமும் ஆத்திகமும் ஒன்றா?
எல்லோரும் இன்புற்று வாழ்வதே ஆன்மிகம். ஆத்தீகம் என்பது மதம் சார்ந்தது. கடவுள் வழிபாடு சார்ந்தது. ஆன்மீகவாதி ஆத்திகனாக இருக்க வேண்டிய அவசியமில்லை. எல்லோரும் இன்புற்றிருக்க விரும்புவது நாத்திகனாலும் முடியும். அப்படியிருப்பவர்களை நான் அறிவேன்.
வாழ்க்கையில் இறுதி வரை எந்த சுகமும் அனுபவிக்காமல் சாதாரண பணியில் இருந்து கொண்டு கஷ்டத்தை மட்டுமே அனுபவித்து வரும் பலர் இருக்கிறார்கள். அவர்களுக்கெல்லாம் கடவுள் நம்பிக்கையும், பக்தியும் எப்படி வரும்?
கடவுள் நம்பிக்கை இருந்தால் முயற்சி வரும். முயற்சி இருந்தால் செயல் திறன் வரும் . செயல் திறன் வளர்ந்தால் நல்லதாய் வேறு விதமாக சம்பாதிக்கிற எண்ணமும் , பலமும் வரும்.வெறுமே, திரும்பத் திரும்ப நொந்து கொள்கிறவர்கள் கடைசி வரை நொந்து கொண்டே இருக்க வேண்டியது தான்.கடவுள் நம்பிக்கை என்பது தனக்குத் தானே பேசுதல், ஆராய்ந்து அறிதல்.
தியானம் என்பது ஒரு புள்ளியில் அமருவது , அல்ல என்றெல்லாம் கட்டுரை எழுதுகிறார்களே , நீங்கள் என்ன சொல்லுகிறீர்கள்?
இதைப் பற்றியெல்லாம் படிப்பதை விட நேரடியாய் நல்ல அனுபவஸ்தர்களிடம் அனுபவித்து , முகம் மலர்ந்தவர்களைடம், வாழ்வு மலர்ந்தவர்களிடம் கேட்டுத் தெரிந்து கொள்ள வேண்டும். தியானம் பற்றிய கட்டுரைகளைப் படித்து விட்டு குழம்பிப் போகாதீர்கள். தியானம் என்பது மிகுந்த தெளிவோடு அசாத்தியமான அமைதியோடு இருத்தல். ஆனால் இதற்கு மனம் ஒரு நிலைப்படுவது என்ற ஆரம்பப் பயிற்சி முக்கியம். தன்னுடைய மனதை மனத்தால் உற்றுப் பார்ப்பதற்கு தெரிந்து கொள்ள வேண்டும். இந்த நிலை எளிதில் வந்து விடாது. ஒரு நிலைப்பட்ட மனது , ஒரு புள்ளியில் அமருகின்ற மனது , தன் மனதை இடைவிடாது எந்த வித கோபம் , விருப்பு வெறுப்பின்றி உற்றுப் பார்க்கும். சிறுவர்கள் பாதி பெடலில் சைக்கிள் ஒட்டி விட்டு ,பிறகு சீட்டில் ஏறி உட்கார்ந்து கொண்டு சைக்கிள் ஓட்டுவார்கள். பிறகு வித்தை காட்டுவார்கள். அது போலத்தான் மாநதி ஒரு நிலைப்படுத்தும் ஆழ் நிலைத் தியானமும். ஒரு எல்லைக்குப் பிறகு இதை சொல்லிக் கொடுக்க ஆசிரியர்களோ, கட்டுரைகளோ தேவையில்லை. உங்களுக்கே அடுத்த படிக்கு போக தெரிந்து விடும்.