வாழ்வில் சில நிகழ்வுகள் குறுகிய காலத்தில் கடந்து போனாலும் அந்நினைவுகள் , சிறுமழை விட்டுச் சென்ற மண் வாசனையாய், நம்முடனேயே தங்கி விடுகின்றன. மதுரை அமெரிக்கன் கல்லூரியுடனான எனது உறவும் அப்படித்தான். பள்ளி முடித்து பொறியியல் கல்லூரி சேர்க்கைக்கு விண்ணப்பித்து விட்டு காத்திருக்கையில் (அப்போதெல்லாம் கவுன்சிலிங் கிடையாது ) , சும்மா இருக்க வேண்டாமே என அமெரிக்கன் கல்லூரியில் B.Sc.,( special Maths) பிரிவில் சேர்ந்தேன். பச்சை நிற மரங்களுக்கிடையில் சிவப்பு நிற கட்டிடங்களாய் ஆங்கிலேயர்களின் ரசனையைய் பறை சாற்றி கொண்டு ஏக்கர் கணக்கில் பரவியிருக்கும் கம்பீரமான கல்லூரி அது.
பள்ளியிலிருந்து கொண்டு சென்ற ஒரு தலைக் காதலும் ( யாராவது infatuation என்று சொன்னால் அப்போது கடுங்கோபம் வரும்) , ஓராயிரம் கனவுகளுமாய் கிட்டத்தட்ட இரண்டு மாத காலம் அந்த வளாகத்தில் வாழும் வாய்ப்பு கிடைத்தது. வாழ்வின் பொன்னான காலகட்டம். யாரும் எதுவும் கேட்க மாட்டர்கள். நினைத்தால் வகுப்பிற்குப் போகலாம், இல்லையென்றால் நினைத்த இடம் போகலாம். அத்தனை சுதந்திரம்! பள்ளி முடித்த சிறுவர்களை முழு இளைஞர்களாக்கி அனுப்பும் அற்புத வளாகமது. அனுபவம் வாய்ந்த பேராசியர்களின் நட்பான அணுகுமுறை , பருவ மாற்றத்தில் இருக்கும் மாணவர்களுக்கு அலாதியான அனுபவத்தைக் கொடுக்கும். திறமையாளர்களுக்கு முழு அங்கீகாரமளித்து , அவர்களை உலகுக்கு அறிமுகப்படுத்தும் உன்னத கூடம் அக்கல்லூரி. கலைத்துறை ஜாம்பவான்கள் பல பேர் அக்கல்லூரி அளித்த கொடை.
அமெரிக்கன் கல்லூரி மாணவரென்றால் 'Matured and Decent guy' என்ற மதிப்பீடு இருந்தது. கல்லூரிகளுக்கிடையேயான அனைத்து போட்டிகளையும் வென்று வாகை சூடுவார்கள்.
அங்குள்ள மரங்கள் ஒவ்வொன்றும் யாரேனும் ஒருவருக்கு போதி மரமாய் இருந்திருக்கின்றன. பேருந்து நிறுத்தத்திலிருந்து கல்லூரி வரையிலான நடைபாதை நிமிடங்கள் , மழை நேர மாலைப் பொழுதுகளில் ஆங்காங்கே பூத்திருக்கும் சிமென்ட் பெஞ்ச் அரட்டை, விளையாட்டு மைதான மரங்களின் நிழலில் நண்பர்களுடன் மதிய உணவு, சின்னஞ்சிறிய உணவகத்தின் சமோசா ருசி , மையமாக வீற்றிருக்கும் தேவாலயப் பிரார்த்தனைகள் என அனைத்தும் என் நினைவில் பசுமை.
ஆனால் பொறியியல் கல்லூரிகள் பல்கிப் பெருகி விட்ட தற்போதைய சூழ்நிலையில் , தரத்தில் பின் தங்கிய மாணவர்களே கல்லூரியில் சேர்வதாலும் , சமீப காலமாக ஏற்பட்ட நிர்வாகக் குளறுபடிகள் காரணமாகவும் கல்லூரியின் மதிப்பு சற்றே மங்கி வருவது வருத்தமளிக்கிறது.
இப்போதும் அந்தக் காலகட்டத்தில் வெளிவந்த ' மே மாதம் ' திரைப்படப் பாடலை கேட்கும் போதெல்லாம் அமெரிக்கன் கல்லூரி தொடர்பான அனைத்து சம்பவங்களும் நினைவில் வந்து போகும். இன்றளவும் கல்லூரியை கடந்து செல்லும் ஒவ்வொரு முறையும் என்னுள் இனம் புரியாத சிலிர்ப்பு வருவதுண்டு. முன்னாள் மாணவன் என்ற உணர்வா அல்லது அங்கு சுமந்து திரிந்த காதலின் நினைவா என அந்த சிலிர்ப்புக்கான காரணம் பகுத்தறிய முடியாதது.