30 December 2011

சரிகமபதநி


"புவன்...நீ பெரிய்ய்ய்ய ஆளா வருவடா..." - இன்று அதிகாலை என்னிடமிருந்து உதிர்ந்த இந்த வார்த்தைகளுக்குக் காரணம் இல்லாமலில்லை.

பள்ளி அரையிறுதி விடுமுறை , கல்லூரி பருவ விடுமுறை, மார்கழிப் பனி , மாக்கோலம் , கிறிஸ்துமஸ் பண்டிகை.................

டிசம்பர் மாதம் என்றதும் சட்டென்று உங்கள் நினைவிற்கு வருவதின் பட்டியல் பெரும்பாலும் இப்படித்தானிருக்கும். இதில் விடுபட்டுப் போன 'மார்கழி மகா உற்சவம்' பற்றிய என்னுடைய ஏக்கம் எழுத்தில் வடிக்க முடியாதது. சென்னையின் தெருக்களில் இசைப் பேராறு கரைபுரண்டோடும் இந்த ' december season' நிகழ்வுகள் பற்றி ஊடகங்கள் வாயிலாக அறியும் பொழுது இந்த ஏக்கம் பன்மடங்காகிறது.


படிப்பு, வேலை , குடும்பம் ,குழந்தைகள் , வீடு , இன்ன பிற வசதிகள் என சமூகத்தில் மதிப்புடன் வாழத் தேவையானவற்றை அடைந்திருந்தாலும் மனம் அடைய விரும்பும் உச்ச பட்ச சந்தோஷத்தின் எல்லை வரையறுக்க இயலாததாகவும் , இன்னும் வேண்டும் இன்னும் வேண்டும் என்ற தவிப்பு தவிர்க்க இயலாததாகவும் இருக்கிறது. ருசியான உணவு, அமைதி தரும் ஆன்மிகம் , அருமையான புத்தகம் , இனிமையான இசை , ஆகச் சிறந்த திரைப்படம், ஆழமான நட்பு என மகிழ்ச்சி தரும் தளங்களை மனம் தொடர்ந்து பரீட்சித்துக் கொண்டேதானிருக்கிறது. இதில் நான் தவற விட்டதும் , இனிமேல் கைக்கொள்ள முடியாததுமான இசை ஞானத்தைப் பற்றி நினைக்கும் போதெல்லாம் என்னுள் சொல்லவொண்ணா துயறேருகிறது.

கேட்கும் நல்ல திரைப்பாடல்களைச் சிலாகிப்பதும் , உற்சாகமான மனநிலையில் அவற்றை அசை போடுவதும் தான் என்னுடைய இசை அறிவின் எல்லை. இசை பற்றிய நுணுக்கமான கட்டுரைகளை எவ்வளவு முயற்சித்தாலும் புரிந்து கொள்ள இயலாத பொழுது எனக்கு நேரிட்டிருக்கிற உன்னத உலகத்தின் இழப்பை என்னால் உணர முடிகிறது. கல்யாணியும் , காம்போதியும் , பைரவியும் , பந்துவராளியும் இந்த ஜன்மத்தில் வெறும் வார்த்தைகளாக மட்டுமே என்னுடன் உறவாடும் பாக்கியம் பெற்றிருக்கிறேன். நித்யஸ்ரீயும் , டி.எம்.கிருஷ்ணாவும் , சௌம்யாவும், சுதா ரகுநாதனும் செய்யும் ஆலாபனைகள் என்னுள் வெறும் சப்தங்களாகவே வந்து விழும் பாமர நிலையிலிருக்கிறேன். வர்ணம், கிருதி, கீர்த்தனை , தில்லானா, தரு, தரங்கம், ராகம், தானம், பல்லவி போன்ற பதங்களுக்கு பொருள் தெரிந்து செரிப்பதே பெரும் அறிவு என்றாகிட்டது.


இன்று சின்ன சின்ன வாண்டுகள் எல்லாம் 'சரிகமபதநி' போடுவதைப் பார்க்கும் போது சற்றுப் பொறாமையாகவே இருக்கிறது. அவ்வப்போது நினைத்துக் கொள்வேன், நாம் தவற விட்டதை, நமக்குத் தவறி விட்டதை , நம் பிள்ளைகளுக்காவது கொடுக்க வேண்டும் என்று. புற ஆதாயத்திற்காக இல்லாவிட்டாலும் அக மலர்ச்சிக்காகவாவது பிள்ளைகளுக்கு முறையான இசையை பழக்கப்படுத்த வேண்டும். நேரம் ஒதுக்கி இசை வகுப்புகளுக்கு அனுப்ப வேண்டும். இன்று அதிகாலை இவ்வாறெல்லாம் எண்ணம் பீறிட , அருகில் விளையாடிக் கொண்டிருந்த புவனிடம் கேட்டேன்.

" செல்லம் ... உனக்குப் பிடிச்ச பாட்டை அப்பாக்கிட்ட பாடிக் காட்டு , பார்ப்போம்."

" கொலவெறி...கொலவெறி...கொலவெறி... கொலவெறிடி..."

"புவன்...நீ பெரிய்ய்ய்ய ஆளா வருவடா..."

28 December 2011

இதை விட பெரிதாக

'வாழ்க்கை எப்படி போகிறது'
என்று கேட்டான்
ரொம்ப நாள் கழித்து
சாட்டில் வந்த நண்பன்.
முன் தினம் சரவணபவனில்
பெரிய தோசை வேண்டுமென
அடம் பிடித்து வாங்கிச்
சாப்பிட முடியாமல்
முழித்துக் கொண்டிருந்த
சிறுமியைப் பற்றிச் சொன்னேன்.
'அப்புறம் பார்க்கலாம்' என்று
மறைந்து போனான்.
என்னிடம் பெரிதாக
எதையேனும்
எதிர்பார்க்கிறார்களோ.

-முகுந்த் நாகராஜன்

சொர்க்கம்

          சற்றே சாய்வான நாற்காலியும்
          நகுலனும்
          சுசீலாவும்
          மழையும்
          மரமும்
          வேறென்ன வேண்டும் எனக்கு .

           -முத்துசாமி பழனியப்பன்

நான் அறிந்த ஓஷோ


தற்போது வாசித்துக் கொண்டிருக்கும் நூல்களைப் பற்றி 'சொர்க்கத்தின் வாசலில்' என்ற தலைப்பின் கீழ் பகிரலாம் என்று எண்ணம். தலைப்புக்கு வலு சேர்க்கும் விதமாக,ஏற்கெனவே நான் எழுதிய 'வாழும் அனுபவ'த்தை இங்கு எடுத்தாள்கிறேன்.


மழை ஓய்ந்த பின்னிரவில்

அலை ஓய்ந்த மனதோடு

இதமான குளிர் அறையில்

மிதமான உண்டி முடித்து

உடலுறுத்தா தலையணையில்

வாகாய்த் தலை சாய்த்து

அதிராத பாடலின்

சுகராகப் பின்னணியில்

அவிழாத புதிரவிழ்க்கும்

புதிதாய் ஒரு புதினத்தை

வாசிக்கும் அனுபவமே

வாழும் அனுபவமாம்.


'புத்தக வாசிப்பு வாழ்க்கைக்கு உதவுமா , ஆம் எனில்.. எப்படி? ' - வாசிப்பனுபவம் இல்லாத அபாக்கியசாலிகளின் மண்டையைக் குடையும் இந்தக் கேள்விக்கு பதில் , இரு வாரங்களுக்கு முந்தைய ஆனந்தவிகடனில் உள்ளது. அவர்கள் குறைந்த பட்சம் அதையாவது தேடிப் பிடித்து வாசித்துக் கொள்வார்களாக.


நிற்க. இப்பொழுது வாசிப்பிலிருக்கும் புத்தகம் சுவாமி ஆனந்த பரமேஷ்வரர் 'நான் அறிந்த ஓஷோ' என்னும் தலைப்பில் தொகுத்திருக்கும் ஓஷோவின் 200 கேள்வி பதில்கள்-இரண்டாம் பாகம்(charupraba publications). ஓஷோவின் பெரும்பாலான புத்தகங்கள் கேள்வி பதில் வடிவிலானவைதான் என்றாலும் அவையனைத்தும் ஒரே தத்துவத்தை ஆழச் சென்று விளக்குபவையாக இருக்கும். இந்நூலின் சிறப்பென்னவெனில், அடிப்படையில் ஆரம்பித்து ஆழமானது வரை சாமான்யரின் மனதில் தோன்றும் ஐயங்களனைத்திற்கும் படிப்படியாக பதில்கள் (in a flow) தொகுக்கப்பட்டுள்ளன.நான் இது வரை படித்ததில் இது தான் உச்சம். ஓஷோவை அறிந்திராதவர்களுக்கு , ஒரே மூச்சில் அவரின் கருத்துக்களை முழுமையாக உணரும் வகையில், இந்நூல் ஒரு வரப்பிரசாதம். தன்னுள் 'தான்' தேட முனைவோர் அனைவருக்கும் இதை பரிந்துரைக்கிறேன்.



கடலின் சில துளிகள் :
- தியானம் என்றால் 'விழிப்புடன் கவனித்தல்' . நீங்கள் விழிப்புடன் எதைச் செய்தாலும் அது தியானமாகும்.நீங்கள் ஒவ்வொரு அடியையும் விழிப்போடும் உணர்வோடும் கவனித்தால் நடப்பது கூட தியானமாகும்.

- மகிழ்ச்சியாக இருக்க ஒரே வழிதான் உண்டு. அது, துக்கம் வரும் பொழுது அதைப் பூரணமாக அனுபவியுங்கள். அத்துடன் இணைந்து செல்லுங்கள்.

- உடலில் உள்ள ரத்த ஓட்டம், உயிரோட்டம், சுவாச ஓட்டம் அனைத்திற்கும் நிகழ்காலம் மட்டுமே உண்டு.அதைப் போல வாழ்வுக்கும் நிகழ்காலம் மட்டுமே உண்டு. ஆனால் மனதிற்கு நிகழ்காலம் கிடையாது. இதுதான் பிரச்சினையே ! வாழ்வு என்பது 'இப்பொழுது ,இங்கே' தான் இருக்கிறது. ஆகவே, கூடிய மட்டும், 'இங்கே, இப்பொழுது ' வாழ முயற்சி செய்யுங்கள். மற்றவை எல்லாம் இயல்பாகத் தானே உங்களைத் தேடி வரும்.


-இந்தக் கணத்தில் வாழ்வது என்றால் என்ன? செயல்படும் போது செயலில் மனம் முழுமையாகக் கரைய வேண்டும். செயலற்று இருக்கும் போது எண்ண ஓட்டங்களை, உணர்வுகளை வெறுமனே பார்க்க வேண்டும். அவ்வளவுதான்!


-உண்மை என்பது ஒரு உயிர்த்தன்மை (Existence) அல்லது ஒரு இருப்பு (Being) அல்லது ஒரு சக்தி ஓட்டம் (Energy process) அல்லது கடவுள்தன்மை(Godliness). ஆனால் அது பொருள்(object) அல்ல. கடவுள் அல்ல! இந்த உண்மை எல்லை இல்லாதது , முடிவு இல்லாதது, எதிலும் எங்கும் இருப்பது. அதனுடைய மொழி மௌனம்தான்.

-எண்ணமற்ற தியானம் ஒன்றே உங்களை உண்மையாக அறிந்து கொள்ள உதவும். நீங்கள் மனதை சாட்சியாக நின்று பார்க்கும் பொழுது ,உங்கள் சக்தி அதன் மூலாதாரத்தை நோக்கிச் செல்கிறது. நீங்கள் உங்கள் மனதை ஒன்றில் வைக்கும் பொழுது ,உங்கள் சக்தி மனதை வலுப்படுத்த செலவாகிறது.முன்னது சக்தி சேமிப்பு; பின்னது சக்தி இழப்பு.


19 December 2011

பால(ர்) பாடம்


ஏழு மலை ஏறுதல் எளிதாம்
      ஏழு கடல் தாண்டுதல் எளிதாம்
        ஏழு ஜென்மம் வாழ்தல் எளிதாம்
  ஏழு முறை சாதலும் எளிதாம்
             அய்யோ...எளிதில்லை எளிதில்லை
                             பிள்ளைக்குப் பாடம் சொல்லிக் கொடுத்தல்.

04 December 2011

அசையும் அணு




நூறாவது இதழாக மலர்ந்திருக்கும் இந்த மாத 'உயிர்மை' யில் சிறப்புப் பகுதியாக கூடங்குளம் அணு உலை பற்றிய விரிவான அலசல் இடம் பெற்றுள்ளது. விவாதப் பொருளின் அனைத்துப் பரிமாணங்களும் ஆதி முதல் அந்தம் வரை மிக நேர்மையாக ஆராயப்பட்டு பல தரப்பட்ட விவாதங்கள் முன் வைக்கப்பட்டிருக்கின்றன. அனைவரும் அதை வாசிக்க வலியுறுத்துகிறேன்.

அதில் ஒரு பகுதியில் , தற்போது நடுநிலையாளர்களும் , மத்திய வர்க்கத்தினரும் எழுப்பும் பொதுவான ஒரு கேள்விக்கு கூடங்குளம் மக்களின் எதிர் கேள்வி பதிலாகத் தரப்பட்டுள்ளது.

கேள்வி: இத்தனை கோடி செலவு செய்து கட்டிய பிறகு உலையை மூடச் சொல்வது நியாயமா? பணம் வீணாகிறதே?

மக்களின் பதில்: உங்க மகளுக்குத் திருமணம் நிச்சயம் செய்து எல்லா செலவும் பண்ணி நாளைக் காலை கல்யாணம். பையனுக்கு எய்ட்ஸ் இருக்குன்னு முந்தின ராத்திரி தெரிய வந்தா , அடுத்த நாள் காலையில கல்யாணம் செய்வீங்களா? இத்தனை செலவு பண்ணிட்டோம், கல்யாணம் நடக்கட்டும்னு விடுவீங்களா?


நியாயமான பதில் நம்மிடம் இருக்கிறதா?









11 November 2011

ஏன்..எதற்கு..எப்படி 2

#அத்தகைய தோற்றம் கொண்டதால் அவர்கள் அரசாங்க அலுவலகத்தில் குமாஸ்தாவாக உள்ளனரா அல்லது இத்தனை வருடம் அரசாங்கத்தில் வேலை பார்த்தால் அத்தகைய தோற்றம் வந்து விடுமா?

#தமிழ் மற்றும் மொழிபெயர்ப்பு ஆங்கிலத்தில் நடைபெறும் சுவிஷேசப் பிரசங்கங்களில் பேசப்படும் விவிலியத் தமிழை விட ஆங்கிலம் தான் எனக்குப் புரிந்து கொள்ள ஏதுவாக இருக்கிறது.உங்களுக்கும் அப்படித்தானா?

#நமக்கு பாடம் சொல்லிக் கொடுத்த பள்ளி ஆசிரியர்களை தற்போது எங்கேனும் காண நேரிட்டால் மிகுந்த மரியாதையும் அதை விட மிகுதியாக அனுதாபமும் ஏற்படுகிறது.ஏன்?

08 November 2011

குழந்தைகளின் உலகம்


நேற்றிரவு வெள்ளத்தில் சேதமடைந்த வீடுகளைத் தொலைக்காட்சியில் காண்பித்துக் கொண்டிருந்தனர்.பாதுகாப்பான தற்போதைய நமது நிலை கடவுளின் பரிசு என்பதை புவனுக்கு உணர்த்த விரும்பிய நான் பின்வருமாறு பேச்சை ஆரம்பித்தேன்.

"புவன்...அப்பா உன்னை மாதிரி குட்டிப்  பையனா இருந்தப்போ இது மாதிரி சின்ன  வீட்டுல தான் இருந்தேன். பெரிய மழை பெய்ஞ்சுதுன்னா வீட்டுக்குள்ள இப்படித்தான் எல்லா தண்ணியும் வந்துரும்.ஆனா இப்ப...."

புவன் இடைமறித்து குதூகலமானான். " நீங்கல்லாம் அப்ப ரொம்ப ஜாலியா இருந்திருப்பீங்க இல்ல , வீட்டுக்குள்ளேயே நீச்சல் எல்லாம் அடிச்சுக்கிட்டு ...."

நான் அதற்கு மேல் பேசவில்லை.

மெய் நிகர் உலகம்


தொலைபேசியில் உன்
ஒற்றை சொல்லுக்காய்
காத்திருந்த சுகம்
மணிக்கணக்காய் நீளும்
காணொளி அரட்டையில்
கிடைப்பதேயில்லை.

வழி மேல் விழி வைத்து
பின் கிடைக்கப் பெற்ற
மடல் வாசிப்பின் ஆன்ம ஸ்பரிசம்
உன்னால் அனுப்பப்பட்ட
எண்ணிலா மின்னஞ்சலில்
கிடைப்பதேயில்லை.

பண்டிகை நாட்களின்
கையெழுத்திட்ட வாழ்த்தட்டைகள்
என்னில் பரப்பும் பரவசம்
123greetings.com ல்
நீ அனுப்பும் மின்னட்டைகளில்
கிடைப்பதேயில்லை.

*******************************************

நாள் முழுவதும்
கால் பந்து விளையாடி
கை வலிக்கிறது
என் பிள்ளைக்கு...
அவன் விளையாடியது
கணினியில் என்பதால்!

******************************************

ஆடாமல் அசையாமல்
ஆள்காட்டி விரல் சொடுக்கில்
online ல் பொருள் வாங்கும் நான்
அப்பாவிடம் கேட்டேன்-
'ரேஷன் கடை நமக்கு
இன்னமும் அவசியமா?'
அப்பா சொன்னார்-
"இங்கிட்டு வாங்கினால்
இருபத்தி சொச்சம்
ரேஷனில் வாங்கினால்
ரெண்டு ரூபா மிச்சம் !"

******************************************

தொலைந்து போன என்
அலை பேசியைத் தேடி
அலைந்து களைத்த வேளையில்
ஆலோசனை சொன்னான் பிள்ளை-
' Google ல்ல தேடுங்கப்பா! '

*******************************************

02 November 2011

ஏன்..எதற்கு..எப்படி..1

தலைப்பைப் பார்த்து விட்டு இது சுஜாதா பாணியிலான அறிவியல் விளக்கக் கட்டுரையோ என நுழைந்தீர்கள் என்றால் அதற்கு நான் பொறுப்பல்ல. அவ்வப்போது தோன்றும் விடை தெரியாத ( தெரியா விட்டாலும் பரவாயில்லை போன்ற)வினாக்களை இங்கு பதிவதாக உத்தேசம். பதில் தெரிந்தவர்கள் பின்னூட்டமிடவும்.

# பால் விலை லிட்டருக்கு இரண்டு ரூபாய் உயர்ந்தால் , தேநீர் விலை குவளைக்கு ஒரு ரூபாய் உயர்வதை just like that சகித்துக் கொள்கிறோம் . எப்படி?

# 1 ரூபாய்க்கு பேரம் பேசுகிறவர்கள் 30 ரூபாய் அனுமதிச் சீட்டை 300 ரூபாய்க்கு வாங்கி திரைப்படம் பார்க்கின்றனர். எப்படி?

# பெரும்பாலான two wheeler mechanics செல்வம், குமார், பாண்டி , சேகர் போன்ற பெயர்களைக் கொண்டிருக்கிறார்கள். ஏன்?

# கி.பி.1800 ல் 100 கோடியாக இருந்த உலக மக்கள் தொகை படிப்படியாக அதிகரித்து , கருத்தடையின் முக்கியத்துவம் உணரப்பட்ட கடந்த 20 ஆண்டுகளில் மட்டும் 200கோடி அதிகரித்துள்ளது. எப்படி?

# scooty ஓட்டும் பெண்களை ஒரு போதும் overtake செய்ய முடிவதேயில்லை.ஏன்?

# மன நிம்மதி வேண்டி நாம் கோவிலுக்கு செல்வது போல் , அங்கிருக்கும் குருக்கள் மனக்கிலேசமென்றால் எங்கு செல்வார்?

# பேசும் போது நாக்கு வெளியே தெரிவதில்லை என்றாலும் , பெரும்பாலான நிகழ்ச்சித் தொகுப்பாளர்கள் ' இப்ப பாத்தீங்க நாக்க , இப்ப பாத்தீங்க நாக்க' என்று சொல்கிறார்கள். ஏன்?

# தவறு என்று தெரிந்தும் அதை அடிக்கடி செய்யவும், சரி என்று தோன்றுவதை முற்றிலுமாக தவிர்க்கவும் விரும்பும் மனதின் உளவியல் பின்னணி என்ன?


01 November 2011

பெய்வதெல்லாம்.....


I std புவனேஷ் : அப்பா....it is raining pa...சீக்கிரம் டிவியை போடுங்க...ஸ்கூல் லீவான்னு பார்க்கணும்.

என் மனைவி : ஏம்ப்பா...through out night மழை இருந்திருக்குமோ...பாவம் , வீடில்லாதவங்களுக்கு எவ்வளவு கஷ்டம் !

நான் : Actually , farmers are the ultimate sufferers , you know. இப்படி அறுவடை சமயத்தில பெய்ஞ்சு நாசம் பண்ணுது.

Pre-kGசந்தோஷ்: (தூறலில் நனைந்தவாறு மழை நீரில் குதித்துக் கொண்டிருக்கிறான்)

புரிதல் : பெய்வதெல்லாம் மழையே...மழையைத் தவிர வேறொன்றுமில்லை!

30 October 2011

இவற்றுக்காகவாவது...


நேற்றைய இரவு
மிக நீண்டதானது
உன் இருப்பின்றி...

என் மூச்சு தொடும்
நமது அறைக் காற்று
நீயின்றித் தவித்து
பெருமூச்சு விடும்.

உடல் துடைத்த கைத்துண்டின்
ஈரம் படிந்த அணைத்தலை
இன்று இழந்த ஏக்கத்தில்
கிரீச்சிடும் கட்டில் முனை.

அறை விளக்கற்ற அரை வெளிச்சத்தில்
கிடைக்கும் உன் விரல் ஸ்பரிசம்
இன்றில்லை யென சுவர் ஏங்கும்.

உன் முக அழுத்தம் பிரிந்தறியா
தலையணை யிரண்டும்
கண்ணீர் விட்டுக் கனத்துப் போகும்.

உன்னைப் பிரிந்த அரற்றலை
அலாரம் வைக்காமலேயே
அலறிக் காட்டும் கடிகாரம்.

அறையோடு சேர்ந்து
பிறை போலத் தேயும்
என் மனதும்.

நானில்லா நாட்களின்
உனதான தவிப்பை
நினைந்து நினைந்து
இவற்றோடு நானும்
புலம்பிக் கொண்டதால்
நேற்றைய இரவு
மிக நீண்டதானது
உன் இருப்பின்றி....

வந்து விடேன் சகியே...
எனக்காக இல்லையெனினும்
இவற்றுக்காகவாவது.

20 October 2011

சூப்பர் சிங்கர் ஜூனியர்


அடுத்த வதை ஆரம்பமாகி விட்டது. வதைக்கான கூடமும், வதைபடப் போகும் ஜீவன்களும் தயார். நாட்டாமைகளும் கோட் சூட் சகிதம் வந்து விட்டார்கள்.


பயிற்சி என்ற பெயரால் உடல் வருத்தமும் , விமர்சனம் என்ற பெயரால் மன அழுத்தமும் பெற்று துயரப்பட போகும் இந்த ஜீவன்களை ஈன்றவர்களைப் பார்த்து இப்படிக் கேட்கத் தோன்றுகிறது.
'ஏம்ப்பா (சற்று காரம் கூட்டி 'ஏண்டா' என்றும் விளிக்கலாம்)...தங்கறதுக்கு இடமும் , திங்கறதுக்கு சோறும் கொடுத்துட்டா ஒரு ஜீவனை, அதாம்ப்பா.... நீ பெத்த பிள்ளையை எப்படி வேணும்னாலும் கொடுமைப்படுத்துவியா ? பிள்ளைகளுக்கு அந்தந்த வயசுக்கு உண்டான சுதந்திரத்தையும் , சந்தோசத்தையும் கொடுங்கப்பா...'

Red Cross, Blue Cross மாதிரி இந்த சிறார்களைக் காக்க ஏதாவது ஒரு அமைப்பை சீக்கிரம் தொடங்கினால் தேவலாம்.

13 October 2011

சம்சார சாகரம்

மனைவியின் அன்புத் தொல்லை.
உறவினரின் உரிமைத் தொல்லை.
செல்வங்கள் தான் என்றாலும்
பிள்ளைகள் தொல்லையோ தொல்லை.

நம் நேரம் நமதில்லை.
கண நேரம் ஓய்வில்லை
புறம் செல்ல வழியில்லை.
புறம் கூற இடமில்லை.

அச்சிறைப்பட்டோர் என்றேனும் மீள்வர்.
இச்சிறைப்பட்டோர் மாளாது மாள்வர்.
அச்சாகரம் கரை சேர்க்கும்.
இச்சாகரம் நுரை தள்ளும்.

ஆத்திகன் நாத்திகனாவான்.
நாத்திகன் ஆத்திகனாவான்.
சத்தம் சமாதானம் பேசும்.
சாத்வீகம் சண்டை போடும்.

ஏற்க நேரும் பாத்திரம் சில.
தோற்க நேரும் பாத்திரம் சில.
இல்லறத்தில் கவலைகள் பல
எனினும்
பிரம்மச்சரியத்தில் மகிழ்ச்சியே இல !

26 August 2011

வாழ்வின் உக்கிரம்

கடந்த ஒரே வாரத்தில் , ஒரு மனிதனின் அதீத மகிழ்ச்சியையும் , அவன் அடைந்த அதீத துக்கத்தையும் மிக அருகிலிருந்து கண்டேன். அடைந்த மகிழ்ச்சியும் , துக்கமும் ஒரே விஷயம் தொடர்பானதுதான்.

"என்னது , உன் பையன் ஒண்ணாவதுதான் படிக்கிறானா...ஒரு நாலாவது வகுப்பு படிப்பான்னு நினைச்சேன்... நீ தான் ரொம்ப சீக்கிரமே கல்யாணம் பண்ணிட்டியே , மேடேஸ் ?"

திருமண அழைப்பிதழ் கொடுக்க வீட்டிற்கு வந்த என் நண்பரின் கேள்விக்கு நான் அளித்த பதில் , "இல்ல பாஸ்... நீங்க தான் ரொம்ப லேட்...!"

உடன் பிறந்த தங்கைகள் அனைவருக்கும் வாழ்க்கை அமைத்துக் கொடுத்து, கிட்டத்தட்ட நாற்பதை நெருங்கும் வேளையில் நல்ல வரன் அமைந்து , சென்ற வியாழனன்று நடந்தது என் நண்பரின் திருமண விழா . திருமணத்திற்கு முதல் ஆளாக சென்று கடைசி ஆளாக திரும்பினேன். ஒவ்வொரு கணமும் மிகக் குதூகலமாயிருந்தது. மீனாட்சி அம்மன் கோவில் கல்யாண சுந்தரேஸ்வரர் சன்னதியில் திருப்பூட்டு முடிந்து , அனைத்து சந்நிதி வழிபாடு முடிந்து, மண்டபத்தில் அனைவரின் வாழ்த்து பெற்று , அனைவரும் ஆசுவாசப்படும் வரை நண்பரின் அருகிலேயே இருந்தேன். கடந்த ஐந்தாறு வருடங்களாக தொடர்பில் இல்லையென்றாலும் ,அதற்கு முன்பு மிக அன்னியோன்யமாகப் பழகியிருக்கிறோம். யாருக்கும் தீங்கு எண்ணாத , யார் மனதையும் மறந்தும் புண்படுத்தாத , கடவுள் நம்பிக்கை அதிகமுள்ள அவரின் திருமண வைபவம் சிறப்பாக நடந்தேறியதில் எனக்கு பரம சந்தோசம். " பார்த்தியா....லேட்டானாலும், வெயிட்டா செட்டிலாயிட்டாரு...ஆண்டவன்னு ஒருத்தன் இருக்கான்னு ப்ரூவாயிடுச்சுப்பா..." .நான்கு நாட்களாக என் மனைவியிடம் எதைப் பற்றிப் பேசினாலும் இதில் வந்துதான் முடிப்பேன்.


புதனன்று அதிகாலை இறங்கியது இடி ஒத்த செய்தி. நண்பரின் மனைவி இறந்து விட்டார். கேட்ட செய்தியைச் செரிக்க இயலாமல் என்னவென்று விசாரித்ததில் , குறைந்த ரத்த அழுத்தம் காரணமாக மயக்கமடைந்து , பின் சிகிச்சை பலனின்றி இறந்து விட்டாராம். நெடு நாட்களாக இருக்கும் இப்பிரச்சினையை மாப்பிள்ளை வீட்டாரிடம் மறைத்ததாலும் , தொடர்ந்து எடுத்து வந்த மருந்து மாத்திரைகளை திடீரென்று நிறுத்தியதாலும் வந்த விபரீத விளைவு , அனைவரையும் புரட்டிப் போட்டு விட்டது. " எல்லாமே மின்னல் மாதிரி நடந்து முடிஞ்சு போச்சு " , ஆற்றாமையுடனும் , அவலத்துடனும் , அழுகையும் குமுறலுமாக நண்பர் பேசியது இன்னும் என் மனதில் நிழலாடுகிறது. ஆறுதல் சொல்லக் கூடிய இழப்பா இது ? பத்து நாள் பசியோடிருப்பவனிடம் அறுசுவை உணவில் ஒரு விள்ளலைக் கொடுத்து ருசி பார்க்கச் சொல்லி விட்டு , அவன் எதிரிலேயே அதைக் குப்பையில் கொட்டினால் அவன் மனநிலை எப்படி இருக்கும் ? நான் அதிகம் பேசாமல் அவர் கையைப் பிடித்து சிறிது நேரம் இருந்து விட்டு எழுந்தேன்.

எழும் போது சொன்னார்... "சாப்பிட்டுப் போ...மேடேஸ் ...."

அதுவரை அடக்கி வைத்திருந்த அழுகை என்னை மீறிப் பீறிட்டது. "உங்களுக்குப் போய் இப்படி நடந்திருச்சே ....." மெதுவாக வார்த்தைகளைப் பிரசவித்தேன்.

மேற்கொண்டு ஏதும் பேச இயலாமல் விடை பெற்றேன்.

இரு தினங்களாக நான் இன்னும் இதிலிருந்து மீள வில்லை. எதைக் கண்டாலும் , யாரைக் கண்டாலும் கோபம் கோபமாக வருகிறது. வாழ்க்கையின் குரூரம் பற்றி ஆயிரமாயிரம் கேள்விகள் மனச் சுவற்றை அறைந்த வண்ணம் இருக்கின்றன. நான் இயல்பாக இல்லை. தத்துவப் புத்தகங்கள் எத்தனை படித்தாலும் , இத்தகைய பொழுதுகளில் அவை துணை நிற்பதில்லை.

என் நிலை பார்த்து ஒருவர் சொன்னார். " ஏதாவது கோவிலுக்குப் போயிட்டு வாங்க சார்...மனசு நிம்மதியாகும்."

நானும் நினைத்திருக்கிறேன். இந்த வாரம் மீனாட்சி அம்மன் கோவிலுக்குப் போக வேண்டும் , கல்யாண சுந்தரேஸ்வரரிடம் நாக்கைப் பிடுங்கிக்கிற மாதிரி நாலு கேள்வி கேட்க .












19 August 2011

தெய்வத் திருமகள்

'தெய்வத் திருமகள்' தொடர்பாக எனக்கும் என் சக ஊழியருக்கும் நடந்த உரையாடல் :
நான் : ரொம்ப நாளாச்சு சார் , இப்படி ஒரு படம் பார்த்து ! நீங்க பார்த்தாச்சா ?
அவர் : கடைசியா சிறுத்தை பார்த்தேன் ...அதை விட சூப்பரா இருக்குமா ?
நான் : இல்ல சார்..இது வேற மாதிரி....படம் முழுக்க கண் கலங்கிப் பார்த்தேன்.
அவர் :ஒ....அழுகைப் படமா ? இப்படித்தான் போன தடவை நீங்க சொன்னீங்கன்னு 'நந்தலாலா' போய்ப் பார்த்தேன்...நல்லாவே இல்ல...
நான் : (அவர் பாஷையிலேயே ) இது அதை விட அழுகைப் படம், சார் ...
அவர் : அப்படின்னா நான் கண்டிப்பா போகல...
நான் : ம்ஹூம்...சோகத்தினால வர்ற அழுகை இல்ல....உணர்ச்சிவசப்பட்டு வர்ற அழுகை...
அவர் : அடப் போங்க சார்...தியேட்டருக்குப் போனோமா , ரெண்டு மணி நேரம் ஜாலியா இருந்தோமான்னு இல்லாம...
நான் : நீங்க போகலேன்னாலும் பரவாயில்லை...நாலு பேருக்கு டிக்கெட் வாங்கிக் கொடுத்துப் பார்க்கச் சொல்லுங்க சார்...இந்த மாதிரி படத்தை எல்லாம் என்கரேஜ் பண்ணனும் ....
அவர்: ஒண்ணு பண்ணுங்களேன்...நீங்களே டிக்கெட் வாங்கிக் கொடுங்க ...நான் வேணா போய் பார்க்கிறேன்.
நான்: எனக்கு இதுவும் வேணும் ...இன்னமும் வேணும்... (அட..மனசுக்குள்ளதாங்க!)

17 August 2011

பசுவின் சிசு

"ஏம்ப்பா....சீக்கிரம் இங்க வாங்களேன் ..."
இன்று அதிகாலை மனைவியின் குரல் கேட்டு பதறியடித்து வெளியே ஓடினேன்.
"இங்க பாருங்க...இதைப் பார்த்தா நாம செஞ்ச பாவமெல்லாம் போயிரும்னு சொல்வாங்க...."
அவள் சுட்டிய இடத்தைப் பார்த்தேன். அங்கே ஒரு சினைப் பசு கன்று ஈன்று கொண்டிருந்தது. கன்றின் கால் மட்டும் வெளியே தெரிய, ஒருசாயலாக படுத்திருந்த பசுவின் முகம் சலனமற்றும் , சிறு வைராக்கியத்துடனும் இருந்தது. ஒரு உயிரின் ஜனனத்தை மிக அருகில் இருந்து பார்க்கும் பதற்றம் மேலிட , எல்லாம் நல்லபடியாக முடிய வேண்டுமே என்று மனதிற்குள் வேண்டிக் கொண்டேன். சக தோழியின் பிரசவம் போன்று , பெண்களுக்கே உண்டான வாஞ்சையுடன் என் மனைவி பார்த்துக் கொண்டிருந்தாள். சில நிமிடங்களில் எல்லாம் சுபமாய் முடிய , புத்தம் புதிய ஜீவன் ஒன்று எங்கள் அனைவரின் முகம் பார்த்தது. சுமை இறக்கிய களிப்புடன் எழுந்த பசு , குட்டியை நாவால் நக்கித் தன் இருப்பைத் தெரியப்படுத்தியது.
இனம் புரியா குதூகலத்துடன் நாங்கள் நகர எத்தனித்த போது , அது வரை படுத்திருந்த கன்று எழுந்து நிற்க முற்பட்டது. உதட்டோரப் புன்னகையுடன் நான் பார்த்துக் கொண்டே நடக்க , சில பல நொடிகளில் எழுந்து நடந்தே விட்டது.
ஆச்சர்யம் மேலோங்க , வீட்டிற்குள் சென்று அன்றைய தினசரியை விரித்தேன். படித்து முடித்தவுடன் ,அதுவரை இருந்த உற்சாகம் முற்றிலுமாக வழிந்தோடி விட்டது. பிறந்தவுடன் எழுந்து நடக்கக் கூடிய வரம் மனிதப் பிறவிக்கும் கிடைக்காதா என்ற ஏக்கத்துடன் கல்லூரிக்குக் கிளம்பினேன். தான் பெற்ற சிசுவை , ஆறறிவு உடைய மனிதன் தன் இமை போலக் காப்பான் என்ற படைப்புருவாக்கத்தின் அடிப்படையையே கேள்விக்குள்ளாக்கக் கூடிய, தினசரியில் நான் கண்ட அந்த செய்தி இதுதான்.


'பிறந்து முப்பது நாட்களான ஆண் குழந்தையின் உடல் சாக்கடையில் கண்டெடுக்கப்பட்டது.'