28 November 2010

நீ - கர்ப்பிணி

ஜெயிக்கின்ற எல்லோரும் கர்ப்பிணியாக இருக்கக் கற்றுக்கொள்ள வேண்டும்.நிறை மாதக் கர்ப்பிணியாய் இருக்க வேண்டும்.நிறைமாதக் கர்ப்பிணிக்கு தன் கருவின் மீது அபார நம்பிக்கையும் , அதனால் அதன் மீது ஒரு அன்பும் ஏற்படும். தான் சுமக்கின்ற கரு மீது எற்பட்ட அன்பு, தன் மீதும் பரவ, தன்னைத்தானே நேசிக்கின்ற ஒரு ஆத்மாவாக அந்தக் கர்ப்பிணி இருப்பாள். அதே சமயம் தான் சுகப்பிரசவம் அடைய வேண்டுமே என்ற கவலையும் அவளுக்கு இருக்கும்.
கருவின் மீது கொண்ட அன்பால், கவலையால், கர்ப்பிணி அதிர்ந்து நடக்க மாட்டாள். ஆவேசம் கொள்ள மாட்டாள். அப்படிச் செய்ய நஷ்டம் அவளுக்கே.மாறாய், கர்ப்பிணி ஒவ்வொரு அடியும் கவனத்துடன் எடுத்து வைப்பாள்.
அது போல,
நீ செய்து முடிக்க வேண்டிய காரியத்தை,ஏதோ ஒரு விதமாக ஆளாக வேண்டிய விருப்பத்தை, கர்ப்பிணிப் பெண் தாங்குவதைப் போல் தாங்கு. எல்லா நேரமும் , எதைச் செய்தாலும், கர்ப்பிணியின் சிந்தனை கருவிலே இருப்பதைப் போல, உன் உயர்வு குறித்த சிந்தனை உன்னிடம் இடையறாது இருக்க வேண்டும்.ஒரு கவலை போல இருக்க வேண்டும்.
வீண் வம்பிலோ , வழக்கிலோ ஈடுபட விரும்பாது , எங்கேனும் சிக்கினாலும் , நகர்ந்து கொள்கிற கர்ப்பிணியாய் நீ இருக்க வேண்டும்.கர்ப்பிணி ஆவேசமுற்றால் பிரச்சினை கருவுக்குத்தான்.நீ ஆவேசமுற்றால் பிரச்சினை உன் உயர்வுக்குத்தான்.
கர்ப்பிணி தன் கருவினை நேசித்து , அதைத் தாங்கும் தன்னை நேசிப்பது போல, உன் லட்சியத்தையும், உன்னையும் நேசிக்கக் கற்றுக் கொள். உன்னை நேசிப்பது எப்படி வெளியே வரும்? உன் உடையழகில் , உன் நடையழகில் , உன் பேச்சழகில், உன் செயலழகில் வரும்.
குளித்து சுத்தமாக உடுத்திக் கொள்.நிற்பதும் , நடப்பதும், எழுவதும், அமர்வதும் ஆரவாரமில்லாமல் இருக்கட்டும்.அதாவது நீ கர்ப்பிணி.இலட்சியமுள்ளவன்.ஒரு போதும் துள்ளாதே. மக்கு ஆடுகள் தான் காரணமின்றி துள்ளும்.எகிறித் தங்களுக்குள்ளே முட்டிக் கொள்ளும்.ஆடுகள் முட்டிக் கொள்வதைப் போல தமாஷ் உலகத்தில் எதுவுமில்லை.
இதற்குப் பிறகு பேச்சு. மிகப் பணிவாகவும், தெளிவாகவும் பேசு.சின்ன வாக்கியங்களாய் நிதானமாய் பேசு. உன் மொழியில் உள்ள நல்ல நூல்களோடு உனக்குப் பரிச்சயம் உண்டெனில் , உன் வாழ்க்கை சுகமாக ஆரம்பிக்கும். நீ தெளிவாகப் பேச, எதிராளிக்கு உன்னைத் தெளிவாகப் புரிய , ஆரம்பத் தொடர்பு நல்ல முறையில் இருக்கும்.
நீ குளிக்கிற இடம்,உடை வைத்திருக்கும் பெட்டி, புத்தக அலமாரி, இந்த சூழ்நிலைகளை மிகச் சுத்தமாக வைத்திருப்பது உன் செயலில் நேர்த்தி வர ஆரம்பித்து விட்டது என்று அர்த்தம்.
Perfection மிக மிக முக்கியம்.செருப்புக்கு பாலிஷ் போடுவதை , ஓவியத்திற்கு வர்ணம் தீட்டுவதைப் போல் செய். உன் வேலைகளுக்கு இன்னொருவரைக் கட்டளையிடாதே. முழுமையாய், விருப்பமாய், திருத்தமாய் வேலை செய்.விருப்பமாய் வேலை செய்கிற போது , வேலைகள் நிறைய வரும்.வேலைகள் நிறைய சேர்ந்தால் வீண் பேச்சு குறையும். வீண் பேச்சு குறைவான இடத்தில் சச்சரவே எழாது.
ஆனால் வாழ்க்கை அத்தனை சுலபமில்லை. நீ சரியாக இருந்து விட்டால் எல்லாம் சரியாகி விடாது. நீ சரியாக இருக்கிறாய், அல்லது சரியாக இருக்க முயற்சி செய்கிறாய் என்பது தெரிந்தால் போதும், உன்னைக் கலைக்க பல பேர் வருவார்கள். தன் வாழ்க்கையைச் சரியாக அமைக்காத தான்தோன்றிகள், திருடர்கள்,பொய்யர்கள் உன்னைக் கவிழ்க்க வருவார்கள்.இப்படிப்பட்டவர்கள் உறவு என்கிற பெயரிலோ, நட்பு என்கிற பெயரிலோ நெருக்கமாய் இருப்பார்கள்.அவர்களிடமிருந்து அப்பால் போக முடியாத சூழ்நிலை இருக்கும்.
தன் தேவையையும்,தன் பலத்தையும் முற்றும் உணர்ந்தவன் இவர்களை அமைதியாகச் சமாளிப்பான். இவர்கள் பக்கமிருந்தும் , இவர்களிடமிருந்து விலகி இருப்பான்.இவர்களோடு பேசிச் சிரித்தாலும், இவர்களோடு ஒட்டாது இருப்பான். சமயம் வரும் போது முழு மூச்சாய் எதிர்ப்பான் .
சண்டை போடுகிற தகப்பன் , ஏமாற்றுகின்ற தமையன்,கட்டிப் போடுகின்ற தாய், சுமக்கச் சொல்கின்ற தங்கை, ஏளனம் செய்கின்ற காதலி, இங்கிதம் இல்லாத நண்பர்கள் என்று உலகத்தில் பல வேதனைகள் உண்டு. மறுக்காதே,ஏற்றுக்கொள்.
இவர்களை விட்டு எங்கும் விலக முடியாது.நீ எங்கு போயினும் இதுபோல் எவரோடும் வாழத்தான் வேண்டும்.உன்னைப் போல் உண்டா என்று அவர்களுக்கு தீனி தூக்கிப் போடு. திணறும் அளவுக்குப் பாராட்டு.ஆனால் மனதிற்குள் விலகியே இரு.உன் வேலைகளைக் கவனித்தபடி இரு.
-எழுத்துச் சித்தரின் 'கற்பூர வசந்தம் ' நாவலிலிருந்து

06 November 2010

பள்ளியெழுச்சி



அநேகமாய் ஒரு நாளின் மனோநிலையை அந்த நேரமே தீர்மானிக்கும். படுகையைவிட்டு எழுந்திருக்கும் இந்நேரம் எரிச்சலோ வெறுப்போ வருமானால் அந்த நாள் முழுவதும் தொடர்ந்து அந்த மனோநிலையாய் அவ்விதம் பாதிக்கப்படுகிறது.

உடம்பை, மூளையை முறுக்கி தூக்கத்தில் எழுந்து முற்றிலும் விழித்து, படுக்கையிலேயே சிறிது நேரம் அமர்ந்திருப்பது நல்ல பழக்கம். தடாரென்று எழுந்து கொள்வது தவறு. இன்னும் கொஞ்சம் தூங்குகிறேன் என்று போர்வைக்குள் சுருண்டு கொள்வதும் முட்டாள்தனம்.

அநேகமாய் நம் எல்லோர் மூளைக்குள்ளும் ஒரு அலாரம் டைம்பீஸ் இருக்கிறது, இத்தனை மணிக்கு எழுந்து கொள்ள வேண்டும் என்று தீர்மானித்தால், அத்தனை மணிக்கு விழித்துக் கொள்கிறது. மூளையைப் பற்றி ஆராய்ந்தெல்லாம் நான் இதைச் சொல்லவில்லை, என் பழக்கத்தை, பிறர் பழக்கத்தை உன்னித்து கவனித்துவிட்டு எழுதுகிறேன். விழிப்பு வந்து தூக்கம் முற்றிலும் கலைந்து விட்டதும் படுக்கையில் எழுந்து உட்கார்ந்து கொள்ள வேண்டும்.

நுரையீரல் நிறைய மூச்சு இழுத்துவிட்டு அமைதியாக சிறிது நேரம் உட்கார்ந்திருக்க வேண்டும். ‘என் வாழ்க்கையின் மிக சந்தோஷமான நேரம் இந்த நேரம்தான். மறுபடியும் ஒரு நாள் புலர்ந்து விட்டது. இன்னொருநாள் நான் உயிரோடு இருக்கிறேன். பொழுது புலர்ந்து யாம் செய்த தவத்தால்’. ‘உயிர் வாழ்வது சந்தோஷம் எனில், இது சந்தோஷத்தின் ஆரம்பம்’ இப்படி வார்த்தைகள் உள்ளே தோன்றாதே தவிர, இவ்விதமாய் ஓர் உணர்வு இருக்கும் இன்றைய நாளின் போராட்டம் என்னென்ன என்று மனசுக்குள் ஒரு கணக்கு வரும். செய்ய வேண்டிய முக்கியமான வேலையின் பட்டியல் வரும்.

வேலையின் பரபரப்பு இல்லாமல் வேலையின் முடிவு பற்றி எந்த ஆவேசமும் இல்லாமல் வேலை நல்லபடி முடிக்க வேண்டுமே என்ற கவலை மட்டும் வரும். யாரெல்லாம் கடுமையாக நடந்து கொள்ளப் போகிறார்கள்.. யார் எல்லாம் எதிரியாக என்னை நினைக்கப் போகிறார்கள் என்கிற யோசனை வரும் போது அவர்களை எப்படி நான் நிதானமாய் அணுகுவது என்று யோசிக்க அந்த நேரம் உகந்தது.

அநேகமாய் ஒரு நாளின் மனோ நிலையை அந்த நேரமே தீர்மானிக்கும் படுக்கையை விட்டு எழுந்திருக்கும் இந்நேரம் எரிச்சலோ, வெறுப்போ வருமானால் அந்த நாள் முழுவதும் தொடர்ந்து அந்த மனோ நிலையாய் அவ்விதம் பாதிக்கப்படுகிறது. வெளியே இதை நாம் காட்டிக் கொள்ளவில்லை எனினும் உள்ளுக்குள்ளே இந்த உணர்வு தூக்கலாக இருக்கிறது. இரண்டு மூன்று நிமிடம் படுக்கையில் வெறுமனே உட்கார்ந்துவிட்டு பிறகு மெல்ல எழுந்து பின் பக்கம் போகலாம்.

காலைக் கடன்கள் கழிப்பது பற்றியெல்லாம் நான் உங்களுக்கு சொல்லிக் கொடுக்கப் போவதில்லை மருத்துவ ரீதியான கட்டுரை அல்ல இது. எனக்குத் தெரிந்ததை உங்களோடு பகிர்ந்து கொள்ளும் முயற்சி. உங்களுக்குப் பிடித்தமான ஏதோ ஒரு பானம் பருகி பேப்பரோடு உட்கார்ந்த பிறகு அதிகபட்சமாக கால் மணி நேரம் தினசரியோடு செலவு செய்யுங்கள். பிறகு சட்டென்று குளிக்கப் போய்விடுங்கள். எழுந்து அரை மணிக்குள் குளித்துவிடுவது உத்தமம். எழுந்தவுடனேயே குளிப்பதில் ஒரு முரட்டுத்தனம் இருக்கிறது. அதிக நேரம் தள்ளிப் போடுவதில் ஒரு சோம்பேறித்தனம் வருகிறது.

குளிக்கும் தேவையை மனசு உணர்ந்த போது குளித்துவிடுவது நல்லது. தூக்கத்திற்கு பிறகு குளிர்ச்சியான மனம். குளியலுக்குப் பிறகு குளிர்ச்சியான உடம்பு. கண்மூடி அமைதியாய் தியானம் செய்யத் தகுந்த நேரம் இது. பல்வேறு கட்டுரைகளில் இதைப் பற்றி சொல்லிக் கொடுத்திருக்கிறேன், ஆயினும் இந்தக் கட்டுரையில் விரிவாய் இதைப் பற்றி எழுத விரும்புகிறேன்.

தியானம் என்பது வழிபாட்டு முறை அல்ல மதங்களின் அபிப்பிராயம் அல்ல அல்லது ஒருவிதமான மனப் பயிற்சியோ, மூளையின் வலியை அதிகப்படுத்தும் காரியமோ அல்ல. தியானம் ஒருவித மனநிலை. அன்பும் பணிவும் கலந்த ஒரு மனநிலை. ஒரு விளக்குச் சுடரை நோக்கி தியானம் செய்யுங்கள். நெற்றிக்கு நடுவே ஒரு புள்ளியை நினைவு வைத்துக் கொள்ளுங்கள், அந்தப் புள்ளியிலேயே மனதைச் செலுத்துங்கள் என்ற விதமாக எல்லாம் தியானம் சொல்லித் தரப்படுகிறது.

இப்படி சொல்லித் தருவதில் எந்தத் தவறும் இல்லை. பணிவு கலந்த ஒரு வணக்கம் ஏற்படுவதற்காக, இவை உபாயம் கொண்டவையாக சொல்லப்பட்டிருக்கின்றன. குழி தோண்டுவதற்காக மண்வெட்டி பயன்படும். மண்வெட்டி இருக்கிறதே என்று யாரும் குழி தோண்டுவது இல்லை. பணிவு கலந்த வணக்கம் என்பதை மறந்து விட்டு திசை திருப்புவதில் பயன் ஏதும் இல்லை.

இரவின் மடியில்...

காலையின் மலச் சிக்கலை விட இரவின் மனச் சிக்கல் அபாயமானது. அன்றைய பொழுதின் கசடுகளை வடிகட்டித் தெளிய , படுக்கையில் விழுந்தவுடன் அலைபேசியில் சில பாடல்களைக் கேட்பேன். தூக்கம் வந்து கண்களைச் சுழற்றும்.
அந்தப் பாடல்கள் அதன் வரிசையில் :
1. கண்ணன் ஒரு கைக்குழந்தை ... பத்ரகாளி
2. கனாக் காணும் கண்கள் மெல்ல ... அக்னி சாட்சி
3. மனைவி அமைவதெல்லாம் ... மன்மத லீலை
4. உறவுகள் தொடர்கதை ... அவள் அப்படித்தான்
5. அழகே அழகு தேவதை ... ராஜ பார்வை
6. லாலி லாலி லாலி ... சிப்பிக்குள் முத்து
7. தாழம்பூவே வாசம் வீசு ... கை கொடுக்கும் கை
8. தெய்வீக ராகம் ... உல்லாசப் பறவைகள்
9. புத்தம் புது  காலை ... அலைகள் ஓய்வதில்லை
10. என் இனிய பொன் நிலாவே ... மூடுபனி

ஒரு நாளேனும் அந்த எட்டாவது பாடலைக் கடந்து விட வேண்டும் என பிரயத்தனம் செய்கிறேன். ம்ஹூம், முடிவதேயில்லை.



28 October 2010

நாரில் பூத்த மலர்கள்

கவிக்கோ அப்துல் ரகுமான் தன மனைவியின் பிரிவில் எழுதியது ...
என் மனைவியிடம் மனைவிக்கு உரிய இலக்கணங்கள் இருந்தது இல்லை. எங்கள் 46 ஆண்டு இல்லற வாழ்க்கையில் நாங்கள் சண்டை போட்டுக் கொண்டதே இல்லை . நீங்கள் நம்ப மாட்டீர்கள் என்று தெரியும். ஆனால் அதுதான் உண்மை. இந்தப் பெருமை என்னைச் சாராது; அவளையே சாரும்.
நான் சில நேரத்தில் கோபத்தில் நெருப்பை உமிழ்ந்தாலும், அவள் அமைதியாக இருந்து விடுவாள். இது என்னைச் செருப்பால் அடித்தது போல் இருக்கும். ' இவளைப் போய்த் திட்டிவிட்டோமே!' என்று நான் இரண்டு நாள் வருத்தப்படுவேன்.
பூ வேண்டும், புடவை வேண்டும் , நகை வேண்டும் என்று அவள் ஒருநாள் கூடக் கேட்டதே இல்லை.
பாலைவனத்துக்கேன்றே திட்டமிட்டுப் படைக்கப்பட்ட ஒட்டகம் போல் எனக்கு என்றே திட்டமிட்டுப் படைக்கப்பட்டவள் என் மனைவி. அவள் போய் விட்டாள். நான் வெறும் பாலைவனமாய் நிற்கிறேன்.
என் மனைவி எனக்குக் கிடைத்த பிறகு நான் இறைவனிடம் பிரார்த்திக்க வேண்டிய அவசியமே இல்லாமல் போய்விட்டது.
அவள் நான் கேளாமலே கிடைத்த வரம். அவள் மூலம் இறைவன் எனக்கு எல்லாவற்றையும் கொடுத்து விட்டான் அவளைத் தவிர ,வேறு யாரும் என்னோடு வாழ்ந்திருக்க முடியாது.
மின்சாரம் கண்ணுக்குத் தெரிவது இல்லை. ஆனால், நமக்குத் தேவைப்படும் போது விளக்கை எரிக்கிறது; விசிறியைச் சுழற்றுகிறது. என் மனைவி மின்சாரமாக இருந்தாள்
என் மனைவி இளமையில் மதுவாக இருந்தாள்;நடுமையில் பாலாக இருந்தாள்; முதுமையில் மருந்தாக இருந்தாள்.
என்னை நேசித்த ஆத்துமாவை ஆத்துமா நேசித்தது. அவள் தனது சுவாசப் பையை அதற்கு உணவாகப் பரிமாறினாள். மூச்சு விடச் சிரமப்பட்டுக் கொண்டிருந்தவள், கடைசியில் மூச்சை விட்டு விட்டாள்.
என்னதான் உயிர் உடலோடு ஒட்டி உறவாடிக் கொண்டிருந்தாலும் , ஒருநாள் சொல்லாமல் கொள்ளாமல் போய் விடுகிறது.
அப்படித்தான் அவள் போய் விட்டாள்.
-கவிக்கோ அப்துல் ரகுமான் விகடனில்

22 October 2010

வாழும் அனுபவம் - 5




                    மழை ஓய்ந்த பின்னிரவில்
                    அலை ஓய்ந்த மனதோடு
                    இதமான குளிர் அறையில்
                    மிதமான உண்டி முடித்து
                    உடலுறுத்தா தலையணையில்
                    வாகாய்த் தலை சாய்த்து
                    அதிராத பாடலின்
                    சுகராகப் பின்னணியில்
                   அவிழாத புதிரவிழ்க்கும்
                    புதிதாய் ஒரு புதினத்தை
                    வாசிக்கும் அனுபவமே
                    வாழும் அனுபவமாம் !

வாழும் அனுபவம் - 3


                  
                   அதிகாலை கண் விழிக்கும்
                   வழக்கத்திற்கு விதி விலக்காய்
                  'ஞாயிறு' வந்து எனை எழுப்பும்
                   ஞாயிற்றுக் கிழமை விடியல்தனில்
                   சாம்பல் நிற கனவு பிரித்து
                   சோம்பல் முறிக்க சோம்பலுற்று 
                   நட்போடு மனைவி தரும்
                   'பெட் காபி' தனை சுவைத்து
                   சூடான செய்தி தரும்
                   செய்தித்தாள் தனைப் பிரித்து
                   வாசிக்கும் தருணமே
                   வாழும் அனுபவமாம் !

வாழும் அனுபவம் - 4



                  விடுமுறைத் தினத்தின்
                  பிற்பகல் ஓய்வுக்குப் பின்
                  உடல் சூடு தணிய
                  சிறியதொரு குளியலிட்டு
                  தளர்வான ஆடையணிந்து
                  சலனமில்லா மனதுடன்
                 முதிர்வான கோவில் சென்று
                  அதிர்வான இடம் அமர்ந்து
                  தன்னைத் தான் மறந்து
                  தன்னுள் தான் கரைந்து
                  தியானிக்கும் கணமே
                 வாழும் அனுபவமாம் !

வாழும் அனுபவம் - 2




                       மழை பெய்யும் மாலை
                       மனைவி மக்கள் உடன் சூழ
                      என் வீட்டு முற்றத்தின்
                      முன் பக்கம் அமர்ந்து
                      அழைப்புகள் தவிர்க்க
                      அலை பேசி அணைத்து
                      சிறு கோப்பைத் தேநீருடன்
                      ஒருவரை ஒருவர் பருகி
                      வருங்கால நினைப்பின்றி
                      குறுங்கதைகள் பல பேசி
                      மகிழும் அனுபவமே
                      வாழும் அனுபவமாம் !

வாழும் அனுபவம் - 1


            அதிகாலைப் பனி விலக்கி
            ஆதவன் உதிக்கும் முன்,
            ஆழ்நிலைத் துயில் விலக்கி
            ஆனந்தக் குளியல் நடத்தி
            உடன் குளிர்ந்த உடம்புடன்
            கனம் குறைந்த மனதுடன்
            இஷ்ட தெய்வம் தொழுது
            நெற்றியிலிட்ட நீறுடன்
            ஸ்கந்த குரு கவசம்
            சன்னமாய்க் காதில் ஒலிக்கக்
            கேட்கும் அனுபவமே
            வாழும் அனுபவமாம்!

20 August 2010

திருஷ்டி

குளிப்பாட்டி அலங்கரித்த
அழகுக்குப் பயந்து
கன்னத்தில் வைத்தாகிவிட்டது
கருஞ்சாந்துப் போட்டு.

அள்ளியெடுத்துக் கொஞ்சும்
அண்டை வீட்டாருக்காக
அடுப்பில் போட்டாகிவிட்டது
படிகாரமும் உப்பும்
மிளகும் தடவி.

அறியாமல் பட்ட
கண்களுக்குமாய்
தெரு வாசலில் கொளுத்தியாகிவிட்டது
தலையைச் சுற்றிய கற்பூரம்.

எல்லாம் செய்தது முடித்த பின்னும்
யோசித்து மாய்கிறாள் தாய்...
குழந்தையின் மீது விழுந்த
தன திருஷ்டிக்கு
என்ன பரிகாரம் செய்வதென்று?

-ஆனந்த விகடன்

மனம் மலரட்டும்-1

'காயமே' இது பொய்யடா !
உலகம் உங்களைக் காயப்படுத்த நீங்கள் தான் அனுமதிக்கிறீர்கள்.நீங்கள் அனுமதிக்கும் அளவுக்குத்தான் ஒருவர் உங்களைக் காயப்படுத்த முடியும். ஹிப்னாடிசம் மாதிரியானது இது. நீங்கள் அனுமதித்தால் மட்டுமே உங்களை யாரும் ஹிப்னாடைஸ் செய்ய முடியும்.இங்கு உலகம் என்பதில் உங்கள் குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்கள் எல்லோரும் அடங்குவார்கள் ஏன், கடவுளும் கூட இந்தப் பட்டியலில் அடக்கம்தான்! வேதாந்தம் ஒரு படி மேலே போய் , ' யாராலும் உங்களைக் காயப்படுத்த முடியாது' என்று சொல்கிறது. ஆத்மாவாகிய 'நான்' யாரையும் காயப்படுத்துவதில்லை; தானும் காயப்படுவதில்லை என்பது அதன் சாரம்.
கடவுள் நமக்கு ஞாபக சக்தியைக் கொடுத்திருப்பது சுய மதிப்பீடு செய்வதற்காக அல்ல.வாழ்க்கையில் தேவையானவற்றை மறக்காமல் இருப்பதற்காகவே! அதாவது , அலுவலகத்திலிருந்து வீடு திரும்பியதும் உங்கள் மனைவியையும் குழந்தைகளையும் மறந்து விடாமல் அடையாளம் காண்பதற்காக!
நினைவுகள் நீங்கள் அல்ல. வாழ்க்கையில் சில எண்ணங்களைப் பதிவு செய்து கொள்கிறீர்கள். இவற்றில் சில ரம்மியமாக இருக்கின்றன.வேறு சில நெருடலாக அமைகின்றன.மனம் பக்குவப்பட்டிருந்தால் , வாழ்க்கையில் எல்லாம் ரம்யமாக இருக்காது என்கிற அடிப்படை உண்மையைப் புரிந்து கொள்ள முடியும். பக்குவப்பட்டவர்கள் இந்த இருவகையான அனுபவங்களையும் சம நிலையில் ஏற்றுக் கொள்கிறார்கள்.
பக்குவப்பட்ட மனிதரிடம் எந்த வித குற்ற உணர்வும் இருப்பதில்லை.அவர் காயப்படுவதுமில்லை, மற்றவர் தன்னைக் காயப்படுத்த எந்தச் சூழ்நிலையிலும் அவர் அனுமதிப்பதில்லை. காரணம், ' தன்னிடம் அடுத்தவர்கள் இப்படித்தான் பழக வேண்டும் ' என்று எதிர்பார்ப்பவர்கள் மட்டுமே காயப்படுகிறார்கள்.
உங்கள் மீது அடுத்தவர் ஏன் குற்றம் சுமத்த வேண்டும்? உங்களுக்கு ஏன் அவர் தொந்தரவு கொடுக்க வேண்டும்? உங்களைக் கண்டு ஏன் அவர் மிரள வேண்டும்? உங்களைப் பார்த்து ஏன் அவர் பொறாமைப்பட வேண்டும்? இந்தக் கேள்விகளைக் கேட்க ஆரம்பித்த உடனேயே அடுத்தவர் மீது உங்களுக்கு அனுதாபம் ஏற்படத் துவங்கும். அவருடைய இயல்புகளை எளிதில் புரிந்து கொண்டுவிடுவீர்கள். அவர்களை எப்படி சமாளிக்க வேண்டும் என்பதயும் கற்றுக் கொண்டு விடுவீர்கள். சில சமயம் அவர்களிடமிருந்து விலகி இருக்க வேண்டி வரும்.சில சமயம் அவர்களுடன் ஏதாவது பேச வேண்டி வரும்.சில நேரத்தில் அவர்களிடம் பொறுமை காக்க வேண்டி வரும். நீங்கள் காயப்படாத வரையில் உங்கள் விருப்பப்படி எதையும் செய்யலாம்.
-சுவாமி தயானந்த சரஸ்வதி

24 July 2010

bala - we love you


சமீபத்தில் யுவகிருஷ்ணா தனது வலைப்பூவில் எழுத்தாளர் பாலகுமாரனைப் பற்றி ஒரு பதிவிட்டிருந்தார். மிக அருமையான பதிவு.(http://www.luckylookonline.com/2010/07/blog-post_15.html).அதைப் படித்த வாசகர்கள் பலருக்கும் பாலகுமாரனின் முந்தைய புதினங்களை மீள் வாசிப்பு செய்யும் எண்ணம் வந்திருக்கும். எனக்கும் வந்தது.

எடுத்துப் படிக்கலாம் என எழுந்த போது , பாலகுமாரன் நாவல்கள் உட்பட அனைத்துப் புத்தகங்களையும் மூட்டை கட்டி பரணில் வைத்துள்ளது நினைவிற்கு வந்தது. காரணம் , சமீப காலமாக அதிகரித்து வரும் சந்தோஷின் அட்டகாசம். பயலுக்கு கோபம் வந்தாலும் , சந்தோஷம் வந்தாலும், அவனுடைய துரித இலக்கு என்னுடைய புத்தக வரிசையாகத்தானிருக்கிறது. ஒரே நேரத்தில் இரண்டு புத்தகங்களை எடுத்துத் திசைக்கொன்றாக வீசுவதில் சூரன். சிதறிக் கிடக்கும் புத்தகங்களை நாங்கள் அடுக்கி வைத்த சிறிது நேரத்திலேயே ,அவற்றைக் கலைத்து, கீழே பரப்புவதில் அவனுக்கு அலாதி இன்பம். முன் பின் அட்டையின்றி களையிழந்து காணப்படும் என் புத்தகங்கள் அனைத்தும் அவன் அராஜகத்துக்கு சாட்சி. எனவே,ஒரு நாளின் சில பல மணித்துளிகளை விழுங்கும் இந்தப் போராட்டத்தைத் தவிர்க்க , வேறு வழியேயின்றி புத்தகங்களை பரண்வாசிகளாக்கி விட்டோம்.

தேடிப் படிக்க ஆயாசமாக இருந்தாலும், படித்தே ஆக வேண்டும் என்ற வேட்கை உந்த , புத்தகங்களைத் தேடத் துவங்கிய போது யுவகிருஷ்ணா சொன்னது நினைவுக்கு வந்தது..."22 ஆண்டுகள் கழித்து வாசித்தாலும் முந்தைய பாராவில் சொல்லியிருக்கும் உணர்வை கொடுக்கிறானே? ஓரிரவைக் கொன்று அவன் வாழ்க்கையை வாசிக்கச் செய்கிறானே? பாலகுமாரா நீ தெய்வம்!"

கல்லூரி இறுதியாண்டின் போது எனக்கு பாலகுமாரனின் எழுத்துக்கள் அறிமுகமாயின.அட, பரவாயில்லையே...இந்த ஆளும் நம்மைப் போலவே சிந்திக்கிறாரே என்ற வியப்பு தான் மேற்கொண்டு அவரைப் படிக்கத் தூண்டிற்று. இது சற்று சுய பெருமிதம் போல் தோன்றினாலும் , இன்று அவரின் தீவிர வாசகர்களாக இருப்பவர்கள் பலருக்கும் இந்த அனுபவம் பொருந்தும். அதன் பின்னான தொடர் வாசிப்புகளில் , அவர் எழுத்தின் வீச்சு என்னை அசர வைத்தது.வாழ்க்கையில் எல்லோரும் எல்லாவற்றையும் அனுபவித்து , பின் தெளிவெதென்பது இயலாது. தன்னுடைய அனுபவத்தின் சாரத்தையும் , கற்றுக் கொண்ட பாடத்தையும் பிறர் பயன் பெறும் வகையில் எடுத்துரைப்பதென்பது சிலருக்கு மட்டுமே கை வரும்.சில கதைக் களங்களைத் தேர்வு செய்து ,தனது வாழ்வானுபவத்தின் அடிப்படையில் விளைந்த சிந்தனைகளை , கதை மாந்தர்கள் வாயிலாக , மிக நேர்த்தியான சொல்லாடலின் மூலம் பல்லாயிரம் வாசகர்களுக்கு புதினங்களாக வழங்கியவர் பாலகுமாரன்.சமகால சமூகத் தளத்திலிருந்து மட்டுமல்லாது ,புராணங்களிலிருந்தும் களங்களைத் தேர்வு செய்து, அதில் தொய்வெழாத வண்ணம் சம்பவங்களைக் கோர்த்து,வாசிப்பவனின் மன ஆழத்தை ஊடுருவும் வகையில் கதைகளை நெய்தவர். கதை நடக்கும் சூழலுக்குள் நம்மை இழுக்க , அந்த சூழல் சார்ந்த தகவல்களை அதன் உண்மைத் தன்மை மாறாமல் தரும் நோக்கில் அவரின் மெனக்கெடல்கள் அபாரம்.

கிட்டத்தட்ட அவரது அனைத்து நாவல்களும் என்னிடம் இருக்கின்றன. பலவற்றில் அடிக்கோடிட்டு வைத்திருக்கிறேன். நேரம் வாய்க்கும் போதெல்லாம் அவற்றை மீண்டும் மீண்டும் வாசிக்கிறேன்.வாசிக்கும் போது அவை தருகிற மன நிலையை எழுத்தில் விவரிக்க இயலாது.சிலருக்கு வழங்கப்படும் பட்டங்கள் மற்றும் அடைமொழிகள் அவர்களுக்கு சற்றும் பொருந்தாமல் துருத்திக் கொண்டு நிற்கும். ஆனால் சித்தர்கள் செய்யும் வசியம் போல் , வாசகனை வசியப்படுத்தும் எழுத்துக்களைப் படைக்கும் இவருக்கு 'எழுத்துச் சித்தர்' என்ற பட்டம் மிகப் பொருத்தமே.

ஆனால் சமீப காலமாக அவரது படைப்புகளை உளமாற நேசிக்க முடியவில்லை என்பது வாசகர்களின் கருத்து.அதற்குக் காரணம் அவருள் ஏற்பட்டிருக்கும் ஆன்மீக மலர்ச்சி என்றே நினைக்கிறேன். எழுத்தாளனது மிகப் பெரிய பலம் கதை சொல்லும் தந்திரத்தில் தான் உள்ளது.எதற்குப் பின் எதைச் சொல்ல வேண்டும், எந்த இடத்தில் எந்த வார்த்தை வர வேண்டும் போன்ற நகாசு வேலைகளே வாசகர்களின் மனம் கவர்ந்த படைப்பு உருவாகக் காரணமாகும். பாலகுமாரனது ஆகச் சிறந்த படைப்புகள் எல்லாம் அவர் அந்த தந்திரத்தை மிக நேர்மையான முறையில் கையாண்ட போது உருவானவை.காலப்போக்கில் அவருள் ஏற்பட்ட ஆன்மீக மலர்ச்சி அந்தத் தந்திரம் ஏதுமின்றி உள்ளது உள்ளபடியே அவரை எழுதச் செய்கிறது.இதை அவரது தீவிர வாசகர்களால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை என்பதுதான் உண்மை.மாலன் ஒரு முறை சொன்னது போல் , ஒரு தலைமுறையே பாலகுமாரனுக்குக் கடமைப்பட்டிருக்கிறது.நான் சொல்ல விழைவதும் இதைத் தான்...பாலகுமாரனின் இந்தத் தலைமுறை வாசகர்கள் அவரது எழுத்துக்களை அடுத்த தலைமுறைக்கும் கொண்டு செல்ல வேண்டும்.அதுவே நாம் செய்யும் பிரதி பலனாக இருக்க முடியும்.

அன்று பரணில் தேடிப் பிடித்து நான் வாசித்த புத்தகம் , 'என் கண்மணித்தாமரை'. ஆகா....அற்புதம்...அற்புதம்!வாசிப்பு கொடுத்த உற்சாகத்தில் பரணில் உள்ள அனைத்துப் புத்தகங்களையும் எடுத்து மீண்டும் புத்தக அடுக்கில் வைத்து விட்டேன்.

ஏதேனும் நாவலை ஆழ்ந்து படித்தால் அதன் கதை மாந்தர்கள் அன்றைய கனவில் வருவது வழக்கம். ஆனால் அன்று அபிராமி பட்டருக்குப் பதிலாக என் கனவில் வந்தது சந்தோஷ். இன்னும் பேச்சு வராத பிள்ளை கனவில் என்னிடம் பொரிந்து தள்ளினான்.
" நான் எவ்வளவு கஷ்டப்பட்டு book shelf ஐ காலி பண்ணி சுத்தமா வைக்கிறேன்....நீங்க மறுபடி மறுபடி அதைக் குப்பையா ஆக்குறீங்க....ஏம்ப்பா....?"

09 June 2010

ஐந்து நிமிடமும் ஆறாம் பக்கமும்...



கடந்த வாரம் வெள்ளி மற்றும் சனிக் கிழமைகளில் மட்டும் மதுரை - தேனி சாலையில் நிகழ்ந்த விபத்துகளில் இருபது பேர் இறந்து போனார்கள். இந்தச் செய்தி எனக்கு நெருக்கமானதற்கு காரணம் , அந்த நாட்களில் அதே சாலையில் நானும் பயணம் செய்து தேனி போய் வந்ததுதான். சென்ற வேலை முடிந்து ,சனியன்று இரவு குற்றுயிரும் குலையுயிருமாய் வீடு வந்து சேர்ந்தேன். இதற்கான காரணம் பதிவின் இறுதியில்......

முன்பெல்லாம் விபத்து பற்றிய செய்திகள் குடி தண்ணீர் லாரியின் வருகை போல் எப்போதாவதுதான் தென்படும். அவைகளில் பெரும்பாலானவற்றிற்கு குடி தண்ணீர் லாரிகள் தான் காரணகர்த்தாவாகவும் இருக்கும். ஆனால் தற்போது செய்தித்தாளின் ஆறாவது பக்கத்தை விபத்துச் செய்திகளுக்காகவே அர்ப்பணிக்கிறார்கள்.மேலும் அனைத்து ரக வாகனங்களும் விபத்துக்கு உள்ளாகின்றன. விதம் விதமான விபத்துகளில் , கொத்துக் கொத்தாய் மனிதர்கள் மரித்துப் போகும் அவலத்தை தினசரி பத்திரிகையில் காணும் போது , வாகனங்களில் வெளியே சென்று வீடு திரும்பும் ஒவ்வொருவரும் அதிர்ஷ்டசாலிகள் என்றே தோன்றுகிறது.

நான் தினமும் கல்லூரிக்குச் செல்லும் மதுரை புறவழிச்சாலையில் (?!) போக்குவரத்து விதிகளை யாரும் துளியும் மதிப்பதில்லை. எந்நேரமும் வாகனங்கள் ஒன்றையொன்று முத்தமிடக் கூடிய சாத்தியம் அதிகம். கிட்டத்தட்ட இருநூறு சதவீதம் விழிப்போடு செல்ல வேண்டிய நிலை.முதல் நூறு , நாம் மற்றவர்களை இடித்து விடாமல் இருக்க. இரண்டாவது நூறு , மற்றவர்கள் நம் மீது.

கண்ணெதிரே நடந்தேறும் விபத்துக்களை கண்டாலும் , நாமெல்லாம் விபத்துக்கு விதி விலக்கு என்பதான மனநிலையும், அதீத வேகமும் , தேவையற்ற கவனச் சிதறல்களுமே , அதுவரை பார்வையாளராக இருந்தவரை பாதிப்புக்குள்ளானவராக்குகிறது.

தேவைகளும் , வாங்கும் சக்தியும் அதிகரித்துள்ள இன்றைய காலத்தில் , ஓரளவே வாகனம் ஓட்டக் கற்றுத் தெளிந்த நடுத்தரக் குடும்பத்தைச் சார்ந்தவர் கூட நான்கு சக்கர வாகனங்களை உபயோகிக்கும் நிலையில், விபத்துக்கான சாத்தியக் கூறுகள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது என்பது தான் நிதர்சனம்.ஆகவே, எனக்கெல்லாம் ஒன்றும் நடக்காது என்ற மனோபாவம் மாறி , காலனின் கண் பார்வையில் தான் நித்தமும் பயணம் செய்கிறோம் என்ற தன் பயம் இருக்க வேண்டியது காலத்தின் கட்டாயம்.

அடுத்ததாக , அதீத வேகம். ஒவ்வொரு மணித்துளியும் money துளிகளாய் கருதப்படும் இன்று, எதிலும் வேகம் என்பதும் தவிர்க்க முடியாதது.இருந்தாலும், சரியான திட்டமிடல்களால் இதனை சமன் செய்ய முடியும்.என் வீட்டிலிருந்து 8.30 க்கு கிளம்பினால் மிக நிதானமாக கல்லூரிக்கு வர முடியும் என்பது உறுதி செய்யப்பட்ட உண்மை. ஆனால், எவ்வளவோ முயற்சி செய்தும் 8.40 க்கு முன்பாக என்னால் புறப்பட முடிய வில்லை.முதலில் கூறிய 'எனக்கெல்லாம்....' என்ற எண்ணமே இதற்கு காரணம்.எனவே, இப்போதெல்லாம் என்னுடைய கைக் கடிகாரம் பத்து நிமிடங்கள் முன்னதாகவே காட்டும் படி வைத்திருக்கிறேன்.இது சற்று சிறுபிள்ளைத்தனமாக இருப்பினும், எனக்கு இது ஒத்து வருகிறது.

மூன்றாவது, கவனச் சிதறல். 'வாகனம் ஓட்டும் போது அலை பேசி அழைத்தால் எடுக்காதீர்கள்; அழைப்பது எமனாகக் கூட இருக்கலாம்' என்று கூவிக் கூவி விளம்பரம் செய்தாலும் யாரும் செவி மடுப்பதில்லை. பேசிக் கொண்டே ஓட்டினால் அபராதம் என மிரட்டினாலும் யாரும் அஞ்சுவதாயில்லை.அபராதத்தைச் செலுத்தி விட்டு உரையாடலைத் தொடர்கிறார்கள்.நான் போக்குவரத்தின் போது வரும் எந்த ஒரு அழைப்பையும் தவிர்த்து விடுவேன்.(ம்...மனைவியின் அழைப்பு விதி விலக்கு!).

ஆக, நாம் பார்வையாளரா அல்லது பாதிப்படைந்தவரா ? நமக்கு அமைதியான வாழ்க்கையா அல்லது அகால மரணமா?வந்த பின் நொந்து போவதா அல்லது வரும் முன் காத்துக் கொள்வதா?....இந்த கேள்விகளுக்கான பதில் பெரும்பாலான ஆட்டோக்களின் பின்புறத்தில் காணக் கிடைக்கும் அந்த வாசகம் தான். " உன் வாழ்க்கை உன் கையில்".

நிற்க. அன்று நான் குற்றுயிரும் குலையுயிருமாய் வீடு வந்து சேர்ந்ததற்குக் காரணம்,எந்த விபத்துமில்லை, நான் பயணம் செய்த பேருந்தில் ஒளிபரப்பப்பட்ட தொடர்ச்சியான பாடல்கள்தான். குருவி - 5, வேட்டைக்காரன் - 5, சுறா - 5 , கச்சேரி ஆரம்பம் - 5 .

08 June 2010

பத்து பாத்திரம்

நான் ரசிக்கும் பத்து கதாபாத்திரங்கள்


ஜானி - ஸ்ரீதேவி
கடலோரக் கவிதைகள் - ரேகா
சிந்து பைரவி - சுஹாசினி
அழகன் - பானுப்ரியா
எங்க ஊரு பாட்டுக்காரன் - நிஷாந்தி
கையளவு மனசு - கீதா
இவன் - சௌந்தர்யா
பூ - பார்வதி
அங்காடித் தெரு - அஞ்சலி

மகதீரா - காஜல்

கதாபாத்திரங்கள் என்று பொதுவில் தலைப்பிட்டு விட்டு வெறும் நாயகிகளை மட்டும் பட்டியலிட்டது நெருடுகிறது என்று நீங்கள் கேட்பதிலும் நியாயம் இருக்கிறது. இதே போல் எனக்குப் பிடித்த பத்து கதாநாயகர்களின் பட்டியலும் இடலாம் தான். ஆனால் , உங்களுக்குப் படிக்க அத்தனை சுவாரஸ்யமாக இராது.

04 June 2010

மழை



ஒன்றுமில்லா வெறுமையும் , எல்லாமுமான பூரணமும் ஒரு சேர மனதை ஆக்கிரமிக்கும் ஒரு பெரு மழைப் பொழுது எனக்குக் கிட்டியிருக்கிறது. சிங்கத்தின் பலத்த கர்ஜனையும் துள்ளலுமாய் என் எதிரே மழை ஆர்ப்பரித்துக் கொண்டிருக்கிறது. ஒரு கையில் தேநீர் கோப்பையும் , மறு கையில் எனக்குப் பிடித்த தமிழ்ப் புதினமுமாய் என் வீட்டு முற்றத்தின் நாற்காலியில் நான். எத்தனை நாளாயிற்று....என்னைப் பொறுத்த வரை நான் இக்கணம் சொர்க்கத்தில் இருக்கிறேன் அல்லது என்னைச் சுற்றி சொர்க்கம் இருக்கிறது.

துரதிர்ஷ்டவசமாக , பல நேரங்களில் , ஏதேனும் பேருந்து நிலையத்திலோ அல்லது நெடுஞ்சாலையின் ஓரத்திலோ ஒரு வித பாதுகாப்பின்மையுடன் தான் மழையை எதிர் கொள்ள நேர்கிறது. அப்பொழுதெல்லாம் , மழை பற்றிய சக மனிதர்களின் அங்கலாய்ப்புகளுடன் , என் நிலை பற்றிக் கவலையோடிருக்கும் வீட்டினரின் நினைவும் சேர்ந்து ,மழைக்கும் எனக்குமான தொலைவை அதிகப்படுத்தி விடுகின்றன.கடந்த மழை நாட்களில் நடந்த நிகழ்வுகளும் , அவை தொடர்பான உணர்வுகளும் எந்நேரமும் அசை போடத் தக்கவை.

அத்தகைய நினைவு தரும் போதத்தில் இருக்கும் இந்நிலையில் , மழை தொடர்பான 'ஆதவன் தீட்சண்யா'வின் எதிர்மறைக் கவிதை மனதை அறுத்துச் செல்கிறது.
--------------------------------------------------
மிஞ்சிப்போனா என்ன
சொல்லிற முடியும் உன்னால
இந்த மழையைப் பத்தி

ஓதமேறுன கொட்டாய்ல
கோணில மொடங்கியும்
குளுர்ல நடுங்கியிருக்கியா

உங்கூட்டுப் பொண்டுக
நமுத்த சுள்ளியோட சேந்தெரிஞ்சு
கஞ்சிக் காய்ச்சியிருக்காங்களா
கண்ணுத்தண்ணி உப்பு கரிக்க

ஈரஞ்சேராம எளப்பு நோவெடுத்து
செத்த சொந்தத்த எடுக்க வக்கத்து
பொணத்தோட ராப்பகலா
பொழங்கித் தவிச்சதுண்டா

ஒழவுமாடொன்னு கோமாரியில நட்டுக்க
ஒத்தமாட்டைக் கட்டிக்கிட்டு
உயிர்ப் பதற அழுதிருக்கா உங்குடும்பம்

எதுக்கும் ஏலாம
உஞ்செல்லப்புள்ளையோட
சிறுவாட்டக் களவாண்டு
சீவனம் கழிஞ்சிருக்கா

தங்கறதுக்கு வூடும்
திங்கறதுக்கு சோறுமிருந்துட்டா
சவுரியத்துக்கு எழுதுவியாடா 'ம.......னே'
ஒண்ணு தெரிஞ்சுக்கோ
மழை ஜன்னலுக்கு வெளியதான்
எப்பவும் பெய்யுது உனக்கு
எங்களுக்கு எங்க பொழப்பு மேலயே.
-- ----------------------------------------------------







20 May 2010

இந்தி - யா ?!


ஒரு கருத்தரங்கு நிமித்தமான சென்ற வாரத்திய எனது தில்லி பயணம் சிறு ரகளையுடன் தான் ஆரம்பமானது. சென்னை விமான நிலைய வெளி வளாகத்தில் உள்ள மோசமான உணவகத்தில் மிக மோசமான காலை சிற்றுண்டி முடித்து , முதல் ஆளாய் இண்டிகோ நிறுவனத்தின் அனுமதிச் சீட்டு வாங்கி , இரண்டு மணி நேர புத்தக வாசிப்பிற்குப் பின் சோதனைச் சாவடி அடைந்தேன். வழக்கமான நியதிகள் முடிந்து எனது பயணப் பெட்டிக்காகக் காத்திருக்கையில் அந்த சோதனை அதிகாரி என்னை அழைத்தார். அழைப்பில் அதிகாரம் தொனித்தது. நான் என்னவென்று கேட்பதற்கு முன்னமே ' உங்கள் பெட்டியில் கத்திரி  இருக்கிறது. அதை வெளியே எடுங்கள்' என்றார்.நான் மிக அமைதியாக , ஆனால் அழுத்தமாக ' அதற்கு வாய்ப்பே இல்லை...பெட்டியில் உள்ள எனது 'belt buckle' தான் உங்கள் 'scanner' காண்பித்திருக்கும்' என்றேன். அவரின் வினவலுக்கு என்னிடம் அதிர்ச்சியையும் , பதற்றத்தையும் எதிர்பார்த்தவர் எனது பதிலைக் கேட்டு எரிச்சலுற்றவராய் மீண்டும் அதையே கூறினார் . நானும் பதிலுக்கு வாதாடினேன். விவாதம் தொடரவே , ஒரு கட்டத்தில் அவரே பெட்டியைத் திறந்து உள்ளிருந்த 'shaving kit' டிலிருந்து அதை எடுத்தார். கத்திரி! ! ஆசிரியரிடம் திட்டு வாங்கிய முதல் 'ரேங்க்' மாணவன் போல மெளனமாக பெட்டியை மூடி விட்டுத் தவறுக்கு மன்னிப்பு கோரினேன்.
பொதுவாக நான் வெளியூர் செல்லும் சமயங்களில் என் மனைவிதான் பயணப் பெட்டியை தயார்செய்வது வழக்கம். முந்தைய இரவு கூட ' கத்திரியை  எடுத்து வைக்கட்டுமா ? ' என்றவளிடம் 'வேண்டாம்' என்றுதான் சொன்னேன். பின் ' shaving kit ல் கத்திரி எப்படி வந்தது? விமானப் பணிப்பெண்களின் வழமையான உபசரிப்புகளில் மனம் லயிக்காமல் அந்தக் கேள்வியே எனக்குள் சுழன்றடித்தது.

தில்லி சென்று இறங்கியதும் செல்ல வேண்டிய இடம் நோக்கி 'ஆட்டோ' ஒன்றில் பயணம் செய்தேன். தேசிய நெடுஞ்சாலையில் அமைந்த அந்தப் பயணம் என் வாழ்வில் மறக்க முடியாதது. சற்று முன் வந்திறங்கிய விமானத்தின் வேகத்திற்குச் சற்றும் சளைக்காமல் வாகனம் பறந்து கொண்டிருந்தது. நீளமான கார்கள் இருபுறமும் எங்களை முந்திச் சென்று கொண்டேயிருந்தன. ஏதோ பந்தயத்தில் கலந்து கொண்ட பிரமை. எல்லோரும் எங்கே இவ்வளவு வேகமாகப் போகிறார்கள் என்ற எனது ஆச்சரியத்திற்கு வெகு சீக்கிரமே விடை கிடைத்தது. ஆம்..நெடுஞ்சாலை முடிவில் ஆரம்பித்த போக்குவரத்து நெரிசல் நகருக்குள் செல்லச் செல்ல உக்கிரமானது. அரை மணி நேரத்திற்கும் மேலாக ஊர்ந்து செல்ல வேண்டிய நிலை. அப்போதுதான் கவனித்தேன், தில்லியில் ஓடும் அனைத்து வாகனங்களும் ஏதாவது ஒரு பாகத்தில் சேதப்பட்டிருந்தன.

ஒரு வழியாய் தங்குமிடம் போய்ச் சேர்ந்து , சிறிது இளைப்பாறிய பின்னர் , காலாற நடந்து வரலாமென கிளம்பினேன். தெருக்களினூடே சிதறிக் கிடந்த தில்லியின் இயல்பு வாழ்க்கையை என் பார்வையால் சேகரித்த படி சென்றேன். தில்லி இளைஞர்கள் 'கான்'களை imitate செய்கிறார்கள். 'பான்'களை மென்று துப்புகிறார்கள். நிறைய சிகரெட் பிடிக்கிறார்கள்.தெரு முனைகளில் கூட்டமாய் நின்று அரட்டை அடிக்கிறார்கள். யுவதிகள் துப்பட்டாஅணிய மறுக்கிறார்கள். அணிந்தாலும் , அணிந்த காரணத்தை மறக்கிறார்கள். வண்டியில் பழம் விற்கும் கிழவர்கள் 'மால்குடி டேஸ்' ஐ ஞாபகப்படுத்துகிறார்கள். உடல் பருத்த பெண்மணிகள் இனிப்பு வகையறாக்களை சுவைத்துக் கொண்டேயிருக்கிறார்கள். கட்டட வேலை செய்யும் தொழிலாளிகள் கூட முழுக்கை சட்டை அணிகிறார்கள். உணவில் பெரும்பாலும் தவறாது பால் , தயிர் சேர்த்துக் கொள்கிறார்கள். தெருக்களில் நடை பாதைக் கடைகளும் , நெடுஞ்சாலைகளில் உயர் தர விடுதிகளும் நிறைந்திருக்கின்றன. அரிதாகக் காணப்படும் நடுவாந்திர உணவகங்கள் எப்போதும் காலியாகவே இருக்கின்றன. நம் ஊரில் தெருவுக்கு இரண்டு தேநீர்க் கடைகள் இருப்பது போல , தில்லியில் தெருவுக்கு இரண்டு பழ ரசக் கடைகள். அங்கொன்றும் இங்கொன்றுமாகத் தென்படும் தேநீர்க் கடைகளில் மிகத் தரமான தேநீர் தயாரிக்க மெனக்கிடுகிறார்கள்.

அப்படித் தயாரிக்கப்பட்ட சுத்தமான தேநீர் அருந்திய படியே , எனக்கும் அந்த ஆட்டோக்கார சர்தார்ஜிக்கும் இடையில் இந்தியில் நடந்த உரையாடலை அசை போட்டேன்.செல்லுமிடம் , தூரம் , கட்டண விவரம், பேரம் இத்யாதிகள் முடிந்த பிறகு கேட்டார்.
"நீங்க எங்கிருந்து வர்றீங்க ?"
"தமிழ் நாட்டிலிருந்து...."
" தமிழ் நாட்டுல இப்ப எல்லோரும் இந்தி பேசுறாங்களா? "
அவர் குரலில் ஏகத்துக்கு கிண்டலும் கேலியும் குடி கொண்டிருந்தன. நான் சிறிது கோபத்துடன் கேட்டேன்.
"தில்லியில இப்ப எல்லோரும் தமிழ் பேசுறாங்களா? "
என் கோபத்தை அவர் உணர்ந்திருக்க வேண்டும். அதன் பின் மௌனியாகி விட்டார்.
அவர் கேலிக்காகக் கேட்டாலும் அதில் பொதிந்திருந்த உண்மை சுடவே செய்தது.
வடக்கத்தியர்கள் தமிழர்களை அவ்வளவாக மதியாததற்கு அல்லது வெறுப்பதற்கு முதன்மையான காரணம் , அவர்களின் வேலை வாய்ப்புகளை நாம் பறித்துக் கொள்கிறோம் என்ற எண்ணத்தை விட , நாட்டின் அனைத்து மாநிலங்களும் தங்கள் தாய் மொழிக்கு அடுத்தபடியாக இந்திக்கு முக்கியத்துவம் கொடுத்திருக்க, தமிழகம் மட்டும் அதை ஒதுக்கியதே ஆகும். இந்தி மொழி எதிர்ப்பிற்கு ஆயிரம் நியாயங்கள் கூறப்பட்டாலும் , வேற்றுமையில் ஒற்றுமை காணும் தேசத்தின் பெரும்பான்மையான மக்கள் ஏற்றுக் கொண்ட மொழியை , தமிழகம் புறக்கணிப்பு செய்ததின் விளைவை இன்றைய தலைமுறை அனுபவிக்கிறது. கொல்கொத்தா, மும்பை , கான்பூர் , தில்லி போன்ற வட மாநில நகரங்களில் , இந்தி தெரியாதவன் இந்தியனே இல்லை என்ற அம்மக்களின் நிலைப்பாட்டை நான் நேரில் உணர்ந்திருக்கிறேன்.

சென்ற முறை கான்பூர் ஐ.ஐ.டி யில் அனைத்து மாநில கல்லூரி ஆசிரியர்களும் பங்கேற்ற தொழில் நுட்ப பயிற்சி வகுப்பில் ஆங்கிலத்தில் கலந்துரையாடல் நடந்து கொண்டிருந்தது. சுவை கூடிக் கொண்டே போக , மெல்ல மெல்ல உரையாடல் மொழி ஆங்கிலத்தில் இருந்து இந்திக்கு மாறியது. என்னால் அவ்வளவு வேகமாக பேச முடியா விட்டாலும் , விவாதத்தின் முழுச் சாரத்தையும் என்னால் விழுங்க முடிந்தது.(பள்ளியில் படிக்கும் போது private tution மூலம் இந்தி படித்திருக்கிறேன்.) இம்மியளவும் இந்தி புரியாத தமிழகத்தைச் சேர்ந்த சில பேர் 'தயவு செய்து ஆங்கிலத்தில் பேசுங்கள் ' என கோரிக்கை விடுக்க , அதற்குப் பிறகு அந்த முழு வாரமும் அவர்களிடம் யாரும் எந்த மொழியிலும் பேச வில்லை. முற்றிலுமாகப் புறக்கணித்தார்கள். இவ்வளவு ஏன்...நம் அண்டை மாநிலங்களான கேரளா, ஆந்திரா மற்றும் கர்நாடகாவில் கூட இந்தி தெரிந்தால் ஓரளவு சமாளித்து விடலாம்.
தற்போது நிலைமை சற்று மாறி வருவதாகவே தோன்றுகிறது. மெட்ரிக் பள்ளிகள் எண்ணிக்கையில் பெருத்து விட்ட இன்றைய நிலையில் , பள்ளியில் ஆங்கிலத்திற்கு அடுத்தபடியாக இந்தி கற்றுக் கொடுக்கிறார்கள். ஆனால் தமிழுக்கு முழுக்கு போடுகிறார்கள் என்ற ஆதங்கம் தனிப் பதிவிற்கானது.
யோசித்தபடியே தேநீரைக் குடித்து விட்டு தங்குமிடம் விரைந்தேன்.

மறுநாள் கருத்தரங்கு முடிந்து மீண்டும் விமானமேறி சென்னை வந்து அங்கிருந்து பேருந்தில் மதுரை வந்து சேர்ந்தேன்.வீட்டிற்குள் நுழைந்தவுடன் என் வாயிலிருந்து உதிர்ந்த வார்த்தைகள் என்னவாக இருந்திருக்கும் என்று யூகிக்க முடிகிறதா? அதே தான்...சென்னை விமான நிலையத்தில் நடந்ததை என் மனைவியிடம் விளக்கியதும் அவள் மிக நிதானமாகச் சொன்னாள்.
"ஆமா...shaving kit ல் எல்லாத்தோட சேர்த்து கத்திரியும்  இருந்தது...வெளிய எடுத்து வைக்கட்டுமான்னு கேட்டேன்...நீங்கதான் வேணாம்னு சொன்னீங்க..."
முதலில் தமிழில் தெளிவாகப் பேசிப் பழக வேண்டும் என்று எனக்கு நானே சொல்லிக் கொண்டு பல் விளக்கப் போனேன்.

22 March 2010

தினைத்துணை செய்யும் உதவி ....



" ஏம்மா ....திராட்சை என்ன விலை?..."
" கிலோ அறுபது ரூபா..கால் கிலோ பதினைந்து ரூபா..."
" என்னது...அறுபது ரூபாயா ...போன வாரம் அம்பது ரூபாதானே..."
"விலைவாசி எல்லாம் கூடிப் போச்சும்மா..நான் என்னம்மா செய்யட்டும்..."
" கால் கிலோ பதிமூணு ரூபான்னு கொடு...இல்லைன்னா ஆளை விடு..."
"சரி..சரி..எடுத்துக்கோம்மா..."



சுட்டெரிக்கும் வெயிலில் வரிசையாய் அமர்ந்து கூவிக் கூவிப் பழம் விற்கும் (பெரும்பாலும் நடுத்தர வயதான) பெண்மணியிடம் மேற்கண்ட உரையாடலை நீங்கள் நிகழ்த்தியிருக்கக் கூடும். பல்பொருள் அங்காடிக்குச் சென்று அத்தியாவசியத் தேவைக்கு அடுத்தபடியான பொருட்களை , வில்லை சொன்ன விலையில் வாங்கி வரும் நாம் , உச்சி வெயிலில் உண்ணக் கூட நேரமின்றி (அல்லது உணவின்றி) தொண்டை நீர் வற்ற வியாபாரம் செய்பவர்களிடம் பேரம் பேசி நம் பராக்கிரமத்தை நிலை நாட்டுகிறோம்.

இது சார்ந்த எனது ஆற்றாமைகளில் சில.

1. அவளைக் கடந்து போகும் எல்லோரும் பழம் வாங்குவதில்லை.
2. business world, cut throat competition என்றெல்லாம் சொல்கிறோமே , அது நிஜத்தில் நடப்பது அங்கேதான். நூறு அடி தூரத்திற்குள் அவளுக்குப் போட்டியாகப் பத்து பேர். எனவே , அவளிடம் வாங்கும் எல்லோரும் அவள் சொல்லும் விலையில் வாங்குவதில்லை.
3. அப்படியே வாங்கினாலும் நாள் முடிவில் அனைத்துப் பழங்களும் விற்பதில்லை. வெம்பிப் போன பழத்தோடும் , மனதோடும் வீடு திரும்பும் நிலை.
4.அவள் ஒன்றும் திராட்சைத் தோட்டத்திற்கு சொந்தக்காரி இல்லையே ! அடுத்த நாள் வியாபாரம் தொடர , அதிகாலையில் பழங்களை அன்றைய நிலவரப்படி குறிப்பிட்ட விலையில் கொள்முதல் செய்ய வேண்டும்.

ஒரு சிறு உதாரணத்தை எடுத்துக் கொள்வோம்.
ஒரு வருடம் முன்பு.......
மொத்த வியாபாரியிடமிருந்து கொள்முதல் விலை - 9 ரூபாய். (கால் கிலோ)
அவள் விற்கும் விலை - 12 ரூபாய்.
லாபமான 3 ரூபாய் , வெம்பிய மற்றும் அழுகிய பழங்களின் நஷ்டம் போக 2 ரூபாயாகிறது.
வண்டிக் கட்டணம் /பேருந்துக் கட்டணம் போக நிகர லாபம் ஒன்றரை ரூபாயாகிறது.
சராசரியாக ஒரு நாளைக்கு எத்தனை கால் கிலோ விற்கும் என்று எண்ணி பார்த்து அன்றைய நிகர லாபத்தைக் கணக்கிட்டுக் கொள்ளுங்கள். இந்த நிகர லாபத்தில் தான் அவள் தானும் சாப்பிட்டு , குழந்தைகளையும் வளர்க்க வேண்டும். சாப்பாடு மட்டும் போதுமா...வீட்டு வாடகை , துணிமணி, பள்ளிக் கட்டணம் , மருத்துவ செலவு , இத்யாதி, இத்யாதிகள்.....கணவன் ஒழுங்காயிருந்தால் போயிற்று , அல்லாமல் குடிகாரனாக இருந்தால் ...அவனையும் சமாளிக்க வேண்டும். இத்தனை துயரத்திலும் அவள் தன்னிடம் இருக்கும் முதல் 9 ரூபாயைத் தொட முடியாது . அடுத்த நாள் கொள்முதல் செய்ய அதுதானே மூலதனம்.

கடந்த ஒரு வருட காலத்தில் , பல காரணங்களால் அனைத்து தரப்பிலும் விலையேற்றம் தவிர்க்க முடியாததாகி விட்டது.
தற்போதைய கொள்முதல் விலை - 12 ரூபாய்.
விற்கும் விலை - 15 ரூபாய்.
அழுகல் போக, ஒரு வருடத்திற்கு முந்தைய அதே லாபமான 2 ரூபாயில் , வண்டிக் கட்டணம் உட்பட, அரிசி, பருப்பு, வாடகை, மற்றும் மருத்துவ செலவு அனைத்தும் ஒன்று விடாமல் உயர்ந்து விட்ட நிலையில் , அவள் தனது ஒவ்வொரு நாளையும் கழிக்க வேண்டிய நிலை.

சற்றே எண்ணிப் பாருங்கள். வருடத்திற்கு ஒரு முறை ஊதிய உயர்வு பெரும் நம்மில் எத்தனை பேர் இது போன்ற வியாபாரிகளிடம் திருப்தியாகிறோம். விலை சரிதானா.. எடை சரிதானா ...நல்ல பழம் தானா....என ஏகப்பட்ட 'தானா'க்களுடன் தான் நகர்கிறோம். அவர்கள் கேட்பது இந்த வருடத்திற்கான பஞ்சப்படியல்ல நண்பர்களே , பஞ்சம் அவர்கள் வீட்டுப் படி ஏறாமல் இருப்பதைத்தான் . சமூகத்தின் அனைத்துத் தளங்களிலும் ஏற்படும் விலையேற்றத்தை சகித்துக் கொள்ளும் நாம் , மானத்தோடு உயிர் வாழும் ஒரே நோக்கில், தங்கள் சக்திக்கு மீறி உழைத்து , உடன் வாழும் பிரஜைகளின் உதவியை ஒவ்வொரு நாளும் மறைமுகமாக நாடும் இவர்களுக்கு செய்யும் உதவி வேறு என்னவாக இருக்க முடியும், பேரம் பேசாமல் வாங்குவதைத் தவிர ?!

13 March 2010

வாழ்வின் நீளம்


                     நூற்றியிருபது கேட்ட
                    கடைக்காரனிடம்
                    நூறு தருவதாகச் சொல்கிறான்
                    வாங்க வந்தவன்...
                    பேரம் படியாமையின் கணங்களில்
                    நீள்கிறது
                    கறிக்கோழி ஒன்றின் வாழ்க்கை!

                     -நாவிஷ் செந்தில்குமார்



09 March 2010

அகவைத் தகவல்



காதோரம் முளை விடும்
சிறு நரையை இள நரையென
எத்தனை நாள் தேற்றுவது?

முன்னந்தலை முடி உதிர்தலை
'மூன்று நாளாய்த்தான் இப்படி' என
எத்தனை நாள் ஏய்ப்பது?

தன் இருப்பை முன்னிறுத்தும்
வயிற்றுத் தொப்பை தனை
அழகுத் தொப்பை என
எத்தனை நாள் ஏமாற்றுவது?

அகவை முதிர்வால் வரும்
முகவாய்க் கதுப்பை
அக அழகின் புற அழகென
எத்தனை நாள் புளுகுவது?

'அண்ணா' என்றழைத்த
சிறு பிள்ளைகள்
'அங்கிள்' என்றழைப்பதை
எத்தனை நாள் மறப்பது?

இத்தனைக்கும் முத்தாய்ப்பாய்
'முதுமையின் தொடக்கம்' என்ற
உங்கள் கூற்றை
'இளமையின் உச்சம்' என்று
நான் மறுப்பதை
எப்போதுதான் நிறுத்துவது?

08 March 2010

நாலு அணாவும் நானும்

இணையம் வழி, அலைபேசி வழி என பரிணாம வளர்ச்சி கண்டிருக்கும் இன்றைய பணப் பரிமாற்றம் , பத்து ஆண்டுகளுக்கு முன்பு வரை ஒரு பாமரனின் கற்பனைக்கெட்டாத அளவிலேயே இருந்தது.சம்பாதித்த பணத்தைக் கையில் வாங்கித் தொட்டுத் தடவி , பாதுகாத்து செலவழித்த காலத்தில் இருந்த பணத்தின் மதிப்பும் , பணத்தின் மீதான மக்களின் மதிப்பும், இன்றைய கண நேரப் பரிமாற்றத்தில் குறைந்து வருவதாகவே தோன்றுகிறது.இன்று ,பத்தாயிரம் ரூபாயை, கையில் எடுத்துச் சென்று பொருட்கள் வாங்குவதிலும் , வங்கி அட்டையை எடுத்துச் சென்று வாங்குவதிலும் சிறிது வித்தியாசம் இருக்கத்தான் செய்கிறது .

சரி , விஷயத்திற்கு வருவோம்.ஒரு சிறு குவளை தேநீரின் குறைந்த பட்ச விலை ஐநூறு காசுகளாக உள்ள இன்றைய நிலையில் ,வெறும் இருபத்தைந்து காசுகளுக்கு ஏதாவது ஒன்று விற்கப்படுகிறதா? இல்லையென்பது உங்கள் பதிலாக இருப்பின் ,சமீப காலத்தில் நீங்கள் தபால் அலுவலகம் சென்று யாருக்கும் பணம் அனுப்பவில்லை என்று அர்த்தம்.


திருநெல்வேலியில் என் மனைவியின் தூரத்து உறவினர் பொறுப்பேற்று நடத்தும் கோவில் திருவிழாவிற்கு நன்கொடை அனுப்பும் பொருட்டு , நவீன வசதிகள் தவிர்த்து , பணவிடை(மணி ஆர்டர்) அனுப்ப வேண்டிய நிர்ப்பந்தம். அவசர வேலைகளுக்கு மத்தியில் தபால் அலுவலகம் செல்ல மதியம் இரண்டு மணியாயிற்று. இதற்கு மேல் பணம் அனுப்ப முடியாது என்ற அவ நம்பிக்கையுடன் உள்ளே நுழைந்தேன்.அவசர கதியில் இயங்கிக் கொண்டிருந்த அலுவலகப் பெண் 'என்ன வேண்டும்' என்று சைகையில் கேட்டார்.நான் சொன்னவுடன், ஏதோ பரம விரோதியைப் போல் ஒரு பார்வையை வீசிவிட்டு , 'சீக்கிரம் ஃபார்ம் வாங்கி ஃபில்லப் பண்ணிக் கொடுங்க , நேரமாச்சு ...ஒரு ஃபார்ம் 25 பைசா...சீக்கிரம் கொடுங்க.. ' என்றார்.நான் 'ஙே ' என்று விழித்தேன். 25 பைசாவிற்கு எங்கே போவது...வகுப்பிற்கு வேறு நேரமாகிவிட்டது...பரபரப்பாக பையைத் துழாவி, ஒரு ரூபாய் நாணயத்தை எடுத்துக் கொடுத்தேன்.

"சில்லறை இல்லையே , சார் " என்றவர் அவர் காரியத்தில் மும்முரமானார். சுற்றி முற்றிப் பார்த்தேன் . கர்ணனே என் எதிரில் வந்தாலும் இந்த நிலையில் அவரால் எனக்கு உதவ முடியாதென்பது புரிந்தவுடன், " சரி ..நாலு ஃபார்ம் கொடுங்க..." என்றேன். கடினமான சூழ்நிலையை என் சமயோசிதத்தால் வென்று விட்ட பூரிப்பு என் இதழில் புன்னகையானது. அந்தப் பெண்ணோ சிறிதும் சலனமின்றி நான்கு படிவங்களைக் கொடுத்தார். நான்கில் ஒன்றை பூர்த்தி செய்து கொடுத்து , இதர நியமனங்கள் முடிந்த பின் கிளம்பத் தயாரானேன். அப்படியே வந்திருக்க வேண்டும். கிளம்பும் முன் மீதமிருந்த மூன்று படிவங்களைப் பார்த்ததும் 'நம்மிடமிருந்தால் வீணாகிவிடுமே' என்ற எண்ணம் தோன்ற , உடனே அவற்றை எடுத்து நீட்டினேன்.'மறுபடியும் என்னய்யா' என்பது போல் பார்வையை வீசினார். "இது எனக்குத் தேவையிருக்காது... உங்ககிட்ட இருந்தா உபயோகப்படும்... " நான் மிகப் பொறுப்பானவன் என்ற த்வனி என் குரலில் இருந்தது. அதை அந்தப் பெண் ரசிக்கவில்லை.

"இல்ல ...இத நாங்க வாங்க கூடாது...வாங்கினா கணக்கு டேலி (?!) ஆகாது.'
இந்தப் பதிலை எதிர்பாராத நான் மீண்டும் 'ஙே'....

பின் என்ன நினைத்தாரோ, 'அப்ப ஒரு நிமிஷம் இருங்க ...அந்தக் ஃபார்மைக் கொடுங்க ' என்று வாங்கிக் கொண்டவர் கிட்டத்தட்ட மூன்று முழு நிமிடங்கள் தேடி ,மீதி சில்லறையான எழுபத்தைந்து பைசாவைக் கொடுத்தார்.

அதைப் பெற்றுக் கொண்ட நான் ஓட்டமும் நடையுமாக வகுப்பிற்கு வந்து சேர்ந்தேன்.வரும் போது எனக்குள் பல கேள்விகள். படிவத்தை இவ்வளவு குறைவான மதிப்பிற்கு தருவதை விட அதை இலவசமாகவே கொடுத்துவிடலாம் அல்லது புழக்கத்தில் இல்லாத 25 பைசாவிற்குப் பதிலாக ஒரு படிவத்தின் விலையை ஒரு ரூபாய் ஆக்கினால் மக்களுக்கும் சுலபம், நஷ்டத்தில் மக்கள் சேவையாற்றும் அஞ்சல் துறைக்கும் வருமானம் . ஒரு வேளை எனக்குத்தான் 25 பைசாவின் உண்மையான மதிப்பு தெரியவில்லையா? அல்லது அந்தப் படிவங்களை அவர் திரும்பப் பெற மறுக்கும் அளவிற்கு அவ்வளவு துல்லியமாக கணக்கு வழக்குகள் பராமரிக்கப்படுகின்றனவா?அல்லது அந்தப் பெண் அலுவலர் மட்டும் கடமையை அவ்வளவு கடமையாய் ஆற்றுகிறாரா? எது எப்படியோ ,அன்று எனக்குத் தேவையில்லாத டென்ஷனும் (மன அழுத்தம்?) , சில பல நிமிடங்களின் வீணடிப்பும் செய்த அந்த 25 பைசா இன்னும் என் பணப்பையிலேயே உள்ளது. அந்த மதிப்பிற்கான பொருள் எங்காவது கிடைத்தால் அதை வாங்கியே ஆவது என்ற தீர்மானத்தில் இருக்கிறேன்.உங்களுக்குத் தெரிந்தால் 50 பைசா செலவு செய்து எனக்கு அஞ்சலட்டை அனுப்புங்கள்.