ஒரு கருத்தரங்கு நிமித்தமான சென்ற வாரத்திய எனது தில்லி பயணம் சிறு ரகளையுடன் தான் ஆரம்பமானது. சென்னை விமான நிலைய வெளி வளாகத்தில் உள்ள மோசமான உணவகத்தில் மிக மோசமான காலை சிற்றுண்டி முடித்து , முதல் ஆளாய் இண்டிகோ நிறுவனத்தின் அனுமதிச் சீட்டு வாங்கி , இரண்டு மணி நேர புத்தக வாசிப்பிற்குப் பின் சோதனைச் சாவடி அடைந்தேன். வழக்கமான நியதிகள் முடிந்து எனது பயணப் பெட்டிக்காகக் காத்திருக்கையில் அந்த சோதனை அதிகாரி என்னை அழைத்தார். அழைப்பில் அதிகாரம் தொனித்தது. நான் என்னவென்று கேட்பதற்கு முன்னமே ' உங்கள் பெட்டியில் கத்திரி இருக்கிறது. அதை வெளியே எடுங்கள்' என்றார்.நான் மிக அமைதியாக , ஆனால் அழுத்தமாக ' அதற்கு வாய்ப்பே இல்லை...பெட்டியில் உள்ள எனது 'belt buckle' தான் உங்கள் 'scanner' காண்பித்திருக்கும்' என்றேன். அவரின் வினவலுக்கு என்னிடம் அதிர்ச்சியையும் , பதற்றத்தையும் எதிர்பார்த்தவர் எனது பதிலைக் கேட்டு எரிச்சலுற்றவராய் மீண்டும் அதையே கூறினார் . நானும் பதிலுக்கு வாதாடினேன். விவாதம் தொடரவே , ஒரு கட்டத்தில் அவரே பெட்டியைத் திறந்து உள்ளிருந்த 'shaving kit' டிலிருந்து அதை எடுத்தார். கத்திரி! ! ஆசிரியரிடம் திட்டு வாங்கிய முதல் 'ரேங்க்' மாணவன் போல மெளனமாக பெட்டியை மூடி விட்டுத் தவறுக்கு மன்னிப்பு கோரினேன்.
பொதுவாக நான் வெளியூர் செல்லும் சமயங்களில் என் மனைவிதான் பயணப் பெட்டியை தயார்செய்வது வழக்கம். முந்தைய இரவு கூட ' கத்திரியை எடுத்து வைக்கட்டுமா ? ' என்றவளிடம் 'வேண்டாம்' என்றுதான் சொன்னேன். பின் ' shaving kit ல் கத்திரி எப்படி வந்தது? விமானப் பணிப்பெண்களின் வழமையான உபசரிப்புகளில் மனம் லயிக்காமல் அந்தக் கேள்வியே எனக்குள் சுழன்றடித்தது.
தில்லி சென்று இறங்கியதும் செல்ல வேண்டிய இடம் நோக்கி 'ஆட்டோ' ஒன்றில் பயணம் செய்தேன். தேசிய நெடுஞ்சாலையில் அமைந்த அந்தப் பயணம் என் வாழ்வில் மறக்க முடியாதது. சற்று முன் வந்திறங்கிய விமானத்தின் வேகத்திற்குச் சற்றும் சளைக்காமல் வாகனம் பறந்து கொண்டிருந்தது. நீளமான கார்கள் இருபுறமும் எங்களை முந்திச் சென்று கொண்டேயிருந்தன. ஏதோ பந்தயத்தில் கலந்து கொண்ட பிரமை. எல்லோரும் எங்கே இவ்வளவு வேகமாகப் போகிறார்கள் என்ற எனது ஆச்சரியத்திற்கு வெகு சீக்கிரமே விடை கிடைத்தது. ஆம்..நெடுஞ்சாலை முடிவில் ஆரம்பித்த போக்குவரத்து நெரிசல் நகருக்குள் செல்லச் செல்ல உக்கிரமானது. அரை மணி நேரத்திற்கும் மேலாக ஊர்ந்து செல்ல வேண்டிய நிலை. அப்போதுதான் கவனித்தேன், தில்லியில் ஓடும் அனைத்து வாகனங்களும் ஏதாவது ஒரு பாகத்தில் சேதப்பட்டிருந்தன.
ஒரு வழியாய் தங்குமிடம் போய்ச் சேர்ந்து , சிறிது இளைப்பாறிய பின்னர் , காலாற நடந்து வரலாமென கிளம்பினேன். தெருக்களினூடே சிதறிக் கிடந்த தில்லியின் இயல்பு வாழ்க்கையை என் பார்வையால் சேகரித்த படி சென்றேன். தில்லி இளைஞர்கள் 'கான்'களை imitate செய்கிறார்கள். 'பான்'களை மென்று துப்புகிறார்கள். நிறைய சிகரெட் பிடிக்கிறார்கள்.தெரு முனைகளில் கூட்டமாய் நின்று அரட்டை அடிக்கிறார்கள். யுவதிகள் துப்பட்டாஅணிய மறுக்கிறார்கள். அணிந்தாலும் , அணிந்த காரணத்தை மறக்கிறார்கள். வண்டியில் பழம் விற்கும் கிழவர்கள் 'மால்குடி டேஸ்' ஐ ஞாபகப்படுத்துகிறார்கள். உடல் பருத்த பெண்மணிகள் இனிப்பு வகையறாக்களை சுவைத்துக் கொண்டேயிருக்கிறார்கள். கட்டட வேலை செய்யும் தொழிலாளிகள் கூட முழுக்கை சட்டை அணிகிறார்கள். உணவில் பெரும்பாலும் தவறாது பால் , தயிர் சேர்த்துக் கொள்கிறார்கள். தெருக்களில் நடை பாதைக் கடைகளும் , நெடுஞ்சாலைகளில் உயர் தர விடுதிகளும் நிறைந்திருக்கின்றன. அரிதாகக் காணப்படும் நடுவாந்திர உணவகங்கள் எப்போதும் காலியாகவே இருக்கின்றன. நம் ஊரில் தெருவுக்கு இரண்டு தேநீர்க் கடைகள் இருப்பது போல , தில்லியில் தெருவுக்கு இரண்டு பழ ரசக் கடைகள். அங்கொன்றும் இங்கொன்றுமாகத் தென்படும் தேநீர்க் கடைகளில் மிகத் தரமான தேநீர் தயாரிக்க மெனக்கிடுகிறார்கள்.
அப்படித் தயாரிக்கப்பட்ட சுத்தமான தேநீர் அருந்திய படியே , எனக்கும் அந்த ஆட்டோக்கார சர்தார்ஜிக்கும் இடையில் இந்தியில் நடந்த உரையாடலை அசை போட்டேன்.செல்லுமிடம் , தூரம் , கட்டண விவரம், பேரம் இத்யாதிகள் முடிந்த பிறகு கேட்டார்.
"நீங்க எங்கிருந்து வர்றீங்க ?"
"தமிழ் நாட்டிலிருந்து...."
" தமிழ் நாட்டுல இப்ப எல்லோரும் இந்தி பேசுறாங்களா? "
அவர் குரலில் ஏகத்துக்கு கிண்டலும் கேலியும் குடி கொண்டிருந்தன. நான் சிறிது கோபத்துடன் கேட்டேன்.
"தில்லியில இப்ப எல்லோரும் தமிழ் பேசுறாங்களா? "
என் கோபத்தை அவர் உணர்ந்திருக்க வேண்டும். அதன் பின் மௌனியாகி விட்டார்.
அவர் கேலிக்காகக் கேட்டாலும் அதில் பொதிந்திருந்த உண்மை சுடவே செய்தது.
வடக்கத்தியர்கள் தமிழர்களை அவ்வளவாக மதியாததற்கு அல்லது வெறுப்பதற்கு முதன்மையான காரணம் , அவர்களின் வேலை வாய்ப்புகளை நாம் பறித்துக் கொள்கிறோம் என்ற எண்ணத்தை விட , நாட்டின் அனைத்து மாநிலங்களும் தங்கள் தாய் மொழிக்கு அடுத்தபடியாக இந்திக்கு முக்கியத்துவம் கொடுத்திருக்க, தமிழகம் மட்டும் அதை ஒதுக்கியதே ஆகும். இந்தி மொழி எதிர்ப்பிற்கு ஆயிரம் நியாயங்கள் கூறப்பட்டாலும் , வேற்றுமையில் ஒற்றுமை காணும் தேசத்தின் பெரும்பான்மையான மக்கள் ஏற்றுக் கொண்ட மொழியை , தமிழகம் புறக்கணிப்பு செய்ததின் விளைவை இன்றைய தலைமுறை அனுபவிக்கிறது. கொல்கொத்தா, மும்பை , கான்பூர் , தில்லி போன்ற வட மாநில நகரங்களில் , இந்தி தெரியாதவன் இந்தியனே இல்லை என்ற அம்மக்களின் நிலைப்பாட்டை நான் நேரில் உணர்ந்திருக்கிறேன்.
சென்ற முறை கான்பூர் ஐ.ஐ.டி யில் அனைத்து மாநில கல்லூரி ஆசிரியர்களும் பங்கேற்ற தொழில் நுட்ப பயிற்சி வகுப்பில் ஆங்கிலத்தில் கலந்துரையாடல் நடந்து கொண்டிருந்தது. சுவை கூடிக் கொண்டே போக , மெல்ல மெல்ல உரையாடல் மொழி ஆங்கிலத்தில் இருந்து இந்திக்கு மாறியது. என்னால் அவ்வளவு வேகமாக பேச முடியா விட்டாலும் , விவாதத்தின் முழுச் சாரத்தையும் என்னால் விழுங்க முடிந்தது.(பள்ளியில் படிக்கும் போது private tution மூலம் இந்தி படித்திருக்கிறேன்.) இம்மியளவும் இந்தி புரியாத தமிழகத்தைச் சேர்ந்த சில பேர் 'தயவு செய்து ஆங்கிலத்தில் பேசுங்கள் ' என கோரிக்கை விடுக்க , அதற்குப் பிறகு அந்த முழு வாரமும் அவர்களிடம் யாரும் எந்த மொழியிலும் பேச வில்லை. முற்றிலுமாகப் புறக்கணித்தார்கள். இவ்வளவு ஏன்...நம் அண்டை மாநிலங்களான கேரளா, ஆந்திரா மற்றும் கர்நாடகாவில் கூட இந்தி தெரிந்தால் ஓரளவு சமாளித்து விடலாம்.
தற்போது நிலைமை சற்று மாறி வருவதாகவே தோன்றுகிறது. மெட்ரிக் பள்ளிகள் எண்ணிக்கையில் பெருத்து விட்ட இன்றைய நிலையில் , பள்ளியில் ஆங்கிலத்திற்கு அடுத்தபடியாக இந்தி கற்றுக் கொடுக்கிறார்கள். ஆனால் தமிழுக்கு முழுக்கு போடுகிறார்கள் என்ற ஆதங்கம் தனிப் பதிவிற்கானது.
யோசித்தபடியே தேநீரைக் குடித்து விட்டு தங்குமிடம் விரைந்தேன்.
மறுநாள் கருத்தரங்கு முடிந்து மீண்டும் விமானமேறி சென்னை வந்து அங்கிருந்து பேருந்தில் மதுரை வந்து சேர்ந்தேன்.வீட்டிற்குள் நுழைந்தவுடன் என் வாயிலிருந்து உதிர்ந்த வார்த்தைகள் என்னவாக இருந்திருக்கும் என்று யூகிக்க முடிகிறதா? அதே தான்...சென்னை விமான நிலையத்தில் நடந்ததை என் மனைவியிடம் விளக்கியதும் அவள் மிக நிதானமாகச் சொன்னாள்.
"ஆமா...shaving kit ல் எல்லாத்தோட சேர்த்து கத்திரியும் இருந்தது...வெளிய எடுத்து வைக்கட்டுமான்னு கேட்டேன்...நீங்கதான் வேணாம்னு சொன்னீங்க..."
முதலில் தமிழில் தெளிவாகப் பேசிப் பழக வேண்டும் என்று எனக்கு நானே சொல்லிக் கொண்டு பல் விளக்கப் போனேன்.
தலைப்பும், பயணம் பற்றியும் எழுதியது நன்றாக இருக்கிறது.
ReplyDelete//தமிழில் தெளிவாகப் பேசிப் பழக வேண்டும்//.... சில நேரங்களில் அப்படிதான் தோணுது.