30 December 2011

சரிகமபதநி


"புவன்...நீ பெரிய்ய்ய்ய ஆளா வருவடா..." - இன்று அதிகாலை என்னிடமிருந்து உதிர்ந்த இந்த வார்த்தைகளுக்குக் காரணம் இல்லாமலில்லை.

பள்ளி அரையிறுதி விடுமுறை , கல்லூரி பருவ விடுமுறை, மார்கழிப் பனி , மாக்கோலம் , கிறிஸ்துமஸ் பண்டிகை.................

டிசம்பர் மாதம் என்றதும் சட்டென்று உங்கள் நினைவிற்கு வருவதின் பட்டியல் பெரும்பாலும் இப்படித்தானிருக்கும். இதில் விடுபட்டுப் போன 'மார்கழி மகா உற்சவம்' பற்றிய என்னுடைய ஏக்கம் எழுத்தில் வடிக்க முடியாதது. சென்னையின் தெருக்களில் இசைப் பேராறு கரைபுரண்டோடும் இந்த ' december season' நிகழ்வுகள் பற்றி ஊடகங்கள் வாயிலாக அறியும் பொழுது இந்த ஏக்கம் பன்மடங்காகிறது.


படிப்பு, வேலை , குடும்பம் ,குழந்தைகள் , வீடு , இன்ன பிற வசதிகள் என சமூகத்தில் மதிப்புடன் வாழத் தேவையானவற்றை அடைந்திருந்தாலும் மனம் அடைய விரும்பும் உச்ச பட்ச சந்தோஷத்தின் எல்லை வரையறுக்க இயலாததாகவும் , இன்னும் வேண்டும் இன்னும் வேண்டும் என்ற தவிப்பு தவிர்க்க இயலாததாகவும் இருக்கிறது. ருசியான உணவு, அமைதி தரும் ஆன்மிகம் , அருமையான புத்தகம் , இனிமையான இசை , ஆகச் சிறந்த திரைப்படம், ஆழமான நட்பு என மகிழ்ச்சி தரும் தளங்களை மனம் தொடர்ந்து பரீட்சித்துக் கொண்டேதானிருக்கிறது. இதில் நான் தவற விட்டதும் , இனிமேல் கைக்கொள்ள முடியாததுமான இசை ஞானத்தைப் பற்றி நினைக்கும் போதெல்லாம் என்னுள் சொல்லவொண்ணா துயறேருகிறது.

கேட்கும் நல்ல திரைப்பாடல்களைச் சிலாகிப்பதும் , உற்சாகமான மனநிலையில் அவற்றை அசை போடுவதும் தான் என்னுடைய இசை அறிவின் எல்லை. இசை பற்றிய நுணுக்கமான கட்டுரைகளை எவ்வளவு முயற்சித்தாலும் புரிந்து கொள்ள இயலாத பொழுது எனக்கு நேரிட்டிருக்கிற உன்னத உலகத்தின் இழப்பை என்னால் உணர முடிகிறது. கல்யாணியும் , காம்போதியும் , பைரவியும் , பந்துவராளியும் இந்த ஜன்மத்தில் வெறும் வார்த்தைகளாக மட்டுமே என்னுடன் உறவாடும் பாக்கியம் பெற்றிருக்கிறேன். நித்யஸ்ரீயும் , டி.எம்.கிருஷ்ணாவும் , சௌம்யாவும், சுதா ரகுநாதனும் செய்யும் ஆலாபனைகள் என்னுள் வெறும் சப்தங்களாகவே வந்து விழும் பாமர நிலையிலிருக்கிறேன். வர்ணம், கிருதி, கீர்த்தனை , தில்லானா, தரு, தரங்கம், ராகம், தானம், பல்லவி போன்ற பதங்களுக்கு பொருள் தெரிந்து செரிப்பதே பெரும் அறிவு என்றாகிட்டது.


இன்று சின்ன சின்ன வாண்டுகள் எல்லாம் 'சரிகமபதநி' போடுவதைப் பார்க்கும் போது சற்றுப் பொறாமையாகவே இருக்கிறது. அவ்வப்போது நினைத்துக் கொள்வேன், நாம் தவற விட்டதை, நமக்குத் தவறி விட்டதை , நம் பிள்ளைகளுக்காவது கொடுக்க வேண்டும் என்று. புற ஆதாயத்திற்காக இல்லாவிட்டாலும் அக மலர்ச்சிக்காகவாவது பிள்ளைகளுக்கு முறையான இசையை பழக்கப்படுத்த வேண்டும். நேரம் ஒதுக்கி இசை வகுப்புகளுக்கு அனுப்ப வேண்டும். இன்று அதிகாலை இவ்வாறெல்லாம் எண்ணம் பீறிட , அருகில் விளையாடிக் கொண்டிருந்த புவனிடம் கேட்டேன்.

" செல்லம் ... உனக்குப் பிடிச்ச பாட்டை அப்பாக்கிட்ட பாடிக் காட்டு , பார்ப்போம்."

" கொலவெறி...கொலவெறி...கொலவெறி... கொலவெறிடி..."

"புவன்...நீ பெரிய்ய்ய்ய ஆளா வருவடா..."

28 December 2011

இதை விட பெரிதாக

'வாழ்க்கை எப்படி போகிறது'
என்று கேட்டான்
ரொம்ப நாள் கழித்து
சாட்டில் வந்த நண்பன்.
முன் தினம் சரவணபவனில்
பெரிய தோசை வேண்டுமென
அடம் பிடித்து வாங்கிச்
சாப்பிட முடியாமல்
முழித்துக் கொண்டிருந்த
சிறுமியைப் பற்றிச் சொன்னேன்.
'அப்புறம் பார்க்கலாம்' என்று
மறைந்து போனான்.
என்னிடம் பெரிதாக
எதையேனும்
எதிர்பார்க்கிறார்களோ.

-முகுந்த் நாகராஜன்

சொர்க்கம்

          சற்றே சாய்வான நாற்காலியும்
          நகுலனும்
          சுசீலாவும்
          மழையும்
          மரமும்
          வேறென்ன வேண்டும் எனக்கு .

           -முத்துசாமி பழனியப்பன்

நான் அறிந்த ஓஷோ


தற்போது வாசித்துக் கொண்டிருக்கும் நூல்களைப் பற்றி 'சொர்க்கத்தின் வாசலில்' என்ற தலைப்பின் கீழ் பகிரலாம் என்று எண்ணம். தலைப்புக்கு வலு சேர்க்கும் விதமாக,ஏற்கெனவே நான் எழுதிய 'வாழும் அனுபவ'த்தை இங்கு எடுத்தாள்கிறேன்.


மழை ஓய்ந்த பின்னிரவில்

அலை ஓய்ந்த மனதோடு

இதமான குளிர் அறையில்

மிதமான உண்டி முடித்து

உடலுறுத்தா தலையணையில்

வாகாய்த் தலை சாய்த்து

அதிராத பாடலின்

சுகராகப் பின்னணியில்

அவிழாத புதிரவிழ்க்கும்

புதிதாய் ஒரு புதினத்தை

வாசிக்கும் அனுபவமே

வாழும் அனுபவமாம்.


'புத்தக வாசிப்பு வாழ்க்கைக்கு உதவுமா , ஆம் எனில்.. எப்படி? ' - வாசிப்பனுபவம் இல்லாத அபாக்கியசாலிகளின் மண்டையைக் குடையும் இந்தக் கேள்விக்கு பதில் , இரு வாரங்களுக்கு முந்தைய ஆனந்தவிகடனில் உள்ளது. அவர்கள் குறைந்த பட்சம் அதையாவது தேடிப் பிடித்து வாசித்துக் கொள்வார்களாக.


நிற்க. இப்பொழுது வாசிப்பிலிருக்கும் புத்தகம் சுவாமி ஆனந்த பரமேஷ்வரர் 'நான் அறிந்த ஓஷோ' என்னும் தலைப்பில் தொகுத்திருக்கும் ஓஷோவின் 200 கேள்வி பதில்கள்-இரண்டாம் பாகம்(charupraba publications). ஓஷோவின் பெரும்பாலான புத்தகங்கள் கேள்வி பதில் வடிவிலானவைதான் என்றாலும் அவையனைத்தும் ஒரே தத்துவத்தை ஆழச் சென்று விளக்குபவையாக இருக்கும். இந்நூலின் சிறப்பென்னவெனில், அடிப்படையில் ஆரம்பித்து ஆழமானது வரை சாமான்யரின் மனதில் தோன்றும் ஐயங்களனைத்திற்கும் படிப்படியாக பதில்கள் (in a flow) தொகுக்கப்பட்டுள்ளன.நான் இது வரை படித்ததில் இது தான் உச்சம். ஓஷோவை அறிந்திராதவர்களுக்கு , ஒரே மூச்சில் அவரின் கருத்துக்களை முழுமையாக உணரும் வகையில், இந்நூல் ஒரு வரப்பிரசாதம். தன்னுள் 'தான்' தேட முனைவோர் அனைவருக்கும் இதை பரிந்துரைக்கிறேன்.



கடலின் சில துளிகள் :
- தியானம் என்றால் 'விழிப்புடன் கவனித்தல்' . நீங்கள் விழிப்புடன் எதைச் செய்தாலும் அது தியானமாகும்.நீங்கள் ஒவ்வொரு அடியையும் விழிப்போடும் உணர்வோடும் கவனித்தால் நடப்பது கூட தியானமாகும்.

- மகிழ்ச்சியாக இருக்க ஒரே வழிதான் உண்டு. அது, துக்கம் வரும் பொழுது அதைப் பூரணமாக அனுபவியுங்கள். அத்துடன் இணைந்து செல்லுங்கள்.

- உடலில் உள்ள ரத்த ஓட்டம், உயிரோட்டம், சுவாச ஓட்டம் அனைத்திற்கும் நிகழ்காலம் மட்டுமே உண்டு.அதைப் போல வாழ்வுக்கும் நிகழ்காலம் மட்டுமே உண்டு. ஆனால் மனதிற்கு நிகழ்காலம் கிடையாது. இதுதான் பிரச்சினையே ! வாழ்வு என்பது 'இப்பொழுது ,இங்கே' தான் இருக்கிறது. ஆகவே, கூடிய மட்டும், 'இங்கே, இப்பொழுது ' வாழ முயற்சி செய்யுங்கள். மற்றவை எல்லாம் இயல்பாகத் தானே உங்களைத் தேடி வரும்.


-இந்தக் கணத்தில் வாழ்வது என்றால் என்ன? செயல்படும் போது செயலில் மனம் முழுமையாகக் கரைய வேண்டும். செயலற்று இருக்கும் போது எண்ண ஓட்டங்களை, உணர்வுகளை வெறுமனே பார்க்க வேண்டும். அவ்வளவுதான்!


-உண்மை என்பது ஒரு உயிர்த்தன்மை (Existence) அல்லது ஒரு இருப்பு (Being) அல்லது ஒரு சக்தி ஓட்டம் (Energy process) அல்லது கடவுள்தன்மை(Godliness). ஆனால் அது பொருள்(object) அல்ல. கடவுள் அல்ல! இந்த உண்மை எல்லை இல்லாதது , முடிவு இல்லாதது, எதிலும் எங்கும் இருப்பது. அதனுடைய மொழி மௌனம்தான்.

-எண்ணமற்ற தியானம் ஒன்றே உங்களை உண்மையாக அறிந்து கொள்ள உதவும். நீங்கள் மனதை சாட்சியாக நின்று பார்க்கும் பொழுது ,உங்கள் சக்தி அதன் மூலாதாரத்தை நோக்கிச் செல்கிறது. நீங்கள் உங்கள் மனதை ஒன்றில் வைக்கும் பொழுது ,உங்கள் சக்தி மனதை வலுப்படுத்த செலவாகிறது.முன்னது சக்தி சேமிப்பு; பின்னது சக்தி இழப்பு.


19 December 2011

பால(ர்) பாடம்


ஏழு மலை ஏறுதல் எளிதாம்
      ஏழு கடல் தாண்டுதல் எளிதாம்
        ஏழு ஜென்மம் வாழ்தல் எளிதாம்
  ஏழு முறை சாதலும் எளிதாம்
             அய்யோ...எளிதில்லை எளிதில்லை
                             பிள்ளைக்குப் பாடம் சொல்லிக் கொடுத்தல்.

04 December 2011

அசையும் அணு




நூறாவது இதழாக மலர்ந்திருக்கும் இந்த மாத 'உயிர்மை' யில் சிறப்புப் பகுதியாக கூடங்குளம் அணு உலை பற்றிய விரிவான அலசல் இடம் பெற்றுள்ளது. விவாதப் பொருளின் அனைத்துப் பரிமாணங்களும் ஆதி முதல் அந்தம் வரை மிக நேர்மையாக ஆராயப்பட்டு பல தரப்பட்ட விவாதங்கள் முன் வைக்கப்பட்டிருக்கின்றன. அனைவரும் அதை வாசிக்க வலியுறுத்துகிறேன்.

அதில் ஒரு பகுதியில் , தற்போது நடுநிலையாளர்களும் , மத்திய வர்க்கத்தினரும் எழுப்பும் பொதுவான ஒரு கேள்விக்கு கூடங்குளம் மக்களின் எதிர் கேள்வி பதிலாகத் தரப்பட்டுள்ளது.

கேள்வி: இத்தனை கோடி செலவு செய்து கட்டிய பிறகு உலையை மூடச் சொல்வது நியாயமா? பணம் வீணாகிறதே?

மக்களின் பதில்: உங்க மகளுக்குத் திருமணம் நிச்சயம் செய்து எல்லா செலவும் பண்ணி நாளைக் காலை கல்யாணம். பையனுக்கு எய்ட்ஸ் இருக்குன்னு முந்தின ராத்திரி தெரிய வந்தா , அடுத்த நாள் காலையில கல்யாணம் செய்வீங்களா? இத்தனை செலவு பண்ணிட்டோம், கல்யாணம் நடக்கட்டும்னு விடுவீங்களா?


நியாயமான பதில் நம்மிடம் இருக்கிறதா?