24 July 2010

bala - we love you


சமீபத்தில் யுவகிருஷ்ணா தனது வலைப்பூவில் எழுத்தாளர் பாலகுமாரனைப் பற்றி ஒரு பதிவிட்டிருந்தார். மிக அருமையான பதிவு.(http://www.luckylookonline.com/2010/07/blog-post_15.html).அதைப் படித்த வாசகர்கள் பலருக்கும் பாலகுமாரனின் முந்தைய புதினங்களை மீள் வாசிப்பு செய்யும் எண்ணம் வந்திருக்கும். எனக்கும் வந்தது.

எடுத்துப் படிக்கலாம் என எழுந்த போது , பாலகுமாரன் நாவல்கள் உட்பட அனைத்துப் புத்தகங்களையும் மூட்டை கட்டி பரணில் வைத்துள்ளது நினைவிற்கு வந்தது. காரணம் , சமீப காலமாக அதிகரித்து வரும் சந்தோஷின் அட்டகாசம். பயலுக்கு கோபம் வந்தாலும் , சந்தோஷம் வந்தாலும், அவனுடைய துரித இலக்கு என்னுடைய புத்தக வரிசையாகத்தானிருக்கிறது. ஒரே நேரத்தில் இரண்டு புத்தகங்களை எடுத்துத் திசைக்கொன்றாக வீசுவதில் சூரன். சிதறிக் கிடக்கும் புத்தகங்களை நாங்கள் அடுக்கி வைத்த சிறிது நேரத்திலேயே ,அவற்றைக் கலைத்து, கீழே பரப்புவதில் அவனுக்கு அலாதி இன்பம். முன் பின் அட்டையின்றி களையிழந்து காணப்படும் என் புத்தகங்கள் அனைத்தும் அவன் அராஜகத்துக்கு சாட்சி. எனவே,ஒரு நாளின் சில பல மணித்துளிகளை விழுங்கும் இந்தப் போராட்டத்தைத் தவிர்க்க , வேறு வழியேயின்றி புத்தகங்களை பரண்வாசிகளாக்கி விட்டோம்.

தேடிப் படிக்க ஆயாசமாக இருந்தாலும், படித்தே ஆக வேண்டும் என்ற வேட்கை உந்த , புத்தகங்களைத் தேடத் துவங்கிய போது யுவகிருஷ்ணா சொன்னது நினைவுக்கு வந்தது..."22 ஆண்டுகள் கழித்து வாசித்தாலும் முந்தைய பாராவில் சொல்லியிருக்கும் உணர்வை கொடுக்கிறானே? ஓரிரவைக் கொன்று அவன் வாழ்க்கையை வாசிக்கச் செய்கிறானே? பாலகுமாரா நீ தெய்வம்!"

கல்லூரி இறுதியாண்டின் போது எனக்கு பாலகுமாரனின் எழுத்துக்கள் அறிமுகமாயின.அட, பரவாயில்லையே...இந்த ஆளும் நம்மைப் போலவே சிந்திக்கிறாரே என்ற வியப்பு தான் மேற்கொண்டு அவரைப் படிக்கத் தூண்டிற்று. இது சற்று சுய பெருமிதம் போல் தோன்றினாலும் , இன்று அவரின் தீவிர வாசகர்களாக இருப்பவர்கள் பலருக்கும் இந்த அனுபவம் பொருந்தும். அதன் பின்னான தொடர் வாசிப்புகளில் , அவர் எழுத்தின் வீச்சு என்னை அசர வைத்தது.வாழ்க்கையில் எல்லோரும் எல்லாவற்றையும் அனுபவித்து , பின் தெளிவெதென்பது இயலாது. தன்னுடைய அனுபவத்தின் சாரத்தையும் , கற்றுக் கொண்ட பாடத்தையும் பிறர் பயன் பெறும் வகையில் எடுத்துரைப்பதென்பது சிலருக்கு மட்டுமே கை வரும்.சில கதைக் களங்களைத் தேர்வு செய்து ,தனது வாழ்வானுபவத்தின் அடிப்படையில் விளைந்த சிந்தனைகளை , கதை மாந்தர்கள் வாயிலாக , மிக நேர்த்தியான சொல்லாடலின் மூலம் பல்லாயிரம் வாசகர்களுக்கு புதினங்களாக வழங்கியவர் பாலகுமாரன்.சமகால சமூகத் தளத்திலிருந்து மட்டுமல்லாது ,புராணங்களிலிருந்தும் களங்களைத் தேர்வு செய்து, அதில் தொய்வெழாத வண்ணம் சம்பவங்களைக் கோர்த்து,வாசிப்பவனின் மன ஆழத்தை ஊடுருவும் வகையில் கதைகளை நெய்தவர். கதை நடக்கும் சூழலுக்குள் நம்மை இழுக்க , அந்த சூழல் சார்ந்த தகவல்களை அதன் உண்மைத் தன்மை மாறாமல் தரும் நோக்கில் அவரின் மெனக்கெடல்கள் அபாரம்.

கிட்டத்தட்ட அவரது அனைத்து நாவல்களும் என்னிடம் இருக்கின்றன. பலவற்றில் அடிக்கோடிட்டு வைத்திருக்கிறேன். நேரம் வாய்க்கும் போதெல்லாம் அவற்றை மீண்டும் மீண்டும் வாசிக்கிறேன்.வாசிக்கும் போது அவை தருகிற மன நிலையை எழுத்தில் விவரிக்க இயலாது.சிலருக்கு வழங்கப்படும் பட்டங்கள் மற்றும் அடைமொழிகள் அவர்களுக்கு சற்றும் பொருந்தாமல் துருத்திக் கொண்டு நிற்கும். ஆனால் சித்தர்கள் செய்யும் வசியம் போல் , வாசகனை வசியப்படுத்தும் எழுத்துக்களைப் படைக்கும் இவருக்கு 'எழுத்துச் சித்தர்' என்ற பட்டம் மிகப் பொருத்தமே.

ஆனால் சமீப காலமாக அவரது படைப்புகளை உளமாற நேசிக்க முடியவில்லை என்பது வாசகர்களின் கருத்து.அதற்குக் காரணம் அவருள் ஏற்பட்டிருக்கும் ஆன்மீக மலர்ச்சி என்றே நினைக்கிறேன். எழுத்தாளனது மிகப் பெரிய பலம் கதை சொல்லும் தந்திரத்தில் தான் உள்ளது.எதற்குப் பின் எதைச் சொல்ல வேண்டும், எந்த இடத்தில் எந்த வார்த்தை வர வேண்டும் போன்ற நகாசு வேலைகளே வாசகர்களின் மனம் கவர்ந்த படைப்பு உருவாகக் காரணமாகும். பாலகுமாரனது ஆகச் சிறந்த படைப்புகள் எல்லாம் அவர் அந்த தந்திரத்தை மிக நேர்மையான முறையில் கையாண்ட போது உருவானவை.காலப்போக்கில் அவருள் ஏற்பட்ட ஆன்மீக மலர்ச்சி அந்தத் தந்திரம் ஏதுமின்றி உள்ளது உள்ளபடியே அவரை எழுதச் செய்கிறது.இதை அவரது தீவிர வாசகர்களால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை என்பதுதான் உண்மை.மாலன் ஒரு முறை சொன்னது போல் , ஒரு தலைமுறையே பாலகுமாரனுக்குக் கடமைப்பட்டிருக்கிறது.நான் சொல்ல விழைவதும் இதைத் தான்...பாலகுமாரனின் இந்தத் தலைமுறை வாசகர்கள் அவரது எழுத்துக்களை அடுத்த தலைமுறைக்கும் கொண்டு செல்ல வேண்டும்.அதுவே நாம் செய்யும் பிரதி பலனாக இருக்க முடியும்.

அன்று பரணில் தேடிப் பிடித்து நான் வாசித்த புத்தகம் , 'என் கண்மணித்தாமரை'. ஆகா....அற்புதம்...அற்புதம்!வாசிப்பு கொடுத்த உற்சாகத்தில் பரணில் உள்ள அனைத்துப் புத்தகங்களையும் எடுத்து மீண்டும் புத்தக அடுக்கில் வைத்து விட்டேன்.

ஏதேனும் நாவலை ஆழ்ந்து படித்தால் அதன் கதை மாந்தர்கள் அன்றைய கனவில் வருவது வழக்கம். ஆனால் அன்று அபிராமி பட்டருக்குப் பதிலாக என் கனவில் வந்தது சந்தோஷ். இன்னும் பேச்சு வராத பிள்ளை கனவில் என்னிடம் பொரிந்து தள்ளினான்.
" நான் எவ்வளவு கஷ்டப்பட்டு book shelf ஐ காலி பண்ணி சுத்தமா வைக்கிறேன்....நீங்க மறுபடி மறுபடி அதைக் குப்பையா ஆக்குறீங்க....ஏம்ப்பா....?"