Showing posts with label நேசிக்கும் வாசிப்பு. Show all posts
Showing posts with label நேசிக்கும் வாசிப்பு. Show all posts

11 December 2012

உற்ற நண்பன்


  • 'தனிமைத் தீவில் தள்ளப்பட்டால் என்ன செய்வீர்கள்?’ என்று கேட்கப்பட்டபோது, ‘புத்தகங்களுடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து விட்டு வருவேன்’ என்று பதிலளித்தார் ஜவஹர்லால் நேரு.
  • ‘என் கல்லறையில் மறக்காமல் எழுதுங்கள்...இங்கே ஒரு புத்தகப் புழு உறங்குகிறதென்று’ என்றார் பெட்ரண்ட் ரஸல்.
  • 'மனிதனின் ஆகப் பெரிய கண்டுபிடிப்பு எது' என்று வினவப்பட்டபோது சற்றும் யோசிக்காமல் ‘புத்தகம்’ என பதிலளித்தார் ஆல்பர்ட் ஐன்ஸ்டீன்.
  • ‘கரண்டியைப் பிடுங்கி விட்டு புத்தகம் கொடுத்தால் போதும்’ என்றார் தந்தை பெரியார்.
  • ‘வேறு எந்தச் சுதந்திரமும் வேண்டாம். சிறையில் புத்தக வாசிப்பை மட்டும் அனுமதிக்க வேண்டும்’ என்றார் நெல்சன் மண்டேலா.
  • 'பிறந்த நாளுக்கு என்ன வேண்டும்' என நாடு கேட்டபோது 'புத்தகங்கள் வேண்டும்' என சற்றும் தயக்கமின்றி லெனின் கூறிட குவிந்த புத்தகங்கள் பல லட்சம். இன்று மாஸ்கோ லெனின் நூலகம்தான் உலகிலேயே மிகப் பெரியது.
  • குடும்பத்தை விட்டு வெளியேறுங்கள் என்று தூக்கியெறியப்பட்ட போது பேரறிஞர் இங்கர்சால் சென்ற இடம் நூலகம்.
  • ஒவ்வொரு படமும் நடிக்க ஒப்புக் கொள்ளும்போது வரும் முன்பணத்தில் முதல் நூறு டாலருக்கு புத்தகம் வாங்குவார் சார்லிசாப்ளின்.
  • ‘ஒரு குழந்தைக்கு நீங்கள் வாங்கித் தரும் ஆகச் சிறந்த பரிசு ஒரு புத்தகம்தான்’ என்றார் வின்ஸ்டன் சர்ச்சில்.
  • 'ஒரு கோடி ரூபாய் கிடைத்தால் என்ன செய்வீர்கள்' என்று கேட்டபோது ‘ஒரு நூலகம் கட்டுவேன்’ என்று பதிலளித்தார் மகாத்மா.
  • 'விமானத்தில் போகாமல் பம்பாய்க்கு காரில் மூன்று நாள் பயணம் செய்து மெனக்கெட்டது ஏன்' என்று வினவியபோது 'பத்துப் புத்தகங்கள் படிக்க வேண்டி இருந்தது' என பதிலளித்தார் அறிஞர் அண்ணா.
  • பயங்கரமான போராட்ட ஆயுதங்கள் எவை என கேட்கப்பட்டபோது புத்தகங்கள்தான் என்றார் மார்டின் லூதர் கிங்.
  • எங்கே தங்க விரும்புகிறீர்கள் என்று லண்டன் தோழர்கள் கேட்டபோது 'எது நூலகத்திற்கு அருகில் உள்ளது' என கேட்டார் டாக்டர் அம்பேத்கர்.
  • தான் தூக்கிலிடப்படுவதற்கு ஒரு நிமிடம் முன்பு வரை வாசித்துக் கொண்டே இருந்தார்  பகத்சிங்.

# முகநூலில் காணக் கிடைத்தது

15 February 2012

கல்யாண்ஜி கவிதைகள்

கல்யாண்ஜியின் கவிதைகளை வாசித்துக் கொண்டிருக்கிறேன். புறம் ஏற்படுத்தும் தாக்கங்களும் , அகம் உணரும் உணர்வுகளும் அனாயாசமான வார்த்தைகளில் வந்து விழுகின்றன கல்யாண்ஜி அவர்களுக்கு. மிக எளிமையான ஒப்பீடுகளின் வாயிலாக வாழ்க்கையின் பின்னே மறைந்து கிடக்கும் பேருண்மைகளை வெளிக்கொணர்வது அவருக்கு எளிதாகக் கைகூடுகிறது. மனம் சஞ்சரிக்க விரும்பும் உலகத்திற்கும் , நாம் தினம் எதிர்கொள்ள நேரிடும் எதார்த்த வாழ்வின் சிக்கல்களுக்கும் இடைப்பட்ட தொலைவை இவரது கவிதைகள் பிரயத்தனம் ஏதுமின்றிக் கடக்கின்றன.



நூலிலிருந்து ...
********************************************************
தலைப் பிரட்டைகள்
நீயும் பிஸ்கட் தின்னென்று
பேபி சொல்லும்
ஆயாவோ
மீதித் துட்டைச் சரி பார்த்து
வாங்க நிற்பாள்.
பேக்கரியின் அடியில் பழம்பேப்பர்க்
கிழிசலோடு விளையாடி
பூனைக்குட்டி தரையெலாம்
புரண்டு கொஞ்சும்
எலி வேட்டை
இன்னும் தெரியாது
என்பதனால்.
******************************************
சூரியனை -
ஆற்றங்கரை மணலை -
பாசஞ்சர் ரயிலின்
அற்புத இரைச்சலை -
பட்டாம் பூச்சியைத்
தொலைத்து விட்டு
நாற்காலிக் கால்களில்
நசுங்கிக் கிடக்கிறது
சோற்றுக்கலையும் வாழ்க்கை .
*********************************************
நறுக்கென்று
ஒரு சிறு கவிதை
எழுத முயல்கிறேன்.
கொப்பரைத் தண்ணீரைக்
கவிழ்ப்பதை விட
எப்போதும் சிரமமாகத்தான்
இருக்கிறது
பேனாவுக்கு மை அடைப்பது.
********************************************
சிறுவனாகப்
பென்சில் சீவும் போது
கசிந்த ரத்தம்
உண்மையாக இருந்தது.
இப்போது ஜாக்கிரதை உணர்வு
வந்து விட்டது வயதுடன் .
எஞ்சியது என்ன ?
காயம் படாத கைவிரல்.
நிஜம் கசியாத கவிதை.
***************************************

15 January 2012

தவளையின் பிரார்த்தனை

தற்போது வாசித்துக் கொண்டிருக்கும் புத்தகம் கண்ணதாசன் பதிப்பகம் வெளியிட்டுள்ள அந்தோணி டி மெல்லோ எழுதிய 'தவளையின் பிரார்த்தனை' - பாகம் இரண்டு.


கல்வி, உறவு முறைகள், பணி புரிதல், மனித இயல்பு போன்ற பல்வேறு தலைப்புகளில் வாழ்வியல் தத்துவங்களையும் , அவற்றை விளக்கும் வகையில் ஜென் மற்றும் சூபி கதைகளை ஒத்த தகவமைப்புடன் சிறு சிறு கதைகளையும் உள்ளடக்கிய புத்தகம். இரண்டு வருடங்களுக்கு முன்பே வாசித்திருந்தாலும் , தற்போதைய மீள் வாசிப்பில் புதுப் புது அனுபவங்களைத் தருகின்றது. ஞானம் என்பது ஒரு சுகானுபவத்தின் படிமங்களில் கைகூடுகிற விஷயமெனில், நீங்கள் இந்தப் புத்தகத்தை வாசிக்கிற ஏதேனும் ஒரு கணத்தில் உங்களுக்குள் அது நிகழக்கூடும்.

நூலிலிருந்து........

கல்வி என்னும் தலைப்பின் கீழ் ....

உலகத்திலேயே மிகவும் அழகான தீவுகளில் ஒன்று எனக் கருதப்பட்ட தீவில் , ஒரு வயதான மனிதர் தமது பெரும்பான்மையான நாட்களைக் கழித்து விட்டிருந்தார். தமது ஓய்வுக் காலத்தைக் கழிக்க , ஒரு பெரிய நகரத்திற்கு வந்து வசிக்கலானார். அப்போது ஒருவர் வந்து சொன்னார் ," உலகத்தின் அதிசயங்களில் ஒன்றான தீவில் பல வருடங்கள் வசித்தது உங்களுக்கு மிகவும் மகிழ்ச்சியைத் தந்திருக்கும்".

அதைப் பற்றிச் சிறிது யோசித்த அந்த வயதானவர் சொன்னார் , " அப்படியா ! அந்தத் தீவு அவ்வளவு பிரசித்தியானது என்பதை முன்னமே அறிந்திருந்தால் நான் சற்றுக் கவனித்துப் பார்த்திருந்திருப்பேனே ! "

எவ்வாறு பார்க்க வேண்டும் என்பதைப் பற்றிக் கற்றுக் கொள்ள வேண்டிய அவசியம் மக்களுக்கு இல்லை. அவர்களைக் குருடர்களாக ஆக்குகிற பள்ளிகளிலிருந்து காப்பாற்ற வேண்டிய அவசியம் மட்டுமே இருக்கிறது .

*********************************************************************************

மருத்துவரின் ஆலோசனையின் பேரில் ஒருவர் தனது நாய்க்கு தினமும் 'காட்லிவர்' எண்ணெய் கொடுத்து வந்தார். திமிறும் அதன் கால்களையும் , தலையையும் கெட்டியாகப் பிடித்துக் கொண்டு வாயை வலுக்கட்டாயமாகத் திறந்து புகட்டி விடுவார்.அவ்வாறு கொடுக்கும் போது, ஒரு நாள் எண்ணெய் கீழே கொட்டிவிட, அவர் கையிலிருந்து விடுபட்ட நாய் தானாகவே சென்று மிக நிதானமாக அதை நக்கி ருசிக்க ஆரம்பித்தது.அப்போதுதான் புரிந்தது , அத்தனை நாள் எண்ணெய் பிடிக்காமல் நாய் திமிற வில்லை, புகட்டப்படும் முறை ஒவ்வாமல் திமிறியுள்ளது.

பிள்ளைகள் கல்வியை வெறுப்பதில்லை.கற்பிக்கப்படும் முறையை வெறுக்கிறார்கள்.*********************************************************************************

ஆன்மீகம் என்னும் தலைப்பில் ....
அரண்மனைக்குள் நுழைந்த ஒரு ஞானியிடம் அரசர் கேட்டார்.

"உங்களுக்கு என்ன வேண்டும் ?"

" இந்தச் சத்திரத்தில் உறங்க ஒரு இடம்."

"இது சத்திரம் இல்லை; என் அரண்மனை."

"இந்த இடம் தங்களுக்கு முன்பாக யாரிடம் இருந்ததென்று தெரியுமா?"

" இறந்து போன என் தந்தையிடம் இருந்தது."

"அதற்கு முன்பாக யாரிடம் இருந்தது?"

"எனது தாத்தாவிற்கு சொந்தமாக இருந்தது. அவரும் இறந்து விட்டார்."

" மக்கள் சிறிது காலமே தங்கிச் செல்லும் இந்த இடம் சத்திரம் இல்லாமல் வேறென்ன?"

எல்லோரும் வெளியே செல்லவே ,காத்திருக்கும் அறையில் தங்கியிருக்கிறார்கள்.

*********************************************************************************

கடிகார வல்லுநர் ஒருவர் கடிகாரம் ஒன்றில் பெண்டுலத்தைப் பொருத்தும் போது , அந்தப் பெண்டுலம் அவரிடம் சொன்னது.

"தயவு செய்து என்னை இதில் மாட்டாதீர்கள். ஒரு நிமிடத்திற்கு அறுபது நொடிகள் வீதம், ஒரு மணியின் அறுபது நிமிடங்களுக்கும் , ஒரு நாளின் 24 மணி நேரமும், ஒரு வருடத்தின் 365 நாட்களும் நான் அசைய வேண்டியுள்ளது. ஒவ்வொரு வருடமும் கோடிக்கணக்கான அசைவுகள். என்னால் அதை ஒரு போதும் செய்ய முடியாது."

அதற்கு அவர் பதிலளித்தார் .

" எதிர்காலத்தைப் பற்றி கவலைப்படாமல் ஒரு தடவையில் ஒரு முறை அசை; உனது வாழ்க்கையின் எஞ்சிய நாட்கள் முழுவதும் ஒவ்விரு அசைவையும் நீ ரசித்து மகிழ்வாய்."

இந்த வினாடியில் வாழுங்கள் .
******************************************************************************** 

28 December 2011

நான் அறிந்த ஓஷோ


தற்போது வாசித்துக் கொண்டிருக்கும் நூல்களைப் பற்றி 'சொர்க்கத்தின் வாசலில்' என்ற தலைப்பின் கீழ் பகிரலாம் என்று எண்ணம். தலைப்புக்கு வலு சேர்க்கும் விதமாக,ஏற்கெனவே நான் எழுதிய 'வாழும் அனுபவ'த்தை இங்கு எடுத்தாள்கிறேன்.


மழை ஓய்ந்த பின்னிரவில்

அலை ஓய்ந்த மனதோடு

இதமான குளிர் அறையில்

மிதமான உண்டி முடித்து

உடலுறுத்தா தலையணையில்

வாகாய்த் தலை சாய்த்து

அதிராத பாடலின்

சுகராகப் பின்னணியில்

அவிழாத புதிரவிழ்க்கும்

புதிதாய் ஒரு புதினத்தை

வாசிக்கும் அனுபவமே

வாழும் அனுபவமாம்.


'புத்தக வாசிப்பு வாழ்க்கைக்கு உதவுமா , ஆம் எனில்.. எப்படி? ' - வாசிப்பனுபவம் இல்லாத அபாக்கியசாலிகளின் மண்டையைக் குடையும் இந்தக் கேள்விக்கு பதில் , இரு வாரங்களுக்கு முந்தைய ஆனந்தவிகடனில் உள்ளது. அவர்கள் குறைந்த பட்சம் அதையாவது தேடிப் பிடித்து வாசித்துக் கொள்வார்களாக.


நிற்க. இப்பொழுது வாசிப்பிலிருக்கும் புத்தகம் சுவாமி ஆனந்த பரமேஷ்வரர் 'நான் அறிந்த ஓஷோ' என்னும் தலைப்பில் தொகுத்திருக்கும் ஓஷோவின் 200 கேள்வி பதில்கள்-இரண்டாம் பாகம்(charupraba publications). ஓஷோவின் பெரும்பாலான புத்தகங்கள் கேள்வி பதில் வடிவிலானவைதான் என்றாலும் அவையனைத்தும் ஒரே தத்துவத்தை ஆழச் சென்று விளக்குபவையாக இருக்கும். இந்நூலின் சிறப்பென்னவெனில், அடிப்படையில் ஆரம்பித்து ஆழமானது வரை சாமான்யரின் மனதில் தோன்றும் ஐயங்களனைத்திற்கும் படிப்படியாக பதில்கள் (in a flow) தொகுக்கப்பட்டுள்ளன.நான் இது வரை படித்ததில் இது தான் உச்சம். ஓஷோவை அறிந்திராதவர்களுக்கு , ஒரே மூச்சில் அவரின் கருத்துக்களை முழுமையாக உணரும் வகையில், இந்நூல் ஒரு வரப்பிரசாதம். தன்னுள் 'தான்' தேட முனைவோர் அனைவருக்கும் இதை பரிந்துரைக்கிறேன்.



கடலின் சில துளிகள் :
- தியானம் என்றால் 'விழிப்புடன் கவனித்தல்' . நீங்கள் விழிப்புடன் எதைச் செய்தாலும் அது தியானமாகும்.நீங்கள் ஒவ்வொரு அடியையும் விழிப்போடும் உணர்வோடும் கவனித்தால் நடப்பது கூட தியானமாகும்.

- மகிழ்ச்சியாக இருக்க ஒரே வழிதான் உண்டு. அது, துக்கம் வரும் பொழுது அதைப் பூரணமாக அனுபவியுங்கள். அத்துடன் இணைந்து செல்லுங்கள்.

- உடலில் உள்ள ரத்த ஓட்டம், உயிரோட்டம், சுவாச ஓட்டம் அனைத்திற்கும் நிகழ்காலம் மட்டுமே உண்டு.அதைப் போல வாழ்வுக்கும் நிகழ்காலம் மட்டுமே உண்டு. ஆனால் மனதிற்கு நிகழ்காலம் கிடையாது. இதுதான் பிரச்சினையே ! வாழ்வு என்பது 'இப்பொழுது ,இங்கே' தான் இருக்கிறது. ஆகவே, கூடிய மட்டும், 'இங்கே, இப்பொழுது ' வாழ முயற்சி செய்யுங்கள். மற்றவை எல்லாம் இயல்பாகத் தானே உங்களைத் தேடி வரும்.


-இந்தக் கணத்தில் வாழ்வது என்றால் என்ன? செயல்படும் போது செயலில் மனம் முழுமையாகக் கரைய வேண்டும். செயலற்று இருக்கும் போது எண்ண ஓட்டங்களை, உணர்வுகளை வெறுமனே பார்க்க வேண்டும். அவ்வளவுதான்!


-உண்மை என்பது ஒரு உயிர்த்தன்மை (Existence) அல்லது ஒரு இருப்பு (Being) அல்லது ஒரு சக்தி ஓட்டம் (Energy process) அல்லது கடவுள்தன்மை(Godliness). ஆனால் அது பொருள்(object) அல்ல. கடவுள் அல்ல! இந்த உண்மை எல்லை இல்லாதது , முடிவு இல்லாதது, எதிலும் எங்கும் இருப்பது. அதனுடைய மொழி மௌனம்தான்.

-எண்ணமற்ற தியானம் ஒன்றே உங்களை உண்மையாக அறிந்து கொள்ள உதவும். நீங்கள் மனதை சாட்சியாக நின்று பார்க்கும் பொழுது ,உங்கள் சக்தி அதன் மூலாதாரத்தை நோக்கிச் செல்கிறது. நீங்கள் உங்கள் மனதை ஒன்றில் வைக்கும் பொழுது ,உங்கள் சக்தி மனதை வலுப்படுத்த செலவாகிறது.முன்னது சக்தி சேமிப்பு; பின்னது சக்தி இழப்பு.