25 November 2012

ECSTASY !!!




உங்கள்  குழந்தைகளை  தினமும் அழ வையுங்கள் , இப்படி !!!!!!!


21 November 2012

ஒற்றைப் பனை


ஒரு குடும்பத்தில் கணவன் மனைவி இருவரும்  பணி புரிய நேரிட்டிருக்கிற    இன்றைய பொருளாதாரச் சூழலில் ,பிள்ளைகளைக் கவனிக்க நேரம் ஒதுக்குவதில்லை என்பது பொதுக்கருத்தாக இருப்பினும், கடந்த சில வாரங்களுக்கு  முன்பான 'நீயா- நானா'  நிகழ்ச்சியில் பங்கேற்ற திரைப்பட இயக்குனர் கரு.பழனியப்பன் கூறிய கருத்து  கவனிக்கத்தக்கது.

''என் தாத்தாவிற்கு  பத்து  பிள்ளைகள்....என் தகப்பனாருக்கு ஆறு பேர்...ஆகவே ,அந்தக் காலத்தில்   தங்கள் பிள்ளைகளின் தனிப்பட்ட விருப்பு
வெறுப்புகளில் பெற்றோர்களின் தலையீடு என்பது மிகக் குறைவாகவே இருந்தது. ஆனால்  இப்போது ஒரே ஒரு பிள்ளையைப் பெற்றுவிட்டு ,நன்றாக வளர்க்கிறேன் பேர்வழி என்று அதீத கவனம் செலுத்தி,பலவந்தமாகப்  பலவற்றைத்   திணித்து,அக்குழந்தையின் இயல்பைச் சிதைக்கிறார்கள் இன்றைய பெற்றோர்கள் " என்று ஆதங்கப்பட்டார். அதற்கு எதிர்வாதம் செய்த சிலர் 'குழந்தையை எப்பொழுதும்  engage செய்வதென்பது  நல்லது தானே'  என்றனர். இந்த வாதம் சரியாகத்  தோன்றினும்  , இதை  நான் மற்றொரு
கோணத்தில் பார்க்கிறேன்.

குழந்தைகள்  இந்த உலகைப் பார்க்கின்ற விதம், தங்களுக்குள் சிருஷ்டித்துக்
கொள்கிற உலகம்,பெற்றோரிடமும் மற்றவர்களிடமும் அவர்களின் எதிர்பார்ப்பு என அத்தனையும் பரிசுத்தமானது. அவர்கள்  தனித்தன்மையோடு வளர்வதற்குரிய சூழலை நாம் உருவாக்கித் தரலாமே தவிர  , பெற்றோம் என்ற ஒரே காரணத்திற்காக அவர்கள் மீது எந்நேரமும்  ஆதிக்கம் செலுத்துவதென்பது  எதிர்மறை விளைவுகளையே  ஏற்படுத்தும். இருப்பது ஒரே பிள்ளை என அளவுக்கதிகமாக  செல்லம் கொடுக்கும் பெற்றோர்தான் குழந்தைகளை அதிகம் அடிக்கின்றனர் என்பது நகைமுரண். 'உனக்கு வேண்டியதை நான் கொடுக்கிறேன்; நான் சொல்வதைக் கேள் ' என்ற குணம்தான் இங்கு ஓங்கி நிற்கிறது. நாம் ஏன் குழந்தைகளை அடிக்கிறோம் ?அவர்களால் திருப்பி அடிக்க முடியாது என்ற  காரணத்தினால் தானே ! ஒப்பீட்டளவில்  வலு குறைந்த அவர்களின் தவறைத் திருத்துகிறோம் என்று சொல்லி அவர்களை அடித்து நம் ஆற்றாமையைத் தணித்துக் கொள்வது எந்த விதத்தில் நியாயம் ?!

நிற்க.  நான் சொல்ல நினைத்தது குழந்தை வளர்ப்பு பற்றியல்ல;

 எந்தவித முன் தீர்மானமுமின்றி  அணுகும் குழந்தைகளின் உலகில் பிரதான இடமென்பது அவர்கள் வயதொத்த பிள்ளைகளுக்கானதே ! அதில்  நாம் சிறிது   பங்காற்றலாமே  ஒழிய , எந்த விதத்திலும் பங்கேற்க  முடியாது. அக்கம்பக்கத்து குழந்தைகளிடம் நட்பு பாராட்ட  முந்தைய தலைமுறைக்குக் கிடைத்த  வாய்ப்பு  இன்றைய குழந்தைகளுக்கு அறவே இல்லை. தெருவில் நண்பர்களுடன் கால்பந்து விளையாடி கால் வலிக்க வேண்டிய பிள்ளைகள் , இன்று கணினியில் விளையாடி கை வலித்துக் கிடக்கிறார்கள். ஆக , பெற்ற முதல் குழந்தைக்குத்  துணையாக இன்னொரு குழந்தையைப் பெற்றுக் கொள்வதே  ஏற்புடைய  வழி என்பது என்னுடைய கருத்து.

வளர்ப்பதற்கு வசதியில்லை, கவனிப்பதற்குப் பெரியவர்கள் இல்லை என சாக்கு போக்கு சொல்லாமல் தயவு செய்து உரிய இடைவெளியில் இரண்டு குழந்தைகளைப் பெற்றுக் கொள்ளுங்கள். பரிபாலனம் செய்வதில் சிரமங்கள் இருந்தாலும் அவற்றை மீறிக் கிடைக்கும் சந்தோஷத் தருணங்கள் உங்கள் வாழ்க்கையை மேலும் அர்த்தமுள்ளதாக்கும்.   தங்களுக்குள்  சண்டையிட்டும் , சமாதானமாகியும் , வாழ்வின் நியாய அநியாயங்களை அவர்களே இயல்பாகப் புரிந்து கொள்வார்கள். சுக துக்கங்களை தங்கள் மொழியில் பகிர்ந்து ஆசுவாசம் கொள்வார்கள்.  சொந்த பந்தங்களைத்  தொந்தரவாகக் கருதும் நம் சமூகச்சூழலில் ,பிற்காலத்திலும் ஒருவொருக்கொருவர் துணையாக இருப்பார்கள்.

நேற்று இரவு அலைபேசியில் ஒரு அழைப்பு. பெங்களூரிலிருந்து  சுச்சு பேசினான். எங்கெங்கோ சுற்றிய பேச்சு இறுதியில் குழந்தைகளைப் பற்றி வந்த போது ,   இயந்திரகதியில் இயங்கும் தினப்படி வாழ்க்கையில், ஒரு குழந்தையையே பராமரிக்க சிரமமாயிருப்பதால் , இன்னொரு குழந்தையைப் பெற்று அதைக் கஷ்டப்படுத்தும் விருப்பம் இல்லை என்றான். அவனுடைய நிலையிலிருந்து பார்த்தால் அதுவும் சரிதான்.இது பற்றித்தான் எழுதிக்கொண்டிருக்கிறேன் என்றோ, கண்டிப்பாக இன்னொன்று பெற்றுக்கொள் என்றோ நான் அவனிடம்   சொல்லவேயில்லை.

இதை தட்டச்சு செய்து கொண்டிருந்த போது , ஓடிப்பிடித்து  விளையாடிக் கொண்டிருந்த புவனும், சந்துவும் ,  அழுதபடி என்னிடம் வந்தனர்.

'அப்பா...புவன் என்னை அடிக்கிறான்.'

'இல்லப்பா ...அவன்தான் என்னை முதல்ல அடிச்சான் '

நான் அவர்களின்  பேச்சுக்கு சற்று காது கொடுத்தேன்.  தீர்ப்பு அளிக்கும்  நோக்கில் அல்ல; அவர்களுக்கிடையேயான காழ்ப்பு அழிக்கும் நோக்கில்.

இவர்களின் சிறு சண்டை  பெரும் போராக உருவெடுக்கும் போது நான் ஏங்கிப் போவதுண்டு  , நமக்கு ஒரு  பெண் குழந்தை இல்லையே என்று .

ம்ம்ம்ம்...எல்லோருக்கும் எல்லாவற்றிற்கும் கொடுப்பினையிருக்கிறதா , என்ன ?!

12 November 2012

புத்தம் புது காலை

இசை ஞானியின்  ஆகச் சிறந்த இசைக்கோர்வைகளுள்  ஒன்று.  No doubt, one of his best compositions !!!!!!!  அதிலும் , இரண்டு சரணங்களுக்கிடையில் வரும் இரண்டாவது இடையிசையையும் ( second interlude) , Humming ஐயும்  கவனியுங்கள். Devine  !!!!




ராஜாவின் ரசிகர்கள்


இசை ஞானியின்  இசை பற்றி சிலாகிக்கிறார் எழுத்தாளரும், இயக்குனருமான  சுகா அவர்கள்.


இவர் விகடனில் எழுதிய 'மூங்கில் மூச்சு'  அனைவராலும் வெகுவாக ரசிக்கப்பட்டது. தூய தமிழ் தாண்டி வட்டார வழக்கில் எழுதுவதென்பது  சுலபமானதல்ல. முழுக்க முழுக்க நெல்லைத்  தமிழ் துள்ளி விளையாடும் இவரின் எழுத்து நம்மையும் இவரையும்   கண்ணுக்குத் தெரியாத கண்ணியால் இணைக்கும். இசை ஞானியின் தீவிர ரசிகர். இசைஞானி பற்றி இவரிட்ட பல பதிவுகளில் நான் மிகவும் ரசித்தது இது. 

09 November 2012

வினை முடித்தன்ன இனியள்


Madurai to Trichy - 150 km ; Trichy to Madurai - 150 km
but Monday to Friday - 5 days ; Friday to Monday - 2 days 
CHEATING ?!!

வேலை நாட்களில் துக்கத்தையும் , விடுமுறைகளில் மகிழ்ச்சியையும் தருவித்துக் கொள்ளும் மன நிலையின் வெளிப்பாடான மேற்கண்ட ஹாஸ்யம் அண்மையில்  முகநூலில் காணக் கிடைத்தது.

திங்கள் முதல் வெள்ளி  வரையிலான வேலை நாட்களுக்கும் , சனி ஞாயிறு முதலான விடுமுறை நாட்களுக்கும் வெவ்வேறு முகங்கள் உண்டு என்பது நம்மில் பெரும்பாலனோரின் அனுபவமாய் இருக்கும். அடிப்படையில் , உழைப்பு மற்றும் ஓய்வு என்ற வார்ப்புகளினால் ஆன  இந்த மாறுபட்ட முகப்பிம்பங்கள் தான்  'திங்கள் கிழமை காலை என்பது வெள்ளிக் கிழமை மாலையை நோக்கிச் செல்வது' போன்றதான தோற்றத்தை நமக்கு ஏற்படுத்துகின்றன. உழைப்பையும், ஓய்வையும் வெவ்வேறு தளங்களில் வைத்திருக்கும் இந்த மனோ நிலைதான் monotonocity , stress , frustration  போன்ற பல்வேறு காரணிகளுக்கான ஊற்றாக விளங்குகிறது என்று நினைக்கிறேன். வார இறுதி நாட்களில் relaxation  என்ற பெயரில் வஸ்துக்களால் உடம்பை இம்சிப்பதும், தன்னுணர்வு மறந்து கிடப்பதும் இன்றைய இளைஞர்களிடையே பழக்கமாகி வருவதற்குக் காரணம் உழைப்பு என்கிற வார்த்தையின் மீதான கண்ணோட்டமே.

எனக்குள்ளும் பல தருணங்களில் 'உழைப்பு - ஓய்வு' என்பது பற்றிய குழப்பங்கள் சுழன்று கொண்டுதானிருக்கும். உழைப்பு என்பதன் அள்வுகோல் என்ன? நாம் நமது திறமை முழுதும் வெளிப்படும் வகையில் சரியானபடி உழைக்கிறோமா ?  கடின உழைப்பு என்பது மிக அவசியமா ? நமது உழைப்பும், நாம் எடுக்கும் ஓய்வும் சீராக இருக்கிறதா ? ஓய்வு என்பது வெறுமனே சும்மா இருத்தலா? அவ்வப்போது எழும் இது போன்ற  வினாக்களுக்கான விடையை புத்தகங்களில் தேடிக் கொண்டிருப்பேன். எழுத்துச் சித்தர் பாலகுமாரன் ' ஓய்வு என்பது இன்னொரு வேலை பார்த்தல்' என்பார். சங்க இலக்கியம் 'வினை முடித்தன்ன இனியள்' என்று கூறுகிறது. நவீன நிர்வாகவியலாளர்கள் ' No hardwork; only smart work' என்கிறார்கள். ஆனால் , உழைப்பைக் கருப்பொருளாகக் கொண்டு எழுதப்பட்ட கதை, கட்டுரைகளை வாசிக்கும் பொழுது அந்த வார்த்தைகள் தருகிற உற்சாகம் , செயல்படுத்த முனையும் போது வடிந்து விடுகிறது என்பதே நிதர்சனம்.  படிக்கும் போது உத்வேகமும் , நடைமுறைப்படுத்தும் போது சுணக்கமும் தருகிற  இந்த விசயம் பற்றி  நிறைய பேருக்கு நான் அறிவுறித்தியிருந்தாலும் என்னளவில் வெற்றி கண்டதாக நினைக்கவில்லை.

எங்கள் வீட்டிற்கு அடுத்ததாக உள்ள வாடகை வீட்டில் சமீபமாக ஒரு குடும்பம் குடி வந்திருக்கிறது. ஆட்டோ ஓட்டும் கணவன், பள்ளிக்குச் செல்லும் இரு குழந்தைகள் என அந்தக் குடும்பத் தலைவிக்கு அளவான குடும்பம். குடிசை வீடுகளுக்குக் கூரை வேயப் பயன்படும் கிடுகுத்தட்டி செய்வதுதான் அந்தப் பெண்ணுக்கு வேலை. எப்போது நான் மாடிக்குச் சென்றாலும் , மிக அருகிலிருக்கும் அவர்களது மாடியில், வேய்ந்து கொண்டிருக்கும் கிடுகுகளுடன் அந்தப் பெண் என்  கண்ணில் படுவாள். காலை ஏழு மணி பொழுதிலும் சரி, மதியம் 3 மணி வெயிலிலும் சரி, வெளிச்சம் குறையத் துவங்கும் அந்தியிலும்  சரி, இரவு 9 மணி இருளிலும் சரி , அந்தப் பெண் கிடுகு பின்னிக் கொண்டிருப்பாள். தான் பிறந்ததே கிடுகு வேயத்தான் என்பது போல , அவள் பேயாய் வேலை செய்வது பார்த்து பல முறை விக்கித்து நின்றிருக்கிறேன். மின்சாரம் வந்தாலென்ன, போனாலென்ன....சுட்டெரிக்கும் வெயிலானால் என்ன, சில்லென்ற பனியானால் என்ன...ஏதோ தவம் செய்வது போன்ற பாவனையில் ஒரே வேலை, வேலை , வேலை தான் !  அவ்வப்போது அந்தக் குழந்தைகளும் அருகிலிருப்பார்கள்.

அந்தப் பெண் வேறு வேலை செய்து நான் பார்த்ததேயில்லை. அவள் எப்போதுதான் ஓய்வெடுப்பாள்? எனக்குத் தெரிந்து, தன் பிள்ளைகளுக்கும்,கணவனுக்கும் பணிவிடை செய்யும் நேரம் தான் அவளுக்கான ஓய்வு நேரமாக இருக்கக் கூடும்; இல்லை , அந்த வேலைகளை அவள் ஓய்வாகக் கருதக் கூடும். 

வாழ்க்கை நிர்பந்திப்பதால் தான் , சிந்தனை சிதறாமல்  இவ்வாறு  உழைக்கிறாளா? அல்லது அவள் இயல்பே இதுதானா? இடும் உழைப்பிற்கு ஈடான மதிப்பு அவளுக்குக் கிடைக்கிறதா?வாழ்வின் இலட்சியமாக எதைக் கொண்டிருப்பாள் ?அல்லது, வாழ்வதே ஒரு இலட்சியமாக இருக்குமோ?   கிடுகு வேய்வதைத் தவிர வாழ்வில் வேறு இன்பங்களும் உண்டு என்பதை அறிவாளா? ஓய்வு நாட்களில் வாழ்வைத் தேடும் நாமும்,  தேடலே இல்லாமல் வாழ்க்கையை ஒவ்வொரு கணமும் 'வாழ்ந்து' கொண்டிருக்கும் அவளும் ஒன்றா?

யோசித்தவாறே பண்பலையில் பாடல்களைக் கேட்டுக் கொண்டிருந்தேன். 'நீங்கள் கேட்டவை' படத்திலிருந்து ஒரு பாடல் ஓடிக் கொண்டிருந்தது. பாடலின் கடைசி வரிகளைக் கேட்டவுடன் இதுவரையான அத்தனைக் கேள்விகளுக்கும் பதில் கிடைத்து மனம் துடைத்து விட்டாற் போலிருந்தது. 

பாடல் வரிகளும் அதற்கான காணொளியும்  கீழே :

பிறக்கின்ற போதே இறக்கின்ற தேதி 
இருக்கின்ற தென்பது மெய்தானே.
ஆசைகளென்ன ஆணவமென்ன
உறவுகள் என்பதும் பொய்தானே.
உடம்பு என்பது உண்மையில் என்ன
கனவுகள் வாங்கும் பைதானே !

காலங்கள் மாறும் கோலங்கள் மாறும்
வாலிபம் என்பது பொய்வேஷம்
தூக்கத்தில் பாதி , ஏக்கத்தில் பாதி 
போனது போக எது மீதம்
பேதை மனிதனே,
கடமையை இன்றே செய்வதில்தானே ஆனந்தம்!

இந்தப் பாடலை அந்தப் பெண் ஒரு தடவையாவது கேட்டிருப்பாளா?!






08 November 2012

காலத்தை இசைத்தவன்

இசை ஞானி பற்றி  கவிஞர்  பழனிபாரதியின் கவிதை : 

உலகத்தை ஆள
செங்கோல் தேவையில்லை
ஒரு புல்லாங்குழல் போதுமென்று
நிரூபித்தவன் நீ

சூரியனும் சந்திரனும்
உனது இசைத் தட்டுகள்
உன் ஆர்மோனியத்தின்
கறுப்பு வெள்ளைக் கட்டைகளுக்கிடையில்தான்
கட்டுண்டு கிடக்கின்றன
எங்கள் இரவும் பகலும்

வானில்
பறவைகள்
சிறகுகளால் எழுதும்
உனது இசைக்குறிப்புகளை
பூமியில்
பூக்கள் இசைப்பதைத்தான்
நாங்கள்
வசந்தகாலம் என்கிறோம்

இங்கே
சருகுகளில்
சப்திப்பதும்
உன் சங்கீதம்தான்

உன் ஆரோகணம்
மேகம்
உன் அவரோகணம்
மழை

நீயின்றி அமையாது உலகு

நீ இசைக்கத் தொடங்குகிறாய்
உன் ஆர்மோனியத்தின்மேல்
காட்டு மரங்கள் அசைகின்றன
காதல் பறவைகள் கூடுகின்றன
ஒழுகும்
உன் இசையின் ஜீவநதியில்
கடவுள்
குழந்தைகளோடு விளையாடிக்கொண்டிருக்கிறார்

என்ன அழகான
ஒரு பின்னணி இசை இது...

நீ கடவுளைப் பார்த்துக்கொண்டிருக்க
நாங்கள் உன்னைப் பார்த்துக்கொண்டிருக்க


-பழநிபாரதி

05 November 2012

ஏன்..எதற்கு..எப்படி 4

# கன்னடப் பட கதாநாயகர்கள்  மட்டும் ஏன் அவ்வாறு இருக்கிறார்கள்  ?!

# உலக இலக்கியம் மட்டும்தான் படிப்பதாகப் பீற்றிக் கொள்பவர்கள் , தமிழ் இலக்கியமும் உலக இலக்கியங்களுள் ஒன்றுதான் என்று தெரியாதவர்களா ?

# போட்டித் தேர்வு எழுதுபவர்களில் முக்கால்வாசிபேர்  கைகடிகாரம் அணிந்து வராமல், மணிக்கு இருமுறை கண்காணிப்பாளரிடம் மணி கேட்கிறார்களே , ஏன் ?

# மேடை நிகழ்ச்சிகளில் தங்களின் புகழ் பெற்ற பாடலைப் பாடும் பிரபல பாடகர்கள் extra சங்கதிகளைப் போடும் போது  கொலைவெறி உண்டாகிறதே ......அது எனக்கு மட்டும்தானா அல்லது எல்லோருக்குமா?

# Traffic Signal ஐ ,  நாம் நெருங்கும் போது  மட்டும் சொல்லி வைத்தாற் போல் red signal விழுவதைத் தவிர்ப்பது எப்படி ?

#  இனிப்பிற்கு பிரபலமான கடையில்  அதிக விலை கொடுத்து காரம் வாங்குவது தவறு என்ற எனது எண்ணம் சரியா , தவறா ?

#  லிட்டருக்கு ஒரு ரூபாய் விலையேறும்  நள்ளிரவுக்கு முன்பாகவே ,வண்டியில் பெட்ரோல் நிரப்ப, traffic jam ஆகும் அளவுக்கு பங்குகளில் அலைமோதும் மக்களின் சிக்கனத்தன்மையை  பாராட்டுவதா, நொந்து கொள்வதா?