09 November 2012

வினை முடித்தன்ன இனியள்


Madurai to Trichy - 150 km ; Trichy to Madurai - 150 km
but Monday to Friday - 5 days ; Friday to Monday - 2 days 
CHEATING ?!!

வேலை நாட்களில் துக்கத்தையும் , விடுமுறைகளில் மகிழ்ச்சியையும் தருவித்துக் கொள்ளும் மன நிலையின் வெளிப்பாடான மேற்கண்ட ஹாஸ்யம் அண்மையில்  முகநூலில் காணக் கிடைத்தது.

திங்கள் முதல் வெள்ளி  வரையிலான வேலை நாட்களுக்கும் , சனி ஞாயிறு முதலான விடுமுறை நாட்களுக்கும் வெவ்வேறு முகங்கள் உண்டு என்பது நம்மில் பெரும்பாலனோரின் அனுபவமாய் இருக்கும். அடிப்படையில் , உழைப்பு மற்றும் ஓய்வு என்ற வார்ப்புகளினால் ஆன  இந்த மாறுபட்ட முகப்பிம்பங்கள் தான்  'திங்கள் கிழமை காலை என்பது வெள்ளிக் கிழமை மாலையை நோக்கிச் செல்வது' போன்றதான தோற்றத்தை நமக்கு ஏற்படுத்துகின்றன. உழைப்பையும், ஓய்வையும் வெவ்வேறு தளங்களில் வைத்திருக்கும் இந்த மனோ நிலைதான் monotonocity , stress , frustration  போன்ற பல்வேறு காரணிகளுக்கான ஊற்றாக விளங்குகிறது என்று நினைக்கிறேன். வார இறுதி நாட்களில் relaxation  என்ற பெயரில் வஸ்துக்களால் உடம்பை இம்சிப்பதும், தன்னுணர்வு மறந்து கிடப்பதும் இன்றைய இளைஞர்களிடையே பழக்கமாகி வருவதற்குக் காரணம் உழைப்பு என்கிற வார்த்தையின் மீதான கண்ணோட்டமே.

எனக்குள்ளும் பல தருணங்களில் 'உழைப்பு - ஓய்வு' என்பது பற்றிய குழப்பங்கள் சுழன்று கொண்டுதானிருக்கும். உழைப்பு என்பதன் அள்வுகோல் என்ன? நாம் நமது திறமை முழுதும் வெளிப்படும் வகையில் சரியானபடி உழைக்கிறோமா ?  கடின உழைப்பு என்பது மிக அவசியமா ? நமது உழைப்பும், நாம் எடுக்கும் ஓய்வும் சீராக இருக்கிறதா ? ஓய்வு என்பது வெறுமனே சும்மா இருத்தலா? அவ்வப்போது எழும் இது போன்ற  வினாக்களுக்கான விடையை புத்தகங்களில் தேடிக் கொண்டிருப்பேன். எழுத்துச் சித்தர் பாலகுமாரன் ' ஓய்வு என்பது இன்னொரு வேலை பார்த்தல்' என்பார். சங்க இலக்கியம் 'வினை முடித்தன்ன இனியள்' என்று கூறுகிறது. நவீன நிர்வாகவியலாளர்கள் ' No hardwork; only smart work' என்கிறார்கள். ஆனால் , உழைப்பைக் கருப்பொருளாகக் கொண்டு எழுதப்பட்ட கதை, கட்டுரைகளை வாசிக்கும் பொழுது அந்த வார்த்தைகள் தருகிற உற்சாகம் , செயல்படுத்த முனையும் போது வடிந்து விடுகிறது என்பதே நிதர்சனம்.  படிக்கும் போது உத்வேகமும் , நடைமுறைப்படுத்தும் போது சுணக்கமும் தருகிற  இந்த விசயம் பற்றி  நிறைய பேருக்கு நான் அறிவுறித்தியிருந்தாலும் என்னளவில் வெற்றி கண்டதாக நினைக்கவில்லை.

எங்கள் வீட்டிற்கு அடுத்ததாக உள்ள வாடகை வீட்டில் சமீபமாக ஒரு குடும்பம் குடி வந்திருக்கிறது. ஆட்டோ ஓட்டும் கணவன், பள்ளிக்குச் செல்லும் இரு குழந்தைகள் என அந்தக் குடும்பத் தலைவிக்கு அளவான குடும்பம். குடிசை வீடுகளுக்குக் கூரை வேயப் பயன்படும் கிடுகுத்தட்டி செய்வதுதான் அந்தப் பெண்ணுக்கு வேலை. எப்போது நான் மாடிக்குச் சென்றாலும் , மிக அருகிலிருக்கும் அவர்களது மாடியில், வேய்ந்து கொண்டிருக்கும் கிடுகுகளுடன் அந்தப் பெண் என்  கண்ணில் படுவாள். காலை ஏழு மணி பொழுதிலும் சரி, மதியம் 3 மணி வெயிலிலும் சரி, வெளிச்சம் குறையத் துவங்கும் அந்தியிலும்  சரி, இரவு 9 மணி இருளிலும் சரி , அந்தப் பெண் கிடுகு பின்னிக் கொண்டிருப்பாள். தான் பிறந்ததே கிடுகு வேயத்தான் என்பது போல , அவள் பேயாய் வேலை செய்வது பார்த்து பல முறை விக்கித்து நின்றிருக்கிறேன். மின்சாரம் வந்தாலென்ன, போனாலென்ன....சுட்டெரிக்கும் வெயிலானால் என்ன, சில்லென்ற பனியானால் என்ன...ஏதோ தவம் செய்வது போன்ற பாவனையில் ஒரே வேலை, வேலை , வேலை தான் !  அவ்வப்போது அந்தக் குழந்தைகளும் அருகிலிருப்பார்கள்.

அந்தப் பெண் வேறு வேலை செய்து நான் பார்த்ததேயில்லை. அவள் எப்போதுதான் ஓய்வெடுப்பாள்? எனக்குத் தெரிந்து, தன் பிள்ளைகளுக்கும்,கணவனுக்கும் பணிவிடை செய்யும் நேரம் தான் அவளுக்கான ஓய்வு நேரமாக இருக்கக் கூடும்; இல்லை , அந்த வேலைகளை அவள் ஓய்வாகக் கருதக் கூடும். 

வாழ்க்கை நிர்பந்திப்பதால் தான் , சிந்தனை சிதறாமல்  இவ்வாறு  உழைக்கிறாளா? அல்லது அவள் இயல்பே இதுதானா? இடும் உழைப்பிற்கு ஈடான மதிப்பு அவளுக்குக் கிடைக்கிறதா?வாழ்வின் இலட்சியமாக எதைக் கொண்டிருப்பாள் ?அல்லது, வாழ்வதே ஒரு இலட்சியமாக இருக்குமோ?   கிடுகு வேய்வதைத் தவிர வாழ்வில் வேறு இன்பங்களும் உண்டு என்பதை அறிவாளா? ஓய்வு நாட்களில் வாழ்வைத் தேடும் நாமும்,  தேடலே இல்லாமல் வாழ்க்கையை ஒவ்வொரு கணமும் 'வாழ்ந்து' கொண்டிருக்கும் அவளும் ஒன்றா?

யோசித்தவாறே பண்பலையில் பாடல்களைக் கேட்டுக் கொண்டிருந்தேன். 'நீங்கள் கேட்டவை' படத்திலிருந்து ஒரு பாடல் ஓடிக் கொண்டிருந்தது. பாடலின் கடைசி வரிகளைக் கேட்டவுடன் இதுவரையான அத்தனைக் கேள்விகளுக்கும் பதில் கிடைத்து மனம் துடைத்து விட்டாற் போலிருந்தது. 

பாடல் வரிகளும் அதற்கான காணொளியும்  கீழே :

பிறக்கின்ற போதே இறக்கின்ற தேதி 
இருக்கின்ற தென்பது மெய்தானே.
ஆசைகளென்ன ஆணவமென்ன
உறவுகள் என்பதும் பொய்தானே.
உடம்பு என்பது உண்மையில் என்ன
கனவுகள் வாங்கும் பைதானே !

காலங்கள் மாறும் கோலங்கள் மாறும்
வாலிபம் என்பது பொய்வேஷம்
தூக்கத்தில் பாதி , ஏக்கத்தில் பாதி 
போனது போக எது மீதம்
பேதை மனிதனே,
கடமையை இன்றே செய்வதில்தானே ஆனந்தம்!

இந்தப் பாடலை அந்தப் பெண் ஒரு தடவையாவது கேட்டிருப்பாளா?!






4 comments:

  1. For her no need to hear and understand this song..c is practising this...Y c can do continuously this work means,c luv and enjoy her work..so that only c can do it continuously..those who r having the work what they love as a profession wont need rest or feel tired eg..ARRahman,iallaiyaraja...:))))
    what I feel is ,c luv her job as well as c know the meaning of last line of the song :))))

    ReplyDelete
  2. Medes,

    First congrats for writing on various topics. I feel this one very interesting topic which i have broaching for a longtime - internally as well externally by way of interaction with others.

    Fundamental - When someone loves the job they do, they will not have weekend/weekday/Rest what will be there is 'flow'.

    now i am taking this question to next level - where do you demarcate between family and professional activity when you have seamless life ( mean 'flow')As increasingly today we confront multinational workforce.

    bye for now

    Mohan

    ReplyDelete
  3. thanks for your comments...i agree with both of your views...
    yeah..i wanted to share that doing our duty with love and commitment will bring happiness...but in her case , the percentage of commitment is pretty more than love...anyway, people like her are 'fully' living their life by just dwelling in their job...

    ReplyDelete
  4. //ஓய்வு நாட்களில் வாழ்வைத் தேடும் நாமும், தேடலே இல்லாமல் வாழ்க்கையை ஒவ்வொரு கணமும் 'வாழ்ந்து' கொண்டிருக்கும் அவளும் ஒன்றா//

    there is no doubt , she lives very near to her 'being' than we live to ours.

    ReplyDelete