21 November 2012

ஒற்றைப் பனை


ஒரு குடும்பத்தில் கணவன் மனைவி இருவரும்  பணி புரிய நேரிட்டிருக்கிற    இன்றைய பொருளாதாரச் சூழலில் ,பிள்ளைகளைக் கவனிக்க நேரம் ஒதுக்குவதில்லை என்பது பொதுக்கருத்தாக இருப்பினும், கடந்த சில வாரங்களுக்கு  முன்பான 'நீயா- நானா'  நிகழ்ச்சியில் பங்கேற்ற திரைப்பட இயக்குனர் கரு.பழனியப்பன் கூறிய கருத்து  கவனிக்கத்தக்கது.

''என் தாத்தாவிற்கு  பத்து  பிள்ளைகள்....என் தகப்பனாருக்கு ஆறு பேர்...ஆகவே ,அந்தக் காலத்தில்   தங்கள் பிள்ளைகளின் தனிப்பட்ட விருப்பு
வெறுப்புகளில் பெற்றோர்களின் தலையீடு என்பது மிகக் குறைவாகவே இருந்தது. ஆனால்  இப்போது ஒரே ஒரு பிள்ளையைப் பெற்றுவிட்டு ,நன்றாக வளர்க்கிறேன் பேர்வழி என்று அதீத கவனம் செலுத்தி,பலவந்தமாகப்  பலவற்றைத்   திணித்து,அக்குழந்தையின் இயல்பைச் சிதைக்கிறார்கள் இன்றைய பெற்றோர்கள் " என்று ஆதங்கப்பட்டார். அதற்கு எதிர்வாதம் செய்த சிலர் 'குழந்தையை எப்பொழுதும்  engage செய்வதென்பது  நல்லது தானே'  என்றனர். இந்த வாதம் சரியாகத்  தோன்றினும்  , இதை  நான் மற்றொரு
கோணத்தில் பார்க்கிறேன்.

குழந்தைகள்  இந்த உலகைப் பார்க்கின்ற விதம், தங்களுக்குள் சிருஷ்டித்துக்
கொள்கிற உலகம்,பெற்றோரிடமும் மற்றவர்களிடமும் அவர்களின் எதிர்பார்ப்பு என அத்தனையும் பரிசுத்தமானது. அவர்கள்  தனித்தன்மையோடு வளர்வதற்குரிய சூழலை நாம் உருவாக்கித் தரலாமே தவிர  , பெற்றோம் என்ற ஒரே காரணத்திற்காக அவர்கள் மீது எந்நேரமும்  ஆதிக்கம் செலுத்துவதென்பது  எதிர்மறை விளைவுகளையே  ஏற்படுத்தும். இருப்பது ஒரே பிள்ளை என அளவுக்கதிகமாக  செல்லம் கொடுக்கும் பெற்றோர்தான் குழந்தைகளை அதிகம் அடிக்கின்றனர் என்பது நகைமுரண். 'உனக்கு வேண்டியதை நான் கொடுக்கிறேன்; நான் சொல்வதைக் கேள் ' என்ற குணம்தான் இங்கு ஓங்கி நிற்கிறது. நாம் ஏன் குழந்தைகளை அடிக்கிறோம் ?அவர்களால் திருப்பி அடிக்க முடியாது என்ற  காரணத்தினால் தானே ! ஒப்பீட்டளவில்  வலு குறைந்த அவர்களின் தவறைத் திருத்துகிறோம் என்று சொல்லி அவர்களை அடித்து நம் ஆற்றாமையைத் தணித்துக் கொள்வது எந்த விதத்தில் நியாயம் ?!

நிற்க.  நான் சொல்ல நினைத்தது குழந்தை வளர்ப்பு பற்றியல்ல;

 எந்தவித முன் தீர்மானமுமின்றி  அணுகும் குழந்தைகளின் உலகில் பிரதான இடமென்பது அவர்கள் வயதொத்த பிள்ளைகளுக்கானதே ! அதில்  நாம் சிறிது   பங்காற்றலாமே  ஒழிய , எந்த விதத்திலும் பங்கேற்க  முடியாது. அக்கம்பக்கத்து குழந்தைகளிடம் நட்பு பாராட்ட  முந்தைய தலைமுறைக்குக் கிடைத்த  வாய்ப்பு  இன்றைய குழந்தைகளுக்கு அறவே இல்லை. தெருவில் நண்பர்களுடன் கால்பந்து விளையாடி கால் வலிக்க வேண்டிய பிள்ளைகள் , இன்று கணினியில் விளையாடி கை வலித்துக் கிடக்கிறார்கள். ஆக , பெற்ற முதல் குழந்தைக்குத்  துணையாக இன்னொரு குழந்தையைப் பெற்றுக் கொள்வதே  ஏற்புடைய  வழி என்பது என்னுடைய கருத்து.

வளர்ப்பதற்கு வசதியில்லை, கவனிப்பதற்குப் பெரியவர்கள் இல்லை என சாக்கு போக்கு சொல்லாமல் தயவு செய்து உரிய இடைவெளியில் இரண்டு குழந்தைகளைப் பெற்றுக் கொள்ளுங்கள். பரிபாலனம் செய்வதில் சிரமங்கள் இருந்தாலும் அவற்றை மீறிக் கிடைக்கும் சந்தோஷத் தருணங்கள் உங்கள் வாழ்க்கையை மேலும் அர்த்தமுள்ளதாக்கும்.   தங்களுக்குள்  சண்டையிட்டும் , சமாதானமாகியும் , வாழ்வின் நியாய அநியாயங்களை அவர்களே இயல்பாகப் புரிந்து கொள்வார்கள். சுக துக்கங்களை தங்கள் மொழியில் பகிர்ந்து ஆசுவாசம் கொள்வார்கள்.  சொந்த பந்தங்களைத்  தொந்தரவாகக் கருதும் நம் சமூகச்சூழலில் ,பிற்காலத்திலும் ஒருவொருக்கொருவர் துணையாக இருப்பார்கள்.

நேற்று இரவு அலைபேசியில் ஒரு அழைப்பு. பெங்களூரிலிருந்து  சுச்சு பேசினான். எங்கெங்கோ சுற்றிய பேச்சு இறுதியில் குழந்தைகளைப் பற்றி வந்த போது ,   இயந்திரகதியில் இயங்கும் தினப்படி வாழ்க்கையில், ஒரு குழந்தையையே பராமரிக்க சிரமமாயிருப்பதால் , இன்னொரு குழந்தையைப் பெற்று அதைக் கஷ்டப்படுத்தும் விருப்பம் இல்லை என்றான். அவனுடைய நிலையிலிருந்து பார்த்தால் அதுவும் சரிதான்.இது பற்றித்தான் எழுதிக்கொண்டிருக்கிறேன் என்றோ, கண்டிப்பாக இன்னொன்று பெற்றுக்கொள் என்றோ நான் அவனிடம்   சொல்லவேயில்லை.

இதை தட்டச்சு செய்து கொண்டிருந்த போது , ஓடிப்பிடித்து  விளையாடிக் கொண்டிருந்த புவனும், சந்துவும் ,  அழுதபடி என்னிடம் வந்தனர்.

'அப்பா...புவன் என்னை அடிக்கிறான்.'

'இல்லப்பா ...அவன்தான் என்னை முதல்ல அடிச்சான் '

நான் அவர்களின்  பேச்சுக்கு சற்று காது கொடுத்தேன்.  தீர்ப்பு அளிக்கும்  நோக்கில் அல்ல; அவர்களுக்கிடையேயான காழ்ப்பு அழிக்கும் நோக்கில்.

இவர்களின் சிறு சண்டை  பெரும் போராக உருவெடுக்கும் போது நான் ஏங்கிப் போவதுண்டு  , நமக்கு ஒரு  பெண் குழந்தை இல்லையே என்று .

ம்ம்ம்ம்...எல்லோருக்கும் எல்லாவற்றிற்கும் கொடுப்பினையிருக்கிறதா , என்ன ?!

No comments:

Post a Comment