28 May 2012

தீராக் கேள்வி- தெளிவான பதில் 4

1)நல்லவர்கள் யார் என்று எப்படித் தெரிந்து கொள்வது?
அதெல்லாம் தெரிந்து கொள்ள முடியாது. இதுதான் இந்த வாழ்க்கையின் சுவாரஸ்யம். அதுதான் இந்த வாழ்க்கையை வேகமாக்குகின்ற விஷயம். மரணம் எப்படி தெரிந்து கொள்ள முடியாத விஷயமோ,அதே போல் தான் யார் நல்லவர், எது வரையில் நல்லவர் என்பதும் தெரிந்து கொள்ள முடியாத ரகசிய விஷயம். நானும் நல்லவனாக இருப்பதற்கே முயற்சி செய்து வருகிறேன். இன்னொருவர் முதுகில் குத்தாமல், இன்னொருவரைப் பற்றி இழிவாகப் பேசாமல், எனக்குத் தான் எல்லாம் தெரியும் என்று கர்வப்படாமல் , இனிமையாக இருக்கக் கடுமையாக முயற்சிக்கிறேன். இது எளிதான் விஷயம் அல்ல என்பதும் எனக்குப் புரிகிறது. எல்லாத் தெளிவுகளையும் மீறி கர்வம் வர வாய்ப்பிருக்கிறது. அந்தக் கர்வம் கெட்டதாகத்தான் வெளிப்படும். கெட்ட விஷயமாகத்தான் மற்றவரைப் பாதிக்கும்.
2)எனக்கு பொழுதே போகவில்லை. நல்ல பொழுது போக்குக்கு ஒரு விஷயம் சொல்லுங்களேன்.
வீடு சுத்தம் செய்யுங்கள். தினந்தோறும் தரை துடையுங்கள். வாரந்தோறும் அலமாரியைத் துடைத்து , ஒட்டடை அடித்து , மின்விசிறி துடைத்து , விளக்குகள் சுத்தம் செய்து பளிச்சென்று வீட்டை வைத்திருங்கள்.தொட்டியில் சிறிய செடிகள் வளருங்கள். இடமிருப்பின், ஒரு தொட்டியில் மீன்களும் வளர்க்கலாம். சிறியதாய் , தியான ஸ்லோகங்கள் கொண்ட புத்தகங்கள் வாங்கி , ஒரு நாளைக்கு பலமுறை படியுங்கள். உங்களுக்குப் படிக்க விருப்பமில்லை என்று நினைக்கிறேன். எனவே தான், பொழுது போகவில்லை என்று எனக்குக் கடிதம் எழுதுகிறீர்கள்.
3)இத்தனை வயது வாழ்ந்து மற்றவர்களுக்கும் வாழக் கற்றுக் கொடுத்திருக்கிறீர்கள். ஒருவன் வாழ்க்கையில் என்ன செய்யக் கூடாது என்று நினைக்கிறீர்கள்?
புலம்பக் கூடாது.  வீடு வாசல் பற்றி , மனைவி மக்கள் பற்றி ,சாப்பிடும் உணவு பற்றி,ஆரோக்கியம் பற்றி மற்றவரிடம் சொல்லி புலம்பக் கூடாது. எப்படியிருக்கிறாய் என்று கேட்டால் நலமாக இருக்கிறேன் என்றுதான் சொல்ல வேண்டுமே தவிர, எதோ இருக்கிறேன் என்று சொல்வதும் புலம்பல்தான். என்ன கிடைத்திருக்கிறதோ , அதை வைத்துத் திருப்தியடைய தெரிந்து கொள்ள வேண்டும். வாழ்க்கையை ரொம்ப ருசியாக அனுபவித்தவர்கள் ஒரு காலகட்டத்தில் குறை சொல்ல ஆரம்பித்து விடுவார்கள்.சற்று விலகல் ஏற்பட்டால் இந்தக் குறை சொல்லும் புத்தி வராது. புலம்பல் இருக்காது. அனுபவிக்க உலகில் நல்ல விஷயங்கள்   நிறைய  இருக்கின்றன. வேதனைகளையும்  கூட இறைவன் கருணை என்று புரிந்து கொண்டு விட்டால் வாழ்க்கை சந்தோஷமானதாகவும் , அர்த்தமுள்ளதாகவும் இருக்கும்.

18 May 2012

பறவைகளின் காவலாளி


முற்றத்தில் காயும்
தானியங்களைப் பார்த்துக்கொள்ளுமாறு
நிஷாக் குட்டியைக்
காவலுக்கு வைத்துவிட்டு
அம்மா கடைக்குச் சென்றாள்
பொறுக்க வரும் காக்கைகளை
விரட்டாமல்
'சீக்கிரம்...சீக்கிரம்...
அம்மா வர்றதுக்குள்ளே
தின்னுக்கோ'
எனச் சொல்லும் நிஷாக் குட்டியின்
அன்பின் பெருவெளியைச்
சமன்படுத்த
வார்த்தை எதுவும் சிக்கவில்லை எனக்கு.

-.சிவநேசன்

கதைப் பொருள்


பாலமுருகனும் கணேசனும்
பல்பொருள் அங்காடியில்
தற்செயலாய்ச் சந்தித்த போது
பரஸ்பரம் நலம் விசாரித்தனர் -
பின்பு
அலுவலகத்தில்
ஆனந்தன் அகம்பாவமாக
நடந்து கொள்வதை
அரை மணி நேரம் விவாதித்தனர்

அடுத்த நாள் அலுவலகத்தில்
கணேசனும் ஆனந்தனும்
பதிவேட்டில் கையெழுத்திடுகையில்
பார்த்துக் கொள்ள நேரிட்டது - அங்கே
பாலமுருகனின் பண்புகள்
பத்து நிமிடம் பாடுபொருளாயின

அதே நாளின் இறுதியில்
தேநீர்க் கடையில்
எதேச்சையாகச் சந்தித்த
ஆனந்தனும் பாலமுருகனும்
ஆரத் தழுவிக் கொண்டனர் - பின்னர்
கணேசனின் செயல்களைக்
கருணையின்றி விமர்சித்தனர்.

பிறிதொரு நாளில் மூவரும்
ஒன்று சேர்ந்தனர் இப்போது
அதிகமாக அலட்டிக் கொள்ளும் அம்பிகா
கதைப் பொருள் ஆனாள்.

- நா. ராஜேந்திர பிரசாத்

15 May 2012

'ணங்'


'ணங்' என்ற சத்தம் கேட்டு திடுக்கிட்டு விழித்தேன்.என்னுடன் தங்கியிருந்த நண்பர் தட்டுத் தடுமாறி படுக்கைக்கு செல்வது, இரவு விளக்கின் வெளிச்சத்தில் மங்கலாகத் தெரிந்தது. சத்தம் வரக் காரணமாயிருந்த குவளை  கீழே உருண்டு கொண்டிருந்தது. நண்பரின் கை தவறி விழுந்திருக்கக் கூடும்.

ஒரு பயிற்சிப் பட்டறையில் கலந்து கொள்ளும் பொருட்டு  , உடன் பணி புரியும் நண்பர் சகிதம் நான்கு நாட்கள் வெளியூரில் தங்க நேரிட்டிருக்கிறது. நேற்றிரவு இங்கு வந்து சேர்ந்த போதே மணி பத்தைத் தொட்டிருந்தது. இரவு உணவுக்குப் பின் நீண்ட நேரம் கதைத்து விட்டுப் படுக்கும் போது, மணி பன்னிரண்டைத் தாண்டி விட்டது. எப்போது உறங்கினோம் என்றே தெரியவில்லை. ஆழ்ந்த தூக்கம்! கீழே விழுந்த குவளை தூக்கத்தைக் கெடுத்து விட்டது.

அலைபேசியில் மணி பார்த்தேன்2.40 . புரண்டு படுத்தேன். சமீப காலமாக நடு இரவில் விழிப்பு ஏற்பட்டால் சாமான்யத்தில் தூக்கம் வருவதில்லை.ஏதேதோ எண்ணங்கள் சுழல அரை மணி நேரமாவது தூக்கம் வராமல் படுக்கையில் புரள்வது வழக்கமாகி வருகிறது. நாளைய பயிற்சி வகுப்பு எப்படியிருக்கும் என்று யோசித்துக் கொண்டே கண்களை மூடினேன். நினைவு இழை அறுந்து உறக்கம் தழுவத் தொடங்கும் நொடியில் , பசித்த புலியின் உறுமலாய் மிக அருகில் சத்தம் கேட்டது. தலை தூக்கிப் பார்த்தேன்.நண்பர் குறட்டை விட ஆரம்பித்திருந்தார். எந்நிலையிலும் புறச்சூழ்நிலைகளால் பாதிக்கப்படாத வண்ணம் மனதைப் பழக்கியிருந்ததால், அவரின் குறட்டையைக் குறையாய் நினைக்காமல் உறங்க முயன்றேன். சிறிது நேரத்தில் புலியின் உறுமல் சிங்கத்தின் கர்ஜனையாய் மாறியது. ஒரு காதை தலையணையில் அழுத்தி , மறு காதை கையால் பொத்தியபடி படுத்தேன்.
'எந்தவொரு ஓசையுடனும் மனம் இயைந்து சென்றால் அந்த ஓசை இசையாகி விடும்' என்ற ஓஷோவின் கூற்றுப்படி மனதை குறட்டை ஒலியுடன் ஒத்திசைத்தேன். ம்ஹூம்...பலனில்லை. சிங்கத்தின் கர்ஜனை யானையின் பிளிறலாய் மாறியதும் தான் எனக்கு விபரீதம் புரிந்தது. இன்றைய தூக்கம் இவ்வளவுதான்! தூக்கம் கூட பிரச்சினையில்லை...தூக்கமின்றி யோசிப்பதால் வரும் மன அயற்சி கூட விஷயமில்லை...ஆனால் கடும் ஏற்ற இறக்கத்துடன் என்னைச் சூழ்ந்துள்ள இந்த ஒலி மாசுபாட்டிலிருந்து எப்படித் தப்பிப்பது என சிந்தித்தபடி சிறிது நேரம் வெளியில் சென்று உலவினேன். கண்கள் கெஞ்ச , இஷ்ட தெய்வத்தை வேண்டிக் கொண்டு , மீண்டும் அறைக்குள் வந்தேன். தற்போது யானை மெலிந்து பூனையாகி இருந்தது. சற்று தெம்புடன் படுக்கையில் தலை சாய்த்தேன். இரண்டே நிமிடத்தில் நண்பர் விஸ்வரூபமெடுத்து விண்ணைத் தொட , எனக்கு வாழ்க்கையே வெறுத்து விட்டது. இதிலிருந்து மீள உண்டான அனைத்து வழிவகைகளையும் என்னாலான வரையில் brain storming செய்ய, பளிச்சென்று ஒரு யோசனை உதயமாயிற்று. குறட்டை விடுபவரை ஏதேனும் ஒரு வகையில் disturb செய்தால் ஒலி தடைபடும் அல்லது மட்டுப்படும் என்பது அனுபவப் பாடம். வேறு வழியேயின்றி, யோசனையை செயல்படுத்தும் விதமாக , அருகிலிருந்த குவளையைத் தட்டி விட்டேன்.

'ணங்' என்ற சத்தம் கேட்டது.


அறியப்படும் நீதி : நாம் விடும் குறட்டை நமக்குக் கேட்பதில்லை.