30 April 2012

முதல் மரியாதை

நேற்று மாலை தொலைக்காட்சியில் 'முதல் மரியாதை' படம் பார்த்தேன்.  (எத்தனையாவது தடவை?!).என்னுடைய துவக்கப் பள்ளிப் பருவத்தில் வெளிவந்த படம். பாரதிராஜாவே நினைத்தாலும் இப்போது அவரால் இது போன்ற படத்தைக் கொடுக்க முடியாது. எனக்குத் தெரிந்து நடிகர் திலகம் அவர்கள் over acting ஏதும் செய்யாமல் நடித்த இந்த (ஒரே) படத்தை ஒவ்வொரு முறை பார்க்கும் போதும் முதல் முறை போலவே ரசிக்க முடிவதுதான் ஆச்சர்யம்.
எளிமையான கதை , தொய்வில்லாத திரைக்கதை, அசலான பாத்திரங்கள், எதார்த்தமான சூழல், அளவான வசனங்கள், தெளிவான உச்சரிப்பு, இயல்பான நடிப்பு, அர்த்தமுள்ள பாடல் வரிகள், இத்தனைக்கும் மகுடமாய் இளையராஜாவின் இசை என படத்தின் ஒவ்வொரு அம்சமும் பார்த்து பார்த்து செதுக்கப்பட்டவை.
ஒரு தலைமுறையின் ரசனையை வளர்த்தெடுத்ததில் புத்தகங்களுக்கு அடுத்தபடியாக பெரும்பங்கு வகித்தவை இது போன்ற திரைப்படங்கள் தான். மனித உறவின் உளவியல் சிக்கல்களை எழுத்தில் வடித்த கதாசிரியர்களும், அவ்வுணர்வுகளை திரையில் கொணர்ந்த இயக்குனர்களும், அவற்றை பார்வையாளனுக்குள் ஊற்றிய இசையமைப்பாளர்களும் தாங்கள் பெற்ற ஊதியத்திற்காக மட்டுமின்றி , தங்கள் ஆத்ம திருப்திக்காக பணியாற்றியதுதான் காலத்தால் அழியாத படைப்புகளாக நம்முடன் உலவுகின்றன.
ஊர்ப் பெரியவருக்கும் , பரிசல் ஓட்டும் இளம் பெண்ணுக்கும் இடையிலான இனம் புரியாத நேசத்தைக் காட்டிய 'முதல் மரியாதை '-
படிப்பு வாசனையில்லாத முரடனுக்கும், அவனை மனிதனாக்கும் ஆசிரியைக்கும் இடையில் மலரும் அன்பைக் காட்டிய 'கடலோரக் கவிதைகள்'-
புகழ் பெற்ற பாடகிக்கும், அவளது தீவிர ரசிகனுக்கும் இடையில் உருவாகும் உன்னத உறவைக் காட்டிய மகேந்திரனின் , 'ஜானி'-
பொருந்தாக் காமத்தை விரசமில்லாக் காதலுடன் மிக நேர்த்தியாகக் காட்டிய 'சிந்து பைரவி'-
பருவத்தில் தோன்றும் காதல் போன்றதொரு உணர்வை ஆரவாரமில்லாக் கொண்டாட்டத்துடன் காட்டிய 'இதயம்'-
முடிந்து போன முதல் காதலில் இருந்து மீள முடியாத மனைவியை ஆதரிக்கும் கண்ணியமான கணவனைக் காட்டிய 'மௌனராகம்'-
இன்னும் எத்தனை படங்கள் ! எங்கள் தலைமுறையினர் கொடுத்து வைத்தவர்கள் என்று உரத்துச் சொல்வேன்.
நடிகர், நடிகையரின் முகம் தாண்டி மற்ற தொழில் நுட்பப் பின்னணி குறித்த பிரக்ஞையற்ற வெகுஜனக் கூட்டமாகத் தான் இப்படங்களை அனுபவித்தோம்.... கொண்டாடினோம்தொழில் நுட்ப நுணுக்கங்கள் அனைத்தும் கடைக்கோடி ரசிகனுக்கும் சென்று சேர்ந்திருக்கும் இன்றைய சூழலில் இவற்றை மீண்டும் பார்க்கும் போது , வசதிகள் இல்லாத அந்தக் காலத்திலேயே camera angle, lighting, editing, re-recording என அனைத்துத் துறை ஜாம்பவான்களும் திரை மறைவில் தங்கள் பங்களிப்பை மிகத் திறமையாகவும், நேர்த்தியாகவும் ஒருங்கிணைத்து அற்புதக் காவியங்களைப் படைத்திருப்பது வியக்க வைக்கிறது.
மேலே குறிப்பிடப்பட்டுள்ள படங்களுக்கும் , இன்றைய குப்பைகளுக்கும் உள்ள மிகப் பெரிய வித்தியாசம் - Decency. இதற்கு மேல் நான் எதுவும் சொல்ல விரும்பவில்லை.
'முதல் மரியாதை' தந்த கனத்துடன் channel ஐத் திருப்பினால், 'அடிடா அவளை, வெட்றா அவளை ' என்கிறான் ஒருவன். பதறிப் போய் அடுத்த channel போனால் , 'கொல வெறி...கொல வெறி' என்று அலறுகிறான் இன்னொருவன்.
ஐயோ பாவம் ...இன்றைய இளைஞர்கள்!

24 April 2012

தந்தை மகற்காற்றும்.....

நீண்ட நாட்களுக்குப்  பின் , குடும்பத்துடன் வெளியூர் பயணம் . தூத்துக்குடியில் வசிக்கும் உறவினர் ஒருவரின்  திருமண விழாவிற்கு அழைப்பு வர, நான் பிள்ளைகளிடம்  கேட்டேன்,
 " டேய் புவன்... கடல் பார்த்திருக்கியா...?".
 " நேரில பார்த்ததே இல்லப்பா...படத்துல தான் பார்த்திருக்கேன்."
" ஏய் சந்து...நீ கடல்  பார்த்திருக்கியா...?"
" அப்படின்னா...?!"

மேற்கண்ட உரையாடலின் முடிவில் உருவானது எங்களின்  திருச்செந்தூர் பயணத்திட்டம். ஞாயிறன்று காலை 4.30 மணி ரயில்  பிடித்து மதுரையிலிருந்து தூத்துக்குடி சென்று விழாவைச் சிறப்பித்து விட்டு ,  அங்கிருந்து பேருந்து மூலம் செந்தூர் சென்று கடலில் குளித்துக் களித்துப் பின் மாலை 4.30 மணிக்கு தூத்துக்குடியிலிருந்து மதுரை செல்லும் ரயிலைப் பிடிப்பதாகத் திட்டம்.  பேசிய கையோடு இணையம் மூலம் முன்பதிவும் செய்து விட , 'அப்பாவா இப்படி' என பிள்ளைகளும் , 'இவரா இப்படி' என என் மனைவியும்  ஒரு சேர ஆச்சர்யமும் , குதூகலமும்  அடைந்தார்கள். 'சேட்டை செய்யும் குழந்தைகளை வெளியூர் பயணங்களில் சமாளிப்பது எப்படி' என்று ஒரு புத்தகமும் நான் படித்திராததால் , பொதுவாக குடும்பப் பிரயாணங்களைத் தவிர்த்து விடுவது என் வழக்கம். தற்போது பிள்ளைகள் சிறிது பெரியவர்களாகி விட்டார்கள் என்று நம்பிக்கையில் இந்த பயண ஏற்பாடு. 

சனிக்கிழமை இரவிலிருந்தே பயணம் தொடர்பான சந்தேகங்களை (வழக்கம் போல்)  கேள்விக் கணைகளாகத் தொடுக்க ஆரம்பித்த புவனை சமாளித்து சற்றே கண்ணயர்ந்தால் ,  வைத்த அலாரம் அடிப்பதற்கு முன்பாக 3 மணிக்கே எழுப்பி விட்டனர் மின்வாரியத்தினர். அனைவரையும் எழுப்பி அரக்கப் பரக்க  கிளம்பி  அடித்துப் பிடித்து  ரயில் நிலையம் அடைந்தாலும் ஆற அமரத்  தான் வண்டியேறினோம். (வண்டி தாமதம்!). அதுவரை ஆடிக் கொண்டிருந்தவர்கள் , வண்டி நகரத் தொடங்கியதும் இருக்கையில் சரியத் தொடங்கினர். நான் சன்னலை ஒட்டிய பக்கவாட்டு படுக்கையில் படுத்தேன். சிறிதே பரவியிருந்த ஒளியும், சில்லென்ற அதிகாலைக் காற்றும் , சீரான வேகத்தில் செல்லும் வண்டியின் அசைவும், என் மீது கிடந்த பிள்ளையின்  அணைவும் ...சுகம்.. சுகம்.. பரம சுகம் 
சரியாக எட்டு மணிக்கு மண்டபத்தை அடைந்து , சுற்றத்துடன்  அளவளாவி , விழாவின் முக்கிய நிகழ்வான காலை உணவு ருசித்தலைக் கடமையுடன் முடித்து ,  ஒரு மணி நேரம் பயணப்பட்டு 11 மணிக்கு திருச்செந்தூர் சென்றிறங்கிய  எங்களுக்கு அங்கிருந்த அபரிமிதமான மக்கள் கூட்டம்  அதிர்ச்சியளித்தது. முடியுடனும், இல்லாமலும் ஆயிரக்கணக்கான தலைகள். முடிக் காணிக்கை அனுமதிச் சீட்டு வாங்க வரிசை, முடி எடுக்க வரிசை, நாழிக் கிணற்றில் குளிக்க வரிசை, சுவாமி தரிசனம் செய்ய வரிசை, மதிய உணவு சாப்பிட கடைகளிலும் வரிசை என பொழுது முழுவதும் வரிசையிலேயே கழிந்தது. ஒரே ஒரு ஆறுதல், கடலில் குளிக்க மட்டும் வரிசையில்லை. கடலைப் பார்த்து வியந்த பிள்ளைகள் ஒரு அலை தாக்கியதும் கதறிப் பின்வாங்கி விட்டனர். எவ்வளவு சமாதானப்படுத்தியும் வர மறுத்து ,கரையில் என் மனைவியிடம் தஞ்சமடைந்தனர். நான் அரை மனதுடனும் சிறிது பதற்றத்துடனும் கடலில் விழுந்து எழுந்தேன்.

வரிசைகளில் நிற்கும் போது புவனேஷின் கேள்விகளும், சந்தோஷின் அலையல்களும் எங்கள் உயிரில் பாதியை உருவின. அவ்வப்போது  சந்தோஷ் எங்கள் கண்ணை மறைத்து  மறைந்து விட,  அவன் அணிந்திருந்த மஞ்சள் சட்டையை வைத்து அவனை மீட்டெடுத்தோம். ஒவ்வோர் கடையைத் தாண்டும் போதும் பொருட்கள் கேட்டு சந்தோஷ் செய்த அட்டகாசமும், முடி எடுக்கும் போது அவன் செய்த ரகளைகளும்  தனிப் பதிவிற்கானது.  சுட்டெரித்த  சூரியனும், சுறுசுறுப்பான பிள்ளைகளும் எங்களைக் களைப்புறச் செய்தனர். ஒரு வழியாக, சற்று தொலைவிலிருந்து (?) சுவாமி தரிசனம் செய்து , அரைகுறையாக சாப்பாடு முடித்து , icecream கடையில் ஆசுவாசப்பட்டு நிமிர்ந்த போதுதான் உறைத்தது. ம்ணி மூன்று. சுட்டெரிக்கும் வெயிலில் , ஆளுக்கொரு பிள்ளையாக இழுத்துக் கொண்டு , கிளம்பத் தயாராயிருந்த ஒரு  தனியார் பேருந்திலேறி அமர்ந்தோம்.  இன்னும் ஒன்றரை மணிக்குள் ரயிலைப்  பிடிக்க வேண்டிய பதற்றத்தில் நாங்கள் இருக்க, காலியாயிருந்த வாசற்படியும் நிரம்புவதற்குக் காத்திருந்தனர் நடத்துனரும் ஓட்டுனரும். ஒரு வழியாகக் கிளம்பிய பேருந்து, சிற்றுந்தாக மாறி நூறடிக்கு ஒரு தடவை நின்று சென்றது. ஒரு வேளை தாமதமாகி விட்டால்...... மதுரை வரையிலுமான பேருந்துப் பயணத்தை நினைத்துப் பார்க்கும் போதே  தலை சுற்றியது.

முருகன் கிருபையால், சரியான நேரத்துக்கு தூத்துக்குடி பேருந்து நிலையத்தை அடைந்து, ஓட்டமும் நடையுமாக வெளியே வந்து ஆட்டோ பிடித்தோம். அந்த ஆட்டோ ஓட்டுனர் எப்போதும் யாருக்காவது உதவிக் கொண்டே இருப்பார் போலும். எங்கள் நிலையை அறிந்தவுடன் அடுத்த ஐந்தே நிமிடங்களில் ரயில் நிலையத்தில் எங்களைக் கிடத்தினார்.அந்த ரணகளத்திலும் சந்தோஷ் அவருக்கு ' 'டாடா' காண்பித்து விடை கொடுத்தான்.எங்கள் வருகைக்காகக் காத்திருந்தாற் போல் , நாங்கள் ஏறியவுடன் ரயில் புறப்பட்டது. ம்துரை வந்து சேர்ந்தவுடன் நேராக உணவகத்துக்கு அழைத்துச் செல்ல, களைத்துப் போயிருந்த  எங்கள் மூவருக்கும் சேர்த்து சந்தோஷ் தனியாளாய்  வெளுத்துக் கட்டினான்

சாப்பாடு முடித்து வீடு வந்து படுக்கையில் மனதில் சில கேள்விகள்....
இல்லற வாழ்வில் துணையை அனுபவிப்பது சுகமெனில், இணைப்பாய் வரும் பொறுப்புகள் அனைத்தும் சுமையா? பிள்ளைகள் பெறுவது சுகமெனில்,  தொல்லைகள் பொறுப்பது சுமையா?பிணைக்கப்படுதல் சுகம் எனில், பிணக்குகள் வருவது சுமையா? சம்சாரியாவது சுகமெனில், சமரசமாதல் சுமையா?  'சம்சார சாகரம்' என்று சும்மாவா சொன்னார்கள்  எனப் பலவாறு யோசித்துக் கொண்டே  உறங்கிப் போனேன். 
மறுநாள் காலையில்  பிள்ளைகள் இருவரும்   பயணத்தைப் பற்றிப் படுக்கையிலிருந்தவாறே சிலாகித்துக் கொண்டிருந்தனர். முன் தினம்  எனக்கு சலிப்பூட்டிய  தருணங்கள் அனைத்திலும் அவர்கள் சிலிர்ப்படைந்திருந்தது அவர்கள் பேச்சில் தெரிந்தது. பயணத்தின் களைப்பு தாண்டிய பூரிப்பு அவர்கள் உடல் மொழியில் வெளிப்பட்டது. நான் விழித்து விட்டதைப் பார்த்ததும் இருவரும் உருண்டு வந்து என்னைக் கட்டிக் கொண்டனர்.

"அப்பா...மறுபடியும் இதே மாதிரி இன்னொரு கடல் பார்க்கப் போலாமா...?"
"சரிடா  செல்லம்...அடுத்த வாரம் கண்டிப்பா போலாம்.."
சொல்லிக் கொண்டே  சோம்பல் முறித்து படுக்கையில் இருந்து  எழுகையில், விவரிக்க இயலாத சுகம் ஒன்று என் உடல் முழுதும் பரவியது. அது, முன் தினம் அதிகாலை ரயிலில் அனுபவித்ததை விட அற்புதமானதாக இருந்தது.