13 April 2012

இணையமும் , காதலும்



ஆனந்த விகடனில் இந்த வாரம் வெளியாகியுள்ள மனுஷ்யபுத்திரன் அவர்களின் பேட்டியிலிருந்து.....
e-mail, facebook, twitter என இன்றைய சமூகம் ஒரு மெய்நிகர் உலகத்தில் வாழ ஆரம்பித்து விட்டதா?
இணையத்தின் வழியாக திறந்து விடப்பட்டு இருக்கும் உலகம் ஆச்சர்யங்களும் அதிசயங்களும் நிறைந்தது. மனித குல வரலாற்றில் இத்தனை கட்டற்ற சுதந்திரம் முன்னொரு போதும் இருந்ததில்லை.தன் அடையாளத்தை முழுவதும் மறைத்துக் கொண்டு , அடையாளமே இல்லாத இன்னொருவருடன் உரையாடலாம்.இது மனிதனுக்குப் பெரிய மன விடுதலையைக் கொடுத்திருக்கிறது. ஏனெனில், நமது சமூகம் எப்போதும் நமது ஆசாபாசங்களைக் கட்டுப்படுத்திக் கொண்டே இருக்கிறது. இடைவிடாமல் கண்காணிக்கிறது. நவீன தொழில் நுட்பம் மேலும் மேலும் தனிமைப்படுத்துகிறது. இணைய உலகில் இந்த தனிமைப்படுத்தலும், கண்காணிப்பும் இல்லை என்பது மனித மனதுக்குப் பெரிய ஆசுவாசம். ஆகவே,நான் இதை எதிர்மறையாகப் பார்க்க வில்லை.யதார்த்த வாழ்க்கையில் வாழ முடியாத வாழ்க்கையைக் கற்பனையில் வாழ்வதற்கான வாசலை விஞ்ஞானம் திறந்து விட்டுள்ளது. இதை அனுபவிப்பதற்கான உரிமை எல்லோருக்கும் உள்ளது. குறிப்பாக, பெண்களுக்கு இந்த cyber space மிக முக்கியமானது. இதுவரை நம்மைக் கண்காணித்து, கட்டுப்படுத்தி அதன் மூலம் அதிகாரத்தைச் சுவைத்தவர்கள் தான் இப்போது பதற்றத்துடன் எதிர்க்கின்றனர்.
காதல் இப்போதும் புனிதமானதுதானா?
காதல் எப்போதும் காதலாக மட்டும்தான் இருந்திருக்கிறது. அது புனிதமானதாகவோ, புனிதமற்றதாகவோ ஒருபோதும் இருந்ததில்லை. எல்லா அடிப்படைத் தேவைகளையும் போல காதலும் ஓர் ஆதாரமான தேவை. குழந்தைகளுக்கான உணவுப்பொருட்களில் கூடக் கலப்படம் வந்து விட்ட உலகில் , காதல் மட்டும் எப்படித் தூய்மையானதாக இருக்க முடியும்? ஆனால், நடைமுறையில் சாத்தியப்படாத அப்படி ஒரு தூய்மைவாதக் காதலுக்கு மனித மனம் ஏங்குகிறது. கற்பனையின் வழியே காதலின் முழுமையை அடையத் துடிக்கிறது. நமது இலக்கியங்கள் அதற்குத் துணை செய்கின்றன. யதார்த்தம் அப்படி இருக்க முடியாது என்பதால் , காதல் புனிதமானதாக இருப்பது இல்லை.

No comments:

Post a Comment