06 August 2012

தீராக் கேள்வி-தெளிவான பதில் 5


பனியனும் பேண்ட்டும் போட்டு வருகின்ற பெண்கள் உங்களைத் தொந்தரவு செய்வதில்லையா?
உடை தொந்தரவல்ல. அப்படிப் பார்த்தால் புடவையைக் கூட உங்கள் கண்களைப் பிடுங்கும் வண்ணம் உடுத்திக் கொள்ள முடியும். உடை உடுத்திக் கொள்பவர்கள் தான் பிரச்சினை. அவர்கள் நோக்கத்தைப் பொறுத்துதான் எதிராளியின் அவஸ்தை இருக்கிறது.
ஆடை மூலம் பிறரைக் கவர நினைக்கின்ற பெண்களைப் பார்க்கும் போது மெல்லிய அருவறுப்பு ஏற்படுகிறது. இது விரைவில் தீர்ந்து போய்விடும் சரக்கு. இதை வைத்து வியாபாரம் செய்ய முடியாது. பெண்களின் குணங்களாய் ஏகப்பட்ட நல்ல விஷயங்கள்  இருக்கின்றன. அவை வெளிப்படுகின்ற போது பெண்கள் இன்னும் அழகாக இருக்கிறார்கள்.
உதாரணத்திற்கு, சிறிய கொண்டையும், காட்டன் புடவையும், தோளில் லெதர் பேக்குமாய் வேலைக்கு விரைவாகப் போகிற பெண் , நெளிந்து நெளிந்து அடுகிற பெண்ணை விட, அழகாக இருக்கிறாள் என்பது என் அபிப்பிராயம்.

நெற்றியில் விபூதி இடுவதன் அர்த்தமென்ன?
நம் அறிவு, ஞானம், செல்வம்,ஜாதி, மதம், கடவுள் நம்பிக்கை, காதல், காமம், ஆண்மை, வீரம் போன்ற எல்லா குணங்களும், கடைசியில் பிடிசாம்பல் தான். இவை எதற்கும் அர்த்தமில்லை. இவைகளை நம்முடைய புத்திதான் வெளியிடுகிறது. பிடிசாம்பலை, நம்முடைய எல்லா விஷயங்களும் சாம்பலாய் போனதை, நம் புத்திக்கு அருகே எப்போதும் வைத்துக் கொள்வதாய் நெற்றியிலே சாம்பலைத் தரித்துக் கொள்கிறோம்.

சில கட்டுரைகளில் வரும் நல்ல விஷயங்களை நடைமுறைப்படுத்த முடிவதில்லையே ?
செயல்படுத்தித் தான் ஆக வேண்டும்.இல்லையென்றால் வெற்றி கிடைக்காது. உழைப்பு இல்லாமல் பலன் எதிர்பார்க்காதீர்கள். வைராக்கியம் இல்லாமல் மேன்மை எதிர்பார்க்காதீர்கள்.
இவற்றை செய்ய முடியவில்லையே, அவைகளை நடத்த முடியவில்லையே என்று சொல்லிக் கொண்டிருந்தால் கடைசி வரை எதற்கும் புண்ணியமில்லாத , பிரயோஜனமற்ற நபராக மாறி விடுவீர்கள். ஏதேனும் ஒரு வைராக்கியம் நீங்கள் மேற்கொள்ள வேண்டும். குறிப்பாய் அதிகாலை ஐந்து மணிக்கு எழுந்திருப்பது என்பதைக் கைக் கொள்ள முடியுமா என்று பாருங்கள்.ஏதேனும் ஒரு இடத்தில் வைராக்கியத்தை ஆரம்பியுங்கள். மெல்ல மெல்ல வைராக்கியம் வாழ்க்கை முழுதும் பரவி விடும்.

காலை எழுந்ததும் கனவுகள் மறந்து விடுகிறதே?
கனவை ஞாபகம் வைத்துக் கொள்ள வேண்டுமென்றால் எழுந்ததும் எதைப் பற்றியும் சிந்திக்காமல் அமைதியாக இருக்க வேண்டும். கனவைத் தேட ஆரம்பித்தால் அது காணாமல் போகும். கனவை மறந்து விட்டால் சட்டென்று ஒரு இழை பின்பற்றி அந்த இழையைப் பிடித்து இழுக்க மொத்தக் கனவும் மனதுக்குள் நினைவு வந்து விடும். நினைவுக்கு வந்த கனவை ஞாபகம் வைத்துக் கொள்ளுங்கள். 
அது என்ன சொல்கிறது என்பதை எந்தப் பக்கமும் சார்பின்றி எவருக்கோ வந்த கனவாக உற்றுப் பாருங்கள். வேறு எவரோ கண்டிருக்கிறார் என்றபடி யோசிக்க ஆரம்பித்தால் , அந்தக் கனவு பற்றித் தெளிவாகப் புரிந்து விடும். கனவு மறந்து விட்டால் அதற்குப் பலன் தெரிந்து கொள்ள வேண்டிய அவசியமில்லை. மறக்காத கனவு உங்களுக்கு ஏதோ சொல்ல நினைக்கிறது.

04 August 2012

மனுஷ்யபுத்திரன் கவிதைகள்


அங்கே 
என்னை
யாருக்கும் தெரியாது

எனக்கு
அங்கே 
யாரையும்  தெரியாது

நிழல்கள்
விழாமல்
சென்றோம்
அவரவர் பாதையில்.

*********************************************************************
கொஞ்சப் பேருக்கு
என்னைப் பிடிக்கும்

கொஞ்சப் பேருக்கு
என்னைப் பிடிக்காது

நிறையப் பேருக்கு
என்னைப் பற்றி 
அபிப்ராயமே இல்லை

நான் 
என் வாழ்க்கையைப்
பணயம் வைக்கிறேன்
அவர்களை
என்னைப்
பிடித்தவர்களாகவோ
பிடிக்காதவர்களாகவோ
ஆக்குவதற்கு.

********************************************************************

உபயோகிக்கப்பட்டவை
அனைத்திற்கும்
ஒரு இடம் இருக்கிறது
உபயோகமற்றுப் போனவை
அனைத்திற்கும் 
ஒரு இடம் இருக்கிறது

நீங்கள்
அதனதற்கும்
அதனதன் இடத்தைக் காட்டும் போது
அவை உங்கள் முகத்தையே பார்க்கின்றன

உங்களிடம் ஒரு மாற்று வழி இருக்கலாம்
என்று அவை
இந்தக் கணத்தில் கூட
நம்புகின்றன.

*********************************************************************