04 August 2012

மனுஷ்யபுத்திரன் கவிதைகள்


அங்கே 
என்னை
யாருக்கும் தெரியாது

எனக்கு
அங்கே 
யாரையும்  தெரியாது

நிழல்கள்
விழாமல்
சென்றோம்
அவரவர் பாதையில்.

*********************************************************************
கொஞ்சப் பேருக்கு
என்னைப் பிடிக்கும்

கொஞ்சப் பேருக்கு
என்னைப் பிடிக்காது

நிறையப் பேருக்கு
என்னைப் பற்றி 
அபிப்ராயமே இல்லை

நான் 
என் வாழ்க்கையைப்
பணயம் வைக்கிறேன்
அவர்களை
என்னைப்
பிடித்தவர்களாகவோ
பிடிக்காதவர்களாகவோ
ஆக்குவதற்கு.

********************************************************************

உபயோகிக்கப்பட்டவை
அனைத்திற்கும்
ஒரு இடம் இருக்கிறது
உபயோகமற்றுப் போனவை
அனைத்திற்கும் 
ஒரு இடம் இருக்கிறது

நீங்கள்
அதனதற்கும்
அதனதன் இடத்தைக் காட்டும் போது
அவை உங்கள் முகத்தையே பார்க்கின்றன

உங்களிடம் ஒரு மாற்று வழி இருக்கலாம்
என்று அவை
இந்தக் கணத்தில் கூட
நம்புகின்றன.

*********************************************************************

No comments:

Post a Comment