24 December 2009

மனைவி அமைவதெல்லாம்......


கடந்த வெள்ளியன்று இரவு ஒரு துயரச் செய்தி.என் மனைவியின் தூரத்து உறவினரான திருமதி.சிவபாக்கியம் இறந்துவிட்டார். செய்தியை நம்பவும் முடியாமல், புறந்தள்ளவும் முடியாமல் நானும் என் மனைவியும் சிறிது நேரம் விக்கித்து நின்று ,பின் சுதாரித்து அவரின் வீடு விரைந்தோம்.

திருமதி.சிவபாக்கியத்திற்கும் எங்களுக்குமிடையேயான உறவு இன்னதென்று வரையறுக்க முடியாதது. மிஞ்சிப் போனால் அவர் வயது நாற்பத்தைந்திற்கு மேலிராது.அன்பான, அமைதியான கணவர், கல்லூரிப் படிப்பை முடித்துள்ள இரண்டு ஆண் பிள்ளைகள் என அளவான, மகிழ்ச்சியான குடும்பம். சைவப் பிள்ளைமார் வகுப்பைச் சேர்ந்தவர். அவரின் தோற்றம் , நடை, உடை, பேச்சு அத்தனையும் ஆகச் சிறந்த குடும்பத் தலைவிக்கானது. மூன்று அல்லது நான்கு பரஸ்பர சந்திப்பிற்குள்ளாக எங்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர். கலகலவென்ற பேச்சும் , கணீரென்ற சிரிப்புமாய் வரும் சிவபாக்கியம் பழகிய சிறிது நேரத்திலேயே எதிராளியைத் தன் வசப்படுத்தி விடுவார். எப்போதும் நேர்மறை சிந்தனை , பாசாங்கில்லாத பேச்சு, பேச்சை ஒட்டிய செயல், ஆழ்ந்த தெய்வ நம்பிக்கை, பிறருக்கு உதவும் பாங்கு என நல்ல மனிதருக்குண்டான அத்தனை குணங்களுக்கும் ஒட்டு மொத்த குத்தகைதாரர்.இவை அனைத்திற்கும் மேலாக, எத்தனை துன்பத்திற்கிடையிலும் மாறாத புன்னகையோடு ,'உங்களுக்கு நான் என்ன செய்யட்டும்' என்ற பாவனையோடு வலம் வருவார்.

சிவபாக்கியம் இறந்து போனதை விட , அவரை இழந்து நிற்கும் அவர் கணவரின் நிலைதான் என் துயரை அதிகப்படுத்தியது.எந்த வம்பு தும்புக்கும் போகாமல், தானுண்டு தன் வேலையுண்டு என்றிருப்பவர்.என் பார்வையில், அவர் தனது மனைவியை முழுமையாகச் சார்ந்திருந்தார் என்றே பட்டது.தன் மனைவியின் மனதையும் , புத்தியையும் புரிந்து கொண்டு , வேண்டிய இடத்தில் இடித்துரைத்து , வேண்டாத இடத்தில் மௌனம் காத்து இல்லறத் தேரின் சாரதிப் பொறுப்பை மனைவியிடம் ஒப்படைத்திருந்தார்.இன்று அத்தேரின் அச்சு முறிந்து விட்டது.

அங்கு சென்றவுடன் நான் முதலில் தேடியது சிவபாக்கியத்தின் கணவரைத்தான். மனிதர் நிலை குலைந்து உட்கார்ந்திருந்தார். தேம்பித் தேம்பி அழுது, இனி அழுது ஆகப் போவது ஒன்றுமில்லை எனத் தெளிவிற்கு வந்தவராய் இருந்தார்.ஆறு மாதத்திற்கு முன் மஞ்சள் காமாலை நோய் , பித்தப் பையில் கற்கள் என வியாதிகளால் பீடிக்கப்பட்டுப் பின் மேற்கொண்ட தொடர் சிகிச்சைகளின் பலனின்று இறந்து போனதாய்த் தெரிவித்தார்.வாழ்வின் அநித்யம் எனக்கு அந்த வினாடியில் உறைத்தது.

எனக்கும் இரண்டு ஆண் பிள்ளைகள்.என் மனைவியும் சிவபாக்கியம் போலவே ஆளுமை மிக்கவள்.அவளின் ஆளுமை எங்கள் அனைவரின் நலம் சார்ந்தது.என் அம்மாவிற்குப் பிறகு, என் மனைவியின் மூத்த பிள்ளையாகத்தான் நான் அவளால் பராமரிக்கப்பட்டு வருகிறேன்.
எதையும் , யாரையும் , எந்நேரமும் புரட்டிப் போட்டு விடும் சக்தி வாழ்க்கைக்கிருக்கிறது. நான் மட்டும் விதி விலக்கா என்ன? பின்னாளில் எனக்கும் இந்நிலை நேருமோ ? நேர்ந்தால், நானும் இவரைப் போல் நிலை குலைவேனோ? க்ஷண நேரத்தில் எல்லாம் புரிந்து போலிருந்தது.ஒரு வேளை எனக்கோ அல்லது என் மனைவிக்கோ இந்நிலை நேருமானால் , அந்நேரம் நினைத்துப் பார்க்க, மறைந்து போனவருடனான இனிய தருணங்கள் மட்டும் தான் உயிரோடு இருப்பவருக்குப் பிரதானமாக இருக்க வேண்டும். அத்தகைய சந்தோஷமயமான நிமிடங்களே இருவரின் வாழ்க்கையையும் அதுவரை நிரப்பியிருக்க வேண்டும்.அந்த சுகமான நினைவுகளே அடுத்த கட்ட வாழ்க்கைக்கு அடித்தளமாகவும் அமையும்.மாறாக, கசப்பான தருணங்களே நினைவடுக்கில் ததும்பி நின்றால் அதுவரை வாழ்ந்த வாழ்க்கையே அர்த்தமற்றுப் போய்விடும்.அதன் பின்னான காலமும் அத்தனை சுலபமாக இராது.

இப்போது நடத்திக் கொண்டிருக்கிற வாழ்க்கை எவ்விதம் இருக்கிறது என்ற கேள்வி சுரீரென மனதில் அறைந்தது.இந்தக் கேள்வி திருமணமான அத்தனை பேருக்கும் பொதுவானது என்றே நினைக்கிறேன். ஆழ்ந்து யோசித்தால் , பொருளாதாரம் சார்ந்த மனக்கஷ்டங்கள் , சுற்றத்தாரின் செய்கைகளால் இருவருக்கிடையிலான கருத்து மோதல்கள், குழந்தைகளைப் பேணுவதில் வாத பேதங்கள் என, சூழ்நிலைகளின் அழுத்தத்தால் உருவாகும் உரசல்கள் தவிர்க்க முடியாதது மட்டுமன்றி , தினசரி வாழ்க்கை சுவாரஸ்யப்பட அவை தேவையானவையும் கூட. ஆனால் அவை காரணமாக ஏற்படும் சிறு ஊடல்கள் கூட , அடுத்தவரைக் காயப்படுத்தியே ஆக வேண்டும் என்ற முனைப்பினால் வெளிப்படும் வார்த்தைப் பிரயோகங்களால், யுத்தம் போன்றதான அடுத்த தளத்திற்கு எடுத்துச் செல்லப்படுவதுதான் வேதனை.இது எங்களுக்குள்ளும் நடந்திருக்கிறது, உங்களுக்குள்ளும் நடந்து கொண்டிருக்கிறது. இதைத் தவிர்க்க வழி சொல்லும் நூல்களும் சரி , சொல்பவர்களின் ஆலோசனைகளும் சரி , அவற்றைப் படிக்கும் போதும், கேட்கும் போதும் வருகின்ற உற்சாகமும் தெளிவும் சொற்ப நேரத்திலேயே நீர்த்துப் போகின்றன.அல்லது ,யதார்த்த வாழ்வின் ஆழிச் சூழலில் அவை அமிழ்ந்து விடுகின்றன. நம் மனதும் நாக்கும், எதிர்ப்படும் யுத்தத்திற்காக எப்போதும் தயாராகக் காத்திருக்கின்றன.ஆனால் இது போன்ற எதிர்பாரா மரணங்களும் , மறைந்தவரோடு தொடர்புடையவர்களின் நிலையும் இந்த யுத்தம் பற்றிய நினைப்பை , அதை அறவே அகற்ற வேண்டியதின் அவசியத்தை நமக்கு சற்று அழுத்தமாகவே போதிக்கின்றன.

சிவபாக்கியத்தின் கணவர் நிலையில் என்னைப் பொருத்திப் பார்த்த அந்த நொடியில் , நான் என் மனைவியை சொற்களால் காயப்படுத்திய அத்தனை சம்பவங்களும் எனக்குள் சுழன்றடித்தன. அவை கொடுத்த குற்ற உணர்வும், சிவபாக்கியம் என்ற நல்ல பெண்மணியின் இழப்பும் சேர்ந்து என் கண்களை ஈரமாக்கின.அவருக்கு ஆறுதல் சொல்லும் நோக்கில் அவரின் கையைப் பிடித்தபடியே சிறிது நேரம் அமர்ந்திருந்தேன்.
அந்தப் பக்கம் வந்த என் மனைவியிடம் , " என்னப்பா...போலாமா ?" ,என்று கேட்டேன்.
"அதற்குள்ளாகவா?" , என்று ஆச்சர்யம் காட்டினாள்.

"ஆமா...இதுவே ரொம்ப லேட்..." - தெளிந்த மனதுடன் சொன்னேன்.
போகும் போது மறுபடியும் சிவபாக்கியத்தின் முகத்தைப் பார்த்தேன் .ஆழ்ந்த அமைதியுடனிருந்த அந்த முகம் எனக்கு ஏதோ சேதி சொல்வதாகவே பட்டது.
 

13 December 2009

நிசப்தம்


வீட்டுக்குள்
நுழையும் போதே
வெறுப்பேற்றும்
குழந்தையின் அழுகைக் குரல்
அவசர மின்னஞ்சலோ
ஆசைப்பட்ட பாடலோ
அலுவலக அலைபேசியோ
எதுவும் செய்ய
அனுமதிப்பதில்லை
பிள்ளை என்ற தொல்லை
என்றாலும்...
இந்த மழையின்
நீட்சியில்
மாலையிலேயே
உறங்கிப்போய்
அவன்
எழுப்பும்
நிசப்தம்
அதிர வைக்கிறது
மனதை!

-நரசிம்

29 November 2009

இன்னும் ....

கால் ஒடிந்த காக்கைக்கு
எப்படி நேர்ந்தது
இந்த விபத்து?
அடை மழை பெய்யும் போது
அணில்கள்
எங்கே உறையும்?
நடுநிசியிலும் குரைக்கும்
நாய்கள் எப்போதுதான்
உறங்கும்?
எல்லார் வீட்டிலும்
விரட்டப்படும் பூனைக்கு
யார்தான் சோறு இடுகிறார்கள்?
ஏழெட்டு எறும்புகள்
ஏலேசா பாடி
தூக்கிச் செல்லும் பருக்கை
கூட்டை சென்றடைகிறதா?
சின்ன வயதில்
தோன்றிய கேள்விகள்...
இன்னும்
விடை கிடைக்க வில்லை.
என்ன, இப்போது
இந்த மாதிரி
அசட்டுக் கேள்விகள்
தோன்றுவதில்லை!

-கே.பி.ஜனா

19 November 2009

நிலா கேட்கும் குழந்தை


இரண்டு குழந்தைகள்
விளையாடிக் கொண்டிருந்தார்கள்
ஒரு குழந்தையின் கையில்
நட்சத்திரங்கள்
இன்னொரு குழந்தையின் கையில்
வெண்ணிலாக்கள்
நட்சத்திரங்கள் வைத்திருந்த குழந்தை
நிலவை கேட்டது.
' ஒரு நிலவுக்கு
ஐந்து நட்சத்திரங்களைக் கொடு'
என்று கேட்டு
பரிமாற்றம் செய்து கொண்டார்கள்.
பார்த்துக் கொண்டிருந்த எனக்கும்
ஆசை வந்து கேட்டேன்
'சூரியனைக் கொடுத்தால்
நிலாவையும் நட்சத்திரத்தையும்
தருகிறோம் ' என்றார்கள்
என் கைகளைப் பாத்தேன்
அதில் சூரியன் இல்லை.
சிறு வயதில்
வைத்திருந்ததாக ஞாபகம்
பெரியவன் ஆனதும்
தொலைத்து விட்டேன்!

-தி. ஐயப்பன்

மிச்ச கருணை



                             
                           எறும்பை நசுக்கி விட்டாய்
                            வாயில் இருந்த சிறு தீனி
                            தன் குழந்தைகளுக்கு
                            எடுத்துப் போனதோ
                            என்னவோ?

 
                           -முத்து வேல்

22 October 2009

அமெரிக்கன் கல்லூரி



வாழ்வில் சில நிகழ்வுகள் குறுகிய காலத்தில் கடந்து போனாலும் அந்நினைவுகள் , சிறுமழை விட்டுச் சென்ற மண் வாசனையாய், நம்முடனேயே தங்கி விடுகின்றன. மதுரை அமெரிக்கன் கல்லூரியுடனான எனது உறவும் அப்படித்தான். பள்ளி முடித்து பொறியியல் கல்லூரி சேர்க்கைக்கு விண்ணப்பித்து விட்டு காத்திருக்கையில் (அப்போதெல்லாம் கவுன்சிலிங் கிடையாது ) , சும்மா இருக்க வேண்டாமே என அமெரிக்கன் கல்லூரியில் B.Sc.,( special Maths) பிரிவில் சேர்ந்தேன். பச்சை நிற மரங்களுக்கிடையில் சிவப்பு நிற கட்டிடங்களாய் ஆங்கிலேயர்களின் ரசனையைய் பறை சாற்றி கொண்டு ஏக்கர் கணக்கில் பரவியிருக்கும் கம்பீரமான கல்லூரி அது.
பள்ளியிலிருந்து கொண்டு சென்ற ஒரு தலைக் காதலும் ( யாராவது infatuation என்று சொன்னால் அப்போது கடுங்கோபம் வரும்) , ஓராயிரம் கனவுகளுமாய் கிட்டத்தட்ட இரண்டு மாத காலம் அந்த வளாகத்தில் வாழும் வாய்ப்பு கிடைத்தது. வாழ்வின் பொன்னான காலகட்டம். யாரும் எதுவும் கேட்க மாட்டர்கள். நினைத்தால் வகுப்பிற்குப் போகலாம், இல்லையென்றால் நினைத்த இடம் போகலாம். அத்தனை சுதந்திரம்! பள்ளி முடித்த சிறுவர்களை முழு இளைஞர்களாக்கி அனுப்பும் அற்புத வளாகமது. அனுபவம் வாய்ந்த பேராசியர்களின் நட்பான அணுகுமுறை , பருவ மாற்றத்தில் இருக்கும் மாணவர்களுக்கு அலாதியான அனுபவத்தைக் கொடுக்கும். திறமையாளர்களுக்கு முழு அங்கீகாரமளித்து , அவர்களை உலகுக்கு அறிமுகப்படுத்தும் உன்னத கூடம் அக்கல்லூரி. கலைத்துறை ஜாம்பவான்கள் பல பேர் அக்கல்லூரி அளித்த கொடை.
அமெரிக்கன் கல்லூரி மாணவரென்றால் 'Matured and Decent guy' என்ற மதிப்பீடு இருந்தது. கல்லூரிகளுக்கிடையேயான அனைத்து போட்டிகளையும் வென்று வாகை சூடுவார்கள்.
அங்குள்ள மரங்கள் ஒவ்வொன்றும் யாரேனும் ஒருவருக்கு போதி மரமாய் இருந்திருக்கின்றன. பேருந்து நிறுத்தத்திலிருந்து கல்லூரி வரையிலான நடைபாதை நிமிடங்கள் , மழை நேர மாலைப் பொழுதுகளில் ஆங்காங்கே பூத்திருக்கும் சிமென்ட் பெஞ்ச் அரட்டை, விளையாட்டு மைதான மரங்களின் நிழலில் நண்பர்களுடன் மதிய உணவு, சின்னஞ்சிறிய உணவகத்தின் சமோசா ருசி , மையமாக வீற்றிருக்கும் தேவாலயப் பிரார்த்தனைகள் என அனைத்தும் என் நினைவில் பசுமை.
ஆனால் பொறியியல் கல்லூரிகள் பல்கிப் பெருகி விட்ட தற்போதைய சூழ்நிலையில் , தரத்தில் பின் தங்கிய மாணவர்களே கல்லூரியில் சேர்வதாலும் , சமீப காலமாக ஏற்பட்ட நிர்வாகக் குளறுபடிகள் காரணமாகவும் கல்லூரியின் மதிப்பு சற்றே மங்கி வருவது வருத்தமளிக்கிறது.
இப்போதும் அந்தக் காலகட்டத்தில் வெளிவந்த ' மே மாதம் ' திரைப்படப் பாடலை கேட்கும் போதெல்லாம் அமெரிக்கன் கல்லூரி தொடர்பான அனைத்து சம்பவங்களும் நினைவில் வந்து போகும். இன்றளவும் கல்லூரியை கடந்து செல்லும் ஒவ்வொரு முறையும் என்னுள் இனம் புரியாத சிலிர்ப்பு வருவதுண்டு. முன்னாள் மாணவன் என்ற உணர்வா அல்லது அங்கு சுமந்து திரிந்த காதலின் நினைவா என அந்த சிலிர்ப்புக்கான காரணம் பகுத்தறிய முடியாதது.

11 October 2009

இழந்த தலைமுறை

இழந்த தலைமுறை
-------------------------
மூன்று வயது முடிந்த
என் யூ.கே.ஜி பேரனுக்கு
ஸ்கூல் ப்ராஜெக்ட்
கூட்டுக்குடும்பம் பற்றி.
என் மகன் சொன்ன
இணையதளம்
jointfamily.com
மருமகள் சொன்னது
unitedfamily.org
அவன் டீச்சர்
சொன்ன தளம்
wikipedia.
மூவரும் ஆளாளுக்கு
ஒரு கம்ப்யூட்டரில் தேட
அதே தள மூலையில்
ஐந்து சகோதரிகள்
ஐந்து சகோதரர்களுடன்
பிறந்து வளர்ந்து வாழ்ந்த
என்னிடம்
ஒரு வார்த்தை கூடக்
கேட்கவில்லை!

-நாராயண ஹரிகிருஷ்ணன்

நன்றி: ஆனந்த விகடன்

சுழல் விதி



முதல் நாள் சந்தித்த
நீ இல்லை நீ.
நீ முதல் நாள் சந்தித்த
நானுமில்லை நான்.
யாருமிங்கு இல்லை
முதல் நாள் சந்தித்த யாருமாய்.
வசந்தங்கள் வந்து போகும்
பருவம் உதிரும் பொழுதுகளில்
காத்திருப்போம் நாம்
இனி வரும்
முதல் நாளுக்காகவும்
எதிர்ப்படும்
முதல் நபருக்காகவும்!

-சில்வியா

29 September 2009

லௌகீகம் - ஆன்மீகம்



இதோ அதோ என்று கடைசியில் பெயர்ந்தே விட்டார் சனி பகவான். கன்னி ராசிக்கு ஏற்கனவே தொடங்கி விட்ட ஏழரைச் சனியில் இது ஜென்மச் சனியாம்.
" உங்களுக்கும் சந்தோஷுக்கும் (ஒரு வயது) நேரம் சரியில்ல...பரிகாரம் பண்ணனும் ...சீக்கிரம் கோவிலுக்கு போயிட்டு வந்திடுங்க ..." என்ற மனைவியின் குரல் காலையிலிருந்து ஒலித்துக் கொண்டிருக்கிறது.
என் மனம் வெறுமையாய் இருக்கிறது . என் பள்ளிக்கூட நாட்களின் இறை நம்பிக்கை , கடவுள்தன்மை பற்றி எந்தவொரு மனக் கிலேசமுமின்றி அதன் தொடர்பான எனது செயல்கள் என அனைத்தும் மனக் கண்முன் வந்து செல்கின்றன . பள்ளி செல்லும் முன் , வீட்டின் எதிரில் இருந்த 'தங்க மாரியம்மன் ' கோவிலுக்கு சென்று மானசீகமாக அம்பாளுக்கு வணக்கம் சொல்லி , போகும் வழியிலுள்ள தெருவோர சிவன் கோவிலின் திருநீறு பூசி , திருவிழாக் காலங்களில் ' அம்மன் கூழ்' பருகியதால் 'சக்தி' வந்ததெனப் பூரித்து , தெருவில் பவனி வரும் அம்மன் சிலையிலிருந்து விழுந்த பூவை எனக்கான பிரத்யேக ஆசிர்வாதமாய் நினைத்து பத்திரப்படுத்தி .... இன்னும் எத்தனையோ பால்ய நினைவுகள் ....
அறியாமைதான் எத்தனை சுகம் ! உண்மையிலேயே கடவுளுக்கு மிக அருகாமையில் இருந்த நாட்கள் அவை.
அதைத் தொடர்ந்த ,பருவம் எய்திய நாட்களில் ஏற்பட்ட மனச் சிதறல் சிறிது காலம் கடவுள் வழிபாட்டை மறக்க வைத்தது. அதன் பின்னான நாட்களில் , புத்தக வாசிப்பும் , அதற்கு இணையான வெளியுலக அனுபவமும் என் கடவுள் நம்பிக்கையை கேலிக்கும் , கேள்விக்கும் உள்ளாக்கின. கேள்விகள் , கேள்விகள் ,கேள்விகள் மட்டுமே....விடை தேடிய பயணம் ஒரு கட்டத்தில் , உருவமான பொம்மை அல்ல , அருவமான கடவுள்தன்மையே பிரபஞ்சத்தில் சாத்தியம் என்னும் நிலைப்பாட்டை எனக்குள் விதைத்தது. மீண்டும் அந்த நேர்கோட்டில் நீண்ட நாள் பயணம். புத்தகங்களைத் தேடித் தேடி வாசித்து , அவை சொன்ன விஷயங்களின் சாரத்தை என்னுள் தக்க வைத்துக் கொண்டேன். கோவிலுக்கு செல்லும் பழக்கம் அறவே நின்று போயிற்று. கோவிலுக்கு செல்பவர்களை புன்சிரிப்போடு நோக்கும் ஒரு வித மேதாவித்தனம் வந்து ஒட்டிக் கொண்டது. எல்லாம் தெரிந்ததாக ஒரு அலட்டல் வந்து குடியமர்ந்தது. இவை அனைத்தையும் தள்ளி நின்று அவதானித்த படி இருந்தாலும் உள்ளுக்குள் ஒரு கர்வம் மழை மேகம் போல் என் சிந்தனையை மூடியிருந்தது.
ஆனால் தற்போது ஒரு பெண்ணுக்குக் கணவனாக, இரு குழந்தைகளின் தகப்பனாக ஆசிர்வதிக்கப்பட்டிருக்கும் நிலையில் கடவுள் பற்றிய எனது நிலைப்பாடு மறு ஆய்வுக்கு உள்ளானதாகிறது.
ஒரு நிமிஷம் பொறுங்கள்....எதிரே எங்கள் தெரு பால்காரர் வந்து கொண்டிருக்கிறார்.
"என்ன சார்...குழந்தையோட....அதுவும் இத்தனை அவசரமா...."
" இன்னிக்கு சனிப் பெயர்ச்சி...அதான் குடும்பத்தில எல்லாருக்கும் ஒரு அர்ச்சனை பண்ணிட்டு வந்திடலாம்னு..... நேரமாச்சு, பூஜையை ஆரம்பிச்சுட போறாங்க ...நான் உங்களை அப்புறமா பார்க்கிறேன்..."
எதிர்ப்பட்ட பால்காரரின் விசாரிப்புக்கு பதில் சொல்லி விட்டு உங்களிடம் கூட பேச நேரமின்றி கோவிலுக்கு விரைந்து கொண்டிருக்கிறேன்.

09 September 2009

வாழ்க்கையை 'நடத்துபவர்கள்'


கடந்த பத்து நாட்களாக மதுரையில் நடைபெற்ற புத்தகத் திருவிழா நல்லி குப்புசாமி செட்டியார் எழுதிய 'தமிழ் பதிப்புலகம்- ஓர் அறிமுகம்' புத்தக வெளியீட்டுடன் நேற்று இனிதே நிறைவுற்றது. தொலைக்காட்சி, இணையம், கைபேசி என எத்தனை ஊடகங்கள் இருப்பினும் புத்தக வாசிப்பு தரும் அலாதி சுகத்தை மக்கள் இன்னும் சிலாகிக்கிறார்கள் என்பதையே 'ஆறு கோடி ரூபாய் மதிப்புள்ள புத்தகங்கள் விற்பனை' என்ற தகவல் நிரூபிக்கிறது. வாழ்க விழா அமைப்பாளர்கள் , தொடர்க அவர் தம் திருப்பணி !
புவனின் தொடர் வற்புறுத்தலின் பேரில் , தொடங்கிய முதல் நாள் அன்றே நானும் அவனும் கண்காட்சிக்கு சென்றோம். L.K.G படிக்கும் பிள்ளைக்கு புத்தகத்தின் மீது இத்தனை காதலா என்று வியக்காதீர்கள். "அடுத்த வாரம் ' book exhibition ' இருக்கு, நாம ரெண்டு பேரும் போவோமா" என்று நான் சொல்லி வைக்க , மான் ராட்டினம், முயல் ராட்டினம், நிறைய பலூன்கள் , இன்ன பிறவெல்லாம் வண்ணங்களாய் அவனுள் விரிந்ததன் விளைவு தான் அது. கண்காட்சித் திடலுள் நுழைந்ததும் பிள்ளை அதைத்தான் முதலில் தேடினான். தேடி சலிப்புற்றவனைத் தேற்றும் விதமாக , அவனுக்கு ஒவ்வாது எனத் தெரிந்தும் அவன் விரும்பிய குளிர் பானத்தை வாங்கிக் கொடுத்தேன்.
பின் ஒவ்வொரு புத்தக அரங்காக ஏறி இறங்கினோம். இரவு தூங்குவதற்கு முன்பான கதை நேரத்தை முன்னிட்டு , மரியாதை ராமன் கதைகள் , தெனாலி ராமன் கதைகள் என சில புத்தகங்கள் , வண்ணம் தீட்டல், புள்ளிகளை இணைத்தல் போன்ற செயல்பாட்டு புத்தகங்கள், என் மனைவியின் விருப்பமான ரமணி சந்திரன் புத்தகங்கள் , அதன் பின் என் விருப்பப் பட்டியலில் இருந்த சில புத்தகங்களையும் வாங்கினேன் . உயிர்மை அரங்கில் கவிஞர் மனுஷ்ய புத்திரனுடன் சிறிது நேரம் அளவளாவினேன் . இறுதியாக திறந்த வெளி அரங்கில் நாட்டுப்புறப் பாடல் கேட்டு விட்டு, ஒரு கையில் புவனும் மறு கையில் புத்தகப் பைகளுமாக சுகமான சுமைகளுடன் வீடு திரும்பினேன்.
மறு நாள் நண்பர் ஒருவரிடம் பேசிக் கொண்டிருந்த பொழுது புத்தகத் திருவிழா பக்கம் பேச்சு திரும்பியது. எவ்வளவுக்கு புத்தகம் வாங்கினீர்கள் என்றவரிடம் , நான் தொகையைச் சொல்லவும் , அவ்வளவுக்கா என ஆச்சர்யம் காட்டினார்.
"சரி... என்னென்ன புத்தகங்கள் வாங்கினீங்க " என்ற அவரின் த்வனியில் நம்பிக்கையின்மை வெளிப்பட்டது.
"சு.ரா வின் 'ஒரு புளிய மரத்தின் கதை' , ' ஜே.ஜே. சில குறிப்புகள்' , ராமகிருஷ்ணனின் 'உப பாண்டவம்' , 'நெடுங்குருதி' , ஜெயமோகனின் 'சு.ரா- நினைவின் நதியில் ' , 'விக்ரமாதித்யன் கவிதைகள்' ...."என்று நான் சொல்லிக் கொண்டு போக , அது வரை அசிரத்தையாக கேட்டுக் கொண்டு வந்தவர் திடீரென பிரகாசமாகி , " அதை நான் படித்திருக்கிறேன் ...ரொம்ப சுவாரஸ்யமாக இருக்கும்..." என்றார்.
எனக்கு ஒரு பக்கம் ஆச்சர்யம் , மறுபக்கம் 'என் ரசனைத் தளத்துடன் ஒத்துப் போகிற ஒருவரை இத்தனை நாள் இழந்து விட்டோமே' என்ற ஆதங்கம். நான் உற்சாகமாகி , வாங்கிய புத்தகப் பட்டியலைத் தொடர்ந்தேன். சிறிது நேரம் சென்று கையைத் தூக்கிக் காண்பித்து ,
" போதும் ...நீங்கள் சொன்ன விலை சரிதான் . இத்தனை புத்தகங்களும் சேர்ந்து அத்தனை விலை இருக்கத்தான் செய்யும் . இருந்தாலும் நீங்கள் அவ்வளவு ரூபாய்க்கு புத்தகங்கள் வாங்கியிருக்கக் கூடாது. நாட்டுல நிறைய பேர் சாப்பாடில்லாம இருக்க , நாம இப்படி கண்டபடி செலவழிக்கக் கூடாது", என்று ஆரம்பித்து நிறைய அறிவுரைகளை அள்ளித் தெளித்தார். ஒரு கணம் , இவர் மீது சற்று முன் தோன்றிய என் அனுமானம் தவறோ என்று தோன்றியது. அன்றிலிருந்து அந்த வகையறாக்களிடம் சற்று கவனமாக இருக்க வேண்டும் என்று நான் முடிவு செய்ததற்கு மேற்கூறிய அறிவுரைகள் மட்டும் காரணமல்ல...அதைத் தொடர்ந்து அவர் சொல்லி சிலாகித்த கீழ்க் கண்ட விஷயமும்தான்.
" என்ன ....நான் சொன்னது கரெக்டா சார் ? நீங்க இவ்வளவு செலவு பண்ணினது எனக்குத் தப்போன்னு தோணிச்சு . அதான் சொல்லிட்டேன்...ஆனா நீங்க விக்ரமாதித்யன் புத்தகம் பத்தி சொன்னீங்க இல்ல . அதை வாங்குனதுக்கு நான் உங்களை பாராட்டறேன் . விடாமுயற்சிக்கு நல்ல உதாரணம் சார் அந்த புக்கு. எவ்வளவு தடவை முருங்கை மரத்துல ஏறினாலும் , விடாம அந்த வேதாளத்தை பிடிப்பான் பாருங்க விக்ரமாதித்தன்......"
-----------------------------------------------------------------------------------------
அடுத்த நாள் மற்றொரு நண்பருக்கும் எனக்கும் நடந்த உரையாடல் :
நண்பர் : என்ன சார்...உங்களுக்குத்தான் புத்தகம் படிக்கிறது பிடிக்குமே...புத்தகத் திருவிழாவுக்குப் போனீங்களா?
நான் : அப்படியா...எங்க சார் அதுக்கெல்லாம் நேரம் இருக்கு...

23 August 2009

நானும் இரு தேவதைகளும்....




அவர்கள் ....
என் மீது கொண்ட பற்றால்
தங்கள்
சுயம் மறந்தவர்கள்.


என்னைப் பங்கிடும்
பாங்கு தெரியாது
தங்களுக்குள்
பின்னப்படுபவர்கள்.


என் ரணம் ஆற்றுவதிலும்
என்னுள் ரணம் ஏற்றுவதிலும்
வல்லவர்கள்.


நான் எரியும் விளக்கு...
ஒருத்தி என் அகல்.
மற்றவள் என் தழல்.


நான் ஒளிரும் நிலா..
ஒருத்தி என் வானம்.
மற்றவள் என் சூரியன் .


ஒருத்தி
என் உயிர் சுமந்தவள் .
மற்றவள்
என் 'உயிர்' சுமந்தவள்.

ஒருத்தி
என்னைப் பெற்றவள்.
மற்றவள்
என்னைப் 'பெற்றவள்'

-------------------------------------------
note : you can not be a good man to your good mother and your good wife.

07 August 2009

தீராக் கேள்வி- தெளிவான பதில் 3

ஒரு மனிதனின் மிக மோசமான குணம் எது?
கோள் சொல்லுதல். பிறரைப் பற்றி புறம் சொல்லுதல். நேரே இனிமையாகப் பேசிக் கொண்டு , மிக அன்பானவர் போல , நட்பானவர் போல நடித்துக் கொண்டு பின்னால் , வேறு விதமாகப் பேசுகிற குணம் தான் உலகத்திலேயே மிக மிக மோசமானது. பிறரைப் புறம் சொல்லுகிற புத்தி ஒரு சாபம். இந்த சாபம் இன்னும் பல சாபங்களை உருவாக்கும். நீங்கள் எதிரே இனிமையாகப் பேசி பின்னால் புறம் சொல்லுகிறீர்கள் என்பது சம்மந்தப்பட்ட நபருக்கு தெரிந்து விட்டால் அவர் வயிறு எரிந்து உங்களை நோகிற போது அது நிச்சயம் பலிக்கும். வாழ்க்கையில் ஒரு போதும் புறம் பேசாதீர்கள். பேச வேண்டியவற்றை முகத்திற்கு நேரே பேசி முறித்துக் கொள்ளுங்கள். இது பல நூறு முறை நல்லது.
ஆன்மீகவாதி ஆத்திகனாக இருக்க வேண்டுமா? ஆன்மீகமும் ஆத்திகமும் ஒன்றா?
எல்லோரும் இன்புற்று வாழ்வதே ஆன்மிகம். ஆத்தீகம் என்பது மதம் சார்ந்தது. கடவுள் வழிபாடு சார்ந்தது. ஆன்மீகவாதி ஆத்திகனாக இருக்க வேண்டிய அவசியமில்லை. எல்லோரும் இன்புற்றிருக்க விரும்புவது நாத்திகனாலும் முடியும். அப்படியிருப்பவர்களை நான் அறிவேன்.
வாழ்க்கையில் இறுதி வரை எந்த சுகமும் அனுபவிக்காமல் சாதாரண பணியில் இருந்து கொண்டு கஷ்டத்தை மட்டுமே அனுபவித்து வரும் பலர் இருக்கிறார்கள். அவர்களுக்கெல்லாம் கடவுள் நம்பிக்கையும், பக்தியும் எப்படி வரும்?
கடவுள் நம்பிக்கை இருந்தால் முயற்சி வரும். முயற்சி இருந்தால் செயல் திறன் வரும் . செயல் திறன் வளர்ந்தால் நல்லதாய் வேறு விதமாக சம்பாதிக்கிற எண்ணமும் , பலமும் வரும்.வெறுமே, திரும்பத் திரும்ப நொந்து கொள்கிறவர்கள் கடைசி வரை நொந்து கொண்டே இருக்க வேண்டியது தான்.கடவுள் நம்பிக்கை என்பது தனக்குத் தானே பேசுதல், ஆராய்ந்து அறிதல்.
தியானம் என்பது ஒரு புள்ளியில் அமருவது , அல்ல என்றெல்லாம் கட்டுரை எழுதுகிறார்களே , நீங்கள் என்ன சொல்லுகிறீர்கள்?
இதைப் பற்றியெல்லாம் படிப்பதை விட நேரடியாய் நல்ல அனுபவஸ்தர்களிடம் அனுபவித்து , முகம் மலர்ந்தவர்களைடம், வாழ்வு மலர்ந்தவர்களிடம் கேட்டுத் தெரிந்து கொள்ள வேண்டும். தியானம் பற்றிய கட்டுரைகளைப் படித்து விட்டு குழம்பிப் போகாதீர்கள். தியானம் என்பது மிகுந்த தெளிவோடு அசாத்தியமான அமைதியோடு இருத்தல். ஆனால் இதற்கு மனம் ஒரு நிலைப்படுவது என்ற ஆரம்பப் பயிற்சி முக்கியம். தன்னுடைய மனதை மனத்தால் உற்றுப் பார்ப்பதற்கு தெரிந்து கொள்ள வேண்டும். இந்த நிலை எளிதில் வந்து விடாது. ஒரு நிலைப்பட்ட மனது , ஒரு புள்ளியில் அமருகின்ற மனது , தன் மனதை இடைவிடாது எந்த வித கோபம் , விருப்பு வெறுப்பின்றி உற்றுப் பார்க்கும். சிறுவர்கள் பாதி பெடலில் சைக்கிள் ஒட்டி விட்டு ,பிறகு சீட்டில் ஏறி உட்கார்ந்து கொண்டு சைக்கிள் ஓட்டுவார்கள். பிறகு வித்தை காட்டுவார்கள். அது போலத்தான் மாநதி ஒரு நிலைப்படுத்தும் ஆழ் நிலைத் தியானமும். ஒரு எல்லைக்குப் பிறகு இதை சொல்லிக் கொடுக்க ஆசிரியர்களோ, கட்டுரைகளோ தேவையில்லை. உங்களுக்கே அடுத்த படிக்கு போக தெரிந்து விடும்.

கேள்வி ஞானம்


நாற்பது வரை
பணத்தை நீ
தேட வேண்டும்.
நாற்பதின் பின்
பணம் உன்னைத்
தேட வேண்டும்.

சாப்பாட்டு மேசையும்
கட்டிலும்
தொட முடியாத
தூரத்தில்
இருக்கட்டும்.
அந்த தூரம்
உன் ஆயுளின் நீளம்.

புது மனைவியின்
தாய்மை
புதுத் தொழிலில்
லாபம்
இரண்டையும்
மூன்றாண்டு
எதிர்பாராதே.

பயணமா?
பெட்டியிலும்
வயிற்றிலும்
காலி இடம்
இருக்கட்டும்.

தடுமனா
மருந்து-சாப்பாடு.
காய்ச்சலா
மருந்து-பட்டினி.

பொழுது
மலச் சிக்கல் இல்லாமல்
விடிய வேண்டும்.
மனச் சிக்கல் இல்லாமல்
முடிய வேண்டும்.

- வைரமுத்து

FRIEND மாதிரி......

திருக்குறள் :
முகநக நட்பது நட்பன்று நெஞ்சத்து
அகநக நட்பது நட்பு.

என் குரல்:
அகநக நட்பது நடக்காது பணியிடம்
முகநக நட்பதே நல்லது.

பொருள்:
பணிபுரியும் இடத்தில
நண்பர்கள் சாத்தியமில்லை.
சாத்தியம் என்றால்
அது சத்தியமில்லை.

நன்றி :
இதை இன்றெனக்கு உணர்த்திய நண்பருக்கு (?!).

27 July 2009

முற்பகல் செய்யாவிடினும்......

'வீட்டைக் கட்டிப் பார் , கல்யாணம் பண்ணிப் பார் ' என்று முன்னோர்கள் சொல்லி வைத்ததில் இரண்டாவது விஷயத்தை முதலில் செய்து இன்பம் துய்த்து , தற்போது முதலாவது விஷயத்தையும் வெற்றிகரமாக முடித்தாகி விட்டது. அதன் காரணமாகத்தான் இணையத்தில் இந்த இரண்டு மாத இடைவெளி.

சென்ற வாரம் ஒரு வேலை நிமித்தமாக திருச்சி அண்ணா பல்கலைக்கழகம் செல்ல வேண்டியிருந்தது. வங்கி ஒன்றில் சிறு வேலை முடித்து , முற்பகல் பதினோரு மணிக்கு மாட்டுத்தாவணி பேருந்து நிலையம் சென்று வண்டியேறினேன். அதிகாலையில் உட்கொண்ட சிற்றுண்டி செரிமானமாகி , குடல் மதிய உணவை எதிர் நோக்கியிருந்தது. சற்று பசித்தாலும் , பேருந்தில் இருந்த தொலைக்காட்சிப் பெட்டியைப் பார்த்ததும் , சமாளித்து விடலாம் என்ற நம்பிக்கையில் அமர்ந்தேன். ரயில் பயணமாக இருந்தால் புத்தகம் தான் என் உற்ற நண்பன். யாருடனும் பேசாமல் நாட்கணக்கில் பயணம் செய்வேன். ஆனால் பேருந்தில் அந்த சுகம் கைகூடுவதில்லை. கால் மணி நேரம் படித்தாலே தலை கிறுகிறுக்கிறது, மேலும் அது கண்ணுக்கு உகந்ததல்ல.இது போன்ற தருணங்களில் நான் பெரிதும் சார்ந்திருப்பது தொலைக் காட்சிப் பெட்டியைத் தான். ஆனால் அதிலும் எனக்கொரு சிக்கல் உண்டு. பயணத்தின் பொழுது , சிறந்ததென நான் கருதும் படத்தை திரையிடும் பட்சத்தில் ( அதை எத்தனை முறை பார்த்திருந்தாலும்) வெறுமை ஏதும் தட்டாது பயணம் சுகப்படும். மாறானால் , அது வரை நான் அறிந்து செய்த தவறுகளுக்கான தண்டனையாய் அந்தப் பயணம் நிகழ்ந்து தொலையும். ஆகவே, திரைப்படக் குறுந்தகட்டை நடத்துனர் எடுக்கும் போதே என் மனம் அனிச்சையாக அவரை நோக்கி கை கூப்பும்.

அன்றும் அப்படித்தான், என் வாழ்வின் மூன்று மணி நேரத்தை அவரிடம் ஒப்படைத்திருந்தேன். ஆனால் விதி வலியது. அவர் திரையிட்டது திரு.விஜய் நடித்த 'போக்கிரி'. என் ரசனைக்கு ஒவ்வாத, ஆனால் புவனின் விருப்பமான அந்தப் படம் இருபது முறைக்கும் மேலாக ஓடியிருக்கிறது என் வீட்டில். அனிச்சை செயலாகவே எனக்கு அதன் காட்சிகள் அனைத்தும் அத்துப்படி. யோசிக்கும் போதே என் வயிற்றுக்குள் சிறு பிரளயம் ஏற்பட்டது. அது பசியினாலா , அல்லது எதிர் கொள்ளப் போகும் மூன்று மணி நேரத் தண்டனையாலா என அனுமானிக்க முடியவில்லை. பிறகென்ன , ருசியில்லாத உணவை ,தாயின் நிர்ப்பந்தம் காரணமாக உண்ணும் குழந்தை போல் , அந்தப் படத்தைத் தின்று செரித்தேன்.

ஒரு வழியாக , மதியம் இரண்டு மணியளவில் திருச்சி சென்று , பல்கலையில் வேலை முடித்து, மீண்டும் மதுரைக்கு வண்டியேறிய பொழுது மணி ஐந்து. என்னைப் பொறுத்த வரை, முற்பகல் மற்றும் மாலை நேரங்கள் பேருந்து பிரயாணத்திற்கு ஏற்றவை அல்ல. நிறையாத வயிறு ,பயணம் முழுதும் அதன் இருப்பை உணர்த்தி கொண்டேயிருக்கும். அதிகாலையோ , உணவுக்குப் பிறகான மதிய நேரமோ அல்லது இரவு நேரமோ தான் நிம்மதியான உறக்கத்துக்கு உத்தரவாதம் தரக் கூடியவை. அன்று இரண்டு நேரமுமே அகால நேரமாக அமைந்து போயிற்று.

ஏறியவுடன், மதுரை மீனாட்சி அம்மனை மனது வேண்டிற்று...நல்ல படமாக இருக்க வேண்டுமே! நடத்துனர் வந்தார், எடுத்தார், போட்டார். விதி மீண்டும் விளையாடியது. என் நிலையை என்னென்று சொல்வது ?!...திரையிடப்பட்ட படம் திரு.விஜய் அவர்கள் நடித்த 'வில்லு'. இதுவும் அப்படியே... புவனேஷ் மட்டுமல்ல, சந்தோஷும் இந்தப் படத்தின் தீவிர ரசிகனானதால் என் வீட்டில் வெள்ளி விழா கொண்டாடிய படமிது. 'முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்' என்றுதானே சொல்வார்கள். நான் முற்பகலில் , பாவம் ஏதும் செய்யாமல் தண்டனைதானே அனுபவித்தேன்...பின் ஏன் இப் பிற்பகலிலும் ? அக்கணம் , போர்க்களத்தின் நடுவே நிராயுதபாணியாய் நிற்கும் அரசனைப் போல் உணர்ந்தேன். என் ஆராய்ச்சி பற்றி சிந்தனை செய்யலாமென்றால் திரு.விஜய் அவர்கள் அதற்கும் என்னை அனுமதிக்க வில்லை . அரைத்தூக்கமோ , மயக்கமோ ஏதோவொன்றை போட்டு விட்டு இரண்டரை மணி துளிகள் சென்று கண் திறந்தேன். படம் முடிந்திருந்தது.

நெட்டி முறித்து, அடுத்த முப்பது நிமிடங்களை நிசப்தத்துடன் அனுபவிக்கத் தயாரானேன். அந்த நேரம், மீண்டும் ஒரு விளையாட்டு அறிவிப்பு...விளையாடப் போவது யார் ? விதிதான்!. வில்லுவின் தொடர்ச்சியாக வந்த படம் 'போக்கிரி'. ஐயோ....நான் வாய் விட்டு அழாத குறை ...இப்படி தெளிய வைத்து தெளிய வைத்து அடிக்கிறார்களே...பசி வயிற்றைக் கிள்ள, கை கால் துவள, நான் மறுபடியும் கண் மூட முயன்றேன்.அப்போது என் அருகே இருந்தவர் தன் திருவாய் மலர்ந்தவுடன் , எனக்கு ஏற்பட்ட உணர்வுக் கொந்தளிப்புதான் இந்தப் பதிவை நான் எழுதக் காரணம்.

அவர் என்னிடம் சொன்னது இதுதான் , " இந்தப் படத்தை முதல்லேய போட்டிருக்கலாம் , சார்". யார் கண்டது , அவர் முற்பகலில் ஏதேனும் ஒரு பேருந்தில் வில்லு பார்த்திருக்கக் கூடும்.
_____________________________________________________
இத்தனைக்கும் நடுவே ,பொதுவாக, யாருக்கும் நடத்துனர் மேல் வரக் கூடிய எரிச்சல் எனக்கு வரவே இல்லை. மாறாக , பரிதாப உணர்வே எழுந்தது. காரணம் உங்களுக்கே தெரியும்!

21 May 2009

ஒரு கூடும் , பல பறவைகளும்

சுயநலமே குறிக்கோளாய்

தன் இரையே முதன்மையாய்

பாடித் திரிந்தன பறவைகள்.

ஆடிக் களித்தன கூட்டிற்குள்.

பறவைகள் பறந்தன.

அழுதது கூடு.

- கல்லூரி முடித்துச் செல்லும் இறுதியாண்டு மாணவர்களின் நினைவாக.

27 April 2009

தீராக் கேள்வி - தெளிவான பதில் 2

எழுத்துச் சித்தர் பாலகுமாரன் பதில்கள்
கோபமில்லாத நிலையே சக்தி என்று சொல்கிறார் மகாகவி.அப்படியொரு நிலை உண்டா?
நிச்சயமாக உண்டு. கோபம் உள்ளுக்குள் எழும் போதே உற்று கவனிக்கிற பொழுது கோபம் மெல்ல கிழிந்து உள்ளேயே சுருண்டு விடுகிறது. அது நம்முடைய கைக்கு அகப்பட்டு மிகச் சரியான அளவில் ,எந்த வித பழி வாங்கும் உணர்ச்சியும் கொந்தளிப்பும் இல்லாமல் ,எதிராளிக்கு புரிய வேண்டுமே என்ற அளவிற்கு கோபம் காட்டப்படுகிறது. அந்த மாதிரி கோபத்தில் காதலும் இருக்கிறது.

எதற்காக மலை மீது கோவில்கள் வைக்கிறார்கள்?
அப்பொழுதுதான் நீங்கள் மலையேறி அதன் உச்சிக்குப் போவீர்கள். மலையின் உச்சிக்குப் போனால்தான் பூமியின் பெரும்பரப்பும், அதில் நீங்கள் சாதாரண ஒரு புள்ளி என்பதும் உங்களுக்குத் தெரிய வரும். உங்கள் வீட்டுத் திண்ணையில் வெறும் லுங்கி கட்டிக் கொண்டு உட்கார்ந்திருந்தால் உங்களை மிகப் பெரிய மனிதர் என்று நினைத்துக் கொள்வீர்கள். உங்கள் உடல் பருமனையே உங்கள் வீரம் என்று கருதுவீர்கள். நீங்களே பிரம்மாண்டமானவர் என்ற எண்ணம் ஏற்பட வாய்ப்பு இருக்கிறது.இந்திய சனாதன தர்மத்தில் ஒவ்வொரு விசயமும் உங்களை உங்களுக்கு உணர்த்தத்தான் முயற்சி செய்கிறது. அப்படி உணர்த்தியும் மனிதர்கள் கர்வத்தில் குதிப்பது ஆச்சர்யமான விஷயம்.

வாழ்க்கை எப்படி இருந்தால் நன்றாக இருக்கும் என்று நீங்கள் கருதுகிறீர்கள்?
அடுத்தடுத்து அதிகம் வேலைகள் இருக்க வேண்டும். ஒரு வேலை செய்து முடித்த பிறகு அடுத்த வேலைக்கு பறந்து பறந்து ஓட வேண்டும். ஓய்வு நேரத்தை ஓய்வுக்காக மட்டுமே செலவு செய்ய வேண்டும். ஓய்வு எடுத்தால் தான் அடுத்த வேலையை செய்ய முடியும் என்ற நிர்ப்பந்தம் ஏற்ப்பட வேண்டும். வேலை செய்து முடித்த பிறகு உடனே ஆழ்ந்து தூங்கும் படியாய் அசதி வேண்டும். இது இல்லாமல் , அடுத்தபடி என்னால் செய்ய வேண்டும் என்று தெரியாமல் , இந்த நாள் பொழுதை எப்படிக் கழிப்பது என்று புரியாமல் வெறும் விட்டத்தைப் பார்த்துக் கொண்டிருப்பதும் , எதிர் வீட்டுக்காரரோடு வம்படித்துக் கொண்டிருப்பதும், வெறும் கற்பனையில் ஈடுபட்டு காலை ஆட்டிக் கொண்டு உட்கார்ந்திருப்பதும் மிகக் கேவலமான விஷயங்கள். என் வாழ்க்கை இப்படி அமைந்து விடலாகாது என்பதில் நான் கவனமாக இருக்கிறேன்.இடைவிடாது வேலை செய்வதைத்தான் வாழ்க்கையின் அற்புதமான விஷயமென்று நான் கருதுகிறேன்

எதையும் முயற்சிக்கும் முன்பு , இது நம்மால் முடியுமா என்கிற தயக்கம் என்னை தடை செய்கிறது. என்ன செய்வது?
வெற்றி பெற வேண்டும் என்ற எதிபார்ப்பு இருந்தால் , இந்தக் குழப்பம் வரும். இறங்கி முழு மூச்சை முயற்சிப்போம். தோல்வியானாலும் பரவாயில்லை என்று இறங்கி விடவேண்டும். தோல்வி ஒரு அனுபவமென்று கொள்ள வேண்டும். தோல்வியை நன்று ஆராய வேண்டும்.மறுபடியும் ஜெயிக்க வெறியோடு உழைக்க வேண்டும்.ஒரு தோல்வியை வெற்றியாக மாற்றிய பிறகு இந்த பயம் அறவே போய்விடும்.


`

மௌனமே மொழியாக...


                                                  விழிக் கோடியில் ஒரு துளி நீரும்
                                                  அடிமனதில் படபடப்பும்
                                                  சொல்லவொணா உணர்வுகளும்
                                                  சொல்லியே ஆக வேண்டிய வார்த்தைகளும்
                                                  ஒன்றோடொன்று போட்டி போட
                                                  நாம் பிரிந்த அன்று
                                                  ஒன்றுமே பேசவில்லை.
                                                  ஒன்றுமே பேசாததால்
                                                  ஒன்று விடாமல் பேசினோம்.

-2000 ஆம் ஆண்டு டைரியிலிருந்து .

பகுத்தறிவு



ஏன் தத்துவவாதிகள் கடவுளை நம்புவதில்லை?

தத்துவத்துக்கு கடவுள் தேவையில்லை. விஞ்ஞானம் முடிவடையும் புள்ளியில் தத்துவம் துவங்குகிறது.

ஒரு முறை கடவுள் ஒரு தத்துவ அறிஞரின் எதிரே வந்து நின்றார்.
" நான் தான் கடவுள். நல்லது ,கேட்டது எல்லாவற்றிற்கும் அடிப்படையானவன் ".

" அப்படியா...சரி..எனக்கு ஒரு சந்தேகம். நீங்கள் சொல்வதால் ஒரு விஷயம் நல்லது ஆகிறதா? அல்லது , அது நல்லது என்பதால் நீங்கள் அப்படி சொல்கிறீர்களா?"

"நான்தான் எல்லாவற்றிற்கும் அடிப்படை என்றேனே! நான் சொல்வதால் தான் ஒன்று நல்லதாகிறது!"

"அப்படியென்றால் ஒரு குழந்தையைச் சித்ரவதை செய்வது என்பது ' நல்லதுதான்' என்று நீங்கள் சொல்வதால் நல்லதாகிவிட முடியுமா?"

கடவுளுக்கு கோபம் வந்தது. தத்துவவாதி தொடர்ந்தார்.

"அது நல்லது இல்லை. ஆகவே தான் நீங்களும் அது நல்லது இல்லை என்கிறீர்கள்! இது எனக்கே தெரியுமே. நீங்கள் எதற்கு?"

கடவுள் மறைந்து விடுகிறார்.

- மதன் கேள்வி- பதில்

20 April 2009

டோராவும் , புஜ்ஜியும்



சென்ற சனிக்கிழமை இரவு ஆயத்த ஆடை வாங்கும் நிமித்தம் நானும், என் மூன்றரை வயது மகன் புவனும் இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தோம். காளவாசல் சந்திப்பு அருகே , ஓடும் பேருந்தில் ஏற முயற்சித்துக் கொண்டிருந்த இளைஞனைக் கண்டதும் எனக்கு தூக்கி வாரிப் போட்டது.பேருந்தின் வேகமும் அவனுடைய வேகமும் ஒத்துப் போகாமல் , ஏறுவதற்கு போராடிக் கொண்டிருந்தான். நானும் , அவனைக் கவனித்த சிலரும் சேர்ந்து கூச்சலிட்டோம். அதைக் காதில் வாங்கிக் கொள்ளாது தொடர்ந்து பேருந்தில் ஏறத் தலைப்பட்டான்.இறுதியில் பேருந்து அவனைக் 'கை'விட , பேருந்தை அவன் கை விட , தரையில் விழுந்து உருண்டு புரண்டு சுதாரித்து எழுந்தான். எல்லாம் வினாடிகளில் நடந்து முடிந்தது. தான் கீழே விழுந்ததை விட , அதை மற்றவர்கள் பார்க்கிறார்களே என்ற வெட்கத்துடனும் , சுய கழிவிரக்கத்துடனும் , எழுந்த வேகத்தில் சாலையைக் கடந்து நடை பாதையை அடைய எத்தனித்தான். இது அந்த வயதினர்க்கே உரிய குணம். எப்போதும் எல்லோரும் தன்னைக் கவனிக்கிறார்கள் என்று பேதமையாக நினைக்கும் வாலிபக் குணம்.நடந்து முடிந்த நிகழ்வின் முடிவை ஆராயாமல் , அது நடந்த விதத்தைப் பற்றியே கவலை கொள்ளும் பிள்ளைக் குணம்.

அவன் எங்களை நெருங்குகையில் , எனக்குள்ளிருந்த பதற்றம் ஆத்திரமாய் வெளிப்பட்டது. அவன் காது கேட்கும் படி கடுமையான வார்த்தைகளால் திட்டிக் கொண்டே வந்தேன்.என்னை மாதிரிப் பலரும்.

நாங்கள் துணிக் கடையை அடைந்த நேரம் இந்த சம்பவத்தைக் கிட்டத்தட்ட மறந்து போயிருந்தேன். வாகனத்தை நிறுத்தி விட்டு கடைக்குள் சென்று , குழந்தைகளுக்கான ஆடைப்பிரிவுக்கு சென்றோம்.பலவித ஆடைகளைத் தேர்வு செய்தும் புவனின் முகத்தில் மகிழ்ச்சியேயில்லை .மாறாக, கலக்கமாயிருந்தான்.

"புவன் ...ஏன்டா ஒரு மாதிரியிருக்கே...டிரஸ் ஏதும் பிடிக்கலையா...?"

நான் கேட்டதுதான் தாமதம். பொலபொலவென கண்ணீர் சிந்த தேம்பித் தேம்பி அழ ஆரம்பித்தான்.

அழுகையும் ஆவேசமும் ஒரு சேர வார்த்தைகளைப் பிரசவித்தான்.

"ஏம்ப்பா... அவனைத் திட்டினீங்க...?"

"யாரை?"

"பஸ்ல இருந்து விழுந்தான் ல...அவனை..."

"பின்ன என்ன செய்யனுங்கிற...?"

"உதவி செய்யணும் ப்பா..."

"என்னது ..?"

அவனிடமிருந்து அதை எதிர்பார்க்காத நான் அதிர்ந்தேன். காரணம் , 'உதவி' என்ற தமிழ் வார்த்தையையோ அல்லது அதன் அர்த்தத்தையோ நான் அவனுக்கு அறிமுகப்படுத்தியதேயில்லை.

" கீழ விழுந்துட்டான் ல...அவனைப் போயி நாம தூக்கிவிடனும் ப்பா...நீங்க அவனைத் திட்றீங்க ..."

நான் ஆச்சர்யத்துடன் கேட்டேன். " உதவி செய்யனும்னு உனக்கு யார் சொல்லிக் கொடுத்தாங்க..? உங்க மிஸ் தான...?"

"இல்லப்பா...டோரா..."

___________________________________________

தங்கள் பிள்ளைகளின் சந்தோசத்திற்காக , டிவி ரிமோட்டைத் துறந்து , அவர்களுடன் சுட்டி டிவியில் டோரா -புஜ்ஜி பார்க்கும் அனைத்துப் பெற்றோர்களுக்கும் நான் பகர விழையும் பொருளின் வீச்சு புரியும். அவர்கள் அனைவருக்கும் இந்தப் பதிவு சமர்ப்பணம்.


15 April 2009

முப்பது வயதுக்காரன்

அன்னையின் முலைப் பாலுண்டு
ஆழ்நிலைத் தியானத்தில்
சூழ்நிலை மறந்து
அமிழ்ந்திருந்தது மழலைப் பருவம்.

வயதொத்த சிறார்களுடன்
வஞ்சனையின்றி விளையாடி
வெஞ்சினம் ஏதுமின்றி
மகிழ்ந்திருந்தது பால்யம்.

பள்ளிப் பாடங்களோடு
சிறுகதை, புதினங்களுடன்
இரவும் பகலும் உறவாடித்
துள்ளி ஓடியது முன்-பதின்பருவம்.

இலட்சியக் கனவுகளுடன்,
தன்னுள் தான் தேடலும்
கைகோர்த்துப் பயணித்து
இனிதாகக் கழிந்தது பின்-பதின்பருவம்.

நல்லதொரு பணி பெற்று
சகோதரக் கடமைகள் முடித்து
நட்பு, காதல்,மனைவி, பிள்ளையென
பூரிப்புடன் நிறைந்தது இளமைப் பருவம்.

பொய்யான இலக்குகளோடு,
தன் பலம் தானறியாது ,
சுயம் மறந்து, சுழலும் எந்திரமாய்
உழலும் இப்பருவத்தை எவ்வாறு வகைப்படுத்த ?

13 April 2009

ஆள் - அரவம்

அழகென
நான் வியந்த
படமெடுத்த பாம்பு
மறு நொடி அதன்
உரு காட்ட
இப்பொழுதெல்லாம்
நான் நம்புவதில்லை...
பாம்பையும்
சில மனிதர்களையும் .

-2002 ஆம் ஆண்டு டைரியிலிருந்து

நட்பின் முதல் புள்ளி...

நாடக மேடையில்
பரிதவிக்கும் பாத்திரங்கள்
பத்திரமாய்த் தரையிறங்கி
வேஷம் கலைக்கும் வேளையில்
தன் முகமாய்
சிலர் முகம் காண
அனிச்சையாய் நிகழும்
அன்புப் பரிமாற்றம்.

-2002 ஆம் ஆண்டு டைரியிலிருந்து.

தோழியின் பிரிவில்...

அது ஒரு கனாக் காலம்.
காரிகையைக் கண்டிருந்தேன்...
அவளை நினைவில் கொண்டிருந்தேன்.
என் நிலை என்னென்று அறியாது
தன்னிலை மறந்திருந்தேன்.

என் கருத்து பொய்யென்று
காலம் எடுத்துரைக்க
கரைந்து போயிருந்தேன்...
கரைந்து உறைந்தே போயிருந்தேன்.
நான் சுத்தமானேன்.

உறைந்த நிலையில்
தெளிந்தது மனது.
தெளிந்த நிலையில்
தெரிந்தது அறிவு.
ஒளிந்திருந்தேன் தனித் தீவில்
உறவுகள் தவிர்த்து.

கல்லூரிக் கனவுலகு
கை காட்டும் தருவாயில்
நிதர்சனக் கள உலகு
கை நீட்டும் தருவாயில்
கை கோர்த்தனர் நண்பர்கள்.
நட்பென்னும் நல்லதொன்றை
நான் எடுத்து அணைப்பதற்குள்
நாள் முடிந்தது - எனினும்
நட்பு தொடர்ந்தது .
நான் இன்னும் சுத்தமானேன்.

அச்சத்துடன் அடி வைத்தேன்
எதிர் நோக்கும் நிஜ வாழ்வில்...
எதிர்ப்பட்ட மனிதரெல்லாம்
எனை ஏய்க்க முற்பட
ஏங்கியது என் மனம்
நல்லதோர் உறவுக்காய்...

நல்லதோர் உறவாய் தோழி நீ வந்தாய்.
நட்பென்று பெயரிட்டேன் நான்.
ஆண்பால் பெண்பால் கடந்து
நட்பால் ஒரு பாலமமைத்தோம்.
அதில் நித்தம் பயணம் செய்தோம்.

கல்லூரியில் தவறிய நட்பை
நங்கை உன்
நல்லெண்ணத்தில் கண்டேன்...
நீ செய்த உதவிக்கு
நன்றி ஏதும் கூறவில்லை.
பிணக்கம் ஏற்பட்டாலும்
இம்மியளவும் பிரியவில்லை.

ரத்த பந்தங்கள் ஒரு நாள்
அர்த்தமற்றுப் போகலாம்.
சுத்தமான நட்பு என்றும்
சுருதி மாறுவதில்லை.

அமாவாசைக்கு முன்தினமே
மனதைத் தேற்றிக் கொள்பவன் நான்...
எதிர்பாரா உன் ஒருநாள்விடுப்பை
எப்படி தாங்கிக் கொள்வேன்?
தாங்கிக் கொண்டேன்...
தாங்கிக் கொள்வேன்
உன் ஒரேயடி விடுப்பையும்...!

என் உணர்வின்
சரியான பரிமாணத்தை
நீ உணர்ந்த நம்பிக்கையில் நான்.

உண்மையைச் சொல்லவா...
நீ என்னை விலகுவதை
நான் இன்னும் நம்பவேயில்லை.

ஒன்று மட்டும் நிச்சயம்...
என் நினைவிருக்கும் வரை
நான் நினைவிழக்கும் வரை
என் நினைவில் நீயிருப்பாய்.
நினைத்தலில் உள்ள சுகம்
நினைக்கப்படுதலிலும் உண்டு.
ஆகவே
சுய நலக்கரனாய் சொல்கிறேன்...
எனக்காக என்னை நினைத்திரு.

சில மாறுதல்கள்
சில நிறைகளைத் தரலாம்.
சில நிறைகள்
பல குறைகளைத் தரலாம்.
அந்தக் குறைகள்
குரலெடுத்து அழும் சத்தம்
யாருக்கும் கேட்பதில்லை.

யாதொரு துகளும் நம் நட்பிடை வராதிருக்க
அனுதினமும் ஆண்டவனை வேண்டும்

-உன் அன்பு சிநேதிதம்.

-2000 ஆம் ஆண்டு டைரியிலிருந்து
(பணியிடம் விட்டு நீங்கிய உயிர்த் தோழியின் நினைவாக )

அகம்-புறம்


திரை நாயகனின் உருகுதலில்
கதை நாயகியின் மருகுதலில்
புடம் போடப்படுகிறேன்...
நல்லதே நானாகிறேன்.
தாங்கும் வீடு,
தன்னலமற்ற நண்பர்கள்,
எனக்காய்
தன்னுயிர் தரும்
என்னுயிர்த் தோழி.
நினைத்துப் பார்க்கையில்
நீள் நிம்மதி.
ஆனாலும்
நிஜ வாழ்வின்
நிதர்சன நிமிடங்களில்
நிம்மதியின் நீளம் குறையத்தான் செய்கிறது -
காற்றின் எதிர்த்திசையில்
களியாட்டமிடும்
குதிரையின் வேகத்தைக்
கட்டுப்படுத்தாத
இயலாமையை எண்ணி.

-2000 ஆம் ஆண்டு டைரியிலிருந்து

11 April 2009

காதலின் சின்னம்?!!


சென்ற வாரம் முழுவதும் கான்பூர் ஐ.ஐ.டியில் ஒரு பயிற்சி வகுப்பை முன்னிட்டுத் தங்கியிருந்தேன். அங்கு இளநிலை பொறியியல் படிக்கும் மாணவர்களைப் பார்க்கும் போது மனதுள் லேசான பொறாமை தலை தூக்கியது. அத்தனை வசதிகள்....! படிக்கும் போது படிப்பு ,ஆட்டத்தின் போது ஆட்டம் என சுயக் கட்டுப்பாட்டுடன் தங்கள் இளமையின் உச்சத்தை அவர்கள் அனுபவிக்கும் விதம் என்னை பெருமூச்சு விட வைத்தது. படிப்பு வாசனையே அறியாத கான்பூர் தெருக்களின் பழமையும், படிப்பின் உச்சத்தை முகர்ந்து கொண்டிருக்கும் ஐ.ஐ.டியின் புதுமையும் என்னை ஒரு சேர வசீகரித்தன. ஐந்து நாள் பொழுதும் இனிமையாகக் கழிந்தது.

நிற்க. நான் சொல்ல விழைந்தது ,அந்த ஐந்து நாட்கள் பற்றியல்ல. ஆறாவது நாள் ஊருக்குத் திரும்பும் போது , உடன் வந்தவர்களின் வற்புறுத்தலின் பேரில் (ஏற்கனவே போட்ட திட்டத்தின் படி தான்) ஆக்ரா செல்ல நேர்ந்தது. வேறெதற்கு...? உலகப் புகழ் பெற்ற தாஜ் மகாலைப் பார்வையிடத்தான். கான்பூரிலிருந்து மதுரை வந்து சேரும் நீண்ட பயணத்தின் இடைச் செருகளான எங்களின் ஆக்ரா தருணங்கள் ஒரு விதப் பதற்றத்துடனேயே இருந்தன.வட இந்திய ரயில்வேயின் நிர்வாகத் திறமையால் ஆக்ராவில் கழிப்பதற்கு எங்களுக்கு இரண்டு மணி நேரமே இருந்தது.

ஆட்டோ பிடித்து, மடிக் கணினியை cloak room ல் போட்டு விட்டு, வழி காட்டிகளின் உதவல் கோரிக்கைகளை பண்புடன் நிராகரித்து, சிறு வியாபாரிகளின் மனம் கோணாமல் புறந்தள்ளி, நுழைவுச் சீட்டு எடுத்து, சோதனைச் சாவடியின் ' சோதனைகளைக் ' கடந்து ஒரு வழியாக அந்தப் பிரம்மாண்டக் கட்டிடத்தின் (?) முன் சென்று நின்றவுடன் வெறுமைதான் தட்டியது. என்னுடைய பதின் பருவங்களில் நான் கனவுப் பிரதேசமாக நினைத்திருந்த , என் மென்மையான உணர்வுகளின் இருப்புக்கு கட்டியம் பகர்ந்த ஆதர்ஷ விசயமாக நான் கொண்டிருந்த ஒரு இடத்தின் முன் நிற்கிறேன், எனினும் எத்தனை முயற்சித்தும் என்னுள் ஒரு சிறு நெகிழ்தலும் நிகழவே இல்லை. ஒருவேளை கல்லூரி கால கட்டத்திலேயே இவ்விடம் வந்திருக்க வேண்டுமோ? நான் வளர்ந்து , வாழ்வின் அடுத்த பரிமாணத்தில் நுழைந்து விட்டேனோ ? உடன் வந்தவர்கள் அந்த நிமிடங்களைத் தங்கள் புகைப்படக் கருவியில் கல்லறைப் படுத்திக் கொண்டிருந்தனர்.எனக்கோ, அந்த நிமிடங்களில் உயிர்ப்பே இல்லை. சரியென, அவர்களின் தற்காலிக போட்டோகிராபராக மாறியிருந்தேன்.

இந்த காதலர்கள் எல்லாம் தங்கள் காதல் சின்னமாக ஏன் தாஜ் மகாலைக் கொண்டிருக்கிறார்கள் என்று புரியவில்லை. ஷா ஜகானின் மூன்றாவது மனைவியான மும்தாஜ் தனது பதினான்காவது பிள்ளைப் பிரசவத்தின் போது இறந்து போனதின் நினைவாக , சுமார் இருபத்தியிரண்டாயிரம் பேரை வைத்து இருபது வருடங்களில் கட்டப்பட்ட கல்லறைதான் தாஜ் மஹால் என்கிறது வரலாறு. 'என் மனைவியின் சமாதியின் மீது மிகப் பெரிய கட்டிடம் எழுப்புங்கள் ' என்று ஆணவத்தோடும் ,அதிகாரத்தோடும் கட்டளையிட்ட ஷா ஜகான் என்கிற சர்வாதிகாரியும் , உயிருக்கு அஞ்சி தங்கள் வாழ்நாளை இதன் உருவாக்கத்திற்கு அர்ப்பணித்த மக்களும் தான் அங்கே பிம்பமாகப் பதிந்திருக்கிறார்கள். இந்தியாவின் பெருமைகளுள் இதுவும் ஒன்று என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை.ஆனால்பளிங்குக் கற்களின் குளிர்ச்சிக்கடியில் அவர்கள் உழைப்பின் வெம்மையும் ,சுற்றுச் சுவர்களின் மினுமினுப்பில் அவர்களின் வியர்வை பூத்த மேனியும் , பக்கத்துக் கோட்டைகளின் சிவப்பு வண்ணத்தில் அவர்கள் சிந்திய ரத்தமும் தான் தெரிகிறது.

பெண்ணாம்...அவன் மனைவியாம்...அவள் மீது தீராக் காதலாம்....பிரசவத்தின்போது மனைவி படும் அவஸ்தையைக் காணும் எந்தக் கணவனும் 'இவள் அடுத்த பிள்ளையை சுமக்கத்தான் வேண்டுமா ' என்ற கேள்வியுடன் தான் பின் வரும் போகங்களை அனுபவிப்பான்.மனைவி உயிரோடிருக்கும் போதே அவளை சுகித்திருக்க விடாமல், அவளின் கல்லறைக்கு உலகம் மெச்சும் படி மாளிகை அமைப்பதென்பது உலக வரலாற்றில் தனது பெயர் நிலைப்பதற்கு ஒரு குறுக்கு வழியே. நாட்டின் செல்வத்தையும் , நாட்டு மக்களின் உழைப்பையும் தன் கனவை நினைவாக்க ஈடுபடுத்தியவன் ஒரு நல்ல அரசனாக முடியுமா? பதின்மூன்று முறை ஒரு பெண்ணை பிரசவிக்க நிர்ப்பந்திப்பவன் ஒரு நல்ல கணவனாக முடியுமா ? மும்தாஜின் மறைவுக்கு முன்னரும் பின்னரும் ஷா ஜகான் வேறு பெண்களைக் கொண்டதேயில்லையா?

ஒரு நல்ல கணவன்தான் நல்ல காதலனாக இருக்க முடியும் என்பது என் தாழ்மையான கருத்து. (அதாவது, காதல் செய்த பெண்ணைக் கைபிடித்த பின்பும், சூழ்நிலைகளின் கைதி ஆகாமல் , திருமணத்திற்கு முன் அந்தப் பெண்ணிடமிருந்த அவன் மீதான பிம்பம் அழியாதவாறு நடப்பவனே உண்மையான காதலன். யதார்த்தத்தில் இது மிகவும் கடினம். )

யோசித்துக் கொண்டே , உடன் வந்தவர்களின் ஆசை தீர புகைப்படம் எடுத்துத் தள்ளினேன். திரும்புகையில் , கண்கள் சொருகி கை கோர்த்து அமர்ந்திருந்த ஒரு இளம் ஜோடியைக் காண நேரிட்டது.அந்தப் பெண்ணை உற்றுக் கவனித்தேன்.ஏனோ தெரியவில்லை , மனம் கனத்தது.ஒருவேளை அவள் அவனை ஷா ஜகானாக வரித்திருக்கக் கூடும். என் மனம் வேண்டியது , "கடவுளே, அவன் ஷா ஜகானாக இருக்க வேண்டாம் .நல்ல கணவனாக இருந்தால் போதும் "

10 April 2009

தீராக் கேள்வி - தெளிவான பதில் 1

எழுத்துச் சித்தர் பாலகுமாரன் பதில்கள்
கடவுள் உண்டா ?
உண்டு . நிச்சயம் உண்டு. இந்த பிரபஞ்சத்தின் எல்லா அசைவுகளையும் பார்க்கும் போது அதை இயக்குகின்ற சக்தியை கவனிக்க நேரிடுகிறது. அறிய வேண்டியது அதிகமிருக்கிறது என்பதை உணர்ந்தால் கடவுள் தோன்றுகிறார். எனக்கு எல்லாம் தெரியும் என்கிற மமதை கடவுளை மறைக்கும்.
அழகு என்பது என்ன ?
கண்களிலிருந்து வரும் ஒளி தான் அழகு .அறிவும் , அன்பும் கலந்தது தான் அழகு. உடையோ, உயரமோ, பருவமோ, பதவியோ அழகல்ல.மனதில் அமைதி இருப்பின் முகத்தில் அழகு சுடர் விடும்.
காதல் என்பது மனிதனுக்கு அவசியமா ?
மிக மிக அவசியம். வேறு செய்வதற்கு இங்கு என்ன இருக்கிறது. ஆண்-பெண் நேசிப்பில் தான் உலகம் இயங்குகிறது. நேசிப்பை கொஞ்சம் கவித்துவமாக்கினால் ஏற்படுவது காதல். உடல் இச்சையை நெறிப்படுத்தி உள்ளத்தை அறிய முற்படுவது தான் காதல். நேர்மையாக இருப்பின் காதல் மிகுந்த பலம் தரும்.
பணம் முக்கியமா ?
முக்கியம். ஆனால் எதற்கு முக்கியம் என்கிற தெளிவு இருந்து விட்டால் சம்பாதிப்பதும், செலவு செய்வதும் அர்த்தமாகும். வெறுமே அடுக்கி வைத்து பார்க்க ஆசைப்பட்டால் பகைவர்களை உருவாக்கும். நிறைய பணம் உள்ளவர்களிடம் யாரும் உண்மையாய் இருப்பதில்லை. இல்லாதவர்களிடம் மரியாதை செலுத்துவதில்லை. சம்பாதித்து சரியாக செலவழிக்கிறவர்களை உலகம் கொண்டாடத் தவறுவதில்லை.
வயதானப்பிறகு தான் ஆன்மீகம் என்று பலரும் நினைக்கிறார்களே? இது சரியா?
சரியா, தவறா என்பதல்ல பிரச்சனை. இது சௌகரியம். ஆடுகிற வரை ஆடிவிட்டு, ஆட முடியாமல் கைகால்கள் நடுங்குகிற போது ஆன்மீகம் போய் கொள்ளலாமே என்று மனதில் ஏற்படுகின்ற சௌகரியம். கைகால் நடுங்குவது வயதானால் தான் வரும் என்றில்லை. வாலிபத்திலும் கைகால் நடுங்க, மனம் நடுங்க, வாழ்க்கை நடுங்க நிறைய பேர் பார்த்திருக்கிறேன். துன்பம் வரும் பொழுது ஆன்மீகம். துன்பம் இல்லாத போது ஆன்மீகம் இல்லை என்பதுதான் பலருக்கும் நிலையாக இருக்கிறது. தன்னுடைய துன்பத்தைப் பற்றி அக்கறை உள்ளவருக்கு ஆன்மீகம் வயது பார்த்து வருவதில்லை. தன் துன்பம், மற்றவர் துன்பம் எதுவும் தெரியாதவர்தான் ஆன்மீகம் அப்பால் பார்த்துக் கொள்ளலாம் என்று சொல்கிறார்கள். ஆன்மீகம் என்பது வயதோடு சம்பந்தப்பட்டது அல்ல. அனுபவத்தோடு சம்பந்தப்பட்டது. ஆன்மீகம் என்பது மோசமான அனுபவங்களிலிருந்து மீண்டு எவர் வெளியே வருகிறாரோ அவரிடம் பலமாகவும், தெளிவாகவும் இருக்கும்.
6)பிரார்த்தனை என்பது என்ன ?
கடவுள் என்ற விஷயத்தை வேத விவகாரமாக எடுத்துக்கொண்டு தனக்குள் மூழ்கி, மற்ற எண்ணச்சலனங்களை நிறுத்தி, தான் எது என்பதை அறிந்து கொண்டு தெளிவது மிகுந்த சிறப்புடையது। ஆனால். அது எளிதில்லை. எல்லோராலும் கைகொள்ளும் விஷயமில்லை.
அதற்கு பதிலாய் உலக வாழ்க்கையின் சந்தோஷங்களைத் தேடி அது நிறைவேறுவதற்காக, எங்கும் பரந்து எல்லாமுமாய் இருக்கின்ற இறைவனை நோக்கி கைகூப்பி எனக்கு இதைக் கொடு என்று இறைஞ்சுவது மனிதர்கள் இயல்பு. எது எல்லாமுமாய் எங்குமாய் இருக்கின்ற இறைவன் என்று யோசித்து உள்ளுக்குள்ளே அதைத் தேட முற்படும்போது, தன்னுடைய மனதின் மீது மனம் பலமாகப்படுகிறது ஒரு புள்ளியில் மனம் ஆழ்ந்து நிற்கிறது. அதனால் பதட்டங்கள் நீங்கி அமைதி ஏற்படுகிறது. தனக்குள்ளே தானே, தன்னைப்பற்றி யோசித்து, தன்மீது அதிகப்படியான நம்பிக்கை கொள்ள வைக்கிறது.
விநாயகா.. வெங்கடாஜலபதி.. மூகாம்பிகைத்தாயே.. என்று கை கூப்புகிற போதே நான் என்னை நோக்கி கைகூப்பி, என்னைப்பற்றி எனக்கே சொல்கிறேன். எனக்கு இது வேண்டும். இதிலிருந்து என்னைக் காப்பாற்று என்று சொல்கிறபோது அந்த விஷயம் நோக்கி நான் அதிகம் மும்முரமாகிறேன். அதற்காகக் கடுமையாக உழைக்கிறேன்.பிரார்த்தனை என்பது நெஞ்சோடு புலத்தல். தனக்குத்தானே பேசிக்கொள்ளுதல். தனக்குத்தானே பேசி தன்னம்பிக்கையை அதிகப்படுத்திக் கொள்ளுதல். தனக்குத்தானே பேசிக்கொண்டு தன்னை பலப்படுத்திக் கொள்ளுவதற்கு கடவுள் என்கிற உருவமற்ற, எங்கும் நிறைந்த ஒரு சக்தி மனித குலத்திற்கு அவசியம். இதன் பொருட்டுதான் இந்தக் கடவுளைப்பற்றி பிரசாரம் செய்திருப்பார்களோ, தனக்குத்தானே பேசிக்கொள்ள வேண்டுமென்பதற்காகத்தான் கடவுளுக்கு ஒரு உருவம் கொடுத்திருப்பார்களோ, ஆலயம் என்ற ஒரு இடம் கொடுத்திருப்பார்களோ. ஹோமம், யக்ஞ்ம் என்ற நியதியை ஏற்படுத்தியிருப்பார்களோ என்றும் தோன்றுகிறது.பிரார்த்தனைதான் உண்மையான ஹோமம்। உடம்புதான் ஆலயம். உள்ளே “தான்” என்று கொள்கின்ற அந்த நினைப்புதான் கடவுள். தன்னை நோக்கி தான் பேசுதலே மிகப்பெரிய மந்திரஜபம்.
தன்னுள் மூழ்கி தான் யாரென்று தேடமுடியாதவரை ஞானிகளும், ஞானிகள் ஏற்படுத்திய மதங்களும் இப்படித்தான் வழிப்படுத்துகின்றன। பிரார்த்தனை செய் என்று தூண்டுகின்றன. செய்வன திருந்தச்செய் என்பது மகா வாக்கியம்.
பிறருக்கான வேலையில் கூட ஏமாற்றுதல் இருக்கலாம். தனக்குத்தானே பேசிக்கொள்வதில் ஏமாற்றுதல் இருந்தால், அதைவிட முட்டாள்தனம் உண்டா? தான் செய்கின்ற பிரார்த்தனையில் கூட அக்கறையின்மையும் ஒருமுகப்படுத்தலும், கவனமும் இல்லாமலிருப்பின் வாழ்வதில் அர்த்தமுண்டா.என்ன வேண்டும் என்பதைகூட சரியாகக் கேட்கத் தெரியாவிட்டால், உண்மையாகக் கேட்கத்தெரியாவிட்டால் வாழ்க்கை மிகப்பெரிய அபத்தமாகப் போய்விடும்.பிரார்த்தனை செய்ய யார் கற்றுக் கொடுகிறார்கள்? யார் தூண்டுகிறார்கள்?.தாயோ.. தந்தையோ.. நண்பரோ இதற்கு உதவி செய்ய முன்வரினும் உங்களுடைய துக்கம்தான், உங்கள் துக்கத்திலிருந்து எழுகின்ற உங்கள் ஆசைதான் உங்களை பிரார்த்தனை செய்ய மும்முரப்படுத்தும். பிரார்த்தனைகள் மேம்போக்காக இல்லாமல் ஆழமாய் இருக்க நம்முடைய வேதனைகள் உதவி செய்யும்

20 March 2009

தூணிலும் துரும்பிலும் ....


இன்று ஒரு வேலை நிமித்தமாக திருப்பரங்குன்றம் வரை சென்றிருந்தேன். கசகசக்கும் முன் மாலைப் பொழுது. ஆனால் மனம் ஏனோ ஏகாந்தமாய் இருந்தது. மழை பெய்தாலோ, ஏதேனும் கோவிலில் இருந்தாலோ அல்லது நல்ல திரைப்படம் பார்த்தாலோ இருக்கும் மனநிலை.
சென்ற வேலையை முடித்து விட்டு பேருந்துக்காகக் காத்திருந்தேன். வெகு நேரமாகியும் எனக்கான பேருந்து வரவில்லையாதலால் தாகம் வாட்டவே, குளிர் பானம் பருகலாம் என அருகிலிருந்த கடையை நோக்கி நகர்ந்தேன். ஏதோ நெருட , என் பணப் பையைத் திறந்து பார்த்தேன். தோன்றிய எண்ணம் சரிதான், சரியாக பதினைந்து ரூபாய் இருந்தது. பேருந்துக்கு ஐந்து , பானத்துக்கு பத்து .

கடையில் யாரோ யாரையோ விரட்டிக் கொண்டிருந்தார்கள். விரட்டப்பட்டது ஒரு அழுக்கு பிச்சைக்காரன். ம்ஹூம்..பிச்சைக்காரன் என்று கூட சொல்ல முடியாது. நழுவும் ஆடையை உணர முடியாத , தன்னுணர்வு மரத்த ,மனநிலை பிறழ்ந்த ஒரு வளர்ந்த பிள்ளை. பசிக்கிறது என்று கேட்டிருக்கிறான்.புண்ணியவான்கள் விரட்டியிருக்கிறார்கள். அவனோடு சேர்ந்து ஒரு பெண்மணியும் மோசமான வசவுகளை வாங்கிக் கொண்டிருந்தாள். அவனைப் பெற்றவளாக இருக்கக் கூடும்.
சாப்பிட்டு எத்தனை நேரமாயிற்றோ , அவன் பசி தாள முடியாமல் கீழே கிடந்த பிளாஸ்டிக் கப்பை எடுத்து தின்ன முயற்சித்தான். அவனுக்கு உதவ மனமிருந்தும் , அவன் இழி கோல நிலை காரணமாக நான் தயங்கினேன். அந்த அம்மாள் ஒவ்வொருவரிடமாய் கையேந்தி வந்து கொண்டிருந்தாள். வெறுப்பு கலந்த எதிர்மறைத் தலையாட்டல்களே பிச்சையாய் விழுந்து கொண்டிருக்க, என் முறை வருவதற்காய் காத்திருந்து , அவள் வந்தவுடன் பத்து ரூபாயை எடுத்து வேகமாய் நீட்டினேன். எனக்கு நன்றி கூட சொல்லாமல் (குறைந்த பட்சம் ஒரு பார்வை கூட தராமல்) , அந்த அம்மாள் பக்கத்தில் இருந்த கடைக்குள் நுழைந்து "மூணு புரோட்டா" என்றாள். பாவம், இவளும் சாப்பிட்டு நாளாயிற்று போலிருக்கிறது . ஆனால் என் எண்ணம் பொய் ஆகும் வகையில் , புரோட்டவை வாங்கியவுடன் அவனருகில் சென்று அவனுக்கு ஊட்ட ஆரம்பித்தாள்.

அந்த வினாடி அங்கு கூடியிருந்த அத்தனை பேரையும் விட ஒரு படி உயர்ந்தவனாக என்னை நானே உருவகித்துக் கொண்டேன். குளிர் பானம் குடிக்கும் வேட்கையைத் தியாகம் செய்து அந்தப் பணத்தை தானம் பண்ணும் எந்தவொரு மனிதனுக்கும் வரும் சிறு கர்வம்தான். அந்த திருப்பரங்குன்றம் முருகன் தான் இவர்களுக்கு உதவ என்னை அனுப்பியதாக ஒரு எண்ணமும் எழுந்தது.

அவன் சாப்பிட்ட வேகம் பார்த்து மலைத்து நின்றேன்.அரைகுறையாக முடித்துவிட்டு கையில் ஊற்றப்பட்ட தண்ணீரை மூச்சு விடாது குடித்தான். கண்கள் சொருகி , அந்த அம்மாவை அவன் பார்த்த பார்வை...அப்பப்பா...ஆயிரம் நன்றிகள் உயிரிலிருந்து இன்னொரு உயிருக்கு பரிமாறப்பட்ட கணம்.

அவன் சாலையின் எதிர்புறம் கடந்து விட, அந்த அம்மாள் நேரே என்னை நோக்கி வந்து சொன்னதுதான் எனது அன்றைய நாளின் படிப்பினையாயிற்று.
"ரொம்ப நன்றி தம்பி...பாவம் இந்த பையன்...யாருன்னு தெரியலே...பசி தாங்க முடியல...என்கிட்டே பஸ்சுக்கு மட்டும்தான் காசிருக்கு...நல்ல வேளை, நீங்க காசு கொடுத்தீங்க...உங்களுக்கு புண்ணியமாப் போச்சு..." --என் முன்னால் விஸ்வரூபம் எடுத்து என் எதிர்வினைக்கு காத்திராமல் நகரத் தொடங்கியவளைக் கேட்டேன்.
"அம்மா...நீங்க எங்கிருந்து வர்றீங்க..?"
"திருமங்கலத்திலிருந்து..."

எல்லா இடத்திலும் கடவுள் இருக்கிறார் என்று பெரியவர்கள் சொல்லியிருக்கிறார்கள். திருப்பரங்குன்றத்தில் இருக்கும் முருகன் திருமங்கலத்தில் இருக்க மாட்டாரா என்ன?

15 March 2009

மூலதனம் - இலாபம்

எங்கள் குடும்பத் தொழில் விவசாயம். ஒரு அறுவடையின் போது , அறுத்துக் கட்டும் வயலில் , வழக்கத்துக்கு அதிகமாக நெல்மணிகள் உதிர்ந்திருந்தன. சடையாரி என்னும் நெல்லினம். சற்று அதிகமாகவே உதிரும்.
அப்பாவிடம் கேட்டேன், "வயலில் உதிர்ந்து போகும் நெல் அனைத்தும் நமக்கு நட்டம் தானே!" அப்பா சொன்னார் , " அப்படி இல்ல மக்கா ! இந்த மண்ணு நமக்கு சொந்தமில்ல. இந்த வெயிலு, காத்து, மழை எதுக்கும் நாம துட்டு தர்றதில்ல. இந்த உலகத்திலே நம்மளைப் போல காக்கா, குருவி, தவளை, நண்டு,நத்தை,விட்டிலு, தட்டான் ,பூச்சிங்கன்னு நெறைய சீவிச்சிருக்கு. இந்த விளைச்சல்ல அதுகளுக்கும் பங்கு குடுக்கணும்.நாம பாடுபட்டதுக்கு உண்டானதை நாம எடுத்துக்கலாம். அதுக்கு மேல ஆசைப்படக் கூடாது."

-நாஞ்சில் நாடன்
நன்றி : ஆனந்த விகடன்

14 March 2009

மனசு

வேண்டியது வேண்டி
வேண்டியது கிட்டிய பின்
வேண்டியது வேண்டா
மனது.

- கனிமொழி

PRAYER IS ANSWERED

I asked for strength
And God gave me difficulties to make me strong.
I asked for wisdom
And God gave me problems to solve.
I asked for courage
And God gave me dangers to overcome.
I asked for love
And God gave me troubled people to help.
I asked for favours
And God gave me oppotunities.
I recieved nothing I wanted
And God gave everything I needed.

13 March 2009

எங்கே கடவுள் ???


நேற்று என் பிள்ளைக்கு தடுப்பூசி இடுவதற்காக மருத்துவமனைக்கு சென்றிருந்தேன்.குழந்தைகளுக்கான மருத்துவமனை என்பதால் வாயிலுக்கு வெளியே சிறு ராட்டினம் , சறுக்கு விளையாட்டு போன்றவை பராமரிக்கப்பட்டிருந்தன.சில குழந்தைகள் விளையாடிக் கொண்டிருந்தார்கள்.விரக்தியுடனும் , திணிக்கப்பட்ட சோகத்துடனும் அவர்களின் பெற்றோர்கள் அவர்களை கண்காணித்துக் கொண்டிருந்தார்கள்.நானும் என் பிள்ளையும் அந்தச் சூழலில் கலந்தோம்.எனது கையால் சுற்றி விடப்பட்ட ராட்டினத்தில் புவன் உலகத்தை சுற்றிக் கொண்டிருந்தான்.

குழந்தைகளின் உலகம் கட்டுக்கடங்கா சந்தோஷமயமானது.பார்க்கும் எல்லா ஜீவன்களிடத்தும் மற்றும் ஜீவன் அல்லாதவைகளிடத்தும் மகிழ்ச்சியை மட்டுமே தருவித்துக் கொள்ளும் பாக்கியவான்கள் அவர்கள்.இந்த உலகத்திற்கு வந்த நோக்கம் பற்றிய பிரக்ஞை இல்லாமலேயே அந்த நோக்கத்தை நிறைவேற்றிக் கொண்டிருப்பவர்கள். பொங்கி வரும் ஆற்றலைக் கட்டுப்படுத்தாது அதன் பிரவாகத்தில் தங்களை அறியாமலேயே மூழ்கியிருப்பவர்கள்.

நான் உண்மையிலேயே வாழ்ந்த நாட்கள் எத்தனை என்று கேட்டால் ,கிட்டத்தட்ட பதின்மூன்று ஆண்டுகள் என்பேன். முதல் பதின்மூன்று ஆண்டுகள்.

'அப்பா... எனக்கு அந்த மாதிரி பலூன் வாங்கி தர்றீங்களா...'- என் சட்டையைப் பிடித்து என் கவனம் கலைத்தான் புவன்.
'வீட்டுக்கு போறப்ப கண்டிப்பா வாங்கலாம்...' - சமாதானப்படுத்தினேன். அடம் பிடித்து அழத் தொடங்கியவனை தேற்றும் விதமாக வழக்கம் போல் வாக்குறுதிகளை வழங்கத் தயாரானேன்.

அது சமயம், திடீரென ஓர் சிறுமியின் அலறல் சத்தம் கேட்க, சத்தம் வந்த திசையை நோக்கி, நின்றிருந்த அனைவரும் திரும்பினோம். மருத்துவமனையின் வாயில் படியருகே நிலை தடுமாறி விழுந்து , எழ எத்தனித்துக் கொண்டிருந்த அந்தப் பெண்ணுக்கு மிஞ்சிப் போனால் பன்னிரண்டு வயதிற்கு மேலிராது.பூஞ்சையான தேகமும், கலைந்த கேசமுமாக, அவளைப் பார்த்த உடனேயே எனக்குள் சோகம் அப்பிக் கொண்டது. அருகிலிருந்தவர்கள் அவளைத் தூக்கி ஆசுவாசப்படுத்தினார்கள்.
" பாத்து வரக் கூடாதாம்மா...? கொஞ்சம் தள்ளி விழுந்திருந்தா அந்தக் கம்பியில முட்டியிருப்ப...." - சொல்லிக் கொண்டிருந்த பெரியவரின் கைகளைத் தட்டுத் தடுமாறிப் பற்ற முயன்ற போதுதான் அந்தப் பெண்ணை உற்று நோக்கினேன். பார்வையற்றவள். ஒரு கணம் உறைந்து மீண்டேன். என் பிள்ளையின் கைகளை இறுகப் பிடித்துக் கொண்டேன்.

அவர்கள் எங்களை நோக்கி வந்து அருகிலிருந்த திண்டில் அமர்ந்தார்கள். பெரியவரிடம் ஏதோ சொன்னவளின் பிசிறிய குரலில் , அது வரை அடக்கி வைத்திருந்த அழுகை சிதறியது. எனக்கு எதிர்புறமிருந்த ஒரு பெண்மணி அருகிலிருந்த அம்மாவிடம் பேசிக் கொண்டிருந்தாள். பேச்சு இந்தச் சிறுமியைப் பற்றி இருப்பதாகத் தோன்ற , சற்று என் காது கொடுத்தேன்.

"பாவம் இந்த புள்ள...சாயந்திரம் பொழுது இருட்டிச்சின்னா கண்ணு தெரியாத போயிரும்...இந்த வாரம் முழுக்க இங்கனயே தான் கிடக்கா...இவுக அம்மைக்கு ஏதோ உடம்புக்குன்னு வந்தா...இன்னும் சரியாகல போல ..."

எனக்கு சிறிது ஆறுதலாக இருந்தது. மாலைக் கண் நோய் சிரமம் தான் என்றாலும் ,முழுக்க பார்வையற்றிருப்பதை விட இது மேல். எனக்கு கிடைத்த ஆறுதல் வெகு நேரம் நீடிக்க வில்லை. அவர்களின் உரையாடல் முடிவில் என் மனம் கனத்து ,அன்று புவனுக்கு ஊசி போடாமலேயே திரும்பிச் சென்றேன்.

" அவங்க அப்பனாவது இது கூடவே இருக்கலாம்லே..."

"நல்ல கேட்ட போ....அவ அப்பன் , ஆத்தா ரெண்டு பேருக்குமே கண்ணு தெரியாது...அவங்களையே இந்தக் குட்டி தான் 'பாத்துக்கறா'...