11 April 2009

காதலின் சின்னம்?!!


சென்ற வாரம் முழுவதும் கான்பூர் ஐ.ஐ.டியில் ஒரு பயிற்சி வகுப்பை முன்னிட்டுத் தங்கியிருந்தேன். அங்கு இளநிலை பொறியியல் படிக்கும் மாணவர்களைப் பார்க்கும் போது மனதுள் லேசான பொறாமை தலை தூக்கியது. அத்தனை வசதிகள்....! படிக்கும் போது படிப்பு ,ஆட்டத்தின் போது ஆட்டம் என சுயக் கட்டுப்பாட்டுடன் தங்கள் இளமையின் உச்சத்தை அவர்கள் அனுபவிக்கும் விதம் என்னை பெருமூச்சு விட வைத்தது. படிப்பு வாசனையே அறியாத கான்பூர் தெருக்களின் பழமையும், படிப்பின் உச்சத்தை முகர்ந்து கொண்டிருக்கும் ஐ.ஐ.டியின் புதுமையும் என்னை ஒரு சேர வசீகரித்தன. ஐந்து நாள் பொழுதும் இனிமையாகக் கழிந்தது.

நிற்க. நான் சொல்ல விழைந்தது ,அந்த ஐந்து நாட்கள் பற்றியல்ல. ஆறாவது நாள் ஊருக்குத் திரும்பும் போது , உடன் வந்தவர்களின் வற்புறுத்தலின் பேரில் (ஏற்கனவே போட்ட திட்டத்தின் படி தான்) ஆக்ரா செல்ல நேர்ந்தது. வேறெதற்கு...? உலகப் புகழ் பெற்ற தாஜ் மகாலைப் பார்வையிடத்தான். கான்பூரிலிருந்து மதுரை வந்து சேரும் நீண்ட பயணத்தின் இடைச் செருகளான எங்களின் ஆக்ரா தருணங்கள் ஒரு விதப் பதற்றத்துடனேயே இருந்தன.வட இந்திய ரயில்வேயின் நிர்வாகத் திறமையால் ஆக்ராவில் கழிப்பதற்கு எங்களுக்கு இரண்டு மணி நேரமே இருந்தது.

ஆட்டோ பிடித்து, மடிக் கணினியை cloak room ல் போட்டு விட்டு, வழி காட்டிகளின் உதவல் கோரிக்கைகளை பண்புடன் நிராகரித்து, சிறு வியாபாரிகளின் மனம் கோணாமல் புறந்தள்ளி, நுழைவுச் சீட்டு எடுத்து, சோதனைச் சாவடியின் ' சோதனைகளைக் ' கடந்து ஒரு வழியாக அந்தப் பிரம்மாண்டக் கட்டிடத்தின் (?) முன் சென்று நின்றவுடன் வெறுமைதான் தட்டியது. என்னுடைய பதின் பருவங்களில் நான் கனவுப் பிரதேசமாக நினைத்திருந்த , என் மென்மையான உணர்வுகளின் இருப்புக்கு கட்டியம் பகர்ந்த ஆதர்ஷ விசயமாக நான் கொண்டிருந்த ஒரு இடத்தின் முன் நிற்கிறேன், எனினும் எத்தனை முயற்சித்தும் என்னுள் ஒரு சிறு நெகிழ்தலும் நிகழவே இல்லை. ஒருவேளை கல்லூரி கால கட்டத்திலேயே இவ்விடம் வந்திருக்க வேண்டுமோ? நான் வளர்ந்து , வாழ்வின் அடுத்த பரிமாணத்தில் நுழைந்து விட்டேனோ ? உடன் வந்தவர்கள் அந்த நிமிடங்களைத் தங்கள் புகைப்படக் கருவியில் கல்லறைப் படுத்திக் கொண்டிருந்தனர்.எனக்கோ, அந்த நிமிடங்களில் உயிர்ப்பே இல்லை. சரியென, அவர்களின் தற்காலிக போட்டோகிராபராக மாறியிருந்தேன்.

இந்த காதலர்கள் எல்லாம் தங்கள் காதல் சின்னமாக ஏன் தாஜ் மகாலைக் கொண்டிருக்கிறார்கள் என்று புரியவில்லை. ஷா ஜகானின் மூன்றாவது மனைவியான மும்தாஜ் தனது பதினான்காவது பிள்ளைப் பிரசவத்தின் போது இறந்து போனதின் நினைவாக , சுமார் இருபத்தியிரண்டாயிரம் பேரை வைத்து இருபது வருடங்களில் கட்டப்பட்ட கல்லறைதான் தாஜ் மஹால் என்கிறது வரலாறு. 'என் மனைவியின் சமாதியின் மீது மிகப் பெரிய கட்டிடம் எழுப்புங்கள் ' என்று ஆணவத்தோடும் ,அதிகாரத்தோடும் கட்டளையிட்ட ஷா ஜகான் என்கிற சர்வாதிகாரியும் , உயிருக்கு அஞ்சி தங்கள் வாழ்நாளை இதன் உருவாக்கத்திற்கு அர்ப்பணித்த மக்களும் தான் அங்கே பிம்பமாகப் பதிந்திருக்கிறார்கள். இந்தியாவின் பெருமைகளுள் இதுவும் ஒன்று என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை.ஆனால்பளிங்குக் கற்களின் குளிர்ச்சிக்கடியில் அவர்கள் உழைப்பின் வெம்மையும் ,சுற்றுச் சுவர்களின் மினுமினுப்பில் அவர்களின் வியர்வை பூத்த மேனியும் , பக்கத்துக் கோட்டைகளின் சிவப்பு வண்ணத்தில் அவர்கள் சிந்திய ரத்தமும் தான் தெரிகிறது.

பெண்ணாம்...அவன் மனைவியாம்...அவள் மீது தீராக் காதலாம்....பிரசவத்தின்போது மனைவி படும் அவஸ்தையைக் காணும் எந்தக் கணவனும் 'இவள் அடுத்த பிள்ளையை சுமக்கத்தான் வேண்டுமா ' என்ற கேள்வியுடன் தான் பின் வரும் போகங்களை அனுபவிப்பான்.மனைவி உயிரோடிருக்கும் போதே அவளை சுகித்திருக்க விடாமல், அவளின் கல்லறைக்கு உலகம் மெச்சும் படி மாளிகை அமைப்பதென்பது உலக வரலாற்றில் தனது பெயர் நிலைப்பதற்கு ஒரு குறுக்கு வழியே. நாட்டின் செல்வத்தையும் , நாட்டு மக்களின் உழைப்பையும் தன் கனவை நினைவாக்க ஈடுபடுத்தியவன் ஒரு நல்ல அரசனாக முடியுமா? பதின்மூன்று முறை ஒரு பெண்ணை பிரசவிக்க நிர்ப்பந்திப்பவன் ஒரு நல்ல கணவனாக முடியுமா ? மும்தாஜின் மறைவுக்கு முன்னரும் பின்னரும் ஷா ஜகான் வேறு பெண்களைக் கொண்டதேயில்லையா?

ஒரு நல்ல கணவன்தான் நல்ல காதலனாக இருக்க முடியும் என்பது என் தாழ்மையான கருத்து. (அதாவது, காதல் செய்த பெண்ணைக் கைபிடித்த பின்பும், சூழ்நிலைகளின் கைதி ஆகாமல் , திருமணத்திற்கு முன் அந்தப் பெண்ணிடமிருந்த அவன் மீதான பிம்பம் அழியாதவாறு நடப்பவனே உண்மையான காதலன். யதார்த்தத்தில் இது மிகவும் கடினம். )

யோசித்துக் கொண்டே , உடன் வந்தவர்களின் ஆசை தீர புகைப்படம் எடுத்துத் தள்ளினேன். திரும்புகையில் , கண்கள் சொருகி கை கோர்த்து அமர்ந்திருந்த ஒரு இளம் ஜோடியைக் காண நேரிட்டது.அந்தப் பெண்ணை உற்றுக் கவனித்தேன்.ஏனோ தெரியவில்லை , மனம் கனத்தது.ஒருவேளை அவள் அவனை ஷா ஜகானாக வரித்திருக்கக் கூடும். என் மனம் வேண்டியது , "கடவுளே, அவன் ஷா ஜகானாக இருக்க வேண்டாம் .நல்ல கணவனாக இருந்தால் போதும் "

4 comments:

  1. //அவன் ஷா ஜகானாக இருக்க வேண்டாம் .நல்ல கணவனாக இருந்தால் போதும் " //

    பாராட்டுகள் நண்பா

    ReplyDelete
  2. \\பிரசவத்தின்போது மனைவி படும் அவஸ்தையைக் காணும் எந்தக் கணவனும் 'இவள் அடுத்த பிள்ளையை சுமக்கத்தான் வேண்டுமா ' என்ற கேள்வியுடன் தான் பின் வரும் போகங்களை அனுபவிப்பான்.\\

    உண்மைதான்..

    வாழ்த்துக்கள்..

    ReplyDelete
  3. Sir,

    Valkaiya nalla rashikirenga.., unga rasainaiku nan thzhal panigiren.

    Kiruthiga - Smile always :)

    ReplyDelete
  4. romba nalla irukku

    ReplyDelete