Showing posts with label அனுபவச் சாரல். Show all posts
Showing posts with label அனுபவச் சாரல். Show all posts

21 November 2012

ஒற்றைப் பனை


ஒரு குடும்பத்தில் கணவன் மனைவி இருவரும்  பணி புரிய நேரிட்டிருக்கிற    இன்றைய பொருளாதாரச் சூழலில் ,பிள்ளைகளைக் கவனிக்க நேரம் ஒதுக்குவதில்லை என்பது பொதுக்கருத்தாக இருப்பினும், கடந்த சில வாரங்களுக்கு  முன்பான 'நீயா- நானா'  நிகழ்ச்சியில் பங்கேற்ற திரைப்பட இயக்குனர் கரு.பழனியப்பன் கூறிய கருத்து  கவனிக்கத்தக்கது.

''என் தாத்தாவிற்கு  பத்து  பிள்ளைகள்....என் தகப்பனாருக்கு ஆறு பேர்...ஆகவே ,அந்தக் காலத்தில்   தங்கள் பிள்ளைகளின் தனிப்பட்ட விருப்பு
வெறுப்புகளில் பெற்றோர்களின் தலையீடு என்பது மிகக் குறைவாகவே இருந்தது. ஆனால்  இப்போது ஒரே ஒரு பிள்ளையைப் பெற்றுவிட்டு ,நன்றாக வளர்க்கிறேன் பேர்வழி என்று அதீத கவனம் செலுத்தி,பலவந்தமாகப்  பலவற்றைத்   திணித்து,அக்குழந்தையின் இயல்பைச் சிதைக்கிறார்கள் இன்றைய பெற்றோர்கள் " என்று ஆதங்கப்பட்டார். அதற்கு எதிர்வாதம் செய்த சிலர் 'குழந்தையை எப்பொழுதும்  engage செய்வதென்பது  நல்லது தானே'  என்றனர். இந்த வாதம் சரியாகத்  தோன்றினும்  , இதை  நான் மற்றொரு
கோணத்தில் பார்க்கிறேன்.

குழந்தைகள்  இந்த உலகைப் பார்க்கின்ற விதம், தங்களுக்குள் சிருஷ்டித்துக்
கொள்கிற உலகம்,பெற்றோரிடமும் மற்றவர்களிடமும் அவர்களின் எதிர்பார்ப்பு என அத்தனையும் பரிசுத்தமானது. அவர்கள்  தனித்தன்மையோடு வளர்வதற்குரிய சூழலை நாம் உருவாக்கித் தரலாமே தவிர  , பெற்றோம் என்ற ஒரே காரணத்திற்காக அவர்கள் மீது எந்நேரமும்  ஆதிக்கம் செலுத்துவதென்பது  எதிர்மறை விளைவுகளையே  ஏற்படுத்தும். இருப்பது ஒரே பிள்ளை என அளவுக்கதிகமாக  செல்லம் கொடுக்கும் பெற்றோர்தான் குழந்தைகளை அதிகம் அடிக்கின்றனர் என்பது நகைமுரண். 'உனக்கு வேண்டியதை நான் கொடுக்கிறேன்; நான் சொல்வதைக் கேள் ' என்ற குணம்தான் இங்கு ஓங்கி நிற்கிறது. நாம் ஏன் குழந்தைகளை அடிக்கிறோம் ?அவர்களால் திருப்பி அடிக்க முடியாது என்ற  காரணத்தினால் தானே ! ஒப்பீட்டளவில்  வலு குறைந்த அவர்களின் தவறைத் திருத்துகிறோம் என்று சொல்லி அவர்களை அடித்து நம் ஆற்றாமையைத் தணித்துக் கொள்வது எந்த விதத்தில் நியாயம் ?!

நிற்க.  நான் சொல்ல நினைத்தது குழந்தை வளர்ப்பு பற்றியல்ல;

 எந்தவித முன் தீர்மானமுமின்றி  அணுகும் குழந்தைகளின் உலகில் பிரதான இடமென்பது அவர்கள் வயதொத்த பிள்ளைகளுக்கானதே ! அதில்  நாம் சிறிது   பங்காற்றலாமே  ஒழிய , எந்த விதத்திலும் பங்கேற்க  முடியாது. அக்கம்பக்கத்து குழந்தைகளிடம் நட்பு பாராட்ட  முந்தைய தலைமுறைக்குக் கிடைத்த  வாய்ப்பு  இன்றைய குழந்தைகளுக்கு அறவே இல்லை. தெருவில் நண்பர்களுடன் கால்பந்து விளையாடி கால் வலிக்க வேண்டிய பிள்ளைகள் , இன்று கணினியில் விளையாடி கை வலித்துக் கிடக்கிறார்கள். ஆக , பெற்ற முதல் குழந்தைக்குத்  துணையாக இன்னொரு குழந்தையைப் பெற்றுக் கொள்வதே  ஏற்புடைய  வழி என்பது என்னுடைய கருத்து.

வளர்ப்பதற்கு வசதியில்லை, கவனிப்பதற்குப் பெரியவர்கள் இல்லை என சாக்கு போக்கு சொல்லாமல் தயவு செய்து உரிய இடைவெளியில் இரண்டு குழந்தைகளைப் பெற்றுக் கொள்ளுங்கள். பரிபாலனம் செய்வதில் சிரமங்கள் இருந்தாலும் அவற்றை மீறிக் கிடைக்கும் சந்தோஷத் தருணங்கள் உங்கள் வாழ்க்கையை மேலும் அர்த்தமுள்ளதாக்கும்.   தங்களுக்குள்  சண்டையிட்டும் , சமாதானமாகியும் , வாழ்வின் நியாய அநியாயங்களை அவர்களே இயல்பாகப் புரிந்து கொள்வார்கள். சுக துக்கங்களை தங்கள் மொழியில் பகிர்ந்து ஆசுவாசம் கொள்வார்கள்.  சொந்த பந்தங்களைத்  தொந்தரவாகக் கருதும் நம் சமூகச்சூழலில் ,பிற்காலத்திலும் ஒருவொருக்கொருவர் துணையாக இருப்பார்கள்.

நேற்று இரவு அலைபேசியில் ஒரு அழைப்பு. பெங்களூரிலிருந்து  சுச்சு பேசினான். எங்கெங்கோ சுற்றிய பேச்சு இறுதியில் குழந்தைகளைப் பற்றி வந்த போது ,   இயந்திரகதியில் இயங்கும் தினப்படி வாழ்க்கையில், ஒரு குழந்தையையே பராமரிக்க சிரமமாயிருப்பதால் , இன்னொரு குழந்தையைப் பெற்று அதைக் கஷ்டப்படுத்தும் விருப்பம் இல்லை என்றான். அவனுடைய நிலையிலிருந்து பார்த்தால் அதுவும் சரிதான்.இது பற்றித்தான் எழுதிக்கொண்டிருக்கிறேன் என்றோ, கண்டிப்பாக இன்னொன்று பெற்றுக்கொள் என்றோ நான் அவனிடம்   சொல்லவேயில்லை.

இதை தட்டச்சு செய்து கொண்டிருந்த போது , ஓடிப்பிடித்து  விளையாடிக் கொண்டிருந்த புவனும், சந்துவும் ,  அழுதபடி என்னிடம் வந்தனர்.

'அப்பா...புவன் என்னை அடிக்கிறான்.'

'இல்லப்பா ...அவன்தான் என்னை முதல்ல அடிச்சான் '

நான் அவர்களின்  பேச்சுக்கு சற்று காது கொடுத்தேன்.  தீர்ப்பு அளிக்கும்  நோக்கில் அல்ல; அவர்களுக்கிடையேயான காழ்ப்பு அழிக்கும் நோக்கில்.

இவர்களின் சிறு சண்டை  பெரும் போராக உருவெடுக்கும் போது நான் ஏங்கிப் போவதுண்டு  , நமக்கு ஒரு  பெண் குழந்தை இல்லையே என்று .

ம்ம்ம்ம்...எல்லோருக்கும் எல்லாவற்றிற்கும் கொடுப்பினையிருக்கிறதா , என்ன ?!

09 November 2012

வினை முடித்தன்ன இனியள்


Madurai to Trichy - 150 km ; Trichy to Madurai - 150 km
but Monday to Friday - 5 days ; Friday to Monday - 2 days 
CHEATING ?!!

வேலை நாட்களில் துக்கத்தையும் , விடுமுறைகளில் மகிழ்ச்சியையும் தருவித்துக் கொள்ளும் மன நிலையின் வெளிப்பாடான மேற்கண்ட ஹாஸ்யம் அண்மையில்  முகநூலில் காணக் கிடைத்தது.

திங்கள் முதல் வெள்ளி  வரையிலான வேலை நாட்களுக்கும் , சனி ஞாயிறு முதலான விடுமுறை நாட்களுக்கும் வெவ்வேறு முகங்கள் உண்டு என்பது நம்மில் பெரும்பாலனோரின் அனுபவமாய் இருக்கும். அடிப்படையில் , உழைப்பு மற்றும் ஓய்வு என்ற வார்ப்புகளினால் ஆன  இந்த மாறுபட்ட முகப்பிம்பங்கள் தான்  'திங்கள் கிழமை காலை என்பது வெள்ளிக் கிழமை மாலையை நோக்கிச் செல்வது' போன்றதான தோற்றத்தை நமக்கு ஏற்படுத்துகின்றன. உழைப்பையும், ஓய்வையும் வெவ்வேறு தளங்களில் வைத்திருக்கும் இந்த மனோ நிலைதான் monotonocity , stress , frustration  போன்ற பல்வேறு காரணிகளுக்கான ஊற்றாக விளங்குகிறது என்று நினைக்கிறேன். வார இறுதி நாட்களில் relaxation  என்ற பெயரில் வஸ்துக்களால் உடம்பை இம்சிப்பதும், தன்னுணர்வு மறந்து கிடப்பதும் இன்றைய இளைஞர்களிடையே பழக்கமாகி வருவதற்குக் காரணம் உழைப்பு என்கிற வார்த்தையின் மீதான கண்ணோட்டமே.

எனக்குள்ளும் பல தருணங்களில் 'உழைப்பு - ஓய்வு' என்பது பற்றிய குழப்பங்கள் சுழன்று கொண்டுதானிருக்கும். உழைப்பு என்பதன் அள்வுகோல் என்ன? நாம் நமது திறமை முழுதும் வெளிப்படும் வகையில் சரியானபடி உழைக்கிறோமா ?  கடின உழைப்பு என்பது மிக அவசியமா ? நமது உழைப்பும், நாம் எடுக்கும் ஓய்வும் சீராக இருக்கிறதா ? ஓய்வு என்பது வெறுமனே சும்மா இருத்தலா? அவ்வப்போது எழும் இது போன்ற  வினாக்களுக்கான விடையை புத்தகங்களில் தேடிக் கொண்டிருப்பேன். எழுத்துச் சித்தர் பாலகுமாரன் ' ஓய்வு என்பது இன்னொரு வேலை பார்த்தல்' என்பார். சங்க இலக்கியம் 'வினை முடித்தன்ன இனியள்' என்று கூறுகிறது. நவீன நிர்வாகவியலாளர்கள் ' No hardwork; only smart work' என்கிறார்கள். ஆனால் , உழைப்பைக் கருப்பொருளாகக் கொண்டு எழுதப்பட்ட கதை, கட்டுரைகளை வாசிக்கும் பொழுது அந்த வார்த்தைகள் தருகிற உற்சாகம் , செயல்படுத்த முனையும் போது வடிந்து விடுகிறது என்பதே நிதர்சனம்.  படிக்கும் போது உத்வேகமும் , நடைமுறைப்படுத்தும் போது சுணக்கமும் தருகிற  இந்த விசயம் பற்றி  நிறைய பேருக்கு நான் அறிவுறித்தியிருந்தாலும் என்னளவில் வெற்றி கண்டதாக நினைக்கவில்லை.

எங்கள் வீட்டிற்கு அடுத்ததாக உள்ள வாடகை வீட்டில் சமீபமாக ஒரு குடும்பம் குடி வந்திருக்கிறது. ஆட்டோ ஓட்டும் கணவன், பள்ளிக்குச் செல்லும் இரு குழந்தைகள் என அந்தக் குடும்பத் தலைவிக்கு அளவான குடும்பம். குடிசை வீடுகளுக்குக் கூரை வேயப் பயன்படும் கிடுகுத்தட்டி செய்வதுதான் அந்தப் பெண்ணுக்கு வேலை. எப்போது நான் மாடிக்குச் சென்றாலும் , மிக அருகிலிருக்கும் அவர்களது மாடியில், வேய்ந்து கொண்டிருக்கும் கிடுகுகளுடன் அந்தப் பெண் என்  கண்ணில் படுவாள். காலை ஏழு மணி பொழுதிலும் சரி, மதியம் 3 மணி வெயிலிலும் சரி, வெளிச்சம் குறையத் துவங்கும் அந்தியிலும்  சரி, இரவு 9 மணி இருளிலும் சரி , அந்தப் பெண் கிடுகு பின்னிக் கொண்டிருப்பாள். தான் பிறந்ததே கிடுகு வேயத்தான் என்பது போல , அவள் பேயாய் வேலை செய்வது பார்த்து பல முறை விக்கித்து நின்றிருக்கிறேன். மின்சாரம் வந்தாலென்ன, போனாலென்ன....சுட்டெரிக்கும் வெயிலானால் என்ன, சில்லென்ற பனியானால் என்ன...ஏதோ தவம் செய்வது போன்ற பாவனையில் ஒரே வேலை, வேலை , வேலை தான் !  அவ்வப்போது அந்தக் குழந்தைகளும் அருகிலிருப்பார்கள்.

அந்தப் பெண் வேறு வேலை செய்து நான் பார்த்ததேயில்லை. அவள் எப்போதுதான் ஓய்வெடுப்பாள்? எனக்குத் தெரிந்து, தன் பிள்ளைகளுக்கும்,கணவனுக்கும் பணிவிடை செய்யும் நேரம் தான் அவளுக்கான ஓய்வு நேரமாக இருக்கக் கூடும்; இல்லை , அந்த வேலைகளை அவள் ஓய்வாகக் கருதக் கூடும். 

வாழ்க்கை நிர்பந்திப்பதால் தான் , சிந்தனை சிதறாமல்  இவ்வாறு  உழைக்கிறாளா? அல்லது அவள் இயல்பே இதுதானா? இடும் உழைப்பிற்கு ஈடான மதிப்பு அவளுக்குக் கிடைக்கிறதா?வாழ்வின் இலட்சியமாக எதைக் கொண்டிருப்பாள் ?அல்லது, வாழ்வதே ஒரு இலட்சியமாக இருக்குமோ?   கிடுகு வேய்வதைத் தவிர வாழ்வில் வேறு இன்பங்களும் உண்டு என்பதை அறிவாளா? ஓய்வு நாட்களில் வாழ்வைத் தேடும் நாமும்,  தேடலே இல்லாமல் வாழ்க்கையை ஒவ்வொரு கணமும் 'வாழ்ந்து' கொண்டிருக்கும் அவளும் ஒன்றா?

யோசித்தவாறே பண்பலையில் பாடல்களைக் கேட்டுக் கொண்டிருந்தேன். 'நீங்கள் கேட்டவை' படத்திலிருந்து ஒரு பாடல் ஓடிக் கொண்டிருந்தது. பாடலின் கடைசி வரிகளைக் கேட்டவுடன் இதுவரையான அத்தனைக் கேள்விகளுக்கும் பதில் கிடைத்து மனம் துடைத்து விட்டாற் போலிருந்தது. 

பாடல் வரிகளும் அதற்கான காணொளியும்  கீழே :

பிறக்கின்ற போதே இறக்கின்ற தேதி 
இருக்கின்ற தென்பது மெய்தானே.
ஆசைகளென்ன ஆணவமென்ன
உறவுகள் என்பதும் பொய்தானே.
உடம்பு என்பது உண்மையில் என்ன
கனவுகள் வாங்கும் பைதானே !

காலங்கள் மாறும் கோலங்கள் மாறும்
வாலிபம் என்பது பொய்வேஷம்
தூக்கத்தில் பாதி , ஏக்கத்தில் பாதி 
போனது போக எது மீதம்
பேதை மனிதனே,
கடமையை இன்றே செய்வதில்தானே ஆனந்தம்!

இந்தப் பாடலை அந்தப் பெண் ஒரு தடவையாவது கேட்டிருப்பாளா?!






03 October 2012

நிலாப் பேச்சு



அப்போது, இரண்டு மணி நேர மின்வெட்டு அமலுக்கு வந்த சமயம். தெருவே இருளில் தொலைந்திருக்க, எங்கள் வீடு மட்டும் வெளிச்சமாயிருக்கும்.(உபயம்:மின்கலம்) .கூடவே பெருந்தன்மையாய் முற்றத்து விளக்கும் எரியும். படிப்படியாய் அனைத்தும் மின்கல வீடுகளாகி விட, எங்கள் பகுதியே மின் தடையின் சுவடு தெரியாமல் இருந்து வந்தது. ஆனால் சேமிக்கக் கூட இயலாத வகையில் மின்வரத்து அருகிப் போயிருக்கும் இந்த சூழ்நிலையில் நிலைமை தலைகீழ். தண்டச்சோறு பட்டம் வாங்கும் விடலைப் பையன் போல், வீட்டில் மின்கலம் இருந்தும் இல்லாத நிலை. இரவானால் 'தெருவே' தெருவுக்கு வந்து விடுகிறது.

ஆனாலும்,'சூரியன்' திரைப்படத்தில் அண்ணன் கவுண்டமணி சொல்வது போல் துன்பத்திலும் ஒரு இன்பமாக , மின்வாரிய அட்டகாசங்களின் பக்க-நல்விளைவாய் எங்களுக்குக் கிடைத்தது மொட்டை மாடி வாசம். சமீப காலமாக , நிலவு எங்களுக்கு இரவு விளக்காகியிருக்கிறது. நட்சத்திரங்கள் மினுமினுத்து எங்களுடன் பேசுகின்றன.( 'அவை நம்மிடம் என்ன பேசுகின்றன' என்பது புவன் அடிக்கடி கேட்கும் கேள்வி!). காகங்களும் புறாக்களும் எங்களுக்கு காலை வணக்கம் சொல்கின்றன. இரவு முன்பை விட அழகாயிருக்கிறது. ஆம்..கடந்த சில நாட்களாக எங்களது படுக்கை மொட்டை மாடியின் திறந்த வெளியில்தான்.

முன்பெல்லாம் இரவு 9 மணிக்கு சாப்பட்டுக் கடை முடித்து 10 மணிக்கு உறங்கச் செல்வதென்பது அன்றைய சலித்த பகல் பொழுதின் முடிவாக இருந்தது; தற்போதுஇனிய இரவின் துவக்கமாக இருக்கிறது. மாலை ஆறு மணிக்கு மேல் இரண்டு முறை தண்ணீர் தெளிப்பது , படுக்கை, தலையணை, கொசுவலை போன்ற ,மாடியில் படுப்பதற்கான தினசரி ஆயத்தங்களை செய்யும் பொறுப்பு என்னுடையது.இவற்றை செய்து முடித்தமரும் போது உடலில் பூக்கும் வியர்வைத் துளிகள்  குளிர் தென்றலின் விசிறலில் மறையும் சுகம் ,குளிரூட்டப்பட்ட அறையில் இதுவரை வாய்த்ததில்லை.நாள் முழுவதும் பிள்ளைகளிடம் பேசிக் கொண்டிருந்தாலும் இந்தத் தருணங்களில் கிடைக்கும் அவர்களின் அருகாமை மிகத் தனித்துவமாக இருக்கிறது. என் பிள்ளைகள் இத்தனை அழகா ! பேச்சில் இத்தனை மழலையா! அவர்கள் பேசும் ஒவ்வொரு வார்த்தையிலும் கவித்துவம் தெறிக்கிறது. அல்லது இப்போதுதான் நான் கவனிக்கிறேன். 

முன்பெல்லாம் அறையில் தூங்கும் போது, நான் சொல்லும் கதையை அசுவாரஸ்யமாகக்  கேட்பவர்கள், தற்போது  அவர்களே உற்சாகமாகக் கதை சொல்கிறார்கள். இதுவரை எதிர் கொண்ட சம்பவங்களும், எதிர்ப்பட்ட  மனிதர்களும் அவர்களின்   உலகில் ஏற்படுத்தியுள்ள  தாக்கத்தை , அவர்கள் சொல்லும்  கதைகள் பிரதிபலிக்கின்றன. நாம் எப்படி குழந்தைகளிடம் நடந்து கொள்ள வேண்டும் என்ற அவர்களின் எதிர்பார்ப்பை  நமக்குக் கற்றுக்கொடுக்கும் பாடமாகவே  அந்தக் கதைகளை நான் கேட்கிறேன்.  கடவுளே , எத்தனை  நாள் இவர்களைத் தவற விட்டிருக்கிறேன் !!! 

பேச்சலை  முடிந்து  , பிள்ளைகள்  கண்ணயர்ந்தவுடன்  நிலவும் நிசப்தம் மனதில் விவரிக்க இயலாத மகிழ்ச்சியைத் ததும்பி வழியச் செய்யும். அந்த மனநிலையோடு  அலைபேசியில் பண்பலையைத்  திருகினால் ' நீங்க-நான்-ராஜா சார் ' என்றொரு  நிகழ்ச்சி ! இனிக்க இனிக்க இசைஞானியின் பாடல்களை ஒலிபரப்புகிறார்கள். ஜக்கியிலிருந்து ஓஷோ வரை, சூஃபியிலிருந்து ஜென் வரை போதிக்கும் 'இந்தக் கணத்தில் வாழ்' என்பது அந்தக் கணத்தில் சாத்தியமாகும். ரம்மியமான இரவும், பசியாறிய வயிறும், நுரையீரல் ததும்ப இதமான காற்றும், ஒளி காயும் நிலவும்,  மினுமினுக்கும் விண்மீன்களும், அனைத்திற்கும் மேலாக உயிர் தொடும் ராஜாவின் இசையும் கடவுளின் அருகாமையில் என்னைக் கொண்டு நிறுத்தும். சமயங்களில் என் உடல் அந்தரத்தில் மிதப்பதாய் உணர்ந்திருக்கிறேன். இதற்கு மேல் இந்த சுகத்தை வார்த்தைப்படுத்த முடியவில்லை.

மாடியில் படுப்பதால் விளையும் மற்றொரு நன்மை , அதிகாலை விழிப்பு . மெலிதாகப் பொழியும் காலைப் பனியும், இரை தேடும் பறவைகளின் சுப்ரபாதமும், வெளிச்சம் வருவதற்கு  முன்னமே  நமக்கு விழிப்பைத் தரும். மெதுவாகக் கண் விழிக்கும் போது , புலரும் அன்றைய பொழுது  நமக்கு அளிக்கப்பட்ட பரிசாகவே தோன்றும். சூரியக் கிரணங்கள் நம் மீது படரத் தொடங்க, முந்தைய இரவு எங்களோடு கதைத்துக் கொண்டிருந்த நிலவும், நட்சத்திரங்களும் கையசைத்து விடை பெறும்.

இன்று காலை படுக்கையை சுருட்டிக் கொண்டிருந்த போது மீண்டும் புவன் கேட்டான். " அதுங்க எல்லாம் நம்ம கூட என்னப்பா பேசியிருக்கும்?"
 நான் பதில் சொல்ல வில்லை. ஆனால் அவை பேசியிருந்தால் இதைத் தான் சொல்லியிருக்கக் கூடும்.

 " உங்களைப் பார்த்தால் எங்களுக்குப் பொறாமையாக இருக்கிறது !"

15 May 2012

'ணங்'


'ணங்' என்ற சத்தம் கேட்டு திடுக்கிட்டு விழித்தேன்.என்னுடன் தங்கியிருந்த நண்பர் தட்டுத் தடுமாறி படுக்கைக்கு செல்வது, இரவு விளக்கின் வெளிச்சத்தில் மங்கலாகத் தெரிந்தது. சத்தம் வரக் காரணமாயிருந்த குவளை  கீழே உருண்டு கொண்டிருந்தது. நண்பரின் கை தவறி விழுந்திருக்கக் கூடும்.

ஒரு பயிற்சிப் பட்டறையில் கலந்து கொள்ளும் பொருட்டு  , உடன் பணி புரியும் நண்பர் சகிதம் நான்கு நாட்கள் வெளியூரில் தங்க நேரிட்டிருக்கிறது. நேற்றிரவு இங்கு வந்து சேர்ந்த போதே மணி பத்தைத் தொட்டிருந்தது. இரவு உணவுக்குப் பின் நீண்ட நேரம் கதைத்து விட்டுப் படுக்கும் போது, மணி பன்னிரண்டைத் தாண்டி விட்டது. எப்போது உறங்கினோம் என்றே தெரியவில்லை. ஆழ்ந்த தூக்கம்! கீழே விழுந்த குவளை தூக்கத்தைக் கெடுத்து விட்டது.

அலைபேசியில் மணி பார்த்தேன். 2.40 . புரண்டு படுத்தேன். சமீப காலமாக நடு இரவில் விழிப்பு ஏற்பட்டால் சாமான்யத்தில் தூக்கம் வருவதில்லை.ஏதேதோ எண்ணங்கள் சுழல அரை மணி நேரமாவது தூக்கம் வராமல் படுக்கையில் புரள்வது வழக்கமாகி வருகிறது. நாளைய பயிற்சி வகுப்பு எப்படியிருக்கும் என்று யோசித்துக் கொண்டே கண்களை மூடினேன். நினைவு இழை அறுந்து உறக்கம் தழுவத் தொடங்கும் நொடியில் , பசித்த புலியின் உறுமலாய் மிக அருகில் சத்தம் கேட்டது. தலை தூக்கிப் பார்த்தேன்.நண்பர் குறட்டை விட ஆரம்பித்திருந்தார். எந்நிலையிலும் புறச்சூழ்நிலைகளால் பாதிக்கப்படாத வண்ணம் மனதைப் பழக்கியிருந்ததால், அவரின் குறட்டையைக் குறையாய் நினைக்காமல் உறங்க முயன்றேன். சிறிது நேரத்தில் புலியின் உறுமல் சிங்கத்தின் கர்ஜனையாய் மாறியது. ஒரு காதை தலையணையில் அழுத்தி , மறு காதை கையால் பொத்தியபடி படுத்தேன்.
'எந்தவொரு ஓசையுடனும் மனம் இயைந்து சென்றால் அந்த ஓசை இசையாகி விடும்' என்ற ஓஷோவின் கூற்றுப்படி மனதை குறட்டை ஒலியுடன் ஒத்திசைத்தேன். ம்ஹூம்...பலனில்லை. சிங்கத்தின் கர்ஜனை யானையின் பிளிறலாய் மாறியதும் தான் எனக்கு விபரீதம் புரிந்தது. இன்றைய தூக்கம் இவ்வளவுதான்! தூக்கம் கூட பிரச்சினையில்லை...தூக்கமின்றி யோசிப்பதால் வரும் மன அயற்சி கூட விஷயமில்லை...ஆனால் கடும் ஏற்ற இறக்கத்துடன் என்னைச் சூழ்ந்துள்ள இந்த ஒலி மாசுபாட்டிலிருந்து எப்படித் தப்பிப்பது என சிந்தித்தபடி சிறிது நேரம் வெளியில் சென்று உலவினேன். கண்கள் கெஞ்ச , இஷ்ட தெய்வத்தை வேண்டிக் கொண்டு , மீண்டும் அறைக்குள் வந்தேன். தற்போது யானை மெலிந்து பூனையாகி இருந்தது. சற்று தெம்புடன் படுக்கையில் தலை சாய்த்தேன். இரண்டே நிமிடத்தில் நண்பர் விஸ்வரூபமெடுத்து விண்ணைத் தொட , எனக்கு வாழ்க்கையே வெறுத்து விட்டது. இதிலிருந்து மீள உண்டான அனைத்து வழிவகைகளையும் என்னாலான வரையில் brain storming செய்ய, பளிச்சென்று ஒரு யோசனை உதயமாயிற்று. குறட்டை விடுபவரை ஏதேனும் ஒரு வகையில் disturb செய்தால் ஒலி தடைபடும் அல்லது மட்டுப்படும் என்பது அனுபவப் பாடம். வேறு வழியேயின்றி, யோசனையை செயல்படுத்தும் விதமாக , அருகிலிருந்த குவளையைத் தட்டி விட்டேன்.

'ணங்' என்ற சத்தம் கேட்டது.


அறியப்படும் நீதி : நாம் விடும் குறட்டை நமக்குக் கேட்பதில்லை.

24 April 2012

தந்தை மகற்காற்றும்.....

நீண்ட நாட்களுக்குப்  பின் , குடும்பத்துடன் வெளியூர் பயணம் . தூத்துக்குடியில் வசிக்கும் உறவினர் ஒருவரின்  திருமண விழாவிற்கு அழைப்பு வர, நான் பிள்ளைகளிடம்  கேட்டேன்,
 " டேய் புவன்... கடல் பார்த்திருக்கியா...?".
 " நேரில பார்த்ததே இல்லப்பா...படத்துல தான் பார்த்திருக்கேன்."
" ஏய் சந்து...நீ கடல்  பார்த்திருக்கியா...?"
" அப்படின்னா...?!"

மேற்கண்ட உரையாடலின் முடிவில் உருவானது எங்களின்  திருச்செந்தூர் பயணத்திட்டம். ஞாயிறன்று காலை 4.30 மணி ரயில்  பிடித்து மதுரையிலிருந்து தூத்துக்குடி சென்று விழாவைச் சிறப்பித்து விட்டு ,  அங்கிருந்து பேருந்து மூலம் செந்தூர் சென்று கடலில் குளித்துக் களித்துப் பின் மாலை 4.30 மணிக்கு தூத்துக்குடியிலிருந்து மதுரை செல்லும் ரயிலைப் பிடிப்பதாகத் திட்டம்.  பேசிய கையோடு இணையம் மூலம் முன்பதிவும் செய்து விட , 'அப்பாவா இப்படி' என பிள்ளைகளும் , 'இவரா இப்படி' என என் மனைவியும்  ஒரு சேர ஆச்சர்யமும் , குதூகலமும்  அடைந்தார்கள். 'சேட்டை செய்யும் குழந்தைகளை வெளியூர் பயணங்களில் சமாளிப்பது எப்படி' என்று ஒரு புத்தகமும் நான் படித்திராததால் , பொதுவாக குடும்பப் பிரயாணங்களைத் தவிர்த்து விடுவது என் வழக்கம். தற்போது பிள்ளைகள் சிறிது பெரியவர்களாகி விட்டார்கள் என்று நம்பிக்கையில் இந்த பயண ஏற்பாடு. 

சனிக்கிழமை இரவிலிருந்தே பயணம் தொடர்பான சந்தேகங்களை (வழக்கம் போல்)  கேள்விக் கணைகளாகத் தொடுக்க ஆரம்பித்த புவனை சமாளித்து சற்றே கண்ணயர்ந்தால் ,  வைத்த அலாரம் அடிப்பதற்கு முன்பாக 3 மணிக்கே எழுப்பி விட்டனர் மின்வாரியத்தினர். அனைவரையும் எழுப்பி அரக்கப் பரக்க  கிளம்பி  அடித்துப் பிடித்து  ரயில் நிலையம் அடைந்தாலும் ஆற அமரத்  தான் வண்டியேறினோம். (வண்டி தாமதம்!). அதுவரை ஆடிக் கொண்டிருந்தவர்கள் , வண்டி நகரத் தொடங்கியதும் இருக்கையில் சரியத் தொடங்கினர். நான் சன்னலை ஒட்டிய பக்கவாட்டு படுக்கையில் படுத்தேன். சிறிதே பரவியிருந்த ஒளியும், சில்லென்ற அதிகாலைக் காற்றும் , சீரான வேகத்தில் செல்லும் வண்டியின் அசைவும், என் மீது கிடந்த பிள்ளையின்  அணைவும் ...சுகம்.. சுகம்.. பரம சுகம் !  
சரியாக எட்டு மணிக்கு மண்டபத்தை அடைந்து , சுற்றத்துடன்  அளவளாவி , விழாவின் முக்கிய நிகழ்வான காலை உணவு ருசித்தலைக் கடமையுடன் முடித்து ,  ஒரு மணி நேரம் பயணப்பட்டு 11 மணிக்கு திருச்செந்தூர் சென்றிறங்கிய  எங்களுக்கு அங்கிருந்த அபரிமிதமான மக்கள் கூட்டம்  அதிர்ச்சியளித்தது. முடியுடனும், இல்லாமலும் ஆயிரக்கணக்கான தலைகள். முடிக் காணிக்கை அனுமதிச் சீட்டு வாங்க வரிசை, முடி எடுக்க வரிசை, நாழிக் கிணற்றில் குளிக்க வரிசை, சுவாமி தரிசனம் செய்ய வரிசை, மதிய உணவு சாப்பிட கடைகளிலும் வரிசை என பொழுது முழுவதும் வரிசையிலேயே கழிந்தது. ஒரே ஒரு ஆறுதல், கடலில் குளிக்க மட்டும் வரிசையில்லை. கடலைப் பார்த்து வியந்த பிள்ளைகள் ஒரு அலை தாக்கியதும் கதறிப் பின்வாங்கி விட்டனர். எவ்வளவு சமாதானப்படுத்தியும் வர மறுத்து ,கரையில் என் மனைவியிடம் தஞ்சமடைந்தனர். நான் அரை மனதுடனும் சிறிது பதற்றத்துடனும் கடலில் விழுந்து எழுந்தேன்.

வரிசைகளில் நிற்கும் போது புவனேஷின் கேள்விகளும், சந்தோஷின் அலையல்களும் எங்கள் உயிரில் பாதியை உருவின. அவ்வப்போது  சந்தோஷ் எங்கள் கண்ணை மறைத்து  மறைந்து விட,  அவன் அணிந்திருந்த மஞ்சள் சட்டையை வைத்து அவனை மீட்டெடுத்தோம். ஒவ்வோர் கடையைத் தாண்டும் போதும் பொருட்கள் கேட்டு சந்தோஷ் செய்த அட்டகாசமும், முடி எடுக்கும் போது அவன் செய்த ரகளைகளும்  தனிப் பதிவிற்கானது.  சுட்டெரித்த  சூரியனும், சுறுசுறுப்பான பிள்ளைகளும் எங்களைக் களைப்புறச் செய்தனர். ஒரு வழியாக, சற்று தொலைவிலிருந்து (?) சுவாமி தரிசனம் செய்து , அரைகுறையாக சாப்பாடு முடித்து , icecream கடையில் ஆசுவாசப்பட்டு நிமிர்ந்த போதுதான் உறைத்தது. ம்ணி மூன்று. சுட்டெரிக்கும் வெயிலில் , ஆளுக்கொரு பிள்ளையாக இழுத்துக் கொண்டு , கிளம்பத் தயாராயிருந்த ஒரு  தனியார் பேருந்திலேறி அமர்ந்தோம்.  இன்னும் ஒன்றரை மணிக்குள் ரயிலைப்  பிடிக்க வேண்டிய பதற்றத்தில் நாங்கள் இருக்க, காலியாயிருந்த வாசற்படியும் நிரம்புவதற்குக் காத்திருந்தனர் நடத்துனரும் ஓட்டுனரும். ஒரு வழியாகக் கிளம்பிய பேருந்து, சிற்றுந்தாக மாறி நூறடிக்கு ஒரு தடவை நின்று சென்றது. ஒரு வேளை தாமதமாகி விட்டால்...... மதுரை வரையிலுமான பேருந்துப் பயணத்தை நினைத்துப் பார்க்கும் போதே  தலை சுற்றியது.

முருகன் கிருபையால், சரியான நேரத்துக்கு தூத்துக்குடி பேருந்து நிலையத்தை அடைந்து, ஓட்டமும் நடையுமாக வெளியே வந்து ஆட்டோ பிடித்தோம். அந்த ஆட்டோ ஓட்டுனர் எப்போதும் யாருக்காவது உதவிக் கொண்டே இருப்பார் போலும். எங்கள் நிலையை அறிந்தவுடன் அடுத்த ஐந்தே நிமிடங்களில் ரயில் நிலையத்தில் எங்களைக் கிடத்தினார்.அந்த ரணகளத்திலும் சந்தோஷ் அவருக்கு ' 'டாடா' காண்பித்து விடை கொடுத்தான்.எங்கள் வருகைக்காகக் காத்திருந்தாற் போல் , நாங்கள் ஏறியவுடன் ரயில் புறப்பட்டது. ம்துரை வந்து சேர்ந்தவுடன் நேராக உணவகத்துக்கு அழைத்துச் செல்ல, களைத்துப் போயிருந்த  எங்கள் மூவருக்கும் சேர்த்து சந்தோஷ் தனியாளாய்  வெளுத்துக் கட்டினான். 

சாப்பாடு முடித்து வீடு வந்து படுக்கையில் மனதில் சில கேள்விகள்....
இல்லற வாழ்வில் துணையை அனுபவிப்பது சுகமெனில், இணைப்பாய் வரும் பொறுப்புகள் அனைத்தும் சுமையா? பிள்ளைகள் பெறுவது சுகமெனில்,  தொல்லைகள் பொறுப்பது சுமையா?பிணைக்கப்படுதல் சுகம் எனில், பிணக்குகள் வருவது சுமையா? சம்சாரியாவது சுகமெனில், சமரசமாதல் சுமையா?  'சம்சார சாகரம்' என்று சும்மாவா சொன்னார்கள்  எனப் பலவாறு யோசித்துக் கொண்டே  உறங்கிப் போனேன். 
மறுநாள் காலையில்  பிள்ளைகள் இருவரும்   பயணத்தைப் பற்றிப் படுக்கையிலிருந்தவாறே சிலாகித்துக் கொண்டிருந்தனர். முன் தினம்  எனக்கு சலிப்பூட்டிய  தருணங்கள் அனைத்திலும் அவர்கள் சிலிர்ப்படைந்திருந்தது அவர்கள் பேச்சில் தெரிந்தது. பயணத்தின் களைப்பு தாண்டிய பூரிப்பு அவர்கள் உடல் மொழியில் வெளிப்பட்டது. நான் விழித்து விட்டதைப் பார்த்ததும் இருவரும் உருண்டு வந்து என்னைக் கட்டிக் கொண்டனர்.

"அப்பா...மறுபடியும் இதே மாதிரி இன்னொரு கடல் பார்க்கப் போலாமா...?"
"சரிடா  செல்லம்...அடுத்த வாரம் கண்டிப்பா போலாம்.."
சொல்லிக் கொண்டே  சோம்பல் முறித்து படுக்கையில் இருந்து  எழுகையில், விவரிக்க இயலாத சுகம் ஒன்று என் உடல் முழுதும் பரவியது. அது, முன் தினம் அதிகாலை ரயிலில் அனுபவித்ததை விட அற்புதமானதாக இருந்தது.