03 October 2012

நிலாப் பேச்சு



அப்போது, இரண்டு மணி நேர மின்வெட்டு அமலுக்கு வந்த சமயம். தெருவே இருளில் தொலைந்திருக்க, எங்கள் வீடு மட்டும் வெளிச்சமாயிருக்கும்.(உபயம்:மின்கலம்) .கூடவே பெருந்தன்மையாய் முற்றத்து விளக்கும் எரியும். படிப்படியாய் அனைத்தும் மின்கல வீடுகளாகி விட, எங்கள் பகுதியே மின் தடையின் சுவடு தெரியாமல் இருந்து வந்தது. ஆனால் சேமிக்கக் கூட இயலாத வகையில் மின்வரத்து அருகிப் போயிருக்கும் இந்த சூழ்நிலையில் நிலைமை தலைகீழ். தண்டச்சோறு பட்டம் வாங்கும் விடலைப் பையன் போல், வீட்டில் மின்கலம் இருந்தும் இல்லாத நிலை. இரவானால் 'தெருவே' தெருவுக்கு வந்து விடுகிறது.

ஆனாலும்,'சூரியன்' திரைப்படத்தில் அண்ணன் கவுண்டமணி சொல்வது போல் துன்பத்திலும் ஒரு இன்பமாக , மின்வாரிய அட்டகாசங்களின் பக்க-நல்விளைவாய் எங்களுக்குக் கிடைத்தது மொட்டை மாடி வாசம். சமீப காலமாக , நிலவு எங்களுக்கு இரவு விளக்காகியிருக்கிறது. நட்சத்திரங்கள் மினுமினுத்து எங்களுடன் பேசுகின்றன.( 'அவை நம்மிடம் என்ன பேசுகின்றன' என்பது புவன் அடிக்கடி கேட்கும் கேள்வி!). காகங்களும் புறாக்களும் எங்களுக்கு காலை வணக்கம் சொல்கின்றன. இரவு முன்பை விட அழகாயிருக்கிறது. ஆம்..கடந்த சில நாட்களாக எங்களது படுக்கை மொட்டை மாடியின் திறந்த வெளியில்தான்.

முன்பெல்லாம் இரவு 9 மணிக்கு சாப்பட்டுக் கடை முடித்து 10 மணிக்கு உறங்கச் செல்வதென்பது அன்றைய சலித்த பகல் பொழுதின் முடிவாக இருந்தது; தற்போதுஇனிய இரவின் துவக்கமாக இருக்கிறது. மாலை ஆறு மணிக்கு மேல் இரண்டு முறை தண்ணீர் தெளிப்பது , படுக்கை, தலையணை, கொசுவலை போன்ற ,மாடியில் படுப்பதற்கான தினசரி ஆயத்தங்களை செய்யும் பொறுப்பு என்னுடையது.இவற்றை செய்து முடித்தமரும் போது உடலில் பூக்கும் வியர்வைத் துளிகள்  குளிர் தென்றலின் விசிறலில் மறையும் சுகம் ,குளிரூட்டப்பட்ட அறையில் இதுவரை வாய்த்ததில்லை.நாள் முழுவதும் பிள்ளைகளிடம் பேசிக் கொண்டிருந்தாலும் இந்தத் தருணங்களில் கிடைக்கும் அவர்களின் அருகாமை மிகத் தனித்துவமாக இருக்கிறது. என் பிள்ளைகள் இத்தனை அழகா ! பேச்சில் இத்தனை மழலையா! அவர்கள் பேசும் ஒவ்வொரு வார்த்தையிலும் கவித்துவம் தெறிக்கிறது. அல்லது இப்போதுதான் நான் கவனிக்கிறேன். 

முன்பெல்லாம் அறையில் தூங்கும் போது, நான் சொல்லும் கதையை அசுவாரஸ்யமாகக்  கேட்பவர்கள், தற்போது  அவர்களே உற்சாகமாகக் கதை சொல்கிறார்கள். இதுவரை எதிர் கொண்ட சம்பவங்களும், எதிர்ப்பட்ட  மனிதர்களும் அவர்களின்   உலகில் ஏற்படுத்தியுள்ள  தாக்கத்தை , அவர்கள் சொல்லும்  கதைகள் பிரதிபலிக்கின்றன. நாம் எப்படி குழந்தைகளிடம் நடந்து கொள்ள வேண்டும் என்ற அவர்களின் எதிர்பார்ப்பை  நமக்குக் கற்றுக்கொடுக்கும் பாடமாகவே  அந்தக் கதைகளை நான் கேட்கிறேன்.  கடவுளே , எத்தனை  நாள் இவர்களைத் தவற விட்டிருக்கிறேன் !!! 

பேச்சலை  முடிந்து  , பிள்ளைகள்  கண்ணயர்ந்தவுடன்  நிலவும் நிசப்தம் மனதில் விவரிக்க இயலாத மகிழ்ச்சியைத் ததும்பி வழியச் செய்யும். அந்த மனநிலையோடு  அலைபேசியில் பண்பலையைத்  திருகினால் ' நீங்க-நான்-ராஜா சார் ' என்றொரு  நிகழ்ச்சி ! இனிக்க இனிக்க இசைஞானியின் பாடல்களை ஒலிபரப்புகிறார்கள். ஜக்கியிலிருந்து ஓஷோ வரை, சூஃபியிலிருந்து ஜென் வரை போதிக்கும் 'இந்தக் கணத்தில் வாழ்' என்பது அந்தக் கணத்தில் சாத்தியமாகும். ரம்மியமான இரவும், பசியாறிய வயிறும், நுரையீரல் ததும்ப இதமான காற்றும், ஒளி காயும் நிலவும்,  மினுமினுக்கும் விண்மீன்களும், அனைத்திற்கும் மேலாக உயிர் தொடும் ராஜாவின் இசையும் கடவுளின் அருகாமையில் என்னைக் கொண்டு நிறுத்தும். சமயங்களில் என் உடல் அந்தரத்தில் மிதப்பதாய் உணர்ந்திருக்கிறேன். இதற்கு மேல் இந்த சுகத்தை வார்த்தைப்படுத்த முடியவில்லை.

மாடியில் படுப்பதால் விளையும் மற்றொரு நன்மை , அதிகாலை விழிப்பு . மெலிதாகப் பொழியும் காலைப் பனியும், இரை தேடும் பறவைகளின் சுப்ரபாதமும், வெளிச்சம் வருவதற்கு  முன்னமே  நமக்கு விழிப்பைத் தரும். மெதுவாகக் கண் விழிக்கும் போது , புலரும் அன்றைய பொழுது  நமக்கு அளிக்கப்பட்ட பரிசாகவே தோன்றும். சூரியக் கிரணங்கள் நம் மீது படரத் தொடங்க, முந்தைய இரவு எங்களோடு கதைத்துக் கொண்டிருந்த நிலவும், நட்சத்திரங்களும் கையசைத்து விடை பெறும்.

இன்று காலை படுக்கையை சுருட்டிக் கொண்டிருந்த போது மீண்டும் புவன் கேட்டான். " அதுங்க எல்லாம் நம்ம கூட என்னப்பா பேசியிருக்கும்?"
 நான் பதில் சொல்ல வில்லை. ஆனால் அவை பேசியிருந்தால் இதைத் தான் சொல்லியிருக்கக் கூடும்.

 " உங்களைப் பார்த்தால் எங்களுக்குப் பொறாமையாக இருக்கிறது !"

4 comments:

  1. wow..chance yee illa..very nice flowww.............if TNEB minister read this,full time power cut in TN will be implemented..:))))

    ReplyDelete
  2. Never ever i have read this much passage before. Now these lines made me to...

    ReplyDelete
  3. kan munne oru kulir iravai konarndadarku nandrigal!!:) minsaaram illatha nerangalil veediyil vilayadiya mazhalai paruvathai unargiraen indru!!

    ReplyDelete
  4. Nice One. It clearly shows, no matter where we are, it is all about how we think

    ReplyDelete