'ணங்' என்ற சத்தம் கேட்டு திடுக்கிட்டு விழித்தேன்.என்னுடன் தங்கியிருந்த நண்பர் தட்டுத் தடுமாறி படுக்கைக்கு செல்வது, இரவு விளக்கின் வெளிச்சத்தில் மங்கலாகத் தெரிந்தது. சத்தம் வரக் காரணமாயிருந்த குவளை கீழே உருண்டு கொண்டிருந்தது. நண்பரின் கை தவறி விழுந்திருக்கக் கூடும்.
ஒரு பயிற்சிப் பட்டறையில் கலந்து கொள்ளும் பொருட்டு , உடன் பணி புரியும் நண்பர் சகிதம் நான்கு நாட்கள் வெளியூரில் தங்க நேரிட்டிருக்கிறது. நேற்றிரவு இங்கு வந்து சேர்ந்த போதே மணி பத்தைத் தொட்டிருந்தது. இரவு உணவுக்குப் பின் நீண்ட நேரம் கதைத்து விட்டுப் படுக்கும் போது, மணி பன்னிரண்டைத் தாண்டி விட்டது. எப்போது உறங்கினோம் என்றே தெரியவில்லை. ஆழ்ந்த தூக்கம்! கீழே விழுந்த குவளை தூக்கத்தைக் கெடுத்து விட்டது.
அலைபேசியில் மணி பார்த்தேன். 2.40 . புரண்டு படுத்தேன். சமீப காலமாக நடு இரவில் விழிப்பு ஏற்பட்டால் சாமான்யத்தில் தூக்கம் வருவதில்லை.ஏதேதோ எண்ணங்கள் சுழல அரை மணி நேரமாவது தூக்கம் வராமல் படுக்கையில் புரள்வது வழக்கமாகி வருகிறது. நாளைய பயிற்சி வகுப்பு எப்படியிருக்கும் என்று யோசித்துக் கொண்டே கண்களை மூடினேன். நினைவு இழை அறுந்து உறக்கம் தழுவத் தொடங்கும் நொடியில் , பசித்த புலியின் உறுமலாய் மிக அருகில் சத்தம் கேட்டது. தலை தூக்கிப் பார்த்தேன்.நண்பர் குறட்டை விட ஆரம்பித்திருந்தார். எந்நிலையிலும் புறச்சூழ்நிலைகளால் பாதிக்கப்படாத வண்ணம் மனதைப் பழக்கியிருந்ததால், அவரின் குறட்டையைக் குறையாய் நினைக்காமல் உறங்க முயன்றேன். சிறிது நேரத்தில் புலியின் உறுமல் சிங்கத்தின் கர்ஜனையாய் மாறியது. ஒரு காதை தலையணையில் அழுத்தி , மறு காதை கையால் பொத்தியபடி படுத்தேன்.
'எந்தவொரு ஓசையுடனும் மனம் இயைந்து சென்றால் அந்த ஓசை இசையாகி விடும்' என்ற ஓஷோவின் கூற்றுப்படி மனதை குறட்டை ஒலியுடன் ஒத்திசைத்தேன். ம்ஹூம்...பலனில்லை. சிங்கத்தின் கர்ஜனை யானையின் பிளிறலாய் மாறியதும் தான் எனக்கு விபரீதம் புரிந்தது. இன்றைய தூக்கம் இவ்வளவுதான்! தூக்கம் கூட பிரச்சினையில்லை...தூக்கமின்றி யோசிப்பதால் வரும் மன அயற்சி கூட விஷயமில்லை...ஆனால் கடும் ஏற்ற இறக்கத்துடன் என்னைச் சூழ்ந்துள்ள இந்த ஒலி மாசுபாட்டிலிருந்து எப்படித் தப்பிப்பது என சிந்தித்தபடி சிறிது நேரம் வெளியில் சென்று உலவினேன். கண்கள் கெஞ்ச , இஷ்ட தெய்வத்தை வேண்டிக் கொண்டு , மீண்டும் அறைக்குள் வந்தேன். தற்போது யானை மெலிந்து பூனையாகி இருந்தது. சற்று தெம்புடன் படுக்கையில் தலை சாய்த்தேன். இரண்டே நிமிடத்தில் நண்பர் விஸ்வரூபமெடுத்து விண்ணைத் தொட , எனக்கு வாழ்க்கையே வெறுத்து விட்டது. இதிலிருந்து மீள உண்டான அனைத்து வழிவகைகளையும் என்னாலான வரையில் brain storming செய்ய, பளிச்சென்று ஒரு யோசனை உதயமாயிற்று. குறட்டை விடுபவரை ஏதேனும் ஒரு வகையில் disturb செய்தால் ஒலி தடைபடும் அல்லது மட்டுப்படும் என்பது அனுபவப் பாடம். வேறு வழியேயின்றி, யோசனையை செயல்படுத்தும் விதமாக , அருகிலிருந்த குவளையைத் தட்டி விட்டேன்.
'ணங்' என்ற சத்தம் கேட்டது.
அறியப்படும் நீதி : நாம் விடும் குறட்டை நமக்குக் கேட்பதில்லை.
படமும் தலைப்பும் பதிவும்
ReplyDeleteமிக மிக அருமை
ரசித்துப் படித்தேன்
தொடர வாழ்த்துக்கள்