18 May 2012

கதைப் பொருள்


பாலமுருகனும் கணேசனும்
பல்பொருள் அங்காடியில்
தற்செயலாய்ச் சந்தித்த போது
பரஸ்பரம் நலம் விசாரித்தனர் -
பின்பு
அலுவலகத்தில்
ஆனந்தன் அகம்பாவமாக
நடந்து கொள்வதை
அரை மணி நேரம் விவாதித்தனர்

அடுத்த நாள் அலுவலகத்தில்
கணேசனும் ஆனந்தனும்
பதிவேட்டில் கையெழுத்திடுகையில்
பார்த்துக் கொள்ள நேரிட்டது - அங்கே
பாலமுருகனின் பண்புகள்
பத்து நிமிடம் பாடுபொருளாயின

அதே நாளின் இறுதியில்
தேநீர்க் கடையில்
எதேச்சையாகச் சந்தித்த
ஆனந்தனும் பாலமுருகனும்
ஆரத் தழுவிக் கொண்டனர் - பின்னர்
கணேசனின் செயல்களைக்
கருணையின்றி விமர்சித்தனர்.

பிறிதொரு நாளில் மூவரும்
ஒன்று சேர்ந்தனர் இப்போது
அதிகமாக அலட்டிக் கொள்ளும் அம்பிகா
கதைப் பொருள் ஆனாள்.

- நா. ராஜேந்திர பிரசாத்

1 comment:

  1. எனக்கும் மிகப் பிடித்தது
    இல்லாதவர்களே யதார்த்தத்தில் எப்போதும்
    பாடுபொருளாயிருக்கிறார்கள்
    அருமையான கவிதையை பதிவாக்கித் தந்தமைக்கு
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete