08 November 2012

காலத்தை இசைத்தவன்

இசை ஞானி பற்றி  கவிஞர்  பழனிபாரதியின் கவிதை : 

உலகத்தை ஆள
செங்கோல் தேவையில்லை
ஒரு புல்லாங்குழல் போதுமென்று
நிரூபித்தவன் நீ

சூரியனும் சந்திரனும்
உனது இசைத் தட்டுகள்
உன் ஆர்மோனியத்தின்
கறுப்பு வெள்ளைக் கட்டைகளுக்கிடையில்தான்
கட்டுண்டு கிடக்கின்றன
எங்கள் இரவும் பகலும்

வானில்
பறவைகள்
சிறகுகளால் எழுதும்
உனது இசைக்குறிப்புகளை
பூமியில்
பூக்கள் இசைப்பதைத்தான்
நாங்கள்
வசந்தகாலம் என்கிறோம்

இங்கே
சருகுகளில்
சப்திப்பதும்
உன் சங்கீதம்தான்

உன் ஆரோகணம்
மேகம்
உன் அவரோகணம்
மழை

நீயின்றி அமையாது உலகு

நீ இசைக்கத் தொடங்குகிறாய்
உன் ஆர்மோனியத்தின்மேல்
காட்டு மரங்கள் அசைகின்றன
காதல் பறவைகள் கூடுகின்றன
ஒழுகும்
உன் இசையின் ஜீவநதியில்
கடவுள்
குழந்தைகளோடு விளையாடிக்கொண்டிருக்கிறார்

என்ன அழகான
ஒரு பின்னணி இசை இது...

நீ கடவுளைப் பார்த்துக்கொண்டிருக்க
நாங்கள் உன்னைப் பார்த்துக்கொண்டிருக்க


-பழநிபாரதி

No comments:

Post a Comment