கடந்த ஒரே வாரத்தில் , ஒரு மனிதனின் அதீத மகிழ்ச்சியையும் , அவன் அடைந்த அதீத துக்கத்தையும் மிக அருகிலிருந்து கண்டேன். அடைந்த மகிழ்ச்சியும் , துக்கமும் ஒரே விஷயம் தொடர்பானதுதான்.
"என்னது , உன் பையன் ஒண்ணாவதுதான் படிக்கிறானா...ஒரு நாலாவது வகுப்பு படிப்பான்னு நினைச்சேன்... நீ தான் ரொம்ப சீக்கிரமே கல்யாணம் பண்ணிட்டியே , மேடேஸ் ?"
திருமண அழைப்பிதழ் கொடுக்க வீட்டிற்கு வந்த என் நண்பரின் கேள்விக்கு நான் அளித்த பதில் , "இல்ல பாஸ்... நீங்க தான் ரொம்ப லேட்...!"
உடன் பிறந்த தங்கைகள் அனைவருக்கும் வாழ்க்கை அமைத்துக் கொடுத்து, கிட்டத்தட்ட நாற்பதை நெருங்கும் வேளையில் நல்ல வரன் அமைந்து , சென்ற வியாழனன்று நடந்தது என் நண்பரின் திருமண விழா . திருமணத்திற்கு முதல் ஆளாக சென்று கடைசி ஆளாக திரும்பினேன். ஒவ்வொரு கணமும் மிகக் குதூகலமாயிருந்தது. மீனாட்சி அம்மன் கோவில் கல்யாண சுந்தரேஸ்வரர் சன்னதியில் திருப்பூட்டு முடிந்து , அனைத்து சந்நிதி வழிபாடு முடிந்து, மண்டபத்தில் அனைவரின் வாழ்த்து பெற்று , அனைவரும் ஆசுவாசப்படும் வரை நண்பரின் அருகிலேயே இருந்தேன். கடந்த ஐந்தாறு வருடங்களாக தொடர்பில் இல்லையென்றாலும் ,அதற்கு முன்பு மிக அன்னியோன்யமாகப் பழகியிருக்கிறோம். யாருக்கும் தீங்கு எண்ணாத , யார் மனதையும் மறந்தும் புண்படுத்தாத , கடவுள் நம்பிக்கை அதிகமுள்ள அவரின் திருமண வைபவம் சிறப்பாக நடந்தேறியதில் எனக்கு பரம சந்தோசம். " பார்த்தியா....லேட்டானாலும், வெயிட்டா செட்டிலாயிட்டாரு...ஆண்டவன்னு ஒருத்தன் இருக்கான்னு ப்ரூவாயிடுச்சுப்பா..." .நான்கு நாட்களாக என் மனைவியிடம் எதைப் பற்றிப் பேசினாலும் இதில் வந்துதான் முடிப்பேன்.
புதனன்று அதிகாலை இறங்கியது இடி ஒத்த செய்தி. நண்பரின் மனைவி இறந்து விட்டார். கேட்ட செய்தியைச் செரிக்க இயலாமல் என்னவென்று விசாரித்ததில் , குறைந்த ரத்த அழுத்தம் காரணமாக மயக்கமடைந்து , பின் சிகிச்சை பலனின்றி இறந்து விட்டாராம். நெடு நாட்களாக இருக்கும் இப்பிரச்சினையை மாப்பிள்ளை வீட்டாரிடம் மறைத்ததாலும் , தொடர்ந்து எடுத்து வந்த மருந்து மாத்திரைகளை திடீரென்று நிறுத்தியதாலும் வந்த விபரீத விளைவு , அனைவரையும் புரட்டிப் போட்டு விட்டது. " எல்லாமே மின்னல் மாதிரி நடந்து முடிஞ்சு போச்சு " , ஆற்றாமையுடனும் , அவலத்துடனும் , அழுகையும் குமுறலுமாக நண்பர் பேசியது இன்னும் என் மனதில் நிழலாடுகிறது. ஆறுதல் சொல்லக் கூடிய இழப்பா இது ? பத்து நாள் பசியோடிருப்பவனிடம் அறுசுவை உணவில் ஒரு விள்ளலைக் கொடுத்து ருசி பார்க்கச் சொல்லி விட்டு , அவன் எதிரிலேயே அதைக் குப்பையில் கொட்டினால் அவன் மனநிலை எப்படி இருக்கும் ? நான் அதிகம் பேசாமல் அவர் கையைப் பிடித்து சிறிது நேரம் இருந்து விட்டு எழுந்தேன்.
எழும் போது சொன்னார்... "சாப்பிட்டுப் போ...மேடேஸ் ...."
அதுவரை அடக்கி வைத்திருந்த அழுகை என்னை மீறிப் பீறிட்டது. "உங்களுக்குப் போய் இப்படி நடந்திருச்சே ....." மெதுவாக வார்த்தைகளைப் பிரசவித்தேன்.
மேற்கொண்டு ஏதும் பேச இயலாமல் விடை பெற்றேன்.
இரு தினங்களாக நான் இன்னும் இதிலிருந்து மீள வில்லை. எதைக் கண்டாலும் , யாரைக் கண்டாலும் கோபம் கோபமாக வருகிறது. வாழ்க்கையின் குரூரம் பற்றி ஆயிரமாயிரம் கேள்விகள் மனச் சுவற்றை அறைந்த வண்ணம் இருக்கின்றன. நான் இயல்பாக இல்லை. தத்துவப் புத்தகங்கள் எத்தனை படித்தாலும் , இத்தகைய பொழுதுகளில் அவை துணை நிற்பதில்லை.
என் நிலை பார்த்து ஒருவர் சொன்னார். " ஏதாவது கோவிலுக்குப் போயிட்டு வாங்க சார்...மனசு நிம்மதியாகும்."
நானும் நினைத்திருக்கிறேன். இந்த வாரம் மீனாட்சி அம்மன் கோவிலுக்குப் போக வேண்டும் , கல்யாண சுந்தரேஸ்வரரிடம் நாக்கைப் பிடுங்கிக்கிற மாதிரி நாலு கேள்வி கேட்க .
No comments:
Post a Comment