நேற்றைய இரவு
மிக நீண்டதானது
உன் இருப்பின்றி...
என் மூச்சு தொடும்
நமது அறைக் காற்று
நீயின்றித் தவித்து
பெருமூச்சு விடும்.
உடல் துடைத்த கைத்துண்டின்
ஈரம் படிந்த அணைத்தலை
இன்று இழந்த ஏக்கத்தில்
கிரீச்சிடும் கட்டில் முனை.
அறை விளக்கற்ற அரை வெளிச்சத்தில்
கிடைக்கும் உன் விரல் ஸ்பரிசம்
இன்றில்லை யென சுவர் ஏங்கும்.
உன் முக அழுத்தம் பிரிந்தறியா
தலையணை யிரண்டும்
கண்ணீர் விட்டுக் கனத்துப் போகும்.
உன்னைப் பிரிந்த அரற்றலை
அலாரம் வைக்காமலேயே
அலறிக் காட்டும் கடிகாரம்.
அறையோடு சேர்ந்து
பிறை போலத் தேயும்
என் மனதும்.
நானில்லா நாட்களின்
உனதான தவிப்பை
நினைந்து நினைந்து
இவற்றோடு நானும்
புலம்பிக் கொண்டதால்
நேற்றைய இரவு
மிக நீண்டதானது
உன் இருப்பின்றி....
வந்து விடேன் சகியே...
எனக்காக இல்லையெனினும்
இவற்றுக்காகவாவது.
இல்லத்தோடும் மனத்தோடும் இரண்டரக் கலந்த
ReplyDeleteஇல்லாளின் பிரிவு குறித்த ஏக்கத்தை சொல்லிப் போகும்
கவிதை அருமையிலும் அருமை
ஏனோ குப்பைக் கூடையின் ஏக்கத்தைமட்டும்
சொல்லாது இருந்திருக்கலாமோ எனத் தோன்றியது
மனம் கவர்ந்த பதிவு
தொடர வாழ்த்துக்கள்
தொடர்ந்து வாசித்து பின்னூட்டமிடுவதற்கு நன்றி.
ReplyDeleteஎனக்கும் அந்தக் குப்பைக் கூடை நெருடியதால் அப்புறப்படுத்தி விட்டேன்.